ரோஜாவின் பெயர் – 1

ஊம்பர்ட்டோ எக்கோவின் நாவல்கள் பற்றி கருத்து சொல்லும் அளவுக்கு நான் அவரைப் படித்திருக்கவில்லை. ஃபூக்கோஸ் பெண்டுலம் நாவலை என்னால் படிக்க முடியவில்லை. ரோஜாவின் பெயரை ஒருமுறை பாதி படித்து விட்டு அலுத்துப் போய் விட்டு விட்டேன். ஆனால் அந்த நாவல் திரைப்படமாக வந்த போது பார்த்து மிரண்டு போனேன். இயக்கியவர், நான் எப்போதுமே பெரிதும் சிலாகிக்கும் ஃப்ரெஞ்ச் இயக்குனர் Jean-Jacques Annaud. Wolf Totem, Seven Years in Tibet படங்கள் ஞாபகம் இருக்கிறதா? ரோஜாவின் பெயர் படத்தைப் பற்றி ஐரோப்பிய சினிமா நிகழ்ச்சியில் பேச இருப்பதால் இப்போது வேண்டாம். ஆனாலும் ஊம்பர்ட்டோ எக்கோ உலக அளவில் பேசப்படும் எழுத்தாளர் என்பதாலும், என் பழைய நண்பர் எம்.டி. முத்துக்குமாரசாமி ஒரு சிறந்த படிப்பாளி என்பதாலும் அவர் மொழிபெயர்த்த ரோஜாவின் பெயரை வாங்கினேன். பொதுவாக நான் தமிழில் மொழிபெயர்க்கப்படும் எந்த நூலையும் வாங்குவதில்லை. காரணம், பெரும்பாலான மொழிபெயர்ப்பாளர்களுக்கு ஆங்கிலம் தெரியாது. ஏதோ ஆர்வத்தில் செய்கிறார்கள். குழந்தைகள் செய்யும் காகிதக் கப்பலுக்கும் இந்தத் தமிழ் மொழிபெயர்ப்பாளர்களுக்கும் அதிக வித்தியாசம் இல்லை.

பல ஆண்டுகளுக்கு முன்பே எழுதிய விஷயம். ந. சுகுமாரன் எனக்குப் பிடித்த கவிஞர். அவர் எனக்குப் பிடித்த இன்னொரு கவிஞரின் கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்த்தார். அதில் ஒரு முக்கியமான கவிதை மாச்சு பிச்சு. அந்தக் கவிதையை ஏற்கனவே நான் மொழிபெயர்க்க நினைத்து அதில் இரண்டு பத்திகளை மொழிபெயர்க்க முடியாமல் விட்டு விட்டேன். சுகுமாரன் என்ன செய்திருக்கிறார் என்று பார்ப்பதற்காகவே அந்த நூலை வாங்கினேன். நெரூதாவின் மாச்சு பிச்சு கவிதையின் தமிழ் மொழிபெயர்ப்பில் அந்த இரண்டு பத்திகளையும் காணோம். இது எப்பேர்ப்பட்ட திருட்டுத்தனம்? எப்பேர்ப்பட்ட ஏமாற்று வேலை? இதை விட சுகுமாரன் தன் கவிதைகளையே எழுதிக்கொண்டிருக்கலாமே? கவிதை எழுத சரக்கு இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது மற்ற எடிட்டிங் வேலைகள்! அதற்காக பாப்லோ நெரூதாவின் கொட்டையையா அமுக்குவது? சுகுமாரன் மொழிபெயர்த்த நூறு ஆண்டுகளின் தனிமையும் இதே லட்சணம்தான்.

இந்தப் பின்னணியில் நான் தமிழில் வரும் மொழிபெயர்ப்புகளையே படிப்பதில்லை. (ஞாபகம் கொள்ளவும். ஜி. குப்புசாமி விதிவிலக்கு. அவர் மொழிபெயர்ப்புகளைப் படிப்பேன்.) இப்போது ஊம்பர்ட்டோ எக்கோ, முத்துக்குமாரசாமி என்ற இரண்டு பெயர்களுக்காக ரோஜாவின் பெயர் மொழிபெயர்ப்பை வாங்கினேன்.

ஆசிரியர் பற்றிய குறிப்பே எனக்கு கொள்ளிக்கட்டையை குதத்தில் குத்திக்கொண்டது போல் ஆகி விட்டது. யோவ், நூலாசிரியர் என்ன எழுதியிருக்கிறார் என்பதுதானே நூலாசிரியர் பற்றிய குறிப்பாக வர வேண்டும்? அவர் எந்தப் பல்கலைக்கழகத்தில் பணி புரிகிறார், எத்தனை வீடு வைத்திருக்கிறார் என்பதா ஆசிரியர் பற்றிய குறிப்பு? ”ஏன், இதில் என்ன தப்பு? எல்லா எழுத்தாளர்கள் பற்றியும்தான் இப்படி வருகின்றன. சாரு ஆங்கிலப் புத்தகங்களைப் பார்த்தது இல்லை போல” என்பார் நண்பர் முத்து. பொறுங்கள்.

நான் வேலூரில் அஞ்சல்துறையில் நிர்வாக அலுவலகத்தில் ஸ்டெனோவாகப் பணியாற்றிய போது ஒரு நண்பர் நெருக்கமாக இருந்தார். ஒரு சராசரி மனிதர். எனக்கு அப்போது நிறைய உதவிகள் செய்திருக்கிறார். முக்கிய உதவி, நாலு ஆண்டுகள் என்னை அவர் சைக்கிளில் உட்கார வைத்து டபிள்ஸ் அடித்திருக்கிறார். நாற்பது ஆண்டுகள் இருக்கும். அவரை மூன்று ஆண்டுகள் முன்பு வேலூரில் சந்தித்தேன். எடுத்த எடுப்பில் தன் மகன் சிங்கப்பூரில் வேலை பார்ப்பதாக ஆர்ப்பாட்டமான குரலில் சொன்னார். அந்த சராசரி மனிதரின் ஆர்ப்பாட்டமான குரல்தான் முத்துக்குமாரசாமி பற்றிய ஆசிரியர் குறிப்பிலும் காணப்படுகிறது. கரகாட்டக்காரன் படத்தில் இதே வஜனம் வரும் சாமி. கோவை சரளாவின் சரவெடி.

கோவை சரளா: என்னை திருவாரூர் பார்ட்டில கூப்ட்டாஹ, பொன்னமராவது பார்ட்டில கூப்ட்டாஹ, அவ்வளவு ஏன், காரக்குடி பார்ட்டில கூட கூப்ட்டாஹ, ஏங் கெரஹம் அங்கேல்லாம் போகாம இந்த கரக கும்பல்ல மாட்டிக்கிட்டேன்…

பதிலுக்கு கவுண்ட மணி சரவெடி: ஹே(ங்), அமேரிக்காவுல மைக்கேல் ஜாக்ஸன் கூப்ட்டாஹோ, ஜப்பான்ல ஜாக்கி ஸான் கூப்ட்டாஹோ…

எனக்கு முத்துக்குமாரசாமி குறித்த ஆசிரியர் குறிப்பைப் பார்த்து இதெல்லாம்தான் ஞாபகம் வந்தன. குறிப்பு கீழே:

தமிழிலும் ஆங்கிலத்திலும் கவிதைகள் எழுதுபவர். ஆங்கில இலக்கியம், தத்துவம், குறியியல் ஆகிய துறைகளில் உயர்கல்விப் பட்டங்கள் பெற்றவர். நாட்டுப்புறவியல் துறையில் 1987 முதல் குறியியல் பேராசிரியராகவும்…. இதியாதி, இத்யாதி… (இனி வரப் போவதுதான் சுவாரசியம்) ஜெர்மனியின் வுர்ஸ்பர்க் பல்கலைக்கழகத்திலும் எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபா பல்கலைக்கழகத்திலும் வருகைநிலைப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.

இன்னும் அந்த ஆசிரியர் குறிப்பில் ஆங்கிலத்தில், ஆங்கிலத்தில் என்று பலமுறை குறிப்பிடப்படுகிறது.

இப்படி ஒரு ஆசிரியர் குறிப்பை என் வாழ்வில் பார்த்ததில்லை. இது ஒரு தன்னிழிவு மனோபாவத்தையே காட்டுகிறது. எனக்கு இங்லீஷ் தெரியும், எனக்கு இங்லீஷ் தெரியும், நான் மேதை, நான் மேதை என்ற கமல்ஹாசன் மெகலோமேனியா மனநோய் இது.

சட்டைக் காலரைப் பிடித்து, டேய் தம்பி, என்னடா எழுதியிருக்கே என்று கேட்டால், இங்லீஷ்ல நாவல் எழுதியிருக்கேன், இங்லீஷ்ல கவிதை எழுதியிருக்கேன் என்று ஆசிரியர் குறிப்பில் வருகிறது. சரி, அதுக்கு என்ன இப்போ?

இருபத்தைந்து ஆண்டுகளாக, அல்லது, அதற்கும் மேலே காணாமல் போய் விட்டீர்கள். கல்யாணம் பண்ண வேண்டும், குழந்தை பெற வேண்டும், வீடு கட்ட வேண்டும், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் லெக்சர் கொடுக்க வேண்டும், பசங்களைப் படிக்க வைக்க வேண்டும். எல்லாம் முடிந்து விட்டது. திடீரென்று உமக்கு ஞாபகம் வருகிறது, ஆ, நாம் ஒரு எழுத்தாளன் ஆச்சே, ஐயோ, நம்ம கூட எழுத வந்த இந்த சாரு மாதிரி முட்டாளெல்லாம் எங்கியோ போய்ட்டாரே, தோ வர்றேன்…

எடுடா ஒரு இத்தாலிய நாவலை. இருக்கவே இருக்கிறது எதிர் பதிப்பகம். அதுதான் ரோஜாவின் பெயர்.

இதையெல்லாம் விட்டுவிட்டு உள்ளே போனால் ஆரம்பமே கோளாறு.

மொழிபெயர்ப்பாளர் சொல்கிறார். ”உம்பர்ட்டோ எக்கோவின் பெயரே தமிழில் அமர்த்தோ எகோ முதல் உம்பர்த்தோ ஈக்கோ வரை பலவிதமாக எழுதப்படுகிறது. 1987ஆம் ஆண்டிலிருந்து குறியியல் கற்பிக்கும் பேராசிரியராக உம்பர்ட்டோ எக்கோவின் சிந்தனைகளைப் பயிற்றுவித்து வரும் நானே அவருடைய பெயரைத் தமிழில் உம்பர்ட்டோ ஈக்கோ என்றுதான் 2017ஆம் ஆண்டு வரை உச்சரித்தும் எழுதியும் வந்தேன். 2017ஆம் ஆண்டு ஃப்ராங்க்ஃபர்ட் நகரில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் இத்தாலியரான கிளாரா ஃபெர்ரோலூசியைச் சந்தித்தேன். அவருடன் ஏற்பட்ட நட்பின் காரணமாக இத்தாலியப் பெயர்களைச் சரியாக உச்சரிக்கும் முறையைத் தெரிந்து கொண்டேன்.”

பிறகு மொழிபெயர்ப்பாளர் கிளாரா ஃபெர்ரோலூசி இந்த நாவல் மொழிபெயர்ப்புக்குச் செய்த உதவிகள் பற்றி விவரிக்கிறார்.

உச்சரிப்பு பற்றி இத்தனை சொல்வதால் இதை நான் எழுத வேண்டியிருக்கிறது. கிளாரா என்பது நிச்சயமாக பெண்ணின் பெயர். ஆனால் ஃபெர்ரோலூசி பெண் பெயர் அல்ல. ஃபெர்ரோலூசி என்ற உச்சரிப்பே இத்தாலி மொழியில் இல்லை. லூச்சி என்றே வரும். அல்லது, லூஸ். ஆக, இங்கே சாத்தியமான சரியான பெயர் “க்ளாரா லூச்சி” (Clara Lucci) என இருக்கலாம், இது ஒரு பெண்ணின் முதல் பெயர் மற்றும் இத்தாலிய குடும்பப் பெயரின் சரியான கலவை. மற்றொரு சாத்தியம்: “Ferroluce” (ஃபெர்ரோலூஸ்) என்றால் “இரும்பு ஒளி” என்று பொருள், ஆனால் இது ஒரு குடும்பப் பெயராக இத்தாலியில் பயன்படுத்தப்படுவது மிகவும் அரிது. எனக்கு இப்போது வரும் ஒரே சந்தேகம், முத்துக்குமாரசாமியின் தோழியின் சரியான பெயர் என்ன என்பதுதான்.

இன்னொரு குழப்பம், உம்பர்த்தோ எக்கோ என்பது தவறு. ஊம்பர்த்தோ எக்கோதான் சரி. எழுத்து என்று வந்த பிறகு ஊவன்னாவுக்கெல்லாம் பயப்படக் கூடாது. சரி, அடுத்த பக்கத்துக்குப் போவோம்.

தொடரும்…