பிரபஞ்ச லயம்

முன்னறிவிக்கப்பட்ட முடிவுகளின் சுமை கவிதையைப் படித்து விட்டு ஸ்ரீராம் இவ்வாறு எழுதியிருந்தார்:

கடவுள் சாரு நீங்கள்.  இந்தக் கவிதையை எழுதியவன் கட்டாயம் கடவுளாகத்தான் இருப்பான். 

வெளியே மழை பெய்து கொண்டிருக்கிறது. மக்கள் வீடு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.

தத்க்ஷணம்

இந்தக் கடிதத்தை இங்கே பகிர்வதற்குக் காரணம், இதை எழுதும்போது நானுமே இப்படித்தான் உணர்ந்தேன்.  இதை வாசிப்பவர்களுக்கு ‘இதெல்லாம் ரொம்ப ஓவராக இருக்கிறதே’ எனத் தோன்றும்.  அப்படித் தோன்றினால் நான் உங்களுக்கு ஒரு கதை சொல்கிறேன்.

கேத்தான் மேஹ்தா இந்தியாவின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர்.  அவருடைய ஆரம்ப காலப் படங்கள் பாவ்னி பவாய் (1980), ஹோலி (1984), ஸ்மிதா பாட்டில் நடித்த மிர்ச் மசாலா (1985) ஆகியவை சினிமாவின் மீது ஆர்வம் கொண்டவர்கள் பார்த்தே ஆக வேண்டிய படங்கள்.  அவருடைய முதல் படம் பாவ்னி பவாய்.  அதில் ஒரு நாட்டுப்புறக் கதை வருகிறது.  இந்தப் படத்தை நான் 1980இல் பார்த்ததோடு சரி, அதற்குப் பிறகு ஒருமுறை கூட பார்க்க வாய்க்கவில்லை.  நாற்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு அந்தப் படத்தை நினைவு கூர்ந்து எழுதுகிறேன். 

ஒருத்தன் ஊரெல்லாம் கடன் வாங்கி விடுவான்.  வியாபாரம் நொடித்து, கடனைத் திருப்பிக் கொடுக்க முடியவில்லை.  கடன் கொடுத்தவர்கள் அவனை அடித்துக் கொன்று விடும் நிலை.  பைத்தியம் மாதிரி நடிப்பான்.  விட்டு விடுவார்கள்.  பிறகு, அதுவே சௌகரியமாகப் போகவே பைத்தியமாகவே இருந்து விடுவான்.

நீங்களும் உங்களை கடவுள் என்றே நினைக்கத் தொடங்குங்கள்.  இந்தப் பிரக்ஞையை சபரிமலைக்கு மாலை போட்ட போது உணர்ந்தேன்.  என் உடம்போடும் மனதோடும் பிணைந்து கிடந்து என் இயக்குசக்தியாக விளங்கும் காமத்தை நாற்பத்தெட்டு நாட்களுக்கு எப்படி ஒத்தி வைப்பது என்று குழம்பினேன்.  ஐயப்பன் வேறு கோபக்காரர்.  இடையில் தப்பு செய்தால் பெரும் தண்டனை கிடைக்கும்.  சரி, நடப்பது நடக்கட்டுமென மாலை போட்டாயிற்று.  ஆனால் பெரிய அதிசயம் நடந்தது.  எல்லோரும் என்னை சாமி சாமி என அழைத்து பாதம் தொட்டபோது நான் சாமியாக மாறினேன்.  காமம் போன இடம் தெரியவில்லை. 

இந்திய மரபில் அஹம் ப்ரும்மாஸ்மி என்பார்கள்.  சூஃபி மரபில் அனல் ஹக்.  அல்-ஹல்லாஜ் (மன்ஸூர் இப்னு ஹல்லாஜ்) என்று ஒரு சூஃபி ஞானி.  அவர் அனல் ஹக் என்ற வசனத்தைக் கூறிக்கொண்டிருந்தார்.  அனல் ஹக் என்றால் நானே இறைவன்.  இவரது சிந்தனைகள் வஹ்தத் அல்-வுஜூத் (இறையொருமை) என்ற சூஃபி கோட்பாட்டுடன் தொடர்புடையவை. இதன்படி, இறைவன் எல்லாவற்றிலும் இருக்கிறார், மனிதனின் உள்ளத்தில் இறைவனின் ஒளி பிரதிபலிக்கிறது.

இந்தச் சிந்தனை இஸ்லாமிய நம்பிக்கைக்கு முற்றிலும் எதிரானது.  இறை நிந்தனை (குஃப்ர்).   கி.பி. 922 இல், அல்-ஹல்லாஜ் கைது செய்யப்பட்டு, பாக்தாதில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். மரண தண்டனை விதிக்கப்பட்டது.  முதலில் சவுக்கடி பெற்று, பின்னர் சிலுவையில் அறையப்பட்டு, இறுதியாகத் தூக்கிலிடப்பட்டார். அவரது உடல் எரிக்கப்பட்டு, சாம்பல் டைக்ரிஸ் நதியில் கரைக்கப்பட்டது. 

ஆனால், அல்-ஹல்லாஜ் சூஃபி மரபில் ஒரு மகத்தான ஷஹீத் (தியாகி) எனக் கருதப்பட்டு அவரைப் பின்பற்றித்தான் பல ஆயிரம் சூஃபிகள் தோன்றினர். 

நான் என்னைப் பற்றி அடிக்கடி ஞானி ஞானி என்று குறிப்பிட்டுக் கொள்வது இந்தப் பின்னணியில்தான். 

முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் நான் ஒரு பெண் குழந்தையை, அவளது ஐந்து வயதிலிருந்து எட்டு வயது வரை, தனியாளாக, பெண் துணையில்லாமல் சென்னை நகரில் வளர்த்து வந்தேன்.  ஒரு ஆண் பெண் துணையின்றி இப்படி ஒரு சிறுமியை ஒரு நகரத்தில் வளர்ப்பதன் அசாத்தியம் பற்றி யோசித்துப் பாருங்கள்.  வீடு கூட கிடைக்கவில்லை. 

என் அலுவலகம் மௌண்ட் ரோடு சாந்தி தியேட்டர் எதிரே அஞ்சல் தலைமையகம்.  ராயப்பேட்டையில் உள்ள பள்ளியிலிருந்து ரிக்‌ஷாக்காரர் குழந்தையை அழைத்துக்கொண்டு அலுவலகத்தில் கொண்டு வந்து விடுவார்.  பன்னிரண்டு மணிக்கு அவளுக்கு மதிய உணவு கொடுப்பேன். 

அட, அடா, அந்த நாடகத்தைப் பார்க்க நேரும் பெண்களெல்லாம் ரத்தக் கண்ணீர் விட்டார்கள்.  நீங்கள் கடவுள், நீங்கள் கடவுள் என்றே என்னைத் துதித்தார்கள்.  அத்தனை பொறுமையாக உணவு ஊட்டுவேன்.  கோபமே வராது.  எரிச்சலே கொள்ள மாட்டேன்.

குழந்தை என்று இல்லை.  இப்போதும் என் மனைவியை அப்படித்தான் நடத்துகிறேன்.  நான் மாதம் நான்கு தினங்கள் வெளியூர் செல்கிறேன்.  அது தவிர மற்ற நாட்களில் ஒரு நாள் கூடத் தவறாமல் – கவனியுங்கள், ஒரு நாள் கூடத் தவறாமல் – அவளுக்கு இரண்டு மாதுளைப் பழங்களை உரித்துக் கொடுத்துக்கொண்டிருக்கிறேன்.  மாதுளை உரித்து உரித்து என் கைவிரல்கள் குஷ்டரோகியின் விரல்களைப் போல் இருக்கின்றன.  என்னை நேரில் சந்திப்பவர்களிடம் காண்பிக்கிறேன்.  மாதுளை தினமும் இருக்க வேண்டும்.  நேற்று தீர்ந்து விட்டது என்றால் இன்று காலை கடையிலிருந்து வாங்கி வர வேண்டும்.  ஒரு முறை கூட மறக்கக் கூடாது.  ஒரு நாள் மறந்து விட்டால், வயிற்றுவலியில் துடிப்பாள் மனைவி.  “நீ மாதுளை கொடுக்கவில்லை அல்லவா, அதனால்தான் வயிற்று வலி” என்ற ஓத்தாம்பாட்டும் கிடைக்கும்.  அதனால் அப்படி ஒரு சூழ்நிலையை நான் உருவாக்குவதில்லை.  பன்னிரண்டு பழம் வாங்குவேன்.  ஆறு நாள் வரும். 

கடையிலிருந்து வீடு அரை கிலோமீட்டர்.  மாதுளையோடு இன்னும் சிலதும் சேர்ந்து பத்து கிலோ எடையுள்ள பை.  நான் இரண்டு கிலோ கூட தூக்கக் கூடாது என்பது மருத்துவர் உத்தரவு.  தூக்கினால் நெஞ்சு வலி வரும்.  இத்தனை குறைந்த தூரத்துக்கு ஆட்டோ கிடைக்காது.  வாரா வாரம் இந்த எடையைத் தூக்கிக்கொண்டுதான் வருகிறேன்.  ஒரு வாரம் கை வலிக்கும்.  வலி போன பிறகு அடுத்த வாரம் தூக்குவேன். 

இதெல்லாம் போகட்டும்.  காலை எட்டரையிலிருந்து பன்னிரண்டு வரை கிடைக்கும் பாருங்கள் ஓத்தாம் பாட்டு, நீங்கள் கடவுளாக இருந்தால் மட்டும்தான் வீட்டில் அமைதி நிலவ முடியும்.  தினமும் குறிப்பிட்ட சில விஷயங்கள் குறித்து மட்டும்தான் ஓத்தாம் பாட்டு. 

ஏன் இட்லியை சரியாகச் செய்யவில்லை?  ஏன் இப்படி ஒட்டி ஒட்டி வருகிறது?  எண்ணெய் நிறைய ஊற்ற வேண்டியதுதானே?

(பதினைந்து ஆண்டுகளாக நான்தான் காலைச் சிற்றுண்டியின் பொறுப்பு.  மதிய உணவும் எழுபத்தைந்து சதம் நான்தான் செய்வேன்.)

வடை, பஜ்ஜிக்கு ஊற்றுவது போல் எண்ணெய் ஊற்றுகிறேன், அப்படியும் இப்படித்தான் வருகிறது என்று பதில் சொல்வேன்.

ஓத்தாம் பாட்டு தொடங்கும்.  இதன் பெயர் இட்லி ஓத்தாம் பாட்டு.

தோசை ஓத்தாம் பாட்டு என்று ஒன்று.  தோசை ஏன் இப்படி பிய்த்துக்கொண்டு வருகிறது?  எப்போதுதான் நீ தோசை போட கற்றுக் கொள்ளப் போகிறாய்? 

ஒருநாள் தோசைக்கல்லில் தடவுவதற்கு வெங்காயம் தேடினேன்.  பயன்படுத்திய வெங்காயம் ஃப்ரிஜ்ஜில் இருக்கும்.  அன்றைய தினம் கிடைக்கவில்லை.  ஐந்து நிமிடம் தேடினேன்.  பிறகு, புதிய வெங்காயம் எடுத்துக்கொள்ளலாம் என்று சமையலறைக்கு வந்தேன்.  அதற்குள் தோசைக்கல் சூடாகி விட்டது.  தோசை ஓத்தாம் பாட்டு தொடங்கியது. மனைவி போய் ஃப்ரிஜ்ஜில் தேடினாள்.   உடனே கிடைத்தது.  எனக்கு மட்டும் எப்படிக் கிடைக்கிறது என்று நக்கலாகக் கேட்டாள்.  அதற்கு முந்தின தினம்தான் மூன்று மணி நேரம் ஓத்தாம் பாட்டு விட்டிருந்தாள்.  நான் காது கேளாதவனாகவும் வாய் பேசாதவனாகவும் அத்தனை ஓத்தாம் பாட்டையும் கேட்டுக்கொண்டிருந்தேன். 

கவனியுங்கள்.  இவ்வளவும் பணிப்பெண் முன்னால்தான் நடக்கும்.  இதைப் பார்த்துப் பயந்தே பல பணிப்பெண்கள் ஒரே மாதத்தில் நின்று விடுகிறார்கள்.  ஒரு பணிப்பெண் சொல்லி விட்டே நின்றார்.  முந்தாநாள் பணிப்பெண் மிகவும் மிரண்டு போய், தனக்குள்ளாகவே, “இது என்ன, அம்மாள் ஐயாவை இந்தத் திட்டு திட்டுகிறார்?” என்று சொல்லிக்கொண்டாள். 

எனக்கு மட்டும் எப்படிக் கிடைக்கிறது என்று நக்கலாகக் கேட்டதும், கடுப்பாகி ”இதை நீ கடவுளிடம் கேட்க வேண்டும்.  நீ அய்யங்கார், அதனால் உடனே கிடைத்தது.  நான் சேரியிலிருந்து வந்தவன், உடனே கிடைக்க இன்னும் ஒரு ஐநூறு ஆண்டுகள் ஆகும்” என்றேன்.

உடனே ஆண்களுக்குக் கொட்டையில் அடிபட்டது போல் மூன்று மணி நேரம் இடைவிடாமல் ஓத்தாம் பாட்டு விட்டாள்.  சாதி அடையாளத்தை விட்டு விட்ட அவளை அய்யங்கார் என்று சொல்லி அவமதித்து விட்டேனாம்.  மறுநாளும் ஒரு மூன்று மணி நேரம் இதன் பொருட்டு ஓத்தாம் பாட்டு விட்டாள்.  இனிமேல் சீனி என்ற பெயரோடு சேர்த்து அய்யங்கார் என்ற சொல்லையும் தடை செய்தேன், மனதுக்குள்.

ஆனால் அதே சமயம், நான் ஏதாவது முறுக்கு போல் எதையாவது தின்று விட்டு தட்டை அப்படியே மேஜையில் மறந்து போய் வைத்து விட்டால் (அப்படி நடக்காது, ஆயிரத்தில் ஒருமுறை நடந்து விட்டால்) “சொல்றேன்னு கோச்சுக்காத, என்னதான் மேல்நிலைக்கு வந்து விட்டாலும் சேரி புத்தி மாற மாட்டேங்குது பார் உனக்கு” என்பாள்.  நான் அதைக் கேட்டு சிரித்தபடி “ஆமாம்மா” என்பேன்.   

ஆனால் ஒருபோதும் அவள் வீசும் ஓத்தாம் பாட்டுக்கு ஒரு வார்த்தை பதில் சொல்ல மாட்டேன்.  அதற்கு என் சுயநலம் மட்டுமே காரணம்.  பதில் சொன்னால் வீட்டின் அமைதி கெட்டு விடும்.  அமைதி கெட்டால் லயம் போய் விடும்.  லயமின்றி என்னால் எழுத முடியாது. 

இப்படி வாழும் என்னோடுதான் எந்தப் பெண்ணும் ஒரு வாரம் கூட வழ முடியாது என்கிறார்கள் என்னையறிந்த பெண்கள்.

சரி, அவந்திகா என்று இல்லை.  இந்த இடத்தில் வேறு எந்தப் பெண் இருந்தாலுமே இப்படித்தான் இருந்திருப்பேன்.  அதில் சந்தேகமே இல்லை. 

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த ஒரு சம்பவம்.   என் மடிக்கணினியில் ஒரு கோளாறு.  நன்றாகத் தெரியும், சீனியால் அதை அரை நிமிடத்தில் சரி பண்ணி விட முடியும்.  சீனியோடு பேசினால் மனைவிக்குப் பிடிக்காது.  அப்போது மனைவி என் அருகே இருந்தாள்.  “இதற்கெல்லாம் நீ ஏன் உன் நண்பர்களை அழைக்கிறாய்?  இதோ கார்த்திக்தான் இருக்கிறானே, நான் அவனைக் கூப்பிடுகிறேன்” என்றாள்.

அவனை அழைத்தால் வீட்டில் ரகளை நடக்கும், வேண்டாம் என்றேன்.

”சீச்சீ, நீ சீனியோடு சேர்ந்து சேர்ந்து அவனைப் போலவே நெகடிவ் கேரக்டராக மாறி விட்டாய், பொறு, கார்த்திக்கை அழைக்கிறேன்.”

கார்த்திக் வந்தான்.  அரை நிமிடத்தில் சரி செய்தான்.  தொடர்ந்து மிகவும் எரிச்சலான தொனியில் “இதையெல்லாம் நீங்களே கற்றுக்கொண்டு செய்ய வேண்டும், இதற்கெல்லாம் மற்றவர்களை எதிர்பார்க்கக் கூடாது” என்று சொன்னான். 

ஆறு மணி நேரம் மண்டையை உடைத்துக்கொண்டு எழுதியிருந்தேன்.  மடிக்கணினியை எடுத்து உடைத்து விட்டேன்.  ஐந்து ஆண்டுகள் நான் உழைத்த உழைப்பு சுக்கு நூறாய் தரையில் சிதறியது.  என் மகன் என்னை ங்கோத்தா என்று திட்டினான்.  பதிலுக்கு நான் அடித்திருந்தால் செத்திருப்பான்.  அப்போது நான் ஒரு மதயானையின் பலத்துடன் இருந்தேன்.  மனைவியின் தோளில் ஆசையுடன் கை போட்டால் தோள் உடைந்து விடும் போலிருக்கிறது, கையை எடு என்பாள்.  (இப்போது நிலைமை வேறு.  ஒரே அடியில் செத்து விழுந்து விடுவேன் என்ற நிலையில் உடம்பு சருகாகி விட்டது.  கலவியின் போது கூட ‘நீ செத்து விடுவாய் போலிருக்கிறது’ என்று நிரந்தரமாய் டாட்டா சொல்லி ஓடிய பெண்களும் உண்டு.)

சொல்ல வந்தது என்னவென்றால், ங்கோத்தாவைக் கேட்டு நான் மிகவும் அமைதியானேன்.  வேறு எந்த மானிடனாலும் அது சாத்தியமில்லை.  அந்த ஒரு சொல்லின் பலனை என் மகன் ஆயுள் முழுவதும் அனுபவித்துக்கொண்டிருக்கிறான்.  அதுதான் வருத்தம். 

இப்படி வாழ்ந்தும் என் மனைவியும் சரி, மற்ற என் தோழிகளும் சரி, என்னோடு ஒரு வாரம் கூட எந்தப் பெண்ணாலும் வாழ முடியாது என்றே சொல்கிறார்கள்.  காரணம் கேட்டதில்லை.  ஆனால் இறைவியும் அப்படிச் சொன்னாள்.  கொஞ்சம் மாற்றிச் சொன்னாள்.  “எனக்கொன்றும் பிரச்சினை இல்லை, ஆனால் எந்தப் பெண்ணாலும் உன்னோடு வாழ முடியாது.”  இறைவி என்பதால் கொஞ்சம் உரிமை எடுத்துக்கொண்டு காரணம் கேட்டேன். 

”ஒருமுறை நாம் இருவர் மட்டும் தனித்திருந்த போது நீ எட்டு மணி நேரம் மோட்டுவளையைப் பார்த்தபடி அசையாமல் உட்கார்ந்திருந்தாய்.”

ஒரு சிந்தனையாளன் வேறு எப்படி இருக்க முடியும் என்று சிரித்தபடி கேட்டேன். 

எனக்கு இங்கே இன்னொரு விஷயம் ஞாபகம் வருகிறது.  நான் என் வீட்டில் ஒரு ஞானியைப் போல் வாழ்கிறேன்.  ஆனால் எனக்கு ஒரு மகனோ மகளோ என் மரபணுவில் பிறந்திருந்தால் நிலைமை ரசாபாசமாகியிருக்கலாம்.  மிஷல் ஃபூக்கோவின் முக்கியமான ஆவண நூல் அது.  I, Pierre Rivière, Having Slaughtered My Mother, My Sister, and My Brother…” பத்தொன்பதாம் நூற்றாண்டில், தன் தாய், சகோகரி, சகோதரன் ஆகியோரைக் கொன்ற பியர் ரிவியர் என்ற கொலைகாரனின் வாக்குமூலம். 1835இல் அவன் இந்தக் கொலைகளைச் செய்தான்.  ஏனெனில் அவர்கள் தனது தந்தையை மிகவும் கொடுமைப்படுத்தினார்கள்.  அவனது கூற்றுப்படி, தந்தையைப் பாதுகாக்கவும், அவருக்கு நீதி வழங்கவும் இந்தக் கொலைகளைச் செய்ததாக அவன் தன் வாக்குமூலத்தில் கூறுகிறான்.  இது எல்லாவற்றையும் விட முக்கியமாக, அவன் அந்தக் கொலைகளைச் செய்ய அரிவாள் மற்றும் கோடரியைப் பயன்படுத்தினான். 

எனக்கு ஒரு மகனோ மகளோ இருந்திருந்தால் என் வீட்டில் எனக்கு நடக்கும் கொடுமைகளுக்கு அவர்கள் இப்படித்தான் செய்திருப்பார்கள் என்பதை என் வீட்டுக்கு வரும் பணிப்பெண்களின் எதிர்வினையை வைத்து முடிவுக்கு வருகிறேன்.  அந்த அளவுக்கு அவர்கள் மிரண்டு போகிறார்கள்.  என் மீது தொடர்ந்து விழுந்து கொண்டேயிருக்கும் சொல் அடிகள். கேட்கவே பயங்கரமாக இருக்கும். 

***

இன்னொரு விஷயம்.  நீங்கள் உங்களை கடவுள் என்றே நினைக்க ஆரம்பித்து விட்டால் சில அதிசயங்கள் நடக்கத் தொடங்கும்.  எனக்கு அடிக்கடி நடக்கிறது.  நண்பர்கள் அதை தற்செயல் நிகழ்வு என்கிறார்கள்.  அப்படித்தான் ப்ரித்தானிய மெக்காலே கல்விமுறையில் அவர்களுக்குப் பயிற்சியளிக்கப்பட்டிருக்கிறது.

என்னை அப்பா என அழைப்பவர்களில் சிலர் வளன், தக்ஷிணாமூர்த்தி, இன்னொரு பெண்.  அமெரிக்காவில் வசிக்கிறாள்.  அவளுக்கும் எனக்கும் ஒரே குருதான்.  மஹா பெரியவர்.  நானும் அவளும் வருடத்துக்கு ஒருமுறை பேசினால் உண்டு.  திடீரென்று ஒருநாள் அவள் ஞாபமம் வந்தது.  அவளுக்கு ஒரு மெஸேஜ் அனுப்பினேன்.  “உன்னை நினைத்தேன், உனக்கு மஹா பெரியவரின் அருள் கிட்டட்டும்.”

அவள் அனுப்பிய பதில்.  “அப்பா, நானும் கணவரும் குழந்தைகளும் சென்று கொண்டிருந்த காரில் இன்னொரு கார் மோதி இப்போதுதான் ஐந்து நிமிடம் ஆகிறது.  உங்கள் மெஸேஜ் ஐந்து நிமிடத்துக்கு முன்னால் அனுப்ப்பப்பட்டிருக்கிறது.  மோதும்போது மஹா பெரியவரை நினைத்தேன்.  ஆபத்திலிருந்து தப்பினோம்.  வாழ்வில் மஹா பெரியவர் ஒரு வரம்.  நீங்கள் ஒரு கிஃப்ட்.”

இன்னொரு சம்பவம்.  வளனின் சிறுகதை சீமாட்டியின் கதை படித்திருப்பீர்கள்.  படிக்கவில்லையானால் உடனே படித்து விடுங்கள்.  அந்தக் கதையை வளன் அனுப்பியவுடன் படித்தேன்.  தலைப்பில் வளன் பெயர் இல்லை.  ஏதோ ஹெமிங்வேயின் கதை போல, இவன் மொழிபெயர்த்திருக்கிறான் என்று நினைத்துப் படித்தேன்.  கடைசியில் பார்த்தால் வளன் எழுதிய கதை.  இதை அவனுக்கு வாய்ஸ் மெஸேஜாக அனுப்பினேன்.

அவன் அனுப்பிய பதில்: அப்பா, நம்ப மாட்டீர்கள்.  இன்று என் தேவாலயத்தின் மூத்த தந்தையிடம் பேசிக்கொண்டிருந்தேன்.  உங்கள் பேச்சு வந்தது.  யார் என்று விவரம் கேட்டார்.  எங்கள் தேசத்தின் ஹெமிங்வே என்று வைத்துக்கொள்ளுங்களேன் என்றேன்.  பின்னர் ஹெமிங்வே பற்றியே நினைத்துக்கொண்டு வந்தேன்.  பார்த்தால் ஹெமிங்வே பற்றிய உங்கள் வாய்ஸ் மெஸேஜ்.

இப்படி வளனுக்கும் எனக்கும் வாரம் ஒரு அதிசயம் நடந்து விடுகிறது.

நான் ஒன்றும் விசேஷமானவன் அல்ல.  அல்லவே அல்ல.  என்னிடம் ஏதேனும் விசேஷம் இருந்தால் அது என் முயற்சியாலும் இறையருளாலும் நண்பர்களின் அன்பினாலும் அடைந்தது.  Acquired என்ற பொருளில் கூறுகிறேன்.  அப்படியென்றால் நீங்களும் அதை அடையலாம்தானே? 

பெரிதாக ஸ்ரீராமானுஜர் மாதிரியெல்லாம் பதினெட்டு முறை இருநூறு கிலோமீட்டர் நடக்க வேண்டாம்.  தினம் இருபது நிமிடம் இதற்காக ஒதுக்குங்கள்.  என் வாழ்வில் நான் குளிக்காமல் இருந்த நாள் கிடையாது.  முகச்சவரம் செய்யாத நாள் கிடையாது.  தியானம் செய்யாத நாள் கிடையவே கிடையாது.   தியானம் செய்யுங்கள்.  போதும்.  நம் பிரக்ஞையை இன்னும் கூர்மையாக்கிக் கொள்ள வேண்டுமானால் உடனடியாக யோகா குரு சௌந்தரைத் தொடர்பு கொள்ளுங்கள்.  பிராணாயாமம் என்பது இன்று ஒரு மூச்சுப் பயிற்சியாக சுருங்கி விட்டது.  அது அது மட்டும் அல்ல.  செப்டம்பரில் சௌந்தரிடம் சென்று மேல்நிலை பிராணாயாமம் ஒன்றைக் கற்றுக் கொள்ள இருக்கிறேன்.

”பிராண” என்பது உயிராற்றல் அல்லது உயிர்சக்தி, “ஆயாம” என்பது கட்டுப்படுத்துதல் அல்லது விரிவாக்கம். பிராணாயாமம் என்பது  உயிராற்றலை ஒழுங்குபடுத்தி, மனதையும் உடலையும் பிரபஞ்ச சக்தியுடன் இணையச் செய்வது.  பிரபஞ்ச லயத்தை நமக்குள் ஏற்படுத்துவது.  இதன் மூலம் நமது உடலின் நாடி மண்டலங்கள் சமநிலைப்பட்டு நம் விழிப்புணர்வு அதிகரிக்கிறது.  (அப்போதாவது தோசைக்கல்லின் மேலே தடவும் வெங்காயம் ஃப்ரிஜ்ஜில் எளிதாகக் கிடைக்கிறதா என்று பார்ப்போம்!)  

பதஞ்சலியின் யோகசூத்திரத்தை சிறுவயதில் படித்திருக்கிறேன்.  அதிலிருந்து இரண்டு ஸ்லோகங்கள் நமக்கு உதவும்: 

2.52: ததோ த்வயி ஆவரணம் விக்ஷியதி

ததஃப் ப்ரகாஶ ஆவரண க்ஷயஃ

(பிராணாயாமத்தால் மனதின் மீது உள்ள ஆவரணங்கள் நீக்கப்படுகின்றன.  ஆவரணங்கள் – அறியாமை மற்றும் ஆசைகள்)

2.53: தாரணாஸு ச யோக்யதா மனஸஃ

(மனம் தியானத்திற்கு (தாரணை) தயாராகிறது.)

யோகா குரு சௌந்தரின் தொலைபேசி எண்: 99529 65505