துறவி ஒருவரிடம்
பத்திரிகையாளன் கேட்டான்:
‘நிறைவேறாத ஆசை ஏதேனும் உண்டா?’
துறவி சற்றே துயரம் தோய்ந்த
குரலில் சொன்னார்:
‘சிறுவயதில் துறவு வந்துவிட்டது
யாரையும் நமஸ்கரித்ததில்லை
இனி வாய்ப்புமில்லை’
எனக்கும் ஒரு ஆசை
நிறைவேறாதது
யாரையும் டி போட்டு அழைத்ததில்லை.
இருபத்தைந்து வரை
டி இருப்பதே தெரியாது.
எங்கள் ஊரில் ர் தான் ன்
வந்தார் போனார் என்றால்
கத்திதான் பேசும்
வந்தார்கள் போனார்கள்
என்றே சொல்ல வேண்டும்
பெற்றோரே தம் மக்களை
பன்மையிலேதான் அழைப்பர்
பிறகு டி கலாச்சாரம்
என் மனைவி, பத்து வயது இளையவள்
‘வாடா, போடா’ என சகட்டுமேனிக்கு
சபைகளில் விளையாடுவாள்
நான் லஜ்ஜையில் நெளிவேன்
ஆனால் அவளை நான் டி போட முடியாது.
‘பிடிக்காது’ என்றாள்.
‘ஆண் டா போடுவது வேறு
பெண் டி போடுவது வேறு’ என்றாள்.
ஒரு காதலி வந்தாள்
இருபத்தைந்து வயது இளையவள்
அவளும் மனையாள் சொன்னதையே சொன்னாள்
அச்சு பிசகாமல்
ஆனால்
தனக்கு இளையவர்களை
டா போடுவாள்
நண்பன், சினிமாக்காரன்,
எல்லோரையும் டா, டி தான்.
‘எனக்கு ஆண், பெண் வித்தியாசமில்லை’ என்கிறான்.
தொலைக்காட்சியில் “டி டி டி”
தமிழ்நாடே பார்க்கிறது,
யாரும் கேள்வி கேட்கவில்லை.
நான் இன்னும் டி போடவில்லை.
மகள் இல்லை, காதலி இல்லை.
பேத்தியிடம் டி போட முடியாது—
மகனோ மருமகளோ ஆட்சேபிக்கலாம்.
என் ஆசை
ஒரு சிறிய டி
என்னை விட்டு விலகி நிற்கிறது.