தியகராஜர் பிராமண வித்வான்களின் வழிபாட்டுக்குரியவர். அவரை ஏடாகூடமாக, ஸ்ருங்கார பாவனை கலந்து எதாவது எழதப் போய் அதை இந்த மயிலை மாமாக்கள் ஏடாகூடமாக அர்த்தம் பண்ணிண்டு எதிர்க்க, உங்களுக்கு ஆதரவாக டி. எம் க்ருஷ்ணா, இந்து ராம் இத்யாதிகள் வந்தால் ஒரே அதகளம் ஆகலாம். பார்த்துக் கொள்ளுங்கள்.
பாலசுப்ரமணியன்.
டியர் பாலா சார்,
என் தியாகராஜாவில் எந்த ஸ்ருங்கார ரஸமும் இராது. தியாகராஜர் ஆதி சங்கரர் போன்று கவித்துவத்தின் உச்சம் கண்டவர் இல்லை. தியாகராஜரிடம் செயல்படுவது முழுக்க முழுக்க பக்தியும் சங்கீதமும் மட்டுமே. எம்.எஸ். ஸ்ருங்கார ரஸ கீர்த்தனைகளை பக்தி ரஸம் ததும்ப பாடியது போன்ற அபத்தத்தை நான் என் நாவலில் செய்ய மாட்டேன்.
மரியோ பர்கஸ் யோசா ஒரு வலதுசாரி. ஆனால் அவரது தெ ரியல் லைஃப் ஆஃப் அலெஹாந்த்ரோ மாய்த்தா என்ற நாவலைப் படித்தால் ஒருவர் தீவிர இடதுசாரியாக மாறி விடுவார். கூடு விட்டுக் கூடு பாய்வதில் வல்லவர் யோசா. அடியேனும் அப்படியே. தியாகராஜா நாவலில் பக்தி மட்டுமே இருக்கும். அதனாலேயே அந்த நாவல் இலக்கிய வாசகர்களால் புறக்கணிக்கப்படும். மைலாப்பூர் வித்வான்களுக்கு இலக்கியம் பரிச்சயம் இல்லை; தமிழும் படிக்கத் தெரியாது. எனவே அவர்களாலும் அந்த நாவல் புறக்கணக்கப்படும். எனவே தியாகராஜா நாவலுக்கு வாசகர்களே இல்லை. உங்களைப் போன்ற ஒருசிலர் மட்டுமே உண்டு. அவர்கள் நூறு பேர்தான் இருக்கிறார்கள். அதன் காரணமாகவே தியாகராஜாவை நான் ஆங்கிலத்தில் எழுதிக்கொண்டிருந்தேன். வட இந்தியாவில் அதற்கு ஆங்கில வாசகர்கள் கிடைப்பார்கள். ஆனால் ராம்ஜியிடமிருந்து வந்த ஒரு தொலைபேசி அழைப்பு என் எண்ணத்தை மாற்றி விட்டது. இப்போது நான் ஆங்கிலத்தில் எழுதியதைத் தமிழில் மாற்றிக்கொண்டிருக்கிறேன். எனக்கும் உங்களைப் போன்ற ஒருசில வாசகர்கள் மட்டுமே தியாகராஜாவைப் படித்தால் போதுமானது.
நீங்கள் கற்பனை செய்வது போல் நான் அதில் ஸ்ருங்காரம் சேர்த்து எழுதி, மைலாப்பூர் வித்வான்கள் எதிர்த்தால் டி.எம். கிருஷ்ணாவும் ஹிந்து ராமும் எனக்கு ஆதரவாக வரவே மாட்டார்கள். கிருஷ்ணா என்னைத் தன் ஜென்ம எதிரியாக நினைப்பவர். ஒருநாள் பெஸண்ட் நகர் எலியட்ஸ் பீச்சில் அவர் என் எதிரே வந்தார். அடுத்த க்ஷணம் மாயமாய் மறைந்து போனார். என் எதிரே வந்தால் புன்னகைக்க வேண்டுமே என மறைந்திருக்கலாம். பயங்கரமான அனுபவம். மிக அருகே வந்தவர் அப்படி மாயாவியாய் மறைந்தார்.
காரணம், நான் அவரது தலைமைப்பீடமான சுந்தர ராமசாமியை எதிர்த்து விட்டேன். என்னை அதிகார வர்க்கம் என்ன ஆக்கினை செய்தாலும் கிருஷ்ணா எனக்கு ஆதரவாக வர மாட்டார்.
ஹிந்து ராம் என்னை தருண் தேஜ்பாலின் கூட்டாளியாகப் பார்க்கிறார். எனவே என் பக்கம் கூடத் திரும்ப மாட்டார் ராம்.
ஆனால் இதற்கெல்லாம் அவசியமே ஏற்படாது. தியாகராஜாவில் ஸ்ருங்காரம் அறவே இல்லை. முழுக்க முழுக்க பக்தி.
நீங்கள் கேட்டதால் ஸௌந்தர்ய லஹரியிலிருந்து ஒரு ஸ்லோகம். எனக்கு மிகவும் பிடித்த ஒரு சம்ஸ்கிருத குறுங்காவியம் ஸௌந்தர்ய லஹரி. இதற்கு இணையான ஒரு காவியம் உலக மொழிகளில் இல்லை என்பது என் கருத்து. என் கவிதைகளின் ஊற்றுக்கண்களில் ஒன்று, ஆதி சங்கரரின் ஸௌந்தர்ய லஹரி.
नरं वार्षीयांसं नयनविरसं नर्मसु जडं
तव पाङ्गलोके पतितं मनुधावन्ति शतशः
गलद्वेणिबन्धः कचकलशविस्तृतसिचयाः
हठात्त्रुट्यत्काञ्च्यो विगलितदुकूलयुवतयः
நரம் வார்ஷியாம்ஸம் நயன விரஸம் நர்மஸு ஜடம்
தவ பங்க லோகே பதித மனுதவந்தி சதச
கல த்வேனி பந்த குச கலச விஸ்த்ருத சிசய
ஹதத் த்ருத்யத் காஞ்ச்யோ விகலித துகூல யுவதய
மழை மேகங்களைப் போல் ஒளிரும் தேவியின் கடைக்கண் பார்வை ஒருவன் மீது பட்டால், அவன் காமரச சல்லாபம் அறியாதவனாகவும், வயதானவனாகவும், உடல் பலம் அற்றவனாகவும் இருந்தாலும், அவன் பின்னால் நூற்றுக்கணக்கான இளம் பெண்கள் தலைமுடி அவிழ்ந்து, மார்புக் கலசங்களை மறைக்கும் ஆடைகளும் இடுப்பு ஆபரணங்களும் அவிழ்ந்து விழ ஓடுவார்கள்.
சாரு