ஒரு சிறிய கணக்கு

நான் மாதம் நான்கு தினங்கள் வெளியூர் சென்று விடுகிறேன். அப்போது சில நண்பர்களை என்னோடு வருவதற்காக அழைக்கிறேன். நான்கு நாட்கள் என்னோடு தங்கிப் பேசலாம். யாரை அழைத்தாலும் வேலை இருக்கிறது என்கிறார்கள்.

என் வயது எழுபத்து மூன்று. இன்னும் ஏழு ஆண்டுகள் இருப்பேன் என்று வைத்துக் கொள்வோம். அது ஒரு தாராளமான காலம். இந்த ஏழில் வருடத்துக்கு ஒரு முறை நீங்கள் என்னைச் சந்திக்கிறீர்கள் என்றாலே எழு சந்திப்புதான் வருகிறது. இதன் காரணமாகவே, நான் அசோகமித்திரனை அவரது இறுதி ஆண்டுகளில் மாதம் ஒருமுறை சந்தித்துக்கொண்டிருந்தேன். அந்த அளவுக்கு எனக்கு இறுதி நெருங்கவில்லை என்றாலும் ஆண்டுக்கு ஒருமுறை என்றால், ஏழு சந்திப்புதானே? எல்லா நண்பர்களும் எனக்கு வயது அம்பது என்ற நினைப்பிலேயே இருக்கிறார்கள் போல் தெரிகிறது. ஒரு ஆண்டுக் காலம் தி. ஜானகிராமன் வசித்த அபார்ட்மெண்ட்டுக்கு அடுத்த கட்டிடத்தில் (தில்லி கர்ஸன் ரோடு, இப்போது கஸ்தூர்பா காந்தி மார்க்) நான் வேலை பார்த்து வந்தேன். தினமுமே பார்த்திருக்கலாம். வாரம் ஒருமுறையாவது பார்த்திருக்கலாம். ஆனால் ஒரே ஒரு முறைதான் அவர் வீட்டுக்குப் போய் சந்தித்தேன். அதுவும் வெங்கட் சாமிநாதன் புண்ணியத்தில். அதே தவறை நீங்களும் செய்கிறீர்கள். இந்த விஷயத்தில் சீனி, ராஜா, ஸ்ரீராம் ஆகிய மூன்று பேரைத் தவிர வேறு எல்லோருமே சொதப்பல்தான். இந்த மூவரும்தான் அழைத்தால் வருபவர்கள். அதிலும் ஸ்ரீராம் அவரது வேலை காரணமாக வெளியூர் வர மாட்டார். உள்ளூரில் எப்போது அழைத்தாலும் வருவார்.

சாருவை எழுத்தில் மட்டுமே பார்த்துக் கொள்ளலாம் என்று நீங்கள் நினைத்தால் ஒரு பொக்கிஷத்தை இழக்கிறீர்கள் என்று பொருள்.
சும்மா தோன்றியது. எழுதினேன்.