துவேஷத்தின் நிழல்

அன்புத் தோழிக்கு,

இவர் ஏன் இப்படி வரிந்து வரிந்து இந்தப் பிரச்சினை பற்றி எழுதிக்கொண்டேயிருக்கிறார் என்று நினைக்காதே. நான் வாங்கும் கெட்ட பெயர் பற்றித் தொடர்ந்து யோசிக்கும்போது என் வாழ்க்கை வரலாறே என் ஞாபகத்தில் நிழலாடுகிறது.

இரண்டே சம்பவங்களைக் குறிப்பிட்டு இந்த soliloquyயை முடித்துக் கொள்கிறேன்.

பிரபு காளிதாஸ்

1.பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் காலையில் டி.எம். கிருஷ்ணாவுக்கு ஃபோன் பண்ணினேன். அப்போது கிருஷ்ணா பற்றி நான் ஒரு வார்த்தை கூட எழுதியதில்லை. ஆனால் அவரைப் பிடிக்கும். ஒரு புத்தக வெளியீட்டுக்கு அழைக்க வேண்டியிருந்தது. அழைத்ததும் எடுத்தார். ஹலோ என்றார். நான் சாரு நிவேதிதா பேசுகிறேன் என்றேன். உடனே – கண்ணிமைக்கும் நேரத்தில் – ஃபோனைத் துண்டித்து விட்டார்.

நானும் அதோடு விட்டு விட்டேன். ஆனால் அப்போதிருந்து அவரை நான் மனித ஜீவியாகவே நினைப்பதை நிறுத்தி விட்டேன். அவர் அப்படிக் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டதற்கு என்ன காரணம் என்று இந்நேரம் உனக்குப் புரிந்திருக்கும். கிருஷ்ணாவின் முதலாளியான நாகர்கோவில்காரரின் தந்தையை நான் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் போலி எழுத்தாளர் என்று சொல்லி விட்டேன். அதனால் அந்த முதலாளி கிருஷ்ணாவிடம் என்னைப் பற்றி இல்லாததும் பொல்லாததுமாக ஓதித் தள்ளியிருக்கிறார். கிருஷ்ணா ஃபோனைத் துண்டித்தார்.

ஆக, துவேஷத்தின் விதை எனது இருபத்தைந்தாவது வயதிலேயே போட்டாகி விட்டது.

ஜே.ஜே. சில குறிப்புகள் ஒரு போலியான நாவல் என்று நான் சொல்லியே தீர வேண்டியிருந்தது. அது என் இலக்கியக் கடமை. புதுமைப்பித்தனும் க.நா.சு.வும் இதைத்தான் செய்தார்கள். அதையே நானும் செய்தேன். தமிழ்நாட்டுக்கு வெளியே இந்தியாவின் ஜேம்ஸ் ஜாய்ஸ் எனக் கொண்டாடப்படும் சாருவுக்குத் தமிழ்நாட்டில் ஏன் கெட்ட பெயர் என்றால் இதுதான் காரணம். இதை நீ புரிந்து கொண்டே ஆக வேண்டும். கிருஷ்ணாவும், ஜேஜேயின் ஆசிரியரும் பிராமணர்கள் என்று உனக்குத் தெரியும்.

இரண்டாவது, ஒரு நீதிபதி. சமூக நீதிக்காகப் போராடுபவர் என்பதால் அவர் பற்றி நிறைய பாராட்டி எழுதியிருக்கிறேன். தலித் சமூகம். ஒருநாள் அவரை ஒரு விழாவின் இரவு விருந்தின்போது பார்த்தேன். தனியாக நின்றுகொண்டிருந்ததால் அருகில் போய் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, உங்கள் எழுத்து எனக்கு மிகவும் பிடிக்கும் என்று சொல்லி கை கொடுத்தேன். நெருப்பில் பட்டது போல் கையை உதறி விட்டு மறுபக்கம் சென்று விட்டார். சீனி அப்போது என் அருகில் இருந்தார். அவர் இந்தக் காட்சியை நம்ப முடியாமல் பார்த்தார்.

யோசி. ஒருத்தரைப் பாராட்டி எழுதுகிறேன். அவர் என் கையை வெறுப்புடன் தட்டி விட்டுப் போகிறார். இவர் தலித் என்றாலும் ஒரு நவ பிராமணன். இளையராஜா மாதிரி. நான் எழுதும் விஷயங்களின் மீது ஒவ்வாமை. இது பற்றி என் ப்ளாகில் எழுதினேன். பெயர் குறிப்பிடவில்லை. அதிலிருந்து என்னைப் பார்த்தால் பிரமாதமாக சிரித்து கைகொடுத்துப் பேசுகிறார்.

இந்த இரண்டு சம்பவங்களும் உன் சிந்தனைக்கு.

சாரு