அவந்திகாவுடன் இருந்தால் எல்லாம் ராணுவ ஒழுங்குடன் நடந்தேறும். இரவு பதினோரு மணிக்கு உறங்கச் செல்வேன். காலை ஐந்தரைக்கு எழுந்து கொள்வேன். இது ஒருநாள் கூட தவறாமல் செவ்வனே நடக்கும். ஆனால் அவந்திகா ஊரில் இல்லாவிட்டால் இந்த ஒழுங்கு கொஞ்சம் கெடும்.
சில தினங்களில் அதிகாலை வரை வேலை செய்வேன். அதில்தான் ஒரு சிக்கல் இருக்கிறது. வீட்டை சுத்தம் செய்யும் பணிப்பெண் சரியாக ஒன்பதரைக்கு வருவார். அதனால் நம் விருப்பப்படி ஏழு மணி நேரமெல்லாம் தூங்க முடியாது. எப்போது உறங்கச் சென்றாலும் ஒன்பதரைக்கு எழுந்தே ஆக வேண்டும். அதனால் ஒரு நண்பரிடம் நாளை காலை ஒன்பதரைக்கு என்னைத் தொலைபேசியில் அழையுங்கள் என்று ஒரு குறுஞ்செய்தி அனுப்பி விட்டுப் படுத்தேன். அந்த நண்பர் காலை நான்கு மணிக்கே எழுந்து கொள்ளும் பழக்கம் உள்ளவர். ஆனால் அவர் என்னைத் தொலைபேசியில் அழைக்கவில்லை. காலையில் நான் எழுந்து பார்த்தால் மணி பத்தரை. பணிப்பெண் வந்து அழைப்பு மணியை அடித்துப் பார்த்து விட்டுப் போய் விட்டார்.
ப்ளூ டிக் என்று ஒரு கண்றாவி இருக்கிறது அல்லவா, பல ஆண்கள் அதனால் தற்கொலை செய்து கொள்கிறார்கள். பலர் கவிதைகளாக எழுதித் தள்ளுகிறார்கள். உங்களுக்குப் பிடிக்காதவர்களை உளவியல் சித்ரவதை செய்ய வேண்டும் என்று உங்களுக்கு ஆசை இருந்தால் உங்கள் கைபேசியில் உள்ள ப்ளூ டிக்கை மறைத்து விடுங்கள். செத்தார்கள் உங்களோடு தொடர்பு கொள்பவர்கள். இந்த உலகைப் பழி வாங்குவதற்காகவே கிடைத்துள்ள வரம் ப்ளூ டிக். அடுத்தவன் கழுத்தைத் துருப் பிடித்த அரிவாளால் வெட்டுவதற்கு சமம் ப்ளூ டிக்கை மறைப்பது. இருந்தாலும் அதை நீங்கள் செய்யத்தான் வேண்டும். உங்களை ஆஸ்ஃபக் செய்த இந்த உலகையும் உலக மாந்தரையும் நீங்களும் பதிலுக்கு ஆஸ்ஃபக் பண்ண வேண்டாமா? கழுத்தை வெட்டாமல், ரத்தம் சிந்தாமல் இந்த உலகை ஆஸ்ஃபக் பண்ணுவதற்கான எளிய வழி, ப்ளூடிக்கை மறைப்பதுதான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
ஆனால் அந்த நண்பர் உலகைப் பழி வாங்கும் நல்நோக்கம் கொண்டவர் அல்ல. அதனால் அவர் என் குறுஞ்செய்தியைப் படித்து விட்டார் என்பதற்கான ப்ளூ டிக் அடையாளம் தெரிந்தது. இருந்தும் ஏன் அவர் என்னை அழைக்கவில்லை? தெரியவில்லை. மதியம் வேறு ஏதோ விஷயமாக அழைத்தார். அப்போது அவரும் அது பற்றிப் பேசவில்லை. நானும் கேட்கவில்லை. இன்று வரை அது எனக்கு ஒரு தீராத மர்மமாகவே இருந்து வருகிறது.
ஆனால் இனிமேல் அவருக்கு அந்த இம்சையைத் தரக் கூடாது என்று முடிவு செய்து இன்னொரு நண்பரைப் பிடித்தேன். அவர் கண்ட நேரத்தில் தூங்கி கண்ட நேரத்தில் எழுந்து கொள்ளும் வாழ்க்கை முறையைக் கொண்டவர். அது அவரது விருப்பம் அல்ல. அவர் ஒரு பிராணி நல ஆர்வலர் என்பதால் அவரது உறக்க நேரம் அவரது பிராணிகளிடம்தான் இருக்கிறது. அவரிடம் அல்ல. ஆனாலும் தொண்ணூற்று ஒன்பது சதவிகிதம் சொன்ன சொல்லைக் காப்பாற்றும் குணம் படைத்தவர்.
காலையில் என்னை ஒன்பதரைக்கு எழுப்புவதற்கு அவரைப் பிடித்தேன். தினமும் அந்த அவசியம் இருக்காது. ஆனாலும் நான் தூங்கி விட்டேன் என்றால் அன்றைய தினம் வீடு முழுவதையும் சுத்தம் செய்யும் வேலை என் தலையில்தான் விழும். அது எனக்குப் பழக்கம் இல்லாத வேலை என்பதால் அதைச் செய்வதற்குள் இடுப்பு எலும்பு முறிந்து விடும்.
கைபேசியில் அலாரம் வைத்துக் கொள்ள வேண்டியதுதானே என்று கேட்கலாம். அது சாத்தியம் இல்லை. அலாரம் அடித்தால் அந்த சப்தம் என்னை எழுப்பாது. ஃபோன் பண்ணினால் மட்டுமே எழுந்து கொள்வேன். வாசலில் உள்ள அழைப்பு மணி சத்தம் கூட என் செவிகளை அணுகாது.
நேற்று இரவு உறங்கும்போது அதிகாலை நான்கு. நண்பருக்கு நான் செய்தி அனுப்பவில்லை. ஏன் என்று இப்போது தெரியவில்லை. என்னோடு தங்கியிருந்த நண்பர் காலையில் எழுந்து நடைப் பயிற்சி சென்று விட்டார் போல. பணிப்பெண் வந்து வழக்கம் போல் அழைப்பு மணியை அடித்துப் பார்த்து விட்டுப் போய் விட்டார் என்பதை பத்தரை மணிக்கு நான் எழுந்த போது புரிந்து கொண்டேன். வாக்கிங் போன நண்பர் எட்வர்ட் எலியர்ட்ஸ் பீச் போய் விட்டு எதிரில் உள்ள முருகன் இட்லி கடையில் இட்லி சாப்பிட்டு விட்டு எனக்கும் இட்லி வாங்கிக் கொண்டு பதினோரு மணிக்கு வந்தார்.
எப்போதும் என் செய்தி இல்லாமலேயே எனக்கு ஒன்பதரை மணிக்கு ஃபோன் செய்யும் நண்பர் இன்று ஃபோன் பண்ணி எழுப்பாததற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. நிச்சயமாக அதற்கு ஒரு தகுந்த காரணம் இருக்கத்தான் வேண்டும். ஆனால் நான் அது பற்றி அவரிடம் கேட்க முடியாது. ஏனென்றால், அவருக்குக் கேள்வி கேட்டால் பிடிக்காது. அடுத்தவருக்கு இம்சை தரும் எந்த விஷயத்தையும் ஒருபோதும் செய்வதில்லை என்பது நான் எடுத்திருக்கும் சபதம். ஆனால் இனிமேல் அந்த நண்பரிடம் இந்த உதவியை எதிர்பார்க்கக் கூடாது என்று மட்டும் புரிந்து கொண்டேன். அது மட்டும் அல்ல. யாரிடமும் இந்த அல்ப உதவியை எதிர்பார்க்கக் கூடாது. நானே அலாரம் வைத்து அந்த சத்தத்துக்குப் பழகிக் கொள்ள வேண்டியதுதான். வேறு வழியில்லை.
ஒரு விஷயம் ஞாபகம் வருகிறது. இது வரை என் வாழ்வில், நான் சொல்லும் எந்த வேலையையும் ஒரு சதவிகிதம் கூடப் பிசகு இல்லாமல், ஒரு நாள் கூடத் தவறாமல் செய்யக் கூடிய ஒரே நபர் என்று அன்னபூரணியை மட்டுமே பார்த்திருக்கிறேன்.. No one can replace me Charu என்று அடிக்கடி சொல்வார். இப்போது அந்த அன்னபூரணி தொலைதூர தேசத்தில் வசிக்கிறார். இதைப் படிப்பாரா என்று கூடத் தெரியவில்லை.
அலாரம் சத்தத்துக்கு செவிகளைப் பழக்குவது எப்படி என்று செயற்கை நுண்ணறிவிடம் கேட்க வேண்டும்.