நவீன ராம காதை


1.கடவுள் வாழ்த்து

ஒருநாளும் ஒருபோதும்
சுய இரக்கப் பிரதிகள்
பாடியதில்லை
இன்றும் அப்படியே ஆக
சீதையின் நாயகனே
சிவதனுவை வளைத்தவனே
அயோத்தியின் அருள் வடிவே
நீயே எனக்குத் துணை நிற்பாய்!

2. கழிப்பறை சுத்திகரிப்புப் பணி

இருபத்தைந்து ஆண்டுகள்
அரசனாய் மிதந்தேன்
பின்னே புரிந்தது
பெண்ணின் வியர்வையில்
உயிர் திளைக்கக் கூடாது

பிரித்தேன் உழைப்பை
உனக்கு இருபத்தைந்து
எனக்கு எழுபத்தைந்து
ஆயினும்
எழுபத்தைந்தில்
கழிப்பறை சுத்தம் சேரவில்லை
உழைப்பில் ஏற்றத்தாழ்வா
என ஆவேசம் கொள்ளாதீர்

வறுமையின் நாட்களில்
நாப்கினுக்குக் காசில்லாமல்
மனையாளின் தூரத்துணியும்
துவைத்திருக்கிறேன்

ஒருநாள் மனையாள் ஊரிலில்லை
கழிப்பறை வேலை
தலையில் வீழ்ந்தது
இவ்வூரில்
இரட்டிப்பு ஊதியத்திலும்
கழிப்பறை வேலைக்கு
ஆட்கள் கிடையாது

மோகினிக்குட்டி சொன்னாள்
ஹார்ப்பிக் கொட்டு, ஊற விடு,
தேய், கழுவு…
முடிந்தது.

ப்பூ, இவ்வளவுதானா?

ஆனால்
உயிர் வாங்கும் வேலை
தரை ஸ்கேட்டிங் தளமானது
கால் வைத்தால் சறுக்கியடித்தது
எத்தனை எழுத்தாளர்
மண்டை உடைந்து
கபால மோட்சம் அடைந்திருக்கிறார்!

சாக விருப்பமில்ல
இன்னும் கொஞ்சம்
இருக்கிறது கவிதை

தரையில் அமர்ந்து
பிரஷ்ஷால் தேய்த்தேன்
கோப்பை பிடித்து நீரூற்றி
சுத்தம் செய்து
கரமூன்றி எழுந்தேன்.

இன்னும் இரண்டு
கழிப்பறைகள்
இதற்கே நெஞ்சு
வலிக்கிறது
பின்னர் பார்க்கலாமென
சொல்லிக்கொண்டேன்

3 ராம தரிசனம்

காந்தி நகர் முதல் வீதியில்
பரபரப்பின் நடுவே
கருமேக வண்ணனைக் கண்டேன்
ஆறேகால் அடி
வட இந்திய முகம்
என்னை உற்று நோக்கி
அப்பால் சென்றார்.

ராமர் வேடத்தில்
பிச்சைக்காரரா?
ஹனுமன் வேடம்
பழகிய கண்களுக்கு
இது புது முகம்.

இன்று திங்கள்கிழமை
திங்களுக்கும் ராமருக்கும்
என்ன பந்தம்?

இது ராமர் வேடமா? வேறு மனிதனா?
யோசிக்க நேரமில்லை
சங்கீதா ரெஸ்டாரண்ட் வந்து விட்டது

மீடியம் காஃபி
மீடியம் ஷுகர்

க.நா.சு.வும் மீடியம் காஃபிதான்
காஃபி பிரியரென்றால் ஸ்ட்ராங்
காஃபிதான் குடிக்க வேண்டும்
என்பது சுந்தர ராமசாமி கட்சி.

4. ராமரின் துர்மரணம்

காஃபி முடிந்து
எங்கெங்கோ சுற்றி
பார்க் ரோடு வந்தேன்
குறுக்குத் தெரு
வீடுகளே இல்லை
எதிர்ப்புறம் மைதானம்
சூரிய நிழல் விழாதபடி மரங்கள்
ஆளரவமற்ற
அச்சமூட்டும் தனிமை

அப்போது ராமர்
மீண்டும் வந்தார்
காசு கொடு என
ஹிந்தியில் உரைத்தார்
அதிகார தோரணை
ஆளை வெருட்டியது

எப்படித்தான் தோன்றியதோ
’என் வீட்டில் ரெண்டு கழிப்பறைகளை
சுத்தம் செய்யுங்கள்
கை நிறைய காசு தருவேன்’
என்றேன்

தகாத வார்த்தையுடன் என்னை
அடிக்க வந்தார் ராமர்
வீரம் காட்டினால் செத்தோம்
பின்னங்கால் பிடறியில் தெறிக்க
ஓடினேன்
ராமர் துரத்தினார்
எங்கிருந்தோ எப்படியோ
பேய் வேகத்தில் பாய்ந்த
தண்ணீர் லாரி
ராமரை இழுத்து
சக்கையாக்கித் துப்பி விட்டு
நிற்காமல் பறந்தது

இப்படி ஒரு ஓட்டுநரா?
காணொலியில் தெரியாதா?

நெஞ்சம் நடுங்கியது

சே
என்னவொரு அற்பமான தேய்வழக்கு!

நெஞ்சம் நடுங்கியதாம்!

மொழி ஒரு தலுக்கு சுந்தரி
உள்ளே ஒன்றுமில்லாமல்
வெளிவேஷம் போடுவதில்
கில்லாடி

சில நொடிகள் இடைவெளியில்
என் தேகம் கூழ்
அந்தச் சில நொடிகள் என்
வாழ்வை மீட்டன

தெரு அமைதியாய்க் கிடந்தது
தூரத்தில் ராமர் உடல்
கோணல் மாணலாக

ஏர்பாடை காதில் செருகி
வீட்டை நோக்கி நடந்தேன்