வரும் நவம்பர் எட்டாம் தேதி பாண்டிச்சேரியில் ஒரு சினிமா பட்டறை நடத்தலாம் என்று திட்டம். திருவண்ணாமலையில் நடந்தது போல. காலை பத்து மணிக்கு என் உரை ஆரம்பித்து விடும். மாலை ஆறு மணி வரை நடக்கும். சென்ற முறை போல் அல்லாமல் இந்த முறை பார்வையாளர்களின் கேள்விகள், சந்தேகங்களுக்கு பதில் அளிப்பேன். அதற்கும் நேரம் ஒதுக்கித்தான் நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்படும். நவம்பர் எட்டாம் தேதி. சனிக்கிழமை.
சென்ற ஆண்டு ஜெயமோகனின் கட்டண உரை பெங்களூரில் நடந்தது. நல்ல குளிர் காலம். உரை காலை ஆறு மணிக்குத் தொடங்கியது. ஐநூறு பேருக்கு மேல் கலந்து கொண்டார்கள். இடம் இல்லை என்று சொல்லப்பட்டவர்களே ஒரு ஐநூறு இருக்கும். இடம் கிடைக்காதவர்களில் என் நண்பர்களும் அடக்கம். இத்தனைக்கும் காரணம், ஜெயமோகன் என்ற பெயர் ஐம்பது சதம். ஜெ.வின் படை வீரர்களின் உழைப்பு ஐம்பது சதம்.
என் படையில் மொத்தம் நான்கு பேர். இதில் மூன்று பேர் தளபதிகள். ஒருவர் பெண். ஒரு தளபதிக்கு எப்போதுமே பரோல் கிடைக்காது. ஒரு தளபதி வெளியூர் வர மாட்டார். அதனால் பெண் தளபதியிடம் விஷயத்தைச் சொன்னேன். ”ஐயோ சாரு, மூணாம் தேதி என் புருஷனோடு ஒரு கல்யாணத்துக்குப் போக வேண்டும். போகாவிட்டால் கொன்றே போட்டு விடுவார்கள், வர முடியாது” என்றார். பொதுவாக நான் நண்பர்களிடம் – குறிப்பாக, பெண்களிடம் வெட்கம், மானம், சூடு, சுரணை, ரோஷம் எதுவும் வைத்துக்கொள்வதில்லை என்றாலும் ஒரு சிலரிடம் மட்டும் ஹைப்பர் சென்ஸிடிவாக இருப்பேன். ”நம் நிகழ்ச்சி எட்டாம் தேதிதானே, வந்து விட்டு ஓடி விடலாமே?” என்று கேட்கத் தோன்றியது. ஆனால் அந்த இடம் நான் ஹைப்பர் சென்ஸிடிவாக இருக்கும் இடம் என்பதால், மிக்க நன்றி சொல்லி அதோடு விட்டு விட்டேன். வற்புறுத்தவில்லை. ஆனால் நம்முடைய ஐரோப்பியத் திரைப்பட நிகழ்ச்சிக்கு இது ஒரு நல்ல தொடக்கம் .
மற்ற இரண்டு தளபதிகளுக்கு விஷயம் தெரியாது. இதைப் படித்துத்தான் தெரிந்து கொள்ள வேண்டும். படையில் காலாட்படை மட்டுமே உண்டு. காலாட்படையில் நிற்பது ஒரே ஒரு வீரன். அது அடியேன்தான். ஆனாலும் நான் கூச்ச நாச்சம் பார்க்காமல் தெருவில் இறங்கி வேலை செய்வேன். திருவண்ணாமலையில் முந்நூறு பேர் வந்தார்கள். இந்தப் பாண்டிச்சேரி நிகழ்ச்சிக்கு முந்நூற்றோரு பேராவது வந்தால்தான் நலம். ஒரே ஒரு எண்ணிக்கையாவது கூட வேண்டும். நன்கொடை குறைந்த பட்சம் 2000 ரூ. மாணவர்களுக்கு 1000 ரூ. மதிய உணவு இலவசம். நேரில் வர இயலாதவர்களுக்கு லிங்க் அனுப்பி வைப்பேன். அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் வசிப்பவர்கள் இரண்டாயிரத்தை டாலரால் வகுத்து அனுப்பாமல் ஐம்பது டாலராவது அனுப்பினால் நலம். மாணவர்களுக்கோ மற்றவர்களுக்கோ ஸ்பான்ஸர் செய்ய நினைத்தால் அதை வரவேற்கிறேன்.
நிகழ்ச்சி நடக்கும் இடம்: மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி, பாண்டிச்சேரி. கட்டணத்தை இப்போதே அனுப்பத் தொடங்கலாம். எனக்கோ ராஜாவுக்கோ அனுப்பலாம். திருவண்ணாமலையில் இரண்டு இளைஞர்கள் கட்டணம் கட்டாமல் கலந்து கொண்டார்கள். அவர்கள் இந்த நிகழ்ச்சிக்கு வர நினைத்தால் பழசுக்கும் சேர்த்து கட்டணம் கட்ட வேண்டும்.
இன்னொரு முக்கிய விஷயம். முதல் வரிசையில் அமர்ந்து கொண்டு தூங்கக் கூடாது. தூக்கம் வருபவர்கள் கடைசிக்குப் போய் விடலாம். அங்கே பெஞ்சுகள் போடப்பட்டிருக்கும். அங்கே சாய்ந்து சௌகரியமாகத் தூங்கலாம். முதல் வரிசை வேண்டாம்.
உங்கள் ஆதரவைக் கோருகிறேன்.
இந்தப் பட்டறையில் நீங்கள் இதுவரை கேள்விப்பட்டிராத, மிக முக்கியமான ஐரோப்பிய சினிமா காட்சிகளைத் திரையிட்டு விவாதிப்பேன். உங்கள் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்ச்சியாக இருக்கும் என்பதற்கு உத்தரவாதம்.