உன் இயக்கம் நின்று விட்டது
உயிரற்ற உடல்
சந்தடி மிகுதியில்
கேட்பாரற்றுக் கிடக்கிறது
சொறியும் சிரங்குமாய் சீழ்
வடியும் புண்களில் ஈக்கள்
மொய்க்கின்றன
பல தினங்களாக உன்னை
நான் கவனித்து வருகிறேன்
மரணம் உன்னை நெருங்குவதை
என்னைப் போலவே நீயும்
அறிந்து கொண்டு விட்டாயென்றே
நினைக்கிறேன்
எதிர்பார்த்த மரணமென்றாலும்
மனம் ரணமாகி விட்டது
மரணத்தை விட
உயிரற்ற உன் உடல்
என்னைக் குதறுகிறது
இத்தனைக் காலமோர்
அற்புதத்தைத்
தாங்கிய உடலுக்கு
குறைந்த பட்ச மரியாதையுடன்
விடைகொடுக்க வேண்டாமா?
நகரசபையைத்
தொலைபேசியில் அழைத்து
செய்தியைச் சொன்னேன்
முகவரி கேட்டுக்கொண்டு
“வருகிறோம்” என்றனர்
ஒருமணி நேரம் நின்றேன்
மரணத்தைவிட உயிரற்ற உடலின்
அனாதி
என்னை வதைக்கிறது
நடந்தபடியும்,வாகனங்களிலும்
மனிதக் கூட்டம்
போனபடியும் வந்தபடியும்
இருக்கின்றது.
ஒருவருமே
உன்னை
லட்சியம் செய்யாதது
சக உயிராக
என்னைக் கொல்லுகிறது
இப்படி ஒரு உலகில்
வாழ விருப்பமில்லை
எனக்கு
நகரசபை ஊழியர்கள்
இன்னும் வரவில்லை
திரும்பவும் அழைத்தேன்
முகவரியை ஆரம்பித்ததுமே
“எங்களிடம் இருக்கிறது, வருவோம்’
என்றார்கள்
இரவு பத்து மணி வரை
தொடர்ந்தது நாடகம்
இரவு உறக்கம் தொலைந்தது
காலையில் உன்னிடம்
பேசும்போது
குரல்
காட்டிக் கொடுத்து விட்டது
உன் மனநிலையும் கெட
வேண்டாமென எண்ணி
சொல்வதைத் தவிர்த்தேன்
சொல்
சொல்
சொல்
சொன்னேன்
“நாய்களை
அனாதையாய்க் கை விடும்
தேசம் சபிக்கப்படும்
நாய்கள் மனித ஸ்பரிசம் வேண்டுபவை
மனித மடிகளில் தான்
அவற்றின் உயிர் பிரிய
வேண்டும்”
என்றாய்
காலை எட்டு மணி
நகரம் பரபரப்பாகி விட்டது
சாலையில் அதே இடத்தில்
உன் உடல்
இப்போது ஈக்கள் அதிகம்
நகரசபை ஊழியர்கள்
இன்னமும் வரவில்லை
*