ஜெயமோகன் தில்லியில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் ஆங்கிலத்தில் பேசியதை சில பல மூடர்கள் கிண்டல் செய்திருப்பதாக அராத்து ஃபேஸ்புக்கில் எழுதியிருந்ததைப் படித்து விட்டு இதை எழுதுகிறேன். அராத்துவின் பதிவையே இங்கே பகிர்ந்திருப்பேன். ஆனால் அவருடைய தமிழ் எனக்கு ஒவ்வாதது என்பதால் அதை நான் இங்கே பகிர முடியவில்லை. அவர் எழுதியிருப்பதைச் செப்பனிடுவதும் அத்துமீறல் என்ற பிரிவில் வந்து விடும்.
தமிழ் எழுத்தாளர்களில் இன்று சர்வதேச அளவில் பெயர் தெரிந்திருப்பவர்கள் நான்கைந்து பேர்தான். இவர்களில் சல்மாவும், பெருமாள் முருகனும் தமிழில் பேச மொழிபெயர்ப்பாளர்கள் அதை ஆங்கிலத்தில் கொடுத்து விடுகிறார்கள். இங்கே மொழிபெயர்ப்பாளர்கள் என்பது கூட சரியான வார்த்தை இல்லை. Interpreters என்பதற்கு எனக்கு சரியான தமிழ் வார்த்தை தெரியவில்லை.
மேற்கூறிய இருவர் தவர் மற்றும் இருவர் ஜெயமோகனும் அடியேனும். நாங்கள் இருவரும் சர்வதேச அரங்குகளிலும், இந்திய அரங்குகளிலும் ஆங்கிலத்திலேயே பேசுகிறோம். உரையாற்றுகிறோம். ஆரம்ப காலத்தில் திக்கித் திணறிய நான் இப்போது சரளமாகப் பேசவும் உரையாற்றவும் கற்றுக்கொண்டு விட்டேன். இதில் சந்தேகம் கொள்பவர்கள் பெங்களூரிலும், ஜெய்ப்பூரிலும், மணிப்பாலிலும் நான் கலந்து கொண்டு உரையாற்றிய, விவாதித்த காணொலிகளைக் கண்டு மகிழலாம். இப்போது என்னால் மிக சரளமாக ப்ரிட்டிஷ் உச்சரிப்பிலும், ஓரளவுக்கு நடுவாந்திரமான அமெரிக்க உச்சரிப்பிலும் மூன்று மணி நேரம் உரையாற்ற முடியும். இதற்கு ஒரே காரணம், பல காலமாக உச்சரிப்பு விஷயத்தில் நான் கவனம் செலுத்திக்கொண்டிருப்பதால்தான். இது பற்றி நான் நிறையவே எழுதியிருக்கிறேன். இப்போது என்னால் என்னுடைய நாவலை மொழிபெயர்ப்பாளர் இல்லாமலேயே ஆங்கிலத்தில் எழுத முடிகிறது. நான் எழுதும் ஆங்கிலத்தை பொதுவாக யாருடைய ஆங்கிலத்தையும் எளிதில் ஏற்றுக் கொள்ளாத தருண் தேஜ்பாலும், என் மொழிபெயர்ப்பாளர் நந்தினியுமே பாராட்டி விட்டனர். நான் எழுதி இப்போது இணையத்தில் கிடைக்கும் My Life, My Text என்ற சுயசரிதைத் தொடரைப் படித்து நீங்களே தெரிந்து கொள்ளலாம். ஆனால் நானும் சஞ்ஜனாவும் எழுதி வரும் Anatomy of Dissonance என்ற நாவலின் ஆங்கிலம் இந்திய ஆங்கிலத்தையே புரட்டிப் போடக் கூடிய ஒன்றாக இருக்கும்.
சரி, ஜெயமோகனோ மற்ற எந்த ஒரு தமிழ் எழுத்தாளரோ ஆங்கிலத்தில் பேசுவதைக் கிண்டல் செய்பவர்களைப் போன்ற முழு மூடர்கள் வேறு யாரும் இருக்க முடியாது. இன்றைய தினம் தமிழ்ச் சூழலில் ஆங்கிலம் தெரிந்தவர்கள்தான் பெரும்பாலும் லும்பன்களாக இருப்பதை நாம் அறிவோம். ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமானால், பாரத் விபூஷன் பட்டம் ஒரு சினிமா நடிகருக்கும் ஒரு தமிழ்நாட்டு விஞ்ஞானிக்கும் அளிக்கப்பட்ட போது ஆங்கில ஹிந்துவில் சினிமா நடிகரின் பெயரை முன்னிலைப் படுத்தியும், விஞ்ஞானியின் பெயரை அடுத்ததாகவும் பிரசுரித்திருந்தார்கள். ஆனால் தமிழ் ஹிந்துவில் விஞ்ஞானியின் பெயர் முதலில் இருந்தது. காரணம், தமிழ் ஹிந்துவில் இருந்தவர்கள், இருப்பவர்கள் இலக்கியம் அறிந்தவர்கள். அவர்களில் சிலர் படைப்பாளிகளும் கூட.
ஆங்கிலம் மட்டுமே அறிந்திருப்பதால் அவர் அறிவாளி அல்ல. அப்படி நினைப்பது இந்திய அடிமைகளின் அடிமை மனோபாவம். இன்னமும் இந்தியரில் பலர் – குறிப்பாக தமிழர்கள் – ஆங்கில அடிமைகளாகவே இருந்து வருகிறார்கள்.
ஒரு தமிழ் எழுத்தாளனுக்கு என்ன மயிருக்கு ஆங்கிலத்தில் பேசத் தெரிந்திருக்க வேண்டும்? ஜப்பானின் உச்ச பட்ச எழுத்தாளனான ரியூ முராகாமிக்கு ஆங்கிலம் பேசத் தெரியாது. அங்கே சர்வதேச அளவில் புகழ் பெற்றிருக்கும் ஹரூகி முராகாமிக்கு மட்டுமே ஓரளவு ஆங்கிலம் பேசத் தெரியும். காரணம், அவர் இளம் வயதில் பப்களில் இசைக்கலைஞராக இருந்தவர்.
அதேபோல் உலகப் புகழ்பெற்ற தத்துவவாதி மிஷல் ஃபூக்கோ ஃப்ரெஞ்சில் மட்டுமே பேசக் கூடியவர். ஆங்கிலம் புரிந்து கொள்வார். ஜாக் தெரிதா மட்டுமே சரளமாக ஆங்கிலம் பேசக் கூடியவர்.
பாப்லோ நெரூதா அவரது தாய் மொழியான ஸ்பானிஷிலும் ஃப்ரெஞ்சிலும் மட்டுமே சரளமாகப் பேசக் கூடியவர். ஆங்கிலம் தட்டுத்தடுமாறித்தான் வரும். அதற்காக பாப்லோ நெரூதாவைக் கிண்டல் செய்வீர்களா மூடப் பதர்களே?
கீழே பாப்லோ நெரூதா மிக அரிதாக ஆங்கிலத்தில் வாசித்த ஒரு ஒலிப்பதிவு உள்ளது. அதை விட நான் நெரூதாவின் கவிதையை ஆங்கிலத்தில் நேர்த்தியாக வாசித்திருக்கிறேன். அதன் காணொலி இங்கே இந்தத் தளத்திலேயே உள்ளது.
Pablo Neruda Reads Pablo Neruda – 1971 – Past Daily Evening
ஜெயமோகனுக்கும் எனக்கும் ஆங்கிலம் பேசுவதா அடையாளம்? எங்களின் அடையாளம் எது என்பது கூடத் தெரியாத மூடர்களா நீங்கள்?
தமிழ் இலக்கிய நூல்கள் இருநூறு பிரதிகள்தான் விற்கின்றன. ஆனால் தமிழ்நாட்டில் மிக சரளமாக ஆங்கிலத்தில் பேசக் கூடிய, எழுதக் கூடிய தமிழர்கள் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள். அவர்களெல்லாம் எந்த இலக்கியமும் தெரியாத லும்பன்கள். இந்த லும்பன்கள்தான் இலக்கியவாதிகளைப் பார்த்து கிண்டல் செய்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.