மழை இப்போதும் வலுத்திருக்கிறது…

1

இந்த நேரம் பார்த்து
நான் பார்த்துப் பழகியவொரு
தெருநாய் அனாதையாய்
செத்துப் போயிற்று
செத்துப் போவது இயல்புதான்
மரணமொன்றும் புதிதல்ல
அந்த நாயும் வயதானதுதான்
சமீபத்திலேதான் அதற்கு நான்
உணவிட ஆரம்பித்தேன்
அப்படியாகத்தான் அந்த உறவு
ஆரம்பித்தது

நேற்று மாலை காய்கறி வாங்க
வெளியே சென்ற போது
அந்த நாய் சாலையோரத்தில்
உயிருக்கு இழுத்தபடி
கிடந்ததைக் கண்டு அதனருகே
ஓடினேன்
ஒருதுளி தண்ணீர் வேண்டும்
இறுதித்துளி

அந்தத் தெருவில் ஒரேயொரு
செல்ஃபோன் கடை மட்டுமே
இருந்தது
ஓடிப் போய் கொஞ்சம் தண்ணீர்
கேட்டேன்
அதிர்ச்சியாகப் பார்த்தான் அந்த
வடகிழக்குப் பிராந்திய மனிதன்
அவனோடு ஓட்டை இந்தியில்
மல்லுக்கு நிற்க நேரமில்லை

ஓட்டமாய் ஓடி
வீட்டிலிருந்து தண்ணீர் பாட்டிலை
எடுத்து வந்தேன்

அதற்குள் நாயின் உயிர்
பிரிந்திருந்தது

இதைச் சொன்னால்
ரிஷி மனமுடைந்து விடுவானென்றே
இதை மட்டும் வெட்டி விட்டேன்
பிறகு சொன்னபோது
கோபித்துக்கொண்டான்

இரண்டு தினங்களுக்கு முன்புதான்
அந்த நாய்க்கு ஒரு பெயரிட்டிருந்தேன்
ராக்கி
அழைத்து அழைத்துப்
பழக்க வேண்டுமென்றிருந்தேன்

2

நேற்றிரவு
நித்திரையில்லை
வழக்கமாகப் படிப்பதுபோல்
இன்று படிக்க முடியாது
மாரத்தஹள்ளியிலிருந்து
கோரமங்களா போய்
எண்பதடிச் சாலையிலிருக்கும்
ராந்தேவூ மதுபான விடுதியில்
ஹாட் சாக்லெட்
குடிக்க வேண்டியதுதான்

இதே ராந்தேவூவில் வைத்துத்தான்
ரிஷியிடம்
ஹாட் சாக்லெட்
குடித்திருக்கிறாயா
என்று கேட்டேன்

கிண்டலாகச் சிரித்தபடி
அதெல்லாம் பெண்கள்
குடிப்பதல்லவா என்றான்

குடித்துப் பாரேனென்றேன்
குடித்தவன் ‘இது தேவபானம்,
இதையேன் யாருமெனக்கு
அறிமுகம் தரவில்லை?’ என்றான்.

நீ அடிக்கடி செல்லும்
ப்ரூரூமில் இதுவுண்டு
ஆனால்
எல்லா இடத்திலும்
கிடைக்கும் ஹாட் சாக்லெட்
ஹாட் சாக்லெட் அல்ல
அங்கே ப்ரூரூம்
இங்கே ராந்தேவூ

3

மதியம் பன்னிரண்டு
ஞாயிறு என்பதால்
ராந்தேவூவில் இருக்கைகள்
நிரம்பியிருந்தன
ஒரு மூலையில் எனக்கொரு
இடம் கிடைத்தது

ஹாட் சாக்லெட் சொல்லிவிட்டு
ரியூ முராகாமியைக் கையில்
எடுத்தேன்

ரிச்சர்ட் மார்க்ஸின்
வெய்ட்டிங் ஃபர் யூ
ஓடிக்கொண்டிருந்தது

மழை தூற ஆரம்பித்திருந்தது

கையில் புத்தகம்
சூடான ஹாட் சாக்லெட்
இதமான இசை
சொர்க்கம் என்று நினைக்க
முடியாதபடி பெரும்
கூச்சல்

பக்கத்து இருக்கையிலிருந்த
இரண்டு பெண்கள்
இருபத்திரண்டு வயது இருக்கும்
பாலிவுட் கிசுகிசுக்களை
உரத்த குரலில் விவாதித்துக்
கொண்டிருந்தார்கள்
ஒட்டுக் கேட்கவே தேவையில்லை
அவர்கள் வாயிலேயே ஸ்பீக்கர்
இருந்தது

எந்த நடிகன் எந்த நடிகையோடு
படுக்கிறான்
எந்த நடிகை எந்த நடிகனுக்கு
துரோகம் செய்தாள்
இப்படியே மணிக்கணக்கில்
போனது உரையாடல்
ஆ, சொல்ல மறந்து போனேன்
இடைவிடாமல்
புகைத்துக்கொண்டிருந்தார்கள்
ஒரு பாக்கெட் காலியாகியிருக்கும்

சுற்றுமுற்றும் பார்த்தேன்
ஆண்கள் ஆண்களோடு இருந்தார்கள்
பெண்கள் பெண்களோடு இருந்தார்கள்

ஒரு பெண் விடியோ அழைப்பில்
கத்திக்கொண்டிருந்தாள்
ஆம், கத்திக்கொண்டிருந்தாள்
அவள் முன்னே ஒரு பிச்சர்
பியர் இருந்தது
கையில் சிகரெட்

அவள் மட்டுமல்ல
அங்கிருந்த எல்லோருமே
கத்திக்கொண்டிருந்தார்கள்

ஆணும் பெண்ணும் சேர்ந்து
வந்திருந்த ஒன்றிரண்டு ஜோடி
மட்டும் எதுவும் குடிக்காமல்
புகைக்காமல்
கத்தாமல்
அமைதியான குரலில்
பேசிக்கொண்டிருந்தார்கள்

மழை
இப்போது
வலுத்திருந்தது

நான் ரிஷியைத்
தொலைபேசியில்
அழைத்தேன்

அவன் எடுக்கவில்லை

மீண்டும்
ரியூ முராகாமியில்
மூழ்கினேன்