தேர்தல் கணிப்பு

கேள்வி: மதிப்புக்குரிய சாரு அவர்களுக்கு. 2026-ம் ஆண்டுக்கான சட்டசபை தேர்தல் குறித்த உங்களின் கணிப்பு இன்னும் வரவில்லையே?

பதில்: நான் முழுக்க முழுக்க பொது வாழ்விலிருந்தும் சமூக வாழ்விலிருந்தும் விலகி ஒரு துறவியைப் போல் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.  இப்போதைக்கு இதுவரை தொகுக்கப்படாமல் இருந்த  புத்தகங்களை வாசகர்களுக்கு ராஸ லீலா பதிப்பகத்தின் மூலம் கொண்டு செல்வதிலும், பாதி எழுதி முடித்த நிலையில் கிடக்கும் நாவல்களை முடிப்பதிலும் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன்.  இதுவரை நண்பர் ஸ்ரீராம் நாற்பது புத்தகங்களைத் தொகுத்துக் கொடுத்திருக்கிறார்.  அதில் நான்கைத்தான் நான் செப்பனிட்டிருக்கிறேன்.  மயன் மாளிகை, ஜோடிப்புறாவை எங்கே காணோம்?, கோடம்பாக்கம், கல்ச்சர் வல்ச்சர், நாகூர் தம்ரூட்டும் ஆட்டையாம்பட்டி முறுக்கும் (சிறுகதைத் தொகுதி) – இதில் ஜோடிப்புறா நாவலைத் தவிர மற்றவை அனைத்தும் பத்து ஆண்டுகளுக்கு முன் எழுதியவை.  கொரோனா காலகட்டத்தில் வாரம் இரண்டு மூன்று சிறுகதைகளை எழுதியிருக்கிறேன் என்று இப்போதுதான் தெரிந்தது.  ஸ்ரீராம் மட்டும் இந்தத் தொகுப்புப் பணியில் ஈடுபட்டிராவிட்டால் இவையெல்லாம் காலத்தில் காணாமலே போயிருக்கும்.  சமகாலத் தமிழ் இலக்கியத்தில் அப்படி ஆகி இருக்கிறது.  க.நா.சு. எழுதிய நாவல்கள் இன்னும் ஒரு டஜன் இருக்கும்.  அவர் எழுதிய தமிழ்க் கட்டுரைகளின் தொகுதி 500 இருக்கும்.  ஆங்கிலக் கட்டுரைகளின் தொகுதி ஐம்பது இருக்கும்.  எல்லாமே யாராலும் தொகுக்கப்படாமல் காணாமல் போய் விட்டது.  இது பற்றி நான் விரிவாக எழுதியிருக்கிறேன்.  இத்தனைக்கும் அவர் என்னைப் போல் அல்ல.  தான் எழுதிய கட்டுரைகளையும் கதைகளையும் முறையாக மரப்பெட்டிகளில் பாதுகாத்து வைத்திருந்தார்.  ஆனால் அவர் மரணத்துக்குப் பிறகு அந்தப் பெட்டிகள் காணாமல் போய் விட்டன.     மேற்கத்திய இலக்கிய உலகில் இப்படி நடப்பதே இல்லை.  யாராவது ஒருவர் முன்வந்து (அநேகமாக பெண்கள்) இறந்து போன மேதையின் பிரசுரிக்கப்படாத எழுத்தை, பேச்சை தன் வாழ்நாளையே செலவழித்துப் பிரசுரித்து விடுகிறார்கள்.  அந்த்தோனின் ஆர்த்தோவுக்கு அப்படி நடந்திருக்கிறது.  ரொலாந் பார்த்துக்கு அப்படி நடந்திருக்கிறது.  இங்கே அப்படியெல்லாம் நடப்பதே இல்லை.  இத்தருணத்தில் மனுஷ்ய புத்திரனையும் செல்வியையும் நினைத்துப் பார்க்கிறேன்.  நான் உயிர்மையில் எழுதியது கொஞ்சம்.  ஆனால் என் இணைய தளத்தில் எழுதியது நிறைய.  கிட்டத்தட்ட ஆண்டுக்குப் பத்து நூல்கள் வரும்.  அது எல்லாவற்றையும் தொகுத்து, சப்ஜெக்ட் வாரியாகப் பிரித்து ஆண்டு தோறும் என்னுடைய பத்து நூல்களை வெளியிட்டுக்கொண்டிருந்தார் மனுஷ்ய புத்திரன்.  நான் உயிர்மையிலிருந்து பிரிந்ததும் அந்த வேலை நின்று போனது.  நின்றே போனது.  எனக்கோ தொகுக்க நேரமில்லை.  இப்போதுதான் ஸ்ரீராம் அந்தப் பணியை எடுத்துச் செய்து கிட்டத்தட்ட முடித்தே விட்டார்.  இத்தனைக்கும் ஸ்ரீராம் ஒரு மருத்துவர்.  ஸ்ரீராமுக்கு என் வாசகர்கள் அனைவரும் நன்றி சொல்ல வேண்டும்.  இத்தகைய அர்ப்பணிப்புள்ள ஒருவரே ஒரு எழுத்தாளனின் முதல் தேவை.  அந்த வகையில் நான் இறைசக்திக்கு நன்றி கூறுகிறேன்.