முன்னறிவிக்கப்பட்ட முடிவுகளின் சுமை


1

முதல் நாள் ஆக்கிய சோறில் நீரூற்றி
மறுநாள் காலையில்
கொஞ்சம் மோரும்
சின்ன வெங்காயமும் போட்டு
மாகாளிக் கிழங்கு ஊறுகாயோடு
மூணு தம்ளர் குடிப்பதே என் காலை உணவு
நீராகாரம்
அதுவே நாள் பூராவுக்குமான என் சக்தி

நேற்று வெளியே சென்று விட்டதால்
சமையல் இல்லை
இன்று நீராகாரம் இல்லை

நடைப்பயிற்சியின் போது
காலை ஏழரைக்கு
சங்கீதா உணவகத்தில் காஃபி
ஒவ்வொரு மேஜையிலும்
இட்லி வடை பொங்கல் தோசை
மினி டிஃபன் என்று
விதவிதமான சிற்றுண்டிகள்
அமர்க்களமாய் மணம் பரப்பும்
ஆசையாய் இருக்கும்
ஆனால் பசிக்காது

இன்று நீராகாரம் இல்லையானதால்
ஏழிலிருந்தே பசித்தது
இத்தனைக்கும் தினமும் இரவு
சாப்பிடாதவன்
நேற்றிரவு இரண்டு கல்தோசை
சாப்பிட்டிருந்தேன்

பிரச்சினை இதுதான்
இல்லை என்று முன்கூட்டியே
தெரிந்து விட்டால்
இல்லாததன் மேல்
வெறிகொண்டுப் பாய்கிறது மனம்
இன்று நீராகாரம் இல்லாததால்
ஏழு நாள் பட்டினியில்
காய்ந்தது போல் பசிக்கிறது

சங்கீதாவில் அமர்ந்ததுமே
ஒரு மீடியம் காஃபிக்கு
ஆர்டர் கொடுத்து விடுவார்கள்
இன்று அவர்களைத் தடுத்து
பூரி என்றேன்
அத்தனை பசி

அதையேதான் சொல்கிறேன் இறைவரே
நாளை எனக்கு மரணம் என்றால்
இன்றே என்னிடம் சொல்லாதீர்
நாளை மரணம் என்றால்
இன்று இல்லாமல் போய்
இன்றே நாளையாகி விடுகிறது

இதையேதான் நண்பனிடமும் கேட்கிறேன்
நண்ப,
வாணாள் முழுதும் நான் பிச்சையெடுத்தே
உண்ண வேண்டுமா?
எனக்குப் பணம் கொடுக்க யார் உண்டு, சொல்?
என் மகன் என்னை சூத்தடித்து விட்டான்
எனக்கே அவன் லட்சங்களில் கொடுக்க வேண்டியிருக்க
என்னிடமே பத்து லட்சம் கடன்
திரும்பவே இல்லை

இன்னொரு சம்பவம்
பெங்களூர் சென்றேன்
கோரமங்களா வீட்டில் தங்கினேன்
ஒரு மாதமாய் பூட்டியிருந்த வீடு
மோகனை அழைத்து
அர்பன் க்ளாப்ஸ் மூலம்
சுத்தம் செய்யச் சொன்னேன்
செய்தாயிற்று

சென்னை திரும்பியதும்
மோகனின் பில் வந்தது
ஆயிரம் ரூபாய்
வீட்டை சுத்தம் செய்த கூலி

மோகன் என் மாணவன்
ரெண்டு லட்சம் மாத ஊதியம்
ஆனால்
குருவுக்காக ஆயிரம் கூட
செலவு செய்ய முடியாத பிச்சைக்காரன்
இந்தப் பிச்சைக்காரக் கூட்டத்தில்
நானுமொருவன்

ஆனாலும் ஒரு நம்பிக்கை
இறைவி அரசுத் தேர்வில் வெற்றி பெற்றால்
உதவி செய்வாள்

இப்போது நீ வருகிறாய்
அவள் வெற்றி பெற மாட்டாள்
வெற்றி பெற்றாலும்
உனக்கு உதவ மாட்டாள் என்கிறாய்

தம்பி,
என் எஞ்சிய காலமும்
பிச்சைக்காரனாகவே வாழ வேண்டுமா?

என் எழுபத்து மூன்று வயதில்
ஒருத்தி வருகிறாள்
உனக்கு உதவுகிறேன் என்கிறாள்
அதில் ஏன்டா மண்ணையள்ளிப் போடுகிறாய்?
அதிலும் என்னிடம் பாடம் கற்ற மாணவன் நீ
சரி, இறைவியின் உதவியை உதறி விடுவோம்
உங்களில் யாரேனும் என் வாழ்க்கைச் செலவை
ஏற்பீரா?

இறைவி
கையோடு உன்னிடமும் ஒரு விண்ணப்பம்
நீ எதையாவது பின்னாளில்
ரத்து செய்வதாக இருந்தால்
முன்கூட்டி சொல்லாதே
அது என்னைப் பைத்தியமாக்குகிறது
ரத்து செய், செய்யாதே,
உன் வாழ்க்கை
உன் விருப்பம்
என்னிடம் சொல்லாதே
சொன்னால் எனக்குத்
தற்கொலை தவிர
வேறு வழி தெரியவில்லை

ஏனென்றால்,
மனம் ஒரு காகம் போல்
எது இல்லையென்கிறாயோ
அவற்றின் மேல் பறந்து
கனவுகளைத் தின்கிறது

2

நம்பிக்கையில்தான் நாட்களை ஓட்டுகிறேன்
நாளை புக்கர் கிடைக்கும்
நாளை நோபல் கிடைக்கும்
நாளை கருவாட்டுக் குழம்பு கிடைக்கும்
நாளை உன் ஸ்பர்ஸம் கிடைக்கும்
நாளை பணம் கிடைக்கும்
நாளை மற்றுமொரு நாள் அல்ல
நாளை என் நம்பிக்கை
அந்த நம்பிக்கையைக் கொல்லாதே

நாளை வரவில்லையானால் வருத்தமில்லை
ஆனால் வருமென்ற நம்பிக்கைதான்
சுவாசிக்க வைக்கிறது

இன்னும் சரியாகச் சொன்னால்
நம்பிக்கை கூட அல்ல
நாளை பற்றி நான் நினைப்பதே இல்லை
நம்பிக்கை தருவோர் மீதும்
எனக்கு அசூயை உண்டு
அந்த வகையில்
சோதிடர் இனத்தின்மீது எனக்குத்
தீராப்பகையுண்டு

பதினைந்து வயதில் சொன்னார்
இருபத்தைந்தில் வருமென்று
இருபத்தைந்தில் சொன்னார்
முப்பத்தைந்தில் நடக்குமென்று
முப்பத்தைந்தில் சொன்னார்
நாற்பத்தைந்தில் நிச்சயமென்று
ஐம்பத்தைந்திலும் வாக்குறுதி கிட்டியது
அறுபத்தைந்தென்று
அறுபத்தைந்தில் ஒரு மூத்த சோதிடர்
அழைத்துப் போன நண்பர்
பிரபலமில்லாத அரசியல்வாதி
இன்னும் ஓராண்டில் நீர்
மத்திய மந்திரியாவீரென்றார்
என்னிடம்
‘எழுபதிலிருந்து நீர்
பிச்சையெடுக்க வேண்டியிராது
பணம் கூரையைப் பிய்த்துக்கொண்டு
கொட்டும்’ என்றார்

யாருமறியா அரசியல்வாதி
ஓராண்டில் மத்திய மந்திரியானார்
ஆனால்
வழக்கம்போல் என் விஷயம்
நடக்கவில்லை

எல்லா சோதிடனும் சொன்னதுதான்
நடக்கவில்லை
வருத்தமில்லை
நம்பிக்கை தராதீர்
என்பதே என் வேண்டுகோள்

நம்பிக்கையும் வேண்டாம்
மறுதலிப்பும் வேண்டாம்
நாளையே எனக்கு இல்லை
அப்படியே நாளையென்ற ஒன்றிருந்தால்
அது கானல்நீர் போல்
கண்ணில் தெரிந்து கைக்கு எட்டாமல்
சொல்லாமல் வந்து
சொல்லாமல் போகட்டும்
நாளை பற்றிய முன்னறிவுப்புகள் வேண்டாம்

இன்று
இக்கணம்
சாஸ்வதம்
இது போதும்

3

மழை லேசாகத் தூறுகிறது.
ஒரு தெருநாய்
என்னைப் போலவே
தூறலில் நனைந்து தெருவில் நடக்கிறது
பூரி சாப்பிட்டுவிட்டு
நான் திரும்பும்போது,
அடுத்த தெரு மூலையில்
வெயில் ஒரு திருடனைப் போல எட்டிப்பார்க்கிறது
நாய் அதன் ஈரத்தை உலர்த்துகிறது
தத்க்ஷணம்
இந்த நொடி
இந்த இடம்
Augenblick, Jetzt—
கண்ணிமைப்பின் நொடி
Dasein
இங்கே
இப்போது
நான் இருக்கிறேன்
க்ஷணம்
தத்க்ஷணம்
இந்த இடம்
இந்த நொடி
இந்தக் கணம்
வாசனை மட்டும் ஒட்டியிருக்கும்
ஒரு காலி காஃபி கப்
அல்லது
மழையில் நனைந்து
வெயிலில் உலர்ந்து
அடுத்த மூலையை நோக்கி நடக்கும்
தெருநாய்

4

நாய் என்னைப் பார்க்கிறது
பாக்கெட்டிலிருந்த பிஸ்கட்டை எடுத்துக் கொடுக்கிறேன்
முகர்ந்து பார்த்து தலையைத் திருப்பிக் கொள்கிறது
அந்த நாய்க்கு மரண தண்டனை
விதிக்கப்பட்டிருக்கிறது
ஆனால் அதை அது அறியவில்லை
நானும் சொல்லவில்லை
கவனியுங்கள்
கருணையை நான் இங்கே
ஒரு நாடகத்தைப் போல்
உங்கள் முன்னே
நிகழ்த்திக் காட்டுகிறேன்
ஆகவே
நண்பர்களே
நீங்களும் என் மீது கருணை கொண்டு
நீங்களும் மற்றவர்களும்
எனக்கு அளித்திருக்கும்
அல்லது
அளிக்கப்போகும்
தண்டனைகளைப் பற்றி
என்னிடம் சொல்லாதீர்
உங்களைப் பொறுத்தவரை
அது தண்டனையல்ல
என் உயிர்காக்கும்
மந்திரக்காப்பு என்பதும்
எனக்குத் தெரியும்
எப்படியிருந்தாலும் வேண்டாம்

அந்த நாயைப் பாருங்கள்
தனக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டிருந்தும்
அதை அறியாமலிருக்கிறது
அறிந்தவனும் அதன் மீது கருணை கொண்டு
சொல்லாமல் விடுகிறான்
நாய் அடுத்த மூலையை நோக்கி நடக்கிறது
அதற்கு நாளை இல்லை
நான் அதனிடம் விடை பெற்றுக்கொள்கிறேன்
இதுவே தத்க்ஷணம்
இதுவே சாஸ்வதம்
இது போதும்

(இந்தக் கவிதையே இதுவரை எழுதியவைகளில் எனக்கு ஆகப் பிடித்த கவிதை. இதை எழுத முப்பது மணி நேரம் ஆயிற்று. நேற்று ஆரம்பித்தேன். இப்போதுதான் முடித்தேன். இதை என் ஆன்மாவிலிருந்து எழுதினேன். குருதியினாலும் எலும்பின் மஜ்ஜையினாலும் வடிவமைத்தேன். ஒரு நாய் தூறலில் நனைந்தபடி சென்று கொண்டிருந்தது. நானும் அதனுடனே நடந்தேன். அதுதான் இந்தக் கவிதையின் முடிச்சு. அவ்வளவுதான். இந்தக் கடைசிப் பிரதி இந்தக் கவிதையின் பன்னிரண்டாவது படிவமாக இருக்கலாம்.)

இப்படி ஒரு கவிதையை எழுதி விட்டு சந்தா/நன்கொடை பற்றி நினைவூட்டுவது ரசிக்கவில்லை. இருந்தாலும் வேறு வழியில்லை.

சந்தா/நன்கொடை  அனுப்ப முடிந்தவர்களுக்கு விவரம் கீழே:

ஜி.பே. செய்வதற்கான தொலைபேசி எண்: 92457 35566

பெயர்:  ராஜா (ராஜா தான் என் அட்மின். எனவே குழப்பம் வேண்டாம்.)

வங்கி மூலமாக அனுப்புவதாக இருந்தால் அதற்கான விவரம்:

UPI ID: charunivedita@axisbank

K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy. 

ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH Chennai