சலுகை விலையில் அடியேனின் புத்தகங்கள்

ஸீரோ டிகிரி பதிப்பகத்திலிருந்து பின்வரும் அறிவிப்பு வெளியாகியுள்ளது:

வாசகர்களின் ஞாபக சக்தி அபாரமானது. “நீங்கள் உங்கள் தளத்தில் தள்ளுபடி அளித்து ஒரு வருடம் ஆகிவிட்டதே!” என்று ஒருவர் நினைவூட்டினார். “இல்லை, அவ்வளவு நாள் ஆகவில்லை” என்றேன். “சரி, போய்ப் பார்த்துக்கொள்ளுங்கள்” என்றார். பார்த்தபோது, கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிவிட்டது என்பது தெரியவந்தது.

அதனால், இன்று முதல் இம்மாதம் முடியும் வரை நீங்கள் வாங்கும் அனைத்து புத்தகங்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகிறது.

இந்தச் சலுகை பற்றி அதிகமானோர் அறிந்து பயன்பெற, இந்தப் பதிவைப் பகிருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

Happy reading, happy buying…

***

என்னுடைய புத்தகங்கள் ஸீரோ டிகிரி பதிப்பகத்தில் இருபத்தோரு பிரதிகளும், ராஸ லீலா பதிப்பகத்தில் பத்தொன்பது பிரதிகளும் விற்கின்றன. வாசக அன்பர்கள் இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் சலுகையைப் பயன்படுத்தி ஒரு இருபத்தைந்து பிரதிகளாக என் புத்தகங்களின் விற்பனையை உயர்த்தும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இந்த சலுகை பற்றி ராஸ லீலா பதிப்பகத்தின் வர்ஷாவிடம் பேசினேன். நீங்களும் இப்படி இருபத்தைந்து சதம் சலுகை கொடுக்கலாமே? அதற்கு வர்ஷா சொன்னார். நாம் ஏற்கனவே இருபத்தைந்து சதம் சலுகை வைத்துத்தானே சாரு கொடுத்து வருகிறோம்?

வர்ஷாவின் “நாம்” என்ற வார்த்தையைக் கேட்ட உடனே எனக்கு பழைய கதை ஞாபகம் வந்து தொலைத்தது. பல ஆண்டுகளாக நாம், நம்முடைய என்று இருந்த மொழி ஒரு நிறுவனம் ஆரம்பித்த அடுத்த கணமே எப்படி எங்கள் என்றும், எங்களுடைய என்றும் மாறுகிறது என்ற பழைய கதை. ஒரு குறிப்பிட்ட சாதியினரிடம் – அதுவும் எல்லோரிடமும் அல்ல – மட்டுமே இவ்வகை மொழி மாற்றத்தை நான் காண்கிறேன். இதை சுட்டிக் காட்டினால் சாதியைச் சொல்லித் திட்டுகிறேன் என்ற பழி வந்து சேர்கிறது. சுய பரிசோதனை என்ற பேச்சுக்கே இடமில்லை, மூவாயிரம் ஆண்டுகளாக மரபணுவில் ஓடும் ஆதிக்க குணம், என்ன செய்வது? வர்ஷா “நாம்” என்பதற்குப் பதிலாக “நாங்கள்” என்று சொல்லியிருந்தால் இதை எழுதியிருக்க மாட்டேன். அது ஏன் ஒரு குறிப்பிட்ட சாதியினரிடம் மட்டும் inclusiveness இல்லை என்று புரியவில்லை. திரும்பவும் சொல்கிறேன். எல்லோரும் அல்ல. பலர்.

***

ஒரு மகிழ்ச்சி செய்தி. ஸீரோ டிகிரி நாவல் துருக்கி மொழியிலும், ஃப்ரெஞ்சிலும் வெளிவர இருக்கிறது. புத்தகங்கள் அச்சாகி விட்டன. இன்னும் சில தினங்களில் அந்தந்தப் பதிப்பகங்களிலிருந்து அறிவிப்பு வெளியாகும்.

***