பிரேம த்ருதி* (திருத்தப்பட்டது)

ஞாயிற்றுக்கிழமை காலை
இறைவியின் அழைப்பு இல்லை
சாலைகளில் நடமாட்டம் இல்லை
’ஒருநாள் இருநாள் அழைக்காவிட்டால் என்ன,
முதலில் என்னை நம்பு’
என்கிறாள் இறைவி
ஆனால்
அறிவின் கண்களுக்குத் தெரிவது
உணர்வின் இதயத்தை எட்டுவதில்லை
நீ இந்நேரம் என்ன செய்கிறாய், இறைவி?
பூனைக்குப் பால் வைக்கிறாயோ?
லியோவின் முதுகைத் தடவிக் கொஞ்சுகிறாயோ?
நித்திரையில் மூழ்கி கனவில் மிதக்கிறாயோ?
அல்லது, சமைத்துக்கொண்டிருக்கிறாயோ?
புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டுகிறாயோ?
கோப்பையில் மதுவை நிரப்புகிறாயோ?
இருபத்து நாலு மணி நேரமும்
உன் நினைவு என் மனதை
நதியெனச் சுழற்றி
கரையைத் தொடாமல் குடைகிறது

எனக்கும் வேலையில்லாமல் இல்லை
ஆனால்
’நீ என் சுவாசம்’ என்று சொன்னால்
நீயும் சமூகமும்
நாடக வசனம் என்று சிரிக்கிறீர்கள்
ஏய், இறைவி,
பிரக்ஞையின்றி சுவாசம் ஓடுவது போல்
என்னையறிமாலேயே நீ
என் சிந்தனையில்
காற்றெனப் பரவி
நெருப்பென எரிகிறாய்

என் தற்கொலைக் கவிதையைப்
படித்த தோழி ஒருத்தி
‘உங்கள் ‘இறைவி’யுடன் எல்லாம்
நன்றாகத்தானே போகிறது?’
எனக் கடிதம் அனுப்பினாள்
பதில் எழுதவில்லை
என்னவென்று எழுதுவது?
தியாகராஜனின் கீர்த்தனைகள்
மகிழ்ச்சிப் பாடல்களா?
பெருந்துயரமும் பேரின்பமும்
காதலும் பக்தியும்
இரு பெயர்களில் உலவும் ஒரே உணர்வு
’சீதையுடனும் அனுமனுடனும்
அருகிலிருக்கும் நீ
என்னை மட்டும் ஏன் ஒதுக்குகிறாய்?’
என உருகி உருகிக் கசிந்தவைதானே
அவன் பாடல்கள்?
அதைத்தானேடி நானும் செய்கிறேன்?

இத்தனைக்கும் தியாகய்யனை விட
நான் அதிர்ஷ்டக்காரன்
நீ என்னோடு ஒரு வாரம் இருந்தாய்
உன் பக்கம் திரும்பாமல்
எழுதிக்கொண்டிருந்தேன்
இப்போது அந்த நாட்கள்
கனவெனத் தோன்றுகின்றன

உன் நயனங்கள்
ஆழி வெண்சங்கின் ஒளியைத் திருடி
உலகின் சௌந்தர்யத்தை
ஒரு புள்ளியில் குவிக்கும் கனவு

உன் கரங்கள்
அன்னத்தின் கழுத்து போல்
வெண்மையில் திளைக்கும் நீர்மை
பளிங்கின் மென்மையில்
காலத்தை மறக்கச் செய்யும் மந்திரம்
உவமைகள் தோற்றுப் போகும்
நளினத்தின் நீரோட்டம்

உன் விரல்கள்
சிசுவின் உதடுகள் போல் மலர்ந்து தவழும்
நிலவின் முத்தங்களை நெய்யும் இதமான தென்றல்
என் ஆன்மாவைத் தொடும் ஒரு கனவின் தூரிகை

உன் தாமரைப் பாதங்கள்
தொட்டால் சிவந்து
மண்ணை மறந்து விண்ணைத் தொடுபவை

நிலவின் வளைவை
நினைவூட்டும் உன் கழுத்து

இங்கெல்லாம் நான் அநந்த கோடி முத்தமிட்டிருக்க வேண்டும்

செய்யவில்லை
தேம்பித் தேம்பி
கவிதை எழுதுவதைத் தவிர
இப்போது என்ன செய்ய முடியும்?

இறைவி,
உனக்கு ஒரு கதை சொல்கிறேன்

ரைனர் வெர்னர் ஃபாஸ்பைண்டர்
ஒரு பைசெக்‌ஷுவல்
அவனது காதலர்களில் ஒருவன்
அல் ஹாதி
ஃபாஸ்பைண்டருக்கு
ஆணும் பெண்ணுமாய்
பல காதலர்கள் உண்டெனினும்
அல் ஹாதியையே வெகுவாக நேசித்தான்
அப்படி ஒரு காதலை சரித்திரம்
கண்டது அரிது

ஆனால்
இருவரும் இருவேறு உலகம்
ஒருவன் மொராக்கோவின் பாலைவனக் காற்று
மற்றவன் ஐரோப்பாவின் மயான மௌனம்
அல் ஹாதி, பெர்பர், முப்பத்தைந்து வயது
பாலை நிலத்தில் அமர்க்களமாய் வாழ்ந்தவன்
ஐரோப்பியக் குளிரில் அகதியாய் இறங்கினான்
ஃபாஸ்பைண்டர் இருபத்தைந்து வயது
கலைக்கனவுகளைச் சுமந்து கொண்டிருந்த
கலகக்காரன்
காதல் அவர்களை இணைத்தது
ஆனால்
வயது, மொழி, கலாச்சாரம், மதம்
அவர்களைப் பிரித்தன
பாலை மனிதனை இயக்கியது
காதல் வெறியென்றால்
ஐரோப்பியனுக்கு அது மூச்சை இறுக்கியது

1974இன் குளிர்பருவத்தில்
பாரிஸில் வசித்த
தோழியின் பிறந்த நாளுக்காக
பெர்லினிலிருந்து கிளம்பிச் சென்றான்
அல் ஹாதியிடம் சொல்லவில்லை
ஏன் சொல்ல வேண்டுமென்றும்
அவனுக்குத் தெரியவில்லை
’நாமென்ன அடிமைகளா?
எனக்கு அந்தரங்கம் இல்லையா?
உன் அனுமதியின்றி நான் ஏதும் செய்யக் கூடாதா?’
என்றான் ஐரோப்பியன்.

அல் ஹாதி பதிலளித்தான்:
உன் பொருட்டு
என் உறவுகளை
என் மொழியை
என் தேசத்தை
என் கடவுளைத்
துறந்தேன்
இந்த மயான பூமியில்
சிரிப்பற்ற முகங்களுக்கு மத்தியில்
அகதியாய்
அனாதையாய்
நீயே கதியென்று
நிற்கின்றேன்
இந்த தேசம் என்னை அச்சமூட்டுகிறது
இந்த மக்கள்
ஏதோ ஒரு நூற்றாண்டு நோய்மையில் இருக்கிறார்கள்
நூற்றாண்டுகளாய் இவர்கள் தூக்கத்திலேயே
இருப்பது போல் தெரிகிறார்கள்
எல்லாவற்றையும் விடக் கொடுமை,
சத்தம் போட்டு சிரித்தால்
சத்தம் போட்டுப் பேசினால்
ஏதோ காட்டு மிருகத்தைப் பார்ப்பது போல்
பார்க்கிறார்கள்
போலீஸில் பிடித்துக்கொடுத்து விடுவார்கள் போல்
தெரிகிறது
பகலே இங்கு இருண்மை கொண்டிருப்பது
உனக்குத் தெரியுமா?
நாங்கள் பட்டினி கிடந்தாலும்
இசைத்துக்கொண்டே இருப்போம்
நடனமாடிக்கொண்டே இருப்போம்
சிரித்துக்கொண்டே இருப்போம்
கத்திக்கொண்டே இருப்போம்
எங்கள் பேச்சே பாடல்தான்
ஏழு ஊருக்குக் கேட்கும் எங்கள் பாடல்

ஆனால் இப்போது
இந்த மயான பூமியில்
உன்னை விட்டால் எனக்கு வேறு எவருண்டு?
என் வலியை உன்னால் புரிந்து கொள்ள முடியுமா?
நீ எதையும் பிரியவில்லை
எதையும் இழக்கவில்லை
இது உன் தேசம்
உன் மொழி
உன் மக்கள்
அனாதைத்தனமென்றால் உனக்கு என்னவென்றே
புரியாது
அந்தரங்கம் என்கிறாய்
எது அந்தரங்கம்?
உடலைப் பகிர்ந்தோம்
மனதைப் பகிர்ந்தோம்
ஆன்மாவைப் பகிர்ந்தோம்
(அப்படி ஒன்று இருக்கிறதென்று நீ நம்பினால்!)
ஆனால் ஒரு காகிதத்தை உன்னால்
பகிர்ந்து கொள்ள முடியவில்லை

கறுத்த மனிதர்களை வழங்கும்
எங்கள் பூமி மந்திரத் தன்மை
கொண்டது
அதனால் தெரிந்து கொண்டேன்
நீ ஏதோ ஒரு சினிமா ஸ்க்ரிப்ட
எழுதிக்கொண்டிருக்கிறாயென

கேட்டேன்
உனக்கு எப்படித் தெரியும் என்றாய்
கறுப்பனாக இருப்பதால் தெரியும் என்றேன்
உனக்குப் புரியவில்லை

கொடு, படித்துப் பார்க்கிறேன் என்றேன்
மாட்டேன் என்றாய்
அந்தக் கணமே என் கழுத்தை
அறுத்துக்கொண்டு செத்திருப்பேன்
நீ வருந்துவாய் என்பதால் மட்டுமே
அதைச் செய்யாமலிருந்தேன்

ஒன்றாக மூத்திரம் போகிறோம
ஒன்றாகக் குளிக்கிறோம்
ஈருடல் ஓருடலாய் வாழ்கிறோம்
அப்புறமென்னடா அந்தரங்கப் புண்டை
உனக்குத் தெரியுமா,
குதப்புணர்ச்சியில் நீ படும் சிரமம் கண்டு
இந்தக் குளிர்நகரின் இருள் படிந்த
தெருக்களில் அலைந்து
தடை செய்யப்பட்ட துய்ப்புக்கான கருவிகளை
வாங்கி வந்தேன்
Analplug
verborgener Schatz
அதற்குப் பிறகுதான் உனக்குக்
குதக்கலவி எளிதானது
ஆனால்
இன்று வரை உன்னுடைய
சினிமா ஸ்க்ரிப்டை என்னிடம் தரவில்லை
நானும் ஓரிரு முறை கேட்டு விட்டு
போடா சுன்னி என்று விட்டு விட்டேன்

(இதற்கு மேல் அல் ஹாதி அரபி மொழியில்
பாடத் தொடங்குகிறான்)

மேலும் கேள், என்னருமைக் காதலனே
நீ என்னுள்
ஊனாய் உணர்வாய் உயிராய் உட்கலந்து விட்டாய்

அந்த்தா அனா,
வா அனா, அந்த்தா,
லா ஃபரக் பய்னானா
(உனக்கும் எனக்கும் இடையில்
எந்த வித்தியாசமும் இல்லை)

அந்த்தா ஃபி கல்பி
அந்த்தா ஃபி ரூ
அந்த்தா ஃபி குல்லி ஷாயின் மின்னி
(நீயே எனது இதயம்
நீயே எந்தன் ஆன்மா
நீயே எனது எல்லாமும்.)

ஃபாய்னா அந்த்தா
ஹயத்தி தத்தாப
வ குல்லு தவீ லகா
(நீ எங்கே இருக்கிறாய்
அங்கே எனது வாழ்க்கை
உன்னில் கரைகிறது
நான் உன்னுடையவன்.)

அனா வா அந்த்தா வஹீத்
குல்லு ஹயதி மலாக்
(நீயும் நானும் ஒன்று
எனது மொத்த வாழ்வுமே
உன்னால் நிரம்பியுள்ளது)

அந்த்தா நூரி, அந்த்தா ஹவா,
அனா தஹிப் ஃபி ஹுப்பிகா
(நீயே எனது ஒளி
நீயே எனது சுவாசம்
உன் காதலில் என்னை இழந்து விட்டேன்.)

இதற்கு ஃபாஸ்பைண்டர் இவ்வாறு கூறினான்:
உனது கனவின் மொழி எனக்கு அந்நியமானது
ஆனால்
ஒன்று சொல்கிறேன்
நீ இல்லையானால் நான் இல்லை
நீ செத்தால் அடுத்த நொடி நானும் சாவேன்

ஆனாலும் பிரிந்தார்கள்

(1974 குளிர்காலம்)
அல் ஹாதியால் காதலனின்
பிரிவைத் தாங்க முடியவில்லை
சாலைகளில் அலைந்து
கண்ணில் தென்பட்ட மூவரை
கத்தியால் குத்தினான்
பிறகு
ஃபாஸ்பைண்டரின் உதவியால்
பாரிஸுக்குத் தப்பிச் சென்றான்
அங்கேயும் போய் ரகளை செய்து
சிறை சென்றான்

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு
1977இல் தூக்கில் தொங்கிச் செத்தான்
ஃபாஸ்பைண்டரிடம்
அல் ஹாதியின் மரணம் மறைக்கப்பட்டது
நண்பர்களுக்குத் தெரியும்
சொன்னால் அது ஃபாஸ்பைண்டரின் மரணம்
ஏனென்றால்,
அல் ஹாதியின் பிரிவை
ஃபாஸ்பைண்டரால் தாங்க முடியவில்லை
அவன் இயங்கிய பதின்மூன்று ஆண்டுகளில்
(1969 – 1982)
நாற்பதுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவன்
ஒரு சமயம் (மார்ச் 1972)
பதினான்கே நாட்களில் ஒரு திரைப்படத்தை
எடுத்து முடித்தான்
அல் ஹாதியின் பிரிவுக்குப் பிறகு
அவன் எடுத்த படங்கள் அனைத்திலும்
அல் ஹாதி இருந்து கொண்டேயிருந்தான்

அல் ஹாதி இறந்து ஐந்து ஆண்டுகள் சென்று
1982இல் அவனது உறவுகள் மூலம்
செய்தி தெரிந்தது
ஒரே மாதம்
அதிக அளவில் போதை மாத்திரையை
உட்கொண்டு இறந்தான் ஃபாஸ்பைண்டர்

இறைவி,
நீ இன்னும் நதியின் கரையைக் கூட
தொட்டிராதவள்
உன்னிடம் நான் சுழல்களைப் பற்றிப்
பேசிக்கொண்டிருக்கிறேன்
ஆனால், அன்பே,
ஒருபோதும்
என் காதலின் சுமையை
உன் தோளில் இறக்க மாட்டேன்

இறைவி,
உன்னிடம் ஒரு வேண்டுகோள்
இந்தக் கவிதையை இப்போது படிக்காதே
இருபத்தைந்து ஆண்டுகள் கழிந்து
ஒரு மாலைப் பொழுதில்
பியானோ கேட்டபடி
ஜின்னைக் கையிலேந்தி
இந்தக் கவிதையைப் படி
உன் கண்ணிலிருந்து ஒரு துளி
கண்ணீர் விழுந்தால்
அது துயரமல்ல
பேரின்பமெனப் புரிந்து கொள்

இன்னுமொன்று-
உன்னை நினைந்து நினைந்து
உருகி உருகி
வாழ்ந்தது ஓர் ஆன்மா
அந்த ஆன்மாவுக்கு
நீ தந்த பேரின்பமே
இப்படிக் கவிதையாய்க் கொட்டியது
என்பதை நினைவு கொள்

மற்றும்
இறைவி,
உன்னை நினைக்கையில்
நான் ஒரு கற்கோவிலின் நிழலில் உறையும்
மணல் துகள் ஆகிறேன்
காலம் ஒரு முடிவற்ற நதி
அதில் உன் பெயர் முத்துக்களென மிதக்கிறது
நீயோ ஒளியின் கண்ணாடி
அதில் என் ஆன்மாவைப் பிரதிபலிக்கிறாய்
ஆனால் தொட முடியாதவள்
உன் மௌனம் பாலையின் தனிமை
ஆனாலும்
என் இதயத்தை மண்ணாக்கி
அதில் ஒரு தாமரையை முளைக்கச் செய்கிறாய்
இந்தப் பூமியில்
அல் ஹாதியும்
ஃபாஸ்பைண்டரும்
தியாகராஜனும்
நானும்
ஒரே நெருப்பில் எரிந்தோம்
அந்த நெருப்பு
உன்னில் தொடங்கி
கவிதையில் முடிகிறது

உண்மையில் இறைவி
இங்கே நான்
உன்னிடம் பேசவில்லை
உன்னைத் தோதாய் வைத்து
இந்தப் பூமிப்பந்தில்
ஏதோ ஒரு மூலையில் வாழும்
அல் ஹாதியையும்
ஃபாஸ்பைண்டரையும்
நோக்கிப் பேசுகின்றேன்

இந்தப் பேரின்பத்தைக் காட்டிய
உனக்கு
இந்தக் கவிதையைத் தவிர
தருவதற்கு
இந்தப் பிச்சைக்காரனிடம்
வேறு என்ன இருக்கிறது,
கண்ணே?

(தலைப்பில் த்ரு என்பதை மென்மையாகவும் தி என்பதை தீ என்பதில் வருவதைப் போல அழுத்தமாகவும் உச்சரிக்க வேண்டும்

***

சந்தா/நன்கொடை  அனுப்ப முடிந்தவர்களுக்கு விவரம் கீழே:

ஜி.பே. செய்வதற்கான தொலைபேசி எண்: 92457 35566

பெயர்:  ராஜா (ராஜா தான் என் அட்மின். எனவே குழப்பம் வேண்டாம்.)

வங்கி மூலமாக அனுப்புவதாக இருந்தால் அதற்கான விவரம்:

UPI ID: charunivedita@axisbank

K. ARIVAZHAGAN

Axis Bank Account No. 911010057338057

Dr Radhakrishnan Road, Mylapore

IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy. 

ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN

ICICI a/c no.  602601 505045

MICR Code: 600229065

IFS Code ICIC0006604

T. NAGAR BRANCH Chennai