உயிரின் நெருப்பை ஊதி வளர்த்தவனின் நாட்குறிப்புகள் என்ற தொகுதியின் இரண்டாம் பாகத்தை செப்பனிட்டுக் கொண்டிருக்கிறேன். இது மொத்தம் நான்கு தொகுதிகள் வரும். ஏற்கனவே இரண்டு தொகுதிகள் பூச்சி – 1, பூச்சி – 2 என்ற இரண்டு தொகுதிகளாக ஸீரோ டிகிரி பதிப்பகத்தின் மூலம் வெளிவந்திருக்கிறது. இன்னும் நான்கு தொகுதிகள். மொத்தமாக ஆறு தொகுதிகள். கிட்டத்தட்ட ஒரு வருட காலம் தினந்தோறும் எழுதிய நாட்குறிப்புகளே பூச்சி. கொரோனா காலகட்டத்தில் எழுதியவை. இதில் இரண்டு கட்டுரைகளை இங்கே பகிர்கிறேன். இதை வாசித்து யாரும் என் மீது கோபப்படக் கூடாது. சுய பரிசோதனை செய்து கொண்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு நல்லது. ஊருக்கும், மொழிக்கும் நல்லது. இது போன்ற யோக்கியமற்ற செயல்களை என்னைத் தவிர வேறு யாரும் சுட்டிக் காண்பிக்க மாட்டார்கள். ஏன் யோக்கியமற்ற செயல் என்று சொல்கிறேன் என்று இந்தக் கட்டுரைகளை வாசித்தாலே புரியும். தெரியாமல் செய்தால் பிழை. தெரிந்தே செய்தால் அதற்கு என்ன பெயர் சொல்லலாம்? சென்ற ஆண்டும் இதே அக்கப்போர் ஒன்று நடந்தது. ஊம்பர்த்தோ எக்கோ எழுதிய நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பை வைத்து. நண்பர்களுக்கு ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன். இனி கட்டுரை:
1
ஆகஸ்ட் 15, 2020
ரொம்ப காலத்துக்குப் பிறகு இங்கே வருவது போல் உள்ளது. எடுத்த வேலை இன்னும் முடியவில்லை. இன்று காலை நாலு மணிக்கே எழுந்து உட்கார்ந்து முடித்து விடுவோம் என்று ஆரம்பித்தேன். எடுத்ததுமே ஆப்பு. வேர்டில் இருந்த ஃபைலைத் திறக்க முடியவில்லை. எர்ரர் என்று வந்தது. மணி நாலு. என் பையன்கள் முத்துக்குமாருக்கும் பாக்யராஜுக்கும் மெஸேஜ் கொடுத்தேன். எழுந்தவுடன் அழையுங்கள். ஒன்பது மணிக்கு முன்னதாக அழைக்க மாட்டார்கள் என்று தெரியும். இருந்தாலும் கொடுத்து வைத்தேன். எடிட்டிங் வேலையை முடித்து விட்டேன். கடைசியாகப் படித்துக் கொண்டிருக்கிறேன். இன்றோ நாளையோ முடித்து விடலாம் என்று பார்த்தால் இந்தப் பிரச்சினை. நல்லவேளை, எடிட் செய்த நாவலை ஆகஸ்ட் முதல் தேதியே என் மெயிலுக்கு அனுப்பி வைத்துக் கொண்டேன். ஆனால் அது அரை கிணறு தாண்டிய வேலை. ஏனென்றால், ஆகஸ்ட் பதினைந்து தினங்களில்தான் 250 பக்கங்களை எடிட் செய்திருந்தேன். மொத்தம் 700 பக்கம். இந்தப் பதினைந்து தினங்களில் எப்படி இத்தனை வேகம் என்றால், பூனைகள் காப்பகத்துக்குப் போய் விட்டன. ஆக, ஒருவேளை ஃபைல்கள் கெட்டு காணாமல் போனாலும் மெயிலிலிருந்து 450 பக்கங்கள்தான் கிடைக்கும். மீதி 250ஐ மீண்டும் செய்ய வேண்டும். சரி, அப்படியெல்லாம் ஆகாது என்று மனதைத் தேற்றிக் கொண்டேன். மேலும், இது உங்களுக்கும் ஒரு பாடம். முந்தாநாள் வேலை முடிந்ததுமே நான் ஃபைலை எனக்கு மெயில் அனுப்பியிருக்க வேண்டும். செய்யவில்லை.
கோபி கிருஷ்ணனைப் படித்தேன். வளன் அரசு ஒரு வாரமாகப் பேச வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தான். பேசினேன். சந்தானம் ஒரு வாரமாகப் பேச வேண்டும் என்று அழைத்துக் கொண்டிருந்தார். பதில் மெஸேஜ் கூடக் கொடுக்கவில்லை. பேசினேன். எட்டு மணி வாக்கில் கபிலனை அழைத்தேன். ஷ்ருதி டிவி. அவர் டீம் வ்யூவரை நீக்கி விட்டு மீண்டும் பதிவிறக்கம் செய்யுமாறு சொன்னார். ஆனால் எதையுமே நீக்கக் கூட முடியவில்லை. எதுவுமே சாத்தியம் இல்லாமல் இருந்தது. என்னுடைய கணினி பழசாகி விட்டது என்று நினைக்கிறேன். விலை எல்லாம் ஒரு லட்சம் இருக்கும். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு என் நண்பர் வாங்கிக் கொடுத்தது. ஆனால் இதிலேயே இன்னும் காலம் தள்ளுவது கடினம் என்று தோன்றுகிறது.
கடைசியாக ஒன்பது மணி அளவில் இரண்டு தம்பிகளும் அழைத்தார்கள். அவர்கள் சொன்ன வழியிலும் ஒன்றும் ஆகவில்லை. பிறகு கணினி சரி செய்யும் தொழில்முறை நண்பரை அழைத்து சரி செய்தேன். மணி இரண்டு ஆகி விட்டது. பத்து மணி நேரம் வீண். ஆனால் பேச வேண்டிய சில நண்பர்களோடு பேச முடிந்தது ஆறுதல்.
வேலையை முடிக்காமல் இங்கே வந்ததற்குக் காரணம், இதை எழுதாவிட்டால் இன்று என்னால் தூங்க முடியாது. எழுதியே ஆக வேண்டும். இன்றைய தமிழ் இந்துவில் வந்துள்ள புத்தக மதிப்புரை ஒன்றைப் பார்த்து விட்டுத் தொடருங்கள். அதற்கு முன்னால் இன்னொரு விஷயம். என் மதிப்புக்குரிய நண்பரும் பேராசிரியரும் கால்நடை விஞ்ஞானியுமான குமரவேள் ஒரு மெஸேஜ் அனுப்பியிருந்தார். அதன் விவரம்: ஒரு ஆலோசனை என்பது தவறு. ஓர் ஆலோசனையே சரி. ஒரு என்பது உயிர்மெய் எழுத்துக்கு முன்னால் மட்டுமே வரும்; உயிர் எழுத்துக்கு முன்னால் ஓர்தான்.
இது பற்றியும் ஆயிரம் முறை எழுதி விட்டேன். இன்றைய நிலையில் தமிழில் மிகக் குறைந்த பிழைகளுடன் எழுதும் ஆட்களில் நானும் ஒருவன். குறைந்த பிழைகள் என்றால், இருநூறு பக்க நூலில் ஒன்றிரண்டு பிழைகளே இருக்கும். ஆனால் இன்றைய எழுத்தாளர்களோ பக்கத்துக்குப் பத்து தப்பு விடுகிறார்கள். எனக்கு மிகப் பிடித்த ஒரு சமீபத்திய நாவலை என் நண்பர் ஒருவரிடம் சிபாரிசு செய்து கொடுத்தேன். பத்து பக்கத்துக்கு மேல் போக முடியவில்லை என்று நிறுத்தி விட்டார். என்னங்க இது, ஜெட் வேகத்தில் பறக்குமே என்றேன். பக்கத்துக்குப் பத்து தப்பு என்றார். ஐயோ, அந்தப் பதிப்பகத்தில் ஒரு அச்சுப் பிழை கூட இல்லாமல் பார்ப்பார்களே என்றேன். அச்சுப் பிழை என்றால் கடந்து விடுவேன். இலக்கணப் பிழை. தாங்க முடியவில்லை. சாப்பாட்டில் கல் கிடப்பது போல் இருக்கிறது. இத்தனைக்கும் புலவர் பட்டம் வாங்கியவர் பிழை திருத்தம் செய்தது. புலவரின் தமிழில் ஒரு பிழை இருக்காது. ஆனால் பிழை திருத்தத்தில் கோட்டை விட்டு விட்டார். சென்ற ஆண்டு புத்தக விழாவில் நடந்த கதையையும் சொல்லியிருக்கிறேன். ஒரு தோழி தூண்டி விட்டார். எஸ்ராவைப் பாருங்கள், ஜெயமோகனைப் பாருங்கள், அவர்களுக்குத் தெரியாத ஒரு இளம் எழுத்தாளர் இல்லை. நீங்களோ எப்போது பார்த்தாலும் செல்லப்பா, க.நா.சு., தி.ஜா., தி.ஜ.ர. என்று பழைய ஆட்களையா சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். வீறாப்பாகப் போனேன். ஒரு பதிப்பகத்தில் மூவாயிரம் ரூபாய்க்கு பத்து புத்தகங்களை அள்ளிக் கொண்டு வந்தேன். எல்லாம் இள ரத்தம். ஆனால் ஒரு பக்கத்தைக் கூட தாண்ட முடியவில்லை. பின்னட்டையிலேயே மூணு நாலு தப்பு, காப்பிரைட் பக்கத்தில் ரெண்டு மூணு, சமர்ப்பணத்தில் ஒரு பெயர் இருக்கும் அல்லவா, அந்தப் பெயரில் தப்பு. சரி, இதெல்லாம் அச்சுப் பிழை என்று மன்னித்து பிரதிக்குள் போனால் கொடூரமான இலக்கணப் பிழைகள். பக்கத்துக்குப் பத்து.
என்ன செய்யலாம்? எனக்கு ஒரு சந்தேகம். குழந்தைகள் – உலகம் பூராவும் உள்ள குழந்தைகள் மட்டும் எப்படி இலக்கணச் சுத்தமாக அதது மொழியைப் பேசுகின்றன? நாய் வந்துச்சு என்று சொல்லாமல் எந்தக் குழந்தையாவது நாய் வந்தான் என்று சொல்கிறதா? அவன் வந்தாள் என்று சொல்கிறதா? நாளைக்கு வந்தேன் என்று சொல்கிறதா? மழலைகளைச் சொல்லவில்லை. ஆறேழு வயதுக் குழந்தைகள். தாத்தா நீ என் கூட வா என்றுதானே சொல்கின்றன? தாத்தா வா கூட நீ என்று சொல்கிறதா? அப்புறம் நீங்கள் மட்டும் ஏனய்யா தாத்தா வா கூட நீ என்று மொழிபெயர்க்கிறீர்கள்? காரணம், Thaatha, come with me. மொழிபெயர்ப்பு, தாத்தா, வா கூட நீ. நான் இங்கே மொழிபெயர்ப்புக் குளறுபடிக்குக் கூட வரவில்லை. சொந்த சரக்கே சந்தி சிரிக்கிறது. எடுத்து கொண்டு, கருகி போயிருந்த என்றெல்லாம் படித்தால் நடு வெய்யிலில் அம்மணக்குண்டியுடன் தார்ச்சாலையில் படுக்கப் போட்டு அடிப்பது போல் இருக்கிறது. எடுத்துக் கொண்டு, கருகிப் போயிருந்த என்று எழுத எனக்கு இலக்கணமே தேவையில்லை.
சி.சு. செல்லப்பா, க.நா.சு., கு.ப.ரா., எம்.வி. வெங்கட்ராம், கு. அழகிரிசாமி, சுந்தர ராமசாமி, ஆதவன், புதுமைப்பித்தன், மௌனி, சார்வாகன், லா.ச.ரா., தி.ஜானகிராமன், அசோகமித்திரன் போன்றவர்கள் புலவர் பட்டம் வாங்கியவர்கள் அல்ல. சாதாரணமாக பள்ளியிலும் கல்லூரியிலும் படித்தவர்கள். கரிச்சான் குஞ்சு, இந்திரா பார்த்தசாரதி, பிரபஞ்சன் ஆகியோர்தான் புலவர் பட்டம் வாங்கியவர்கள். அல்லது, தமிழை முறையாகக் கல்லூரியில் படித்தவர்கள். இந்த மூவரைத் தவிர மேற்குறிப்பிட்ட எழுத்தாளர்களின் படைப்புகளில் ஒரு இலக்கணப் பிழை கூட பார்க்க முடியாது. ஒரு ஒற்றுப் பிழை கூட பார்க்க முடியாது. காரணம் என்ன? அது பழக்கம். எனக்கும் பழக்கம். குழந்தைகள் இலக்கணப் பிழை இன்றி ஒரு மொழியைப் பேசுவது போல. அப்புறம் ஏன் இந்தக் காலத்து இளைஞர்களுக்கு இத்தனை இலக்கணப் பிழை நேர்கிறது? உண்மையிலேயே எனக்குக் காரணம் தெரியவில்லை.
என் எழுத்தைப் பொருத்தவரை, அதில் வரும் இலக்கணப் பிழைகள் நான் வேண்டுமென்றே செய்வது. காமரூபக் கதைகள் என்பதே சரி. ஆனால் என் தலைப்பில் காமரூப கதைகள் என்றே இருக்கும். முன்பே நான் சொல்லியிருக்கிறேன். ஒருவரிடம் குறை கண்டு பிடிக்கும் முன் அவருடைய எழுத்தை மிக நன்றாகப் பயின்றிருக்க வேண்டும். பலமுறை சொல்லியிருக்கிறேன். நான் மொழியில் HARMONYயைப் பின்பற்றுகிறேன். இலக்கணத்தை அறிந்து கொண்டு அதை மீறுகிறேன். காமரூபக் கதைகள் என்றால் ஹார்மனி சரியில்லை. காமரூப கதைகளில்தான் லயம் உட்காருகிறது. எனக்கு மொழியில் இசை முக்கியம். இலக்கணத்தை விட. அதற்காக அந்தச் சினிமா என்றும் இன்று இரவுச் சந்திக்கலாமா என்றும் தமிழ்க் கொலை செய்ய மாட்டேன். புலவர்களும் இன்று இளைஞர்களோடு சேர்ந்து கொண்டு தமிழைக் கொலை செய்கிறார்கள். இளைஞர்கள் தெரியாமல் செய்கிறார்கள். ஒற்றே போடுவதில்லை. அவர்கள் எழுதும் தமிழ் ஓலைச்சுவடி தமிழ் மாதிரி ஒற்றெழுத்தே இல்லாமல் வந்து கொண்டிருக்கிறது. புலவர்களோ ஓர் ஊரில் ஓர் அரசி இருந்தாள் என்று எழுதி குழந்தைகளைத் தமிழ் வகுப்பிலிருந்து துரத்தி அடிக்கிறார்கள். தமிழ் உங்கள் கடவுள். நானோ கலைஞன். உங்கள் கடவுள் எனக்கு சேவகம் செய்கிறது. இது வேறோர் தளம். கவனியுங்கள். இங்கே உயிரெழுத்துக்கு முன்னே ஓர் வருகிறது. நான் கலைஞன். நான் எழுதுவதுதான் இலக்கணம். ஏனென்றால், இலக்கியத்துக்கு இலக்கணம் சேவகம் செய்ய வேண்டியிருக்கிறது. ஆனால் தப்பும் தவறுமாக, இலக்கணமே தெரியாமல் நான் கலைஞன் என்று பிதற்றினால் அவர் கார்ல் மார்க்ஸ் அல்ல, க்ரோச்சோ மார்க்ஸ் என்று புரிந்து கொண்டு போய் விட வேண்டியதுதான்.
இவ்வளவையும் மீறி, உங்களுக்கு ஒழுங்கான தமிழ் எழுத வேண்டும் என்ற ஆசை இருந்தால் பானுமதியின் காணொலிகளைப் பாருங்கள்.
சிறார்கள் இவரை பானு பாட்டி என்று அழைக்கிறார்கள். உம்மைத் தொகை, வியங்கோள் வினைமுற்று, இரட்டைக்கிளவி, அடுக்குத் தொடர், வினைத்தொகை, பெயரெச்சம், வினையெச்சம், எழுவாய்த் தொடர், விளித்தொடர், சுட்டுப் பெயர்கள், வினாப்பெயர்கள், வேற்றுமை உருபுகள், வேற்றுமைத் தொகைகள் என்ற பெயர்களெல்லாம் உங்களுக்குத் தெரிய வேண்டியதில்லை. ஆனால் கிளம்பிச் சென்றானா, கிளம்பி சென்றானா என்று தெரிந்தே இருக்க வேண்டும். தெரியாவிட்டால் எழுதவே வரக் கூடாது.
இன்னொரு கொடுமை. மொழிபெயர்ப்பு. மொழிபெயப்புக் குளறுபடிகள் பற்றியே ஒரு நூறு கட்டுரை எழுதி நூறு பேருடைய பகைமையைப் பெற்றிருக்கிறேன். முதலில் எதிர் பதிப்பகம் அனுஷ். அவருடைய ஜென்ம விரோதிப் பட்டியலில் எனக்குத்தான் முதல் இடம். காரணம், அவருடைய பதிப்பகத்தின் மொழிபெயர்ப்பு நூல்களை விமர்சித்தேன். இரண்டாவது, வேண்டாம், பட்டியல் நீளம். எனக்கு க்ரியா பதிப்பகம் என்றால் ஒரு பைத்தியம். தமிழில் லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தியின் வாசகர் வட்டம்தான் உச்சபட்ச பதிப்பகம். அதற்குப் பிறகு க்ரியா. அதற்குப் பிறகுதான் மற்ற பதிப்பகங்கள் என்று பல தசாப்தங்களாக நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் இப்போது க்ரியாவிலிருந்து வரும் மொழிபெயர்ப்பு நூல்களைப் பார்க்கும் போது தலை சுற்றுகிறது. க்ரியாவின் சிறப்பு என்னவென்றால், மூல மொழியிலிருந்தே தமிழுக்கு மொழிபெயர்ப்பார்கள். ஆனால் இப்போது க்ரியாவின் ஃப்ரெஞ்சிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்படும் நூல்களைப் பார்த்தால் வாந்தி வருகிறது. எனக்கு வெ. ஸ்ரீராமின் மொழிபெயர்ப்பு பிடிக்கும். ஆனால் க்ரியாவின் ஃப்ரெஞ்ச் – தமிழ் நூலில் மொழிபெயர்ப்பாளர் பெயர் ஏதோ நாயகர் என்று இருந்தது. தமிழ் சகிக்கவில்லை. மொழிபெயர்ப்பாளர்களுக்குத் தமிழ் தெரியவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.
தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்பவர் பலர் தமிழர்களாகவும் தமிழ்நாட்டிலேயே வாழ்பவர்களாகவும் இருப்பதால் அதுவும் ஒரு கசாப்புக் கடையாகவே காட்சியளிக்கிறது. அ.இரா. வெங்கடாசலபதி ஜே.ஜே. சில குறிப்புகள் நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து என்ன மாதிரி வாங்கிக் கட்டிக் கொண்டார் என்று விவரமாக எழுதியிருக்கிறேன் ஜெர்ரி பிண்ட்டோ ஹிண்டு தினசரியில் சலபதியை நார்நாராகக் கிழித்துத் தோரணம் கட்டி விட்டார். சலபதி ஒரு பெரும் ஆய்வாளர். மரியாதைக்குரியவர். அவர் ஏன் தனக்குத் தெரியாத ஒரு துறையில் போய் அவமானப்பட வேண்டும்? கமல் கவிதை எழுதி எழுதி அவமானப்படுகிறார் என்றால் அவரிடம் அந்தக் கண்றாவியைச் சொல்லக் கூட நாதி இல்லை. ஆனால் எழுத்தாளர்கள் அப்படியா? தும்மினால்கூட எதிர்மறைச் செய்தியாக வந்து விடும்.
கவிஞர் சுகுமாரனை உங்களுக்குத் தெரிந்திருக்கும். தமிழில் தவிர்க்க முடியாத கவி. அவரது கோடைக்காலக் குறிப்புகளை விட்டு விட்டு யாரும் சமகாலத் தமிழ்க் கவிதையைப் பேச முடியாது. ஒரே ஒரு தொகுப்பில் இத்தனை மரியாதை. இந்தப் பரிவட்டம் போதாதா? ஆசை யாரை விட்டது, ஐயா பாப்லோ நெரூதாவின் கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்த்தார். பெரிய தொகுப்பு. ஒரே பேத்தல். நெரூதாவின் உச்சபட்ச கவிதை அவருடைய மாச்சு பிச்சு. அதில் முக்கியமான ஒரு பத்தியையே காணோம். ஏனென்றால், மொழிபெயர்க்க அது ரொம்பக் கடினம். மற்ற இடங்களிலும் ஒரே அலங்கோலம். இது பற்றி மிக விரிவாக ஒரு கட்டுரை எழுதினேன். ஆள் அடங்க வேண்டாமா? காப்ரியல் கார்ஸியா மார்க்கேஸின் நூறாண்டுகளின் தனிமையை மொழிபெயர்த்தார். அதுவும் குப்பை. எடுத்த எடுப்பிலேயே கோளாறு. முதல் பத்தியிலேயே அர்த்தப் பிழை.
இந்த நிலையில் இன்று காலை தமிழ் இந்துவில் வந்த ஒரு புத்தக மதிப்புரையைக் காண நேர்ந்த காலத்தின் கோளாறை என்னவென்று சொல்வது? லோரன்ஸ் வில்லலோங்கா என்ற ஸ்பானிஷ் எழுத்தாளரின் பொம்மை அறை என்ற நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு. மொழிபெயர்ப்பாளர் யுவன் சந்திரசேகர். அதற்கான மதிப்புரையை தமிழ் இந்துவில் ஆசை எழுதியிருக்கிறார். தமிழில் எம்.எஸ்., ஜி. குப்புசாமி போன்றவர்களின் மொழிபெயர்ப்புகளைத் தவிர மற்ற மொழிபெயர்ப்பு நூல்களை நான் மலத்தைப் போல் கருதி ஒதுக்குபவன். அதனால் இது போன்ற மொழிபெயர்ப்புகளைப் பற்றிக் கடுகளவும் கவனிப்பது இல்லை. ஆனானப்பட்ட, நான் பைபிளைப் போல் கருதும் Dictionary of Khazars நாவலே தமிழில் வந்திருப்பதையும், அதையும் ஒரு ஆள் கைமா பண்ணியிருப்பதையும் கேள்விப்பட்டேன். நமக்கு ஏன் இந்த மலக்கிடங்கு விவகாரம் என்று விட்டு விட்டேன். ஆனாலும் நாம் எல்லோரும் சேர்ந்து ஒரு முடிவு எடுக்க வேண்டும். தமிழில் மொழிபெயர்க்கப்படும் நூல்களைப் பற்றிய சரியான மதிப்புரை இல்லாமல் வாங்கக் கூடாது என்ற முடிவே அது. திரும்பவும் சொல்கிறேன். எம்.எஸ்., ஜி. குப்புசாமி போன்றவர்களின் மொழிபெயர்ப்புகளை நம்பி வாங்கலாம்.
மொழிபெயர்ப்புகள் எந்த லட்சணத்தில் செய்யப்படுகின்றன என்பதற்கு ஆசை தரும் உதாரணங்கள். Pagan, Paganism என்ற வார்த்தைகள் சமயச் சார்புக்குப் பெரிதும் அப்பாற்பட்ட, சமயத்துக்குப் புறம்பான, சமயவுணர்வுக்கு எதிரான, சமய வெறுப்பு, அஞ்ஞானம் என்ற ரீதியிலேயே மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. விவிலிய மொழியில் புறவினத்தார், புறமதத்தார் என்பதே அதன் பொருள். Palaces என்பது இடங்கள். Intelligible என்றால் புரியக் கூடிய என்று பொருள். மொழிபெயர்ப்பில் பூடகமான என்று வந்துள்ளது.
அடுத்து வருவதுதான் பயங்கரமானது: ஆங்கிலம். “For Dan Toni art was a little like children, who cannot be conceived following a method, but only in the careless joy and intimacy of the night.”
இதற்கு யுவன் சந்திரசேகரின் மொழிபெயர்ப்பு: டான் டோனிக்கு, கலை என்பது குழந்தைகள் போலச் சிறியது. அவர்கள் ஒரு பாணியைப் பின்பற்ற இயலாதவர்கள். இரவின் அந்தரங்கத்துக்கும், பொறுப்பற்ற ஆனந்தத்துக்கும் மட்டுமே விழைகிறவர்கள்.
ஆங்கிலம் நமக்கு அந்நிய மொழியானாலும் அது எவ்வளவு சுலபமாகப் புரிகிறது. தமிழ் நம்முடைய தாய் பாஷையானாலும் எவ்வளவு அந்நியமாக நிற்கிறது பாருங்கள். ஏற்கனவே இது ஸ்பானிஷில் எழுதப்பட்டு ஆங்கிலத்தில் வந்துள்ளது. அதுதான் இப்படிக் கச்சடாவாகத் தமிழில் கிடைக்கிறது. ஆசிரியர் என்ன சொல்கிறார். தான் தோனியைப் (ஸ்பானிஷில் ட கிடையாது) பொருத்தவரை கலை என்பது குழந்தைகளைப் போன்றது. குறிப்பிட்ட வழிமுறை எதையும் பின்பற்றி குழந்தைகளை உருவாக்க முடியாது. கவலையற்ற ஆனந்தத்திலும் இரவு தரும் நெருக்கத்தாலும் மட்டுமே அவர்களை உருவாக்க முடியும்.
இது ஆசையின் மொழிபெயர்ப்பு. மொழிபெயர்ப்பு இப்படித்தான் இருக்க வேண்டும்.
எழுத்தாளரைப் பற்றி “எந்நேரமும் பிறருக்காகவே வாழ்ந்தார்…” இதன் ஆங்கில மூலம்: He always lived off… இதற்குப் பொருள்: எப்போதுமே பிறரை அண்டி வாழ்ந்தார்.
For க்கும் offக்கும் வித்தியாசம் தெரியாதவர்களெல்லாம் மொழிபெயர்த்து நாம் அதைப் படிக்க வேண்டியிருக்கிறது!!!
அவர் எப்போதுமே ஒரு புரவலராக வாழ்ந்தார். மொழிபெயர்ப்பு.
மூலம்: He always had a benefactor. அதாவது, அவருக்கு எப்போதுமே ஒரு புரவலர் இருந்தார்.
Dog-cart : யுவனின் மொழிபெயர்ப்பு: நாய்கள் இழுக்கும் சிறிய வண்டி. உண்மையில் அது ஒரு சிறிய குதிரை வண்டி.
Ark of the covenant : யுவன் கவனெண்ட் கப்பல். உண்மை: கவனெண்ட் பெட்டகம்.
Will never amount to much : யுவன் : இவ்வளவு வேண்டியிருக்காது அவர்களுக்கு.
சரியான அர்த்தம்: அவர்கள் தேற மாட்டார்கள்.
Thrush : யுவன்: அறுக்கப்பட்ட கதிர்த்தாள்கள்
சரியான அர்த்தம்: ஒரு பறவை
ஆங்கிலத்தில் டைஃபஸ் தமிழில் டைஃபாய்டாக மாறியிருக்கிறது.
Immoral – ஒழுக்கக் கேடான
யுவன்: அழிவற்ற. யுவன் நல்ல கண்ணாடிதான் போட்டிருப்பார் என்று நினைக்கிறேன். Immortal என்று படித்து விட்டார்.
அதேபோல் இன்னொரு கந்தர்வகோளம்
Heresy என்பதற்கு யுவனின் மொழிபெயர்ப்பு: செவிவழிச் செய்தி, புரளி, கேட்பார் சொல்.
Heresy என்பதன் பொருள் மதநிந்தனை. உதாரணமாக, ஒரு கத்தோலிக்கன் கடவுள் இல்லை என்று சொன்னால் அது ஹியர்சி. யுவன் அதை heresay யோடு குழப்பிவிட்டார்.
Habit யுவன் மொழிபெயர்ப்பு பழக்கம். ஆனால் habit என்றால் துறவிகளின் நீண்ட அங்கி.
Unwholesome யுவன் மொழிபெயர்ப்பு முழுமையற்ற. சரியான அர்த்தம்: ஆரோக்கியமற்ற.
மேலும், நாவலில் சில இடங்கள் காணாமலே போய் விட்டன என்கிறார் ஆசை.
இதெல்லாம் சர்வ சாதாரணம். நான் பார்த்த மொழிபெயர்ப்பெல்லாம் இதைவிட கொடூரம் எனவே வாசகர்களே, மொழிபெயர்ப்புகளை வாங்கும் போது கவனமாக இருங்கள். இதன் பொருள்: வாங்காதீர்கள்.
இது பற்றி என் நண்பரிடம் ரத்தக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தபோது காசுக்காகச் செய்திருப்பார் என்றார் நண்பர். நண்பருக்கு இந்த ஜென்மத்தில் எழுத்தாளனைப் பற்றித் தெரியப் போவதில்லை என்று மனதில் நினைத்துக் கொண்டேன். எனக்கு யுவனைத் தெரியும். கோடி ரூபாய் கொடுத்தாலும் மயங்க மாட்டார். இலக்கியத்தின் மீதான அதீத ஆர்வத்தினால் இந்தக் கோளாறு. செய்வதற்கு ஒன்றும் இல்லாவிட்டால் சன்னி லியோனியின் படத்தைப் பார்த்துக் கர மைதுனம் செய்யுங்கள். சமூகத்துக்குத் தீங்கு இல்லை. இம்மாதிரி வேலைகள் தமிழை அவமானப்படுத்துகின்றன. புத்தகம் வாசிப்பவர்களை ஏமாற்றுகின்றன.
இந்தியர்கள் ஏமாற்றுக்காரர்கள் என்று வெளிநாட்டில் ஒரு கருத்து நிலவுகிறது. இப்படியெல்லாம் மொழிபெயர்ப்பது ஏமாற்றுவேலை இல்லாமல் வேறு என்ன, சொல்லுங்கள்? தெரியாமல் செய்வதா இது? கத்தியையே தொட்டிராதவன் சத்திர சிகிச்சை செய்கிறேன் என்று கிளம்பினால் நோயாளி செத்து அல்லவா போய் விடுவான்? போலி டாக்டரைத் திட்டுகிறீர்களே, இது போன்ற போலி மொழிபெயர்ப்புகளை எப்படிச் செய்து கொடுக்கிறீர்கள்? நான் பதிப்பகத்தின் மீது தவறே சொல்ல மாட்டேன். யுவன் சந்திரசேகர் என்ற பெயரை பதிப்பகத்தார் நம்புகிறார். Intelligibleக்குக் கூட அர்த்தம் தெரியாதவர்களெல்லாம் ஏன் ஐயா மொழிபெயர்க்கக் கிளம்புகிறீர்கள்? நீங்களெல்லாம் உங்கள் சொந்த மொழியில் பிரபலமான கவிகள், நாவலாசிரியர்கள், முப்பத்தைந்து ஆண்டுகளாக இலக்கியம் படைத்தவர்கள். இப்படித் தெரியாத மொழியில் போய் விளையாட வெட்கமாக இல்லை?
சிவனே என்று என் நாவலை எடிட் பண்ணிக்கொண்டிருந்த என்னை இந்த சமூக நற்பணியில் இழுத்து விட்ட என் சிநேகிதிக்கு இக்கட்டுரையை சமர்ப்பணம் செய்கிறேன். என் பணி கூடுகிறது. ஒரு மொழிபெயர்ப்பு நாவலைத்தான் எடிட் பண்ணிக் கொண்டிருக்கிறேன். ஔலியாவே காப்பாற்று!!!
நன்றி: ஆசை, தமிழ் இந்து
***
2
ஆகஸ்ட் 18, 2020
மொழிபெயர்ப்புப் பிரச்சினைகள் பற்றி எழுதியிருந்தேன். அந்தப் பதிவு மிகவும் மூர்க்கமாக இருப்பதாகவும், அப்படி எழுதுவதெல்லாம் ரொம்ப அதிகம், அதை நீக்கி விட வேண்டும் என்றும் ஒரு நண்பர் ஆலோசனை சொன்னார். அவரைப் புரிந்து கொள்கிறேன். நான் இப்போது இருக்கும் இடத்துக்கு அது பொருந்தாது. எல்லாம் புரிகிறது. ஆனால் தமிழ் எனக்கு தெய்வத்தைப் போல. அதற்காகத்தானே இப்படி உழைத்துக் கொண்டிருக்கிறோம்? க.நா.சு.வுக்கும், அசோகமித்திரனுக்கும் ஆங்கிலம் தமிழ் அளவுக்குத் தெரியுமே? இருந்தும் அவர்கள் ஆங்கிலத்தில் கட்டுரை மட்டும் எழுதி விட்டு புனைகதைகளை தமிழில்தானே எழுதினார்கள்? பாஷாபிமானம் கூடாது என்பவன் நான். மொழி, இனம், மதம், தேசம் ஆகியவற்றின் மீது வெறி இல்லாதவன் நான். ஆனாலும் தமிழ் ஒரு அற்புதமான மொழி என்பதில் யாருக்குச் சந்தேகம் இருக்க முடியும்? எந்தெந்த மொழி இலக்கணம் சூக்ஷ்மங்களைக் கொண்டதாக இருக்கிறதோ, எந்தெந்த மொழி இலக்கணம் கடினமாக இருக்கிறதோ அந்த மொழியில்தான் நுணுக்கங்கள் அதிகம். ஆங்கிலமெல்லாம் ரொம்பவும் தட்டையான மொழி. தமிழும் சம்ஸ்கிருதமும் நம்ப முடியாத அளவுக்கு இலக்கண நுணுக்கங்களைக் கொண்டவை. அதிலும் தமிழை விட சம்ஸ்கிருத இலக்கணம் பல மடங்கு நுணுக்கமானது. இலக்கணம் கடினமாக ஆக ஆகத்தான் இலக்கிய நயம் பெருகும். ஒரு இலக்கியப் படைப்பை நாம் ஏன் மீண்டும் மீண்டும் வாசிக்கிறோம்? அதில் உள்ள நுணுக்கங்களுக்காக.
ஆல்டஸ் ஹக்ஸ்லியின் ப்ரேவ் நியூ வேர்ல்ட் நாவல் பற்றி ஹெரால்ட் ப்ளூம் எழுதிய கட்டுரையோடு கூடிய, அந்நாவல் பற்றிய பலரது கட்டுரைகளையும் தொகுத்த ப்ளூமின் நூலையும் படித்துப் பாருங்கள். Bloom’s Guides என்று இருக்கும். அந்த ஹக்ஸ்லி இந்தியா வந்த போது க.நா.சு.வை அவர் வீட்டில் வந்து சந்தித்திருக்கிறார் என்ற ஒரு தகவலும் இங்கே என் ஞாபகத்துக்கு வருகிறது. இதைச் சொல்ல வந்த காரணம், ஆங்கிலம் போன்ற ஒரு தட்டையான மொழியில் ப்ரேவ் நியூ வேர்ல்ட் என்ற மகத்தான நவீன காவியத்தை ஹக்ஸ்லி படைத்தது இந்து மரபிலிருந்து அவர் கற்றுக் கொண்டதனால்தான். அது சம்ஸ்கிருதம் மற்றும் தமிழ் மரபு. ஒரு மொழியின் சிறப்புக்கு இலக்கணத்தின் சிக்கலான வலைப்பின்னல் ஒரு முக்கியக் காரணம் என்பது பற்றி பிறகு நான் விரிவாக எழுகிறேன். அதற்கு இங்கே இடம் இல்லை. இதையெல்லாம் சொல்வதன் பின்னணி, இத்தனை சிறப்பு மிக்க தமிழ் மொழியை ஏன் இப்படி மொழிபெயர்ப்பு என்று சொல்லி வதைக்கிறீர்கள் என்பதே என் கேள்வி. யுவன் எத்தனையோ சிறுகதைத் தொகுதிகளும் நாவல்களும் எழுதியவர். எம். யுவன் என்ற பெயரில் அவரது கவிதைகளுக்குப் பெரிய ரசிகர் கூட்டமே உண்டு. தமிழில் ஒரு மூத்த படைப்பாளி அவர். ஜெயமோகனின் அடா போடா நண்பர். அப்படிப்பட்டவர்களே இத்தனை மட்டமான காரியங்களைச் செய்யலாமா என்பதுதான் என் கோபத்துக்குக் காரணம்.
மேலும், இது பற்றி நான் ஒன்று இரண்டு கட்டுரையா எழுதியிருக்கிறேன்? இருபது ஆண்டுகளாகப் புலம்பிக் கொண்டிருக்கிறேன். எனக்கே அலுத்து விட்டது. திரும்பவும் சுருக்கமாகச் சொல்கிறேன். திரும்பத் திரும்ப மொழிபெயர்ப்பாளர்கள் ஒரே தவறையே செய்து கொண்டிருக்கிறார்கள். சுந்தர ராமசாமியை படு கேவலமான ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தே காலி பண்ணினார்கள். அதேபோல் பல எழுத்தாளர்களைச் சொல்லலாம். நூற்றுக்கணக்கில் வெளிநாட்டு எழுத்தாளர்களைக் காலி செய்து கொண்டிருக்கிறார்கள். ஆங்கிலமே தெரியாதவர்கள் மொழிபெயர்ப்பு செய்கிறார்கள். மிக மிக நன்றாக ஆங்கிலம் தெரிந்த பேராசிரியர்களும் மொழிபெயர்த்துக் கொல்லுகிறார்கள். ஏனென்றால், அவர்களுக்குப் படைப்புரீதியான தமிழ் தெரியவில்லை. சமகாலத் தமிழ் இலக்கியம் தெரியாமல் இங்கே ஒரு மொழிபெயர்ப்பும் செய்ய முடியாது. தொடர்ந்து இந்தக் குழி தோண்டும் காரியம் நாற்பது ஆண்டுகளாக நடந்து வருகிறது. நான் கோபமாக எழுதுவேனா மாட்டேனா? என் ஓட்டலில் நான் ஊசல் பண்டம்தான் போடுவேன் என்று ஒருத்தர் அடம் பிடித்தால் நாம் போராட்டம்தானே பண்ண வேண்டியிருக்கும்? அதிலும் தமிழ் எழுத்தாளர்களே ஒரு வெளிநாட்டு சக எழுத்தாளருக்கு இந்த அவமரியாதை செய்யும் போது எப்படி சும்மா இருக்க முடியும்?
ஏன் இது போன்ற மட்ட ரகமான மொழிபெயர்ப்புகள் செய்யப்படுகின்றன என்றால், மொழிபெயர்ப்பாளர்களின் அறியாமையை விட ஆணவமும் அகங்காரமும்தான் காரணம் என்பேன். சில ஆண்டுகளுக்கு முன்பு டிஸ்கவரி புக் பேலஸ் புத்தக நிறுவனத்தில் ஒரு இலக்கிய விழாவில் பேசிக் கொண்டிருந்தேன். பேச்சில் Michel Houellebecq பற்றிக் குறிப்பிட நேர்ந்தது. மிஷல் வெல்பெக் என்றே குறிப்பிட்டேன். பேசி முடித்து நாற்காலியில் அமர்ந்ததும், என் பக்கத்தில் அமர்ந்திருந்த யுவன் சந்திரசேகர் – ஒருவர் மேடையில் பேசிக் கொண்டிருக்கும்போதே – என்னிடம் நீங்கள் பேசும் போது குறிப்பிட்ட ஃப்ரெஞ்ச் எழுத்தாளரின் பெயர் மிஷல் வெல்பெக் இல்லை, மிச்சல் ஔலேபெக் என்று சொன்னார். ஓ சாரி யுவன், அப்படியா, சரிங்க என்று கேட்டுக் கொண்டேன். இரண்டு விஷயங்கள் எனக்குப் புரிந்தன. அவர் என்னுடைய ஒரு எழுத்தைக் கூடப் படித்திருக்கவில்லை என்பது. படித்திருந்தால் ஃப்ரெஞ்சுக்கும் எனக்குமான தொடர்பு புரிந்திருக்கும். நான் கடந்த நாற்பத்தைந்து ஆண்டுகளாக ஃப்ரெஞ்ச் இலக்கியம், ஃப்ரெஞ்ச் தத்துவம், ஃப்ரெஞ்ச் சினிமா ஆகியவற்றோடு மிகத் தீவிரமான தொடர்பில் இருப்பவன். என் சுவாசமே ஃப்ரெஞ்ச்தான் என்ற அளவுக்கு. ஆனால் ஃப்ரெஞ்ச் தெரியாது. ஃப்ரெஞ்ச் தத்துவவாதிகளையும், இலக்கியத்தையும் படிக்க ஃப்ரெஞ்ச் தெரிந்திருக்கத் தேவையில்லையே? ஆனால் நாற்பத்தைந்து ஆண்டுகளாக ஃப்ரெஞ்ச் கலாச்சாரத்தோடு தொடர்பில் இருக்கும் ஒருவருக்கு Michel Houellebecq ஐ எப்படி உச்சரிக்க வேண்டும் என்று தெரியாதா? ஃப்ரெஞ்ச் இலக்கியமும் தத்துவமும் தமிழ் வாசகர்களைச் சென்றடைந்ததில் என் பங்கைத் தெரிந்து கொண்டால் ஃப்ரெஞ்ச் அரசு எனக்கு ஃப்ரான்ஸில் நிரந்தரக் குடியுரிமை தர வேண்டும். நான் அறிமுகப்படுத்தாத ஃப்ரெஞ்ச் தத்துவவாதியே கிடையாது. அதேபோல் ஃப்ரெஞ்ச் எழுத்தாளர்கள். உதாரணமாக, Colette (1873-1954) பற்றி எழுதிய ஒரே இந்திய எழுத்தாளன் அடியேன்தான். நான் குறிப்பிடும் ஃப்ரெஞ்ச் எழுத்தாளர்களை ஃப்ரெஞ்ச் பேராசிரியர்களே படித்திருப்பார்களா என்பது சந்தேகம். 2000-ஆம் ஆண்டு குளிர்காலத்தில் ஒரு ஸோர்போன் தத்துவப் பேராசிரியரிடம் ஒரு இரவு பூராவும் ஜான் ஜெனேவுக்கும் லூயி ஃபெர்தினாந் செலினுக்குமான (Luis Ferdinand Celine) வித்தியாசத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். இதையெல்லாம் மற்றவர்கள் சொல்ல வேண்டும். நானே பயோடேட்டா மாதிரி சொல்லிக் கொள்ள லஜ்ஜையாக இருக்கிறது. அப்படிப்பட்ட என்னிடம் வந்து வெல்பெக்கின் பெயரை ஔலேபெக் என்று சொல்ல வேண்டும் என்று ஒரு எழுத்தாளர் சொல்கிறார் என்றால், அங்கே செயல்படும் அகந்தையைப் பாருங்கள் என்று சுட்டிக் காட்டத்தான். அந்த அகந்தைதான் இப்போது மொழிபெயர்ப்பில் செயல்பட்டிருக்கிறது. என்னால் ஒரு ஆக்ஸ்ஃபோர்டிலோ ஹார்வர்டிலோ ஃப்ரெஞ்ச் இலக்கியம் பற்றி ஒரு comparative literature course பேராசிரியராகப் பணியாற்ற முடியும்.
நான் வாசிக்காத ஒரே ஃப்ரெஞ்ச் எழுத்தாளர், என்னைப் போலவே ஆட்டோஃபிக்ஷன் எழுதிய சேர்ஜ் துப்ரோவ்ஸ்கி (Serge Doubrovsky) மட்டும்தான். ஏனென்றால், அவருடைய நாவல்கள் எந்த மொழியிலும் மொழிபெயர்க்கப்பட முடியாதவை. அவருடைய ஃப்ரெஞ்சில் நிறைய சிலேடை உண்டு. உதாரணமாக, அவரது நாவல் ஒன்றின் பெயர் Fils. Fils (உச்சரிப்பு: “ஃபீஸ்” அல்லது “ஃபீ”) என்ற ஃபிரெஞ்சு வார்த்தைக்கு முதன்மை அர்த்தம் மகன்.. உதாரணமாக, “Dupont fils” என்றால் “Dupont-ன் மகன்” (junior) என்று பொருள்.
Fil (உச்சரிப்பு: “ஃபீல்”) என்ற வார்த்தைக்கு “நூல்” அல்லது “thread/wire/string” என்றும் அர்த்தம் உண்டு. இது “Fils” உடன் ஒலியில் நெருக்கமானது, அதனால் சிலேடையாக வருகிறது.
துப்ரோவ்ஸ்கியின் 1977 நாவல் Fils தான் autofiction என்ற புதிய இலக்கிய வகையை அறிமுகப்படுத்திய முதல் படைப்பு. இந்தத் தலைப்பு “மகன்” மற்றும் “நூல்” (thread, அதாவது வாழ்க்கையின் நூல் அல்லது கதையின் நூல்) ஆகிய இரட்டை அர்த்தங்களை விளையாட்டாகப் பயன்படுத்துகிறது.
துப்ரோவ்ஸ்கி ஒருமுறை என்னுடைய ஸீரோ டிகிரி நாவலைப் பற்றி எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அவருடைய உறவுக்காரர் ஒருவருக்குத் தமிழ் தெரிந்திருந்ததால் அவர் துப்ரோவ்ஸ்கியிடம் ஒரு தமிழ் ஆள் உங்களைப் போலவே எழுதுகிறார் என்று சொல்லி, ஸீரோ டிகிரியை முடிந்த அளவுக்கு அவருக்கு மொழிபெயர்த்துச் சொல்லியிருக்கிறார். அப்போது ஸீரோ டிகிரி ஆங்கிலத்தில் வந்திருக்கவில்லை.
யாருக்கும் நம்முடைய அகந்தையின் காரணமாக அறிவுரை சொல்லக் கூடாது என்பதை நான் செய்த மடத்தனம் ஒன்றின் விளைவாகக் கற்றுக் கொண்டேன். பல ஆண்டுகளுக்கு முன், நான் இளைஞனாக இருக்கும்போது நடந்தது. என்.எஸ். ஜெகந்நாதன் என்று ஒரு மூத்த ஆங்கிலப் பத்திரிகையாளர். தில்லிக்காரர். தமிழர். என்னோடு நட்பு பாராட்டியவர்களில் ஒருவர். கணையாழியில் பத்தி எழுதுவார். அவரிடம் ஒருநாள் ஒன் மில்லியன் நேம்ஸ் ஆஃப் காட் கதையை எழுதியவர் ஆர்த்தர் ஸி. க்ளார்க் என்று எழுதியிருக்கிறீர்களே, அதை எழுதியது ஐஸக் அஸிமோவ் அல்லவா என்று சொல்லி விட்டேன். அப்போது ஏது கணினி? அவர் புத்தகத்தில் பார்த்து விட்டு இல்லை, க்ளார்க்தான் என்று எழுதினார். மன்னிப்புக் கேட்டேன். அன்றோடு அந்தப் பழக்கத்தை விட்டு விட்டேன்.
நான் சொல்வது புரிகிறதா? ஒரு மொழியே தெரியாமல் அந்த மொழியில் மொழிபெயர்க்க வேண்டுமானால் எவ்வளவு ஆணவம் இருக்க வேண்டும் என்பது மட்டுமே என் கவலை. தமிழ்நாட்டில் ஒரே ஒரு இனக்குழுவைச் சார்ந்தவர்களிடம்தான் நான் இந்த குணத்தைப் பார்க்கிறேன். எல்லோரும் அல்ல. அப்படியெல்லாம் பொதுமைப்படுத்தும் ரேஸிஸ்ட் அல்ல நான். அந்தச் சாதியிலும் எத்தனையோ மகாத்மாக்கள் உள்ளனர். ஆனால் வெல்பெக்கை ஹௌலேபெக் என்று என்னிடம் திருத்தம் சொல்லும் பிறவிகள் எல்லோரும் ஏன் அந்த ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள் என்பதுதான் என் ஆச்சரியம். அவ்வளவுதான். அடக்கம் வேண்டும். எல்லாத் தவறும் என்னுடையதே என்று சொல்லும் ஆண்டாளின் பணிவு வேண்டும். (வல்லீர்கள் நீங்களே நான்தான் ஆயிடுக!) அடக்கத்தைக் கற்பிப்பதும் ஆண்டாள்தானே?
மூன்று தினங்களுக்கு முன்பு வந்த ஒரு கடிதத்தைப் பகிர்கிறேன்.
அன்புள்ள சாரு,
நலம்தானே? தங்களுக்குக் கடிதம் எழுதி நீண்டநாள் ஆகிவிட்டது.
இன்று பூச்சி-113 வாசித்தேன். மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. நான் மிகவும் விரும்பி வாசிக்கும் எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் (அவரது மொழிபெயர்ப்புகளை வாசித்ததில்லை). அவரது நாவல் ‘பகடையாட்டம்’ வாசித்த பின்னர் அவருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். உடனே மறுமொழியில் அவரது தொலைபேசி எண்ணை அளித்தார். மறுநாள் மிகவும் இனிமையாக உரையாடினார்.
ஆம், நீங்கள் சொல்வது போல அவர் காசுக்காக இலக்கியம் எழுதுபவர் அல்ல. ஆனால் இப்படி ஒரு துயர சம்பவம் நிகழ்ந்துவிட்டது வருத்தப்பட வேண்டியதுதான்.
நீங்கள் பல முறை இது மாதிரி மொழிபெயர்ப்புக் குளறுபடிகள் பற்றி எழுதியுள்ளீர்கள். நான் ஆங்கிலத்தில் மிகவும் குறைவாகவே வாசிப்பவன். தமிழ் மொழிபெயர்ப்புகள் வழியாகவே நான் பிறமொழி இலக்கியங்கள் வாசிக்க இயலும். ஆனால் நிலைமை இப்படி உள்ளது.
தற்போது தாகூரின் ‘கோரா’ நாவலை [கா.செல்லப்பன் மொழிபெயர்ப்பு (தமிழக அரசின் பாவேந்தர் விருது பெற்றவர்!)] ஆர்டர் செய்து வருகைக்காகக் காத்திருக்கிறேன்.
அதுதான் கொஞ்சம் பீதியாக உள்ளது!
தங்கள்
கிஷோர் குமார்.
கிஷோர் குமார் ஒரு டீன் ஏஜ் மாணவன். எங்கெங்கிருந்தெல்லாம் இலக்கியம் வாசிக்கிறார்கள் என்பதற்காக இந்தக் கடிதத்தைப் பகிர்ந்தேன். மொழிபெயர்ப்பு செய்பவர்களுக்கு எத்தனை பொறுப்புணர்ச்சி வேண்டும் என்று இந்தக் கடிதத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டும். கடிதத்தின் கடைசி வரியை மிகவும் ரசித்தேன். பீதி கொள்ள வைக்கும் அளவுக்கு ஆகி விட்டது நிலை.
தம்பி கிஷோர், நான் தமிழ் மொழிபெயர்ப்புகளை வாசிப்பதில்லை. எல்லாம் ஆங்கிலத்தில்தான். ஆனால் இதில் பெரிய விஷயதாரிகள் எஸ்.ரா.வும் உங்கள் ஜெயமோகனும்தான். அவர்களைப் பிடித்தால் உங்கள் கேள்விக்குப் பதில் கிடைக்கும். இருவரும் தமிழில் வரும் பெரும்பாலான மொழிபெயர்ப்புகளையும் படித்தவர்கள்.
ஆனாலும் ஆங்கிலம் கற்றுக் கொள்வது ஒன்றும் பெரிய சிரமம் இல்லை. இன்றைய கூகிள் காலத்தில் அது ஊதித் தள்ளும் விஷயம். என்னை விட ஒரு உதாரணமே தேவையில்லை. படித்துப் படித்தே தெரிந்து கொண்டேன்.