என் மரணத்தை விரும்பும் அன்பர்கள்

நேசராஜ் என் நீண்ட கால நண்பர். தர்மபுரியில் வசிக்கிறார். அஞ்சல் துறையில் நான் ஸ்டெனோவாகப் பணிபுரிந்து கொண்டிருந்த காலத்தில் நேசராஜ் அஞ்சல் துறையின் தொழிற்சங்கத் தலைவராக இருந்தார். அந்தப் பதவி de facto Postmaster General மாதிரி. அதிகாரிகளை நடுங்கச் செய்யும் பதவி. நேசராஜ் தீவிர இலக்கிய வாசகர். அதனால் அவரும் நானும் அப்போதிருந்தே நண்பர்கள். இத்தனை காலத்துக்குப் பின்பும் அந்த நட்பு தொடர்கிறது. இப்போது அந்த நட்பு இன்னும் பலப்பட்டிருக்கிறது. அதேபோல் அவரது வாசிப்பும்.

ஃபேஸ்புக்கில் ஒருவரின் குட்டிக் கதை ஒன்றை அனுப்பி படிக்கச் சொன்னார் நேசராஜ். உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்று சொல்லியிருந்தார். படித்தேன். ரொம்பவே பிடித்திருந்தது. அராத்துவின் குட்டிக் கதைகள் போல் இருந்தது. உடனே அந்த எழுத்தாளரை ஃபேஸ்புக்கில் தேடினேன். கண்டு பிடிக்க முடியவில்லை. ஆனால் அந்தப் பெயரில் பலர் இருந்ததால் ஒவ்வொருவராகப் பார்த்த போது ஒருவர் மெரினா பீச் அக்கா கடை அருகே நான் நிற்கும் புகைப்படத்தைப் போட்டு என்னை ஏதோ கிண்டல் செய்திருந்தார். உடனே பலரும் கண்டபடி என்னைத் திட்டி பின்னூட்டம் போட்டிருந்தார்கள். ஒருவர் பாக்கியில்லாமல் திட்டு. அதில் ஒரு திட்டு எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

“இவனுக்கு இன்னும் சாவு வர்லியா?”

இந்தப் பின்னூட்டம் ஒரு பெண்மணியினுடையது. ஆஹா என மனம் குளிர்ந்தேன்.

இந்தப் பதிவைப் படித்ததும் எனக்கு ரெண்டு பேர் ஞாபகம் வந்தனர். ஒருவர், ஊரெல்லாம் கெட்ட பேர் எடுக்கிறேன் என்று வருத்தப்படும் என் அன்புத் தோழி புவனேஸ்வரி. இதோ பார் புவீ, ஒருத்தர் என் புகைப்படத்தைப் போடுகிறார். போகிறவர் வருகிறவர் எல்லாம் என் மீது கல்லை எடுத்து அடிக்கிறார்கள். இதற்கெல்லாம் காரணம், நான்தான் என்கிறாய் நீ. இல்லை. நிச்சயமாக இல்லை. சமூகத்தில் என் மீது இந்த அளவுக்கு துவேஷமும் வன்மமும் நிலவுகிறது என்றால், அதற்கு வேறு ஏதோ காரணம் இருக்க வேண்டும். என்ன என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் நீ சொல்லும் காரணம் இல்லை என்பது மட்டும் நிச்சயமாகத் தெரிகிறது. இப்படியிருக்கலாம். எதார்த்தவாதி வெகுஜன விரோதி. நான் எதார்த்தத்தைப் பேசுகிறேன். வெகுஜனம் வெறுக்கிறது. அவ்வளவுதான். உதாரணமாக, சமூகமே வாழை படத்தைக் கொண்டாடியது. நான் விமர்சித்தேன். என் மீது வெகுஜனம் கொலைவெறி. நேற்று பார், அராத்து நதியா என்று ஒரு நடிகையைப் பற்றி ஒரு வரி எழுதி விட்டாராம். அவர் மீது சமூகமே வெறிநாய் போல் பாய்கிறது. ஷேக்ஸ்பியரின் ஜூலியஸ் சீஸரைப் படித்திருக்கிறாய்தானே, இதோ:

THIRD PLEBEIAN: Your name, sir, truly.

CINNA: Truly, my name is Cinna.

FIRST PLEBEIAN: Tear him to pieces; he’s a conspirator.

CINNA: I am Cinna the poet, I am Cinna the poet!

FOURTH PLEBEIAN: Tear him for his bad verses, tear him for his bad verses!

CINNA: I am not Cinna the conspirator.

FIRST PLEBEIAN: It is no matter, his name’s Cinna.

சின்னா நான் சதிகாரன் சின்னா இல்லை, கவிஞன் சின்னா என்று அலறியும், கவிஞன் என்றால் உடனே கொல்லுங்கள் என்கிறது சமூகம். காலம் காலமாக இதுதான் நடக்கிறது தோழி. என்ன, தமிழ்நாட்டில் இது கொஞ்சம் அதிகமாக நடக்கிறது. அதாவது, கரனாடகா, கேரளா, வங்காளம் போன்ற இடங்களில் எழுத்தாளர்கள் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தராக இருக்கிறார்கள். புத்தகமும் ஐம்பதாயிரம் போகிறது. இங்கே எழுத்தாளன் சினிமாக்காரனுக்கு ப்ளோஜாப் பண்ண வேண்டியிருக்கிறது. இல்லையென்றால், பட்டினிச் சாவு. புத்தகம் விற்பதோ நூறு பிரதி. இதோடு சமூகத்தின் செருப்படி வேறு. (இவனுக்கு இன்னும் சாவு வர்லியா?)

ஞாபகம் வந்த இன்னொரு பெயர் ஜெயமோகன். ஜெயமோகன் பல சமயங்களில் சொல்லியிருக்கிறார், தமிழ்நாட்டிலேயே அதிக வசை வாங்கும் எழுத்தாளர் அவர்தான் என. அதில் நான் மாறுபடுகிறேன். இதை நீங்கள் சோதித்தே பார்த்து விடுங்கள். இந்தக் கணமே சோதியுங்கள். சும்மா ஜெயமோகனின் படத்தை ஃபேஸ்புக்கில் போடுங்கள். எதுவுமே எழுத வேண்டாம். நூறு பேர் திட்டுவான். அம்பது பேர் பாராட்டுவார். அந்த நூறு திட்டிலும் எந்தக் கற்பனைத் திறனும் இருக்காது. ஒரே வார்த்தையையே நூறு பேரும் சொல்லுவான். காரணம் என்னவென்றால், சமூகம் திட்டுவதற்குத் தோதாக ஜெயமோகன் அதிகம் கலாட்டா பண்ணவில்லை. ஒரே ஒரு கலாட்டாதான். அதுதான் அவர் மீது வீசப்படும் வசை. இப்போது என் புகைப்படத்தைப் போடுங்கள். ஒருத்தனும் பாராட்ட மாட்டான். நூறு வசை வரும். நூறு வசையும் நூறு விதமாக இருக்கும். ஒரே ஒரு வசைதான் ரெண்டு மூணு முறை ‘ரிபீட்’ ஆகும். “டேய், நீ இன்னும் சாகலியா?” மற்றபடி செம க்ரியேட்டிவிட்டியுடன் திட்டுவான்கள். வாழ்க்கையில் க்ரியேட்டிவிட்டி என்றால் என்னவென்றே தெரியாத லும்பன் பயல் லும்பன் சிறுக்கியெல்லாம் விதவிதமாகத் திட்டுவார்கள். ஆக, தமிழ்நாட்டிலேயே யார் அதிகம் திட்டு வாங்குவது?

ஆ, இப்போதுதான் மீண்டும் பார்த்த போது தெரிந்தது. என் புகைப்படத்தைப் போட்டுத் திட்டியிருக்கும் எழுத்தாளர்தான் நேசராஜ் சொன்ன எழுத்தாளர். ஆனால் ஆச்சரியமில்லை. எழுத்தாளர் நாகர்கோவில். நாகர்கோவிலுக்கும் எனக்கும் அம்பது வருஷப் பகை.

இப்போது நண்பர் நேசராஜுக்கும் தோழி புவனேஸ்வரிக்கும் ஒரு வேண்டுகோள்.

என் வயது எழுபத்து மூன்று. இருபத்தைந்து வயதிலிருந்து சமூகத்திலிருந்து வசை தின்கிறேன். இப்போதும் அது நிற்கவில்லை. இனிமேலாவது அந்த எழவெல்லாம் என் செவிகளில் விழாத அளவு தனிமையில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். எனவே இந்தக் கண்றாவியையெல்லாம் என் காதில் போடாதீர்கள். அந்த இசை விமர்சகர் தியாகராஜாவைப் பற்றி சாரு எழுத என்ன இருக்கிறது என்று கேட்டதையும் என் காதில் போட்டது நீதானே புவீ? இனி இது எதுவும் எனக்கு வேண்டாம். ஒரே ஒரு மேற்கோள் தருகிறேன். அதை எனக்குச் சொன்னது கூட புவனேஸ்வரிதான் என்று ஞாபகம். இந்த மேற்கோள்படியே நான் வாழ விரும்புகிறேன். நீங்களும் பின்பற்றினால் உங்கள் வாழ்வு வளம் பெறும்.

மெரில் ஸ்ட்ரீப்பின் மேற்கோள்:

I don’t want to be around people who are constantly critical. It’s draining, it’s toxic to the spirit, and I’ve learned that in this life, especially in an industry like ours, you have to choose your circle wisely. I’d rather surround myself with those who lift you up, who inspire and support you through the ups and downs, not the ones who tear you down with every step. Criticism can be constructive, of course, but when it’s just negativity disguised as opinion, I walk away. I’ve been doing this for decades, and I know now that protecting your peace means saying no to the voices that diminish you. Surround yourself with dreamers, with believers, with people who see your light even when you doubt it yourself.”