ஏழைச் சாமி

1.

கண்ணாயிரம் பெருமாள் சமீபத்தில் என்னிடம் ஒரு உதவி கேட்டார்.  பெருமாளின் நண்பர் ஒருவர் பிராணிநல ஆர்வலர்.  அவர் வீட்டில் ஒரு முயல் வளர்க்கிறார்.  அது தவிர தெருப் பூனைகளுக்கும் நாய்களுக்கும் உணவிடுவது நண்பரின் வழக்கம்.  அப்படி அவர் தெருவில் வளரும் பூனைகளில் ஒன்று டாஃபி.  பெண் பூனை.  கிடைத்த போது சாப்பிடுவதும், இனவிருத்தியில் ஈடுபடுவதும், குட்டிகளைப் போட்டு அவற்றைக் கொசுக்கள், நாய்கள் மற்றும் மனிதர்களிடமிருந்து காப்பாற்றுவதுமாக இருந்த டாஃபிக்கு ஒருநாள் வயிறு வீங்கியிருந்ததைப் பார்த்து மிருக வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றார் நண்பர்.  டாஃபிக்கு வந்திருப்பது மிகவும் மோசமான நோய்.  IBD.  Inflammatory Bowel Disease. சரியாக கவனிக்காமல் விட்டால் உயிருக்கே ஆபத்து.  அதற்கான மருத்துவம் தொடங்கப்பட்டது.  இந்த நோய் வந்தால் கண்ட உணவையும் சாப்பிட முடியாது.  Royal Canine Hypoallegenic என்ற உணவை மட்டுமே கொடுக்க முடியும்.  அது மற்ற பூனை உணவை விட நான்கு மடங்கு விலை அதிகம்.  

இப்போது நண்பருக்கு என்ன பிரச்சினை என்றால், டாஃபியை எக்காரணம் கொண்டும் பழையபடி தெருவில் விட முடியாது.  கண்டதையும் தின்றால் மீண்டும் வயிறு உப்பி விடும்.  ஒரு மாதம் வைத்தியசாலையிலேயே வைத்திருந்து குணப்படுத்தி அனுப்புவார்கள்.  அனுப்பினால் டாஃபியை வீட்டில் மட்டுமே வைத்துக் கொள்ள வேண்டும்.  வீட்டிலோ முயல்.  வீடும் சிறிய வீடு.  

பெருமாள் டாஃபியைப் பார்த்ததில்லை.  என்றாலும் அவர் டாஃபி பற்றிப் பேசும்போது நம் கண்கள் கலங்கி விடும்.  பெருமாளின் நண்பர் பெருமாளுக்குச் சொல்லி, பெருமாள் எனக்குச் சொல்லி, நான் உங்களுக்குச் சொல்கிறேன்.  நான்கு இடம் மாறியிருக்கிறது டாஃபியின் கதை.  ஏன் அதற்கு அந்தக் கொடுமையான வியாதி வந்தது?  பெருமாளின் நண்பரான அந்தப் பிராணிநல ஆர்வலரைப் பார்ப்பதற்கு முன்னால் டாஃபி கிடந்த பட்டினிதான் காரணம்.  இந்த உலகத்திலேயே அழகான கண்களைக் கொண்ட டாஃபி கண்களை அரைக் கண்களாக மூடியே கிடக்கும்.  அதற்கான காரணத்தை ஆராய்ந்தால், மிருகங்கள் வலி தாங்க முடியாமல்தான் கண்களை அரைக் கண்களாக மூடிக் கொள்ளும் என்று தெரிந்தது.  

இந்த இடத்தில் எனக்குக் கண்ணாயிரம் பெருமாளின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம் ஞாபகம் வருகிறது.  பல எழுத்தாளர்களையும் ஓவியர்களையும் போல் கண்ணாயிரம் பெருமாளும் குடிப்பார்.  எனக்குக் குடிக்கும் பழக்கம் இல்லை. காரணம் என்று எதுவும் இல்லை.  குடி மீது ஈடுபாடு இல்லை.  அவ்வளவுதான்.  பெருமாள் கூட பல முறை கேட்டிருக்கிறார், ஏன் நான் குடிப்பதில்லை என்று.  ஒவ்வொரு முறையும் தெரியவில்லை என்றுதான் பதில் சொல்வேன்.  எப்போதோ ஒருமுறை குடித்துப் பார்த்தேன். கண்றாவியாக இருந்தது.  அதற்குப் பிறகு குடித்துப் பார்த்ததில்லை.  பெருமாளிடம் ஒரு பழக்கம், குடிக்காதவர்களை விட்டு விடுவார்.  தன் மூலமாக யாரும் குடியைத் தொடங்கக் கூடாது என்பார்.  இத்தனைக்கும் குடியின் மீது மிகுந்த பிரியம் கொண்டவர்.  பெருமாளின் குடி பற்றி நூற்றுக்கணக்கான பக்கங்கள் எழுதலாம்.  ஆனால் அது இந்தக் கதைக்குத் தேவையில்லை.  எழுபத்து மூன்று வயதில் ஒருவர் இந்த அளவு குடிக்கலாமா என்று அவரைத் தெரியாதவர்கள் விசனப்படுவார்கள்.  ஆனால் ’அளவு’ என்று எதை வைத்து முடிவு செய்ய முடியும்?  பெருமாள் ஒன்றரை பாட்டில் வைன் குடிக்கிறார்.  அது அவருடைய அளவு.  ப்யூகாவ்ஸ்கி ஆறு பாட்டில் வைன் குடிப்பாராம்.  அதுவும் தினமும்.  அது ப்யூகாவ்ஸ்கியின் அளவு.  பெருமாள் தினமும் குடிப்பதில்லை.  மாதத்தில் நான்கு முறை.  இப்படி ஒரு ஒழுங்கைப் பின்பற்றுவதால்தான் இத்தனை ஆரோக்கியமாக இருக்கிறார் என்று நினைக்கிறேன்.  சரி, நான் அந்த சம்பவத்தைச் சொல்கிறேன்.  

ஒருநாள் நானும் பெருமாளும் குமரனும் என் விருந்தினர் விடுதியில் சந்தித்தோம்.  குமரன் அமெரிக்காவிலிருந்து விடுமுறையில் வந்திருந்தான்.  பெருமாளைச் சந்திக்கும் போதெல்லாம் இருவரும் விடிய விடியக் குடித்து விடிய விடியப் பேசிக்கொண்டிருப்பார்கள்.  நானும் உடன் இருப்பேன்.  பெருமாள் குடிக்கும்போது நான் அருகில் இருப்பதைப் பெரிதும் விரும்புவார்.  சபையில் யாராவது ஒருத்தர் குடிக்காதவராக இருந்தால் நல்லது என்பார்.  ஆனால் சில குடிக்காதவர்கள் குடிப்பவர்களை விட அக்குறும்பு பண்ணுபவர்களாகவும் இருப்பதுண்டு.  அன்றைய தினம் குமரன் ”நான் குடிப்பதை நிறுத்தி விட்டேன்” என்று ஒரு குண்டைப் போட்டான்.  ஏனென்று கேட்டதற்கு, தன் காதலி குடிப்பழக்கம் இல்லாதவள் என்றான்.  சரி, அவள் உன்னைக் குடிக்காதே என்றாளா என்று கேட்டேன்.  இல்லை, அவள் அப்படிச் சொல்லவில்லை.  தம்பியே எடுத்த முடிவு அது.  முப்பத்து நான்கு வயதில் பதினேழு வயது போல் நடந்து கொள்கிறான்.

இரவு இரண்டு மணி ஆகியது.  அன்றைய தினம் பெருமாள் ஒன்றரை பாட்டிலுக்கும் மேல் குடித்திருந்தார்.  பைபிள் பற்றி பேச்சு ஓடிக்கொண்டிருந்தது.  திடீரென்று சோஃபாவிலிருந்து எழுந்த பெருமாள் ”யேசுவின் கதறல் உங்களுக்கெல்லாம் ஞாபகம் இருக்கிறதா?  வலியும் வாதையும் தாங்க முடியாமல் ’கர்த்தரே, ஏன் என்னைக் கை விட்டீர்?’ என்று கதறினார், இல்லையா?  என் எழுத்து, என் வாழ்க்கை எல்லாவற்றிலும் அவருடைய அந்தக் கதறலை மட்டுமே வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறேன்” என்று சொன்னவர் அப்படியே மண்டியிட்டுத் தரையை முத்தமிட்டபடி யேசு டாஃபி யேசு டாஃபி யேசு டாஃபி என்று சொல்லி அழ ஆரம்பித்து விட்டார்.  .

அடுத்த நாள் பேசும் போது பெருமாளுக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்ததே ஞாபகம் இல்லை.  அந்த ஒரு தருணத்துக்காக கண்ணாயிரம் பெருமாள் எவ்வளவு வேண்டுமானாலும் குடிக்கலாம் என்று தோன்றியது.       

சரி, நாம் டாஃபி கதைக்குத் திரும்புவோம்.  டாஃபி மருத்துவமனையில் இருந்த சமயத்தில் பெருமாளின் பிராணிநல ஆர்வலர் நண்பரிடம் வந்து சேர்ந்தது வேறொரு அனாதைப் பூனைக்குட்டி.  தாயினால் கைவிடப்பட்ட குட்டி.  அப்படியே விட்டால் செத்து விடும்.  என்ன செய்ய முடியும்?  நண்பர் குட்டியைத் தூக்கிக்கொண்டு வந்து விட்டார்.  அது ஒரு இட்லி பக்கியாக இருந்ததால் இட்லி என்று நாமகரணம் சூட்டப்பட்டது.  இட்லிக்கு ஒரு அறை, வீட்டின்  மற்ற இடமெல்லாம் முயலுக்கு என்று இட ஒதுக்கீடும் செய்யப்பட்டது.  

இப்போதுதான் பிரச்சினை.  டாஃபி வைத்தியசாலையிலிருந்து திரும்பி வரும்போது இட்லிக்கு  இடம்?  அதனால் இப்போது இட்லியை யாரிடமாவது கொடுத்தாக வேண்டும்.

கண்ணாயிரம் பெருமாள் தன் நண்பர்களைக் கேட்டார்.  இதுபோல் அவர் சுமார் இருபத்தைந்து ஆண்டுகளாகத் தன் நண்பர்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.  பெருமாளின் மனைவி வைதேகியும் ஒரு பிராணிநல ஆர்வலர் என்பதால் கண்ணாயிரம் பெருமாளுக்கு இதுவே நிரந்தர வேலையாகப் போய் விட்டது.  

ஒரு அழகான பூனை இருக்கிறது, எடுத்துக் கொள்கிறீர்களா?   

பெருமாளை விட்டுத் தலை தெறிக்க ஓட ஆரம்பித்தார்கள் நண்பர்கள். இப்போதும் கேட்டார்.  இப்போதும் நண்பர்கள் பூனையை எடுத்துக் கொள்ளத் தயாராக இல்லை. ஓ,  பூனை என்று சொன்னால் என்னைத் திட்டி தன் ப்ளாகில் எழுதி விடுவார், எதற்கு வம்பு?  அதனால் பூனை என்பதை இட்லி என்று மாற்றிப் படித்துக் கொள்ளுங்கள். 

என்னிடமும் கேட்டார்.  நானும் மறுத்து விட்டேன்.  பெருமாளிடம் ஒரு நல்ல பழக்கம் என்னவென்றால், மறுப்பு தெரிவித்தால் உடனே நகர்ந்து விடுவார்.  அதற்குக் கூட அவர் ஒருமுறை சொன்ன விஷயம் இங்கே எனக்கு ஞாபகம் வருகிறது.  சனாதன தர்மத்திலும், பௌத்தத்திலும் சந்நியாசிகள் எப்படிப் பிச்சை கேட்க வேண்டும் என்பதற்கு சில விதிகள் இருக்கின்றனவாம்.  ஒரு வீட்டில் நின்று பிச்சை கேட்டால், ஒரே ஒரு முறைதான் கேட்க வேண்டும்.  பதில் இல்லாவிட்டால் சத்தம் எழாமல் அடுத்த வீட்டுக்குப் போய் விட வேண்டும்.  இப்படி ஏழு வீடுகளில்தான் பிச்சை கேட்கலாம்.  கிடைக்காவிட்டால் அன்றைய தினம் உபவாசம்தான்.  

ஆனால் என்னிடம் மட்டும் மீண்டும் கேட்டார்.  இரண்டாவது முறையும் நான் மறுத்து விட்டேன்.  விட்டு விட்டார்.  

சம்பவம் நடந்த மறுநாள் என் அலுவலகத்தின் வாசலில் ஒரு சினைப்பூனை சாகும் தறுவாயில் கிடந்தது.  இன்னும் கொஞ்ச நேரத்தில் உயிர் பிரிந்து விடும்.  என் உதவியாளரை அழைத்து இந்தப் பூனையை எடுத்து எங்காவது போடுங்கள் என்றேன்.  உதவியாளர் வந்து பூனையைத் தூக்கினார்.  அதுவரை கண்களை மூடியிருந்த பூனை நன்றாக விழித்து என்னைப் பார்த்தது.  அப்போது அதன் கண்களில் நான் உயிரின் ஒளியைக் கண்டேன்.  

தூக்கிப் போடுவதற்கு முன்னால் அதற்குக் கொஞ்சம் தண்ணீர் கொடுங்கள் என்றேன்.

தண்ணீரை ஆவேசமாகக் குடித்தது பூனை.  அதன் உயிர் பிரிவதற்குள் கொஞ்சம் சாப்பாடு கொடுத்துப் பார்த்தால் என்ன என்று தோன்றியது.  எதிரே இருந்த டிபார்ட்மெண்டல் ஸ்டோரிலிருந்து கொஞ்சம் பூனை உணவு வாங்கி வரச் சொல்லி அதில் கொஞ்சத்தை எடுத்து கிண்ணத்தில் போட்டு பூனையின் அருகே வைத்தேன்.  அவ்வளவுதான்.  இதற்குத்தானே காத்திருந்தேன் என்பது போல் பாய்ந்து பாய்ந்து சாப்பிட்டது பூனை.  அப்போது அது எழுப்பிய உற்சாகக் குரலை என்னவென்று சொல்வது?  மீண்டும் போட்டேன்.  அதையும் வேகம் குறையாமல் சாப்பிட்டது.  இப்படியே மூன்று நான்கு முறை போட்டேன்.  எல்லாவற்றையும் சாப்பிட்டு விட்டு, மீண்டும் தண்ணீர் குடித்து விட்டு அங்கேயே உறங்கி விட்டது.  உயிர் மீண்டு விட்டது என்று நினைக்கிறேன்.  

என் வீடும் அலுவலகமும் ஒரே கட்டிடத்தில்தான்.  கீழ்த்தளத்தில் அலுவலகம்.  மேலே வீடு.  நான் மதிய வேளை உணவுக்காக மாடியில் ஏறிய போது என் பின்னாலேயே வந்து வீட்டு வாசலுக்கு முன்னால் அமர்ந்து கொண்டது.  அதற்கு மேல் நான் என்ன செய்ய முடியும்?  சினைப்பூனையை அடித்தா விரட்ட முடியும்?

மறுநாள் அந்தப் பூனை நான்கு குட்டிகளை ஈன்றது.  நாய்களிடமிருந்து குட்டிகளைப் பாதுகாப்பதற்காக ஒரு இரும்புக் கூடை வாங்கி வந்து குட்டிகளை மூடி வைத்தேன்.  தாய்ப்பூனை கூடைக்கு வெளியிலேயே இருந்து குட்டிகளைக் காவல் காத்தது.  பால் கொடுக்க வேண்டுமென்றால்,, அதுவே கால்களால் கூடையைத் தூக்கி விட்டு உள்ளே செல்லப் பழகிக் கொண்டது.  

அப்படியும் நாய்த் தொல்லை விடவில்லை.  மேலே ஏறி வந்து குலைத்துப் பயமுறுத்தின.  உடனே தாய்ப்பூனை குட்டிகளை ஒவ்வொன்றாகக் கவ்விக் கொண்டு வந்து வீட்டின் படுக்கையறைக் கட்டிலுக்குக் கீழே ஒளித்து வைத்தது.  

நானும் என் மனைவியும் ஒரு மாத காலம் ஐந்து பூனைகளையும் பராமரித்தோம். பிறகு அதிர்ஷ்டவசமாக ஒரு நண்பர் நான்கு குட்டிகளையும் வாங்கிக் கொண்டார்.  தாய்ப் பூனையும் தன் இருப்பிடமான தெருவுக்குப் போய் விட்டது.  ஆனாலும் காலையும் மாலையும் உணவு எங்கள் வீட்டில்தான்.

2. 

சில தினங்களுக்கு முன்பு கண்ணாயிரம் பெருமாள் என்னை அழைத்து ஒரு பழைய சிவன் கோவிலுக்குப் போக வேண்டும் என்றார்.  நீங்கள் கோவிலுக்கே போக மாட்டீர்களே என்றேன்.  இல்லை, ஒரு வேண்டுதல் இருக்கிறது என்றார்.  

ஆர்வக் கோளாறினால், ”என்ன வேண்டுதல்?” என்றேன்.

”பணம் வேண்டும், சிவனிடம் கேட்க வேண்டும்.”

சென்னையை விட்டுத் தள்ளியிருந்த ஒரு கிராமத்தில் ஒரு பழைய சிவன் கோவில் இருப்பதைக் கேள்விப்பட்டு பெருமாளை அழைத்துக்கொண்டு போனேன்.

பழைய கோவில்.  பராமரிப்பே இல்லாமல் பாழடைந்து கிடந்தது கோவில்.  கோவிலுக்கு ஏற்றபடி ஒரு ஏழை அர்ச்சகர் சுலோகங்களைச் சொல்லி அர்ச்சனை செய்து கற்பூரத்தைக் காட்டினார்.  தட்டில் ஐநூறு வைத்தேன்.  திரும்பும்போது ஒரு மலர்க்கொத்தை என் கையில் கொடுத்தார் அர்ச்சகர்.

காரில் ஏறியபோது ”வேண்டிக் கொண்டீர்களா?” என்று கேட்டேன்.

”இல்லை.” 

“ஏன்?”

அது ஒரு கதை என்று சொல்லி ஆரம்பித்தார்.  பதினைந்து ஆண்டுகளுக்கு முன் ஒரு நண்பருக்குப் பதினைந்து லட்சம் கடன் கொடுத்திருக்கிறார் பெருமாள்.  ஆள் திருப்பித் தரவில்லை.  ஒரு பைசா தரவில்லை.  இவரும் கேட்டுக் கேட்டு அலுத்துப் போய் விட்டு விட்டார்.

கடன் வாங்கிய அன்பருக்குப் பதினைந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து துன்பம், துன்பம், துன்பம்.   துன்பத்தைத் தவிர வாழ்வில் வேறு எதுவும் நடக்கவில்லை. அவன் துன்பத்திலிருந்து விடுபடுவதற்கான திறவுகோல் அவனிடத்திலேயே  இருக்கிறது என்பது அவனுக்குத் தெரியவில்லை என்றார் பெருமாள்.  

சரி, அதற்கும் நீங்கள் இப்போது வேண்டுதல் செய்யாமல் வந்ததற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டேன்.

”சாமியே ஏழைச் சாமியாக இருக்கிறார்.  அவரிடம் நான் காசு கேட்டு சாமிக்கு ஏதாவது பிரச்சினை வந்து விடப் போகிறது என்றுதான் வேண்டுதல் வைக்காமல் வந்து விட்டேன்” என்றார் பெருமாள்.  

எனக்குப் பூனைக் கதை ஞாபகம் வந்தது.