விபரீத ராஜயோகமும் அகத்திக்கீரை தண்ணிச்சாறும்


1

கண்ணாயிரம் பெருமாள் ரிஷப ராசி.  ராசியிலேயே வசீகரமான ராசி ரிஷப ராசிதான்.  ஏன், எப்படி என்பதை நீங்கள் ரிஷப ராசி பற்றிப் படித்துத் தெரிந்து கொள்ளலாம்.  ஆனால் ரிஷப ராசிக்கு 2025 முடிவு வரை இறங்கு திசையாகத்தான் இருந்து வந்திருக்கிறது.  2026ஆம் ஆண்டில் விபரீத ராஜ யோகம் நிச்சயம்.   இது என்ன கதையா, சோதிடக் குறிப்பா என மிரளாதீர்கள்.  கதை எப்போதோ ஆரம்பித்து விட்டது.   

அதிலும் 2026 மார்ச்சிலிருந்து ரிஷப ராசியின் திசையில் ஒரே பண மழைதான்.  கிட்டத்தட்ட நூறு சோதிடர்கள் சொல்லி விட்டார்கள்.  அதற்கு ஏதேதோ கிரக சஞ்சாரங்கள் பற்றி விவரித்தார்கள்.  அதிலெல்லாம் பெருமாளுக்கு மனம் லயிக்கவில்லை.  பணம் கிடைக்குமா?  முடிந்தது கதை.  

கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக ஒரு சடையப்பர் கண்ணாயிரம் பெருமாளுக்குப் பண உதவி செய்து வந்தார்.  எவ்வளவு என்று கேட்காதீர்கள்.  கண்ணேறு பட்டு விடும்.  அந்த உதவியால் அவன் பணத்தைப் பற்றி ஒருபோதும் யோசிக்காமல் இருந்தான்.  அவன் உலகில், அவன் சிந்தனையில் பணம் என்ற பண்டமே இருக்கவில்லை.  

பண உதவிக்குப் பதிலாக அவர் அவனிடம் எதுவுமே எதிர்பார்த்ததில்லை.  நிபந்தனையற்ற உதவி.  மற்றபடி அவருக்கும் அவனுக்கும் பேச்சு வார்த்தையோ சந்திப்புகளோ நடந்ததில்லை.  எங்காவது விழாக்களில் பார்த்துப் புன்னகைத்து வணக்கம் சொல்வதோடு சரி.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் காலை ஆறு மணிக்கு அவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு.  

உங்களுக்கு இந்தப் பணம் போதுமா? இன்னும் கொஞ்சம் அனுப்பலாம் என்று பார்க்கிறேன்.  எவ்வளவு வேண்டும்?

அன்றைய தினம் கண்ணாயிரம் பெருமாள் ஒய்ன் சாப்பிடலாம் என்று இருந்தான்.  வைதேகி ஊருக்குப் போயிருந்தாள்.  வருவதற்கு இரண்டு மூன்று நாள் ஆகும்.   

இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் தேவை சார் என்றான்.

போதுமா?

போதும்.

மறுநாள்தான் அவனுக்கு உறைத்தது.  அடப்பாவி, லட்சுமி வந்து கதவைத் தட்டும்போது விரட்டி விட்டோமே என்று.

அதற்குப் பிறகு அவரிடம் கேட்பதில் அர்த்தமில்லை.

2026 மார்ச் ஒன்றாம் தேதி சடையப்பரிடமிருந்து ஃபோன்.  

”மன்னிக்க வேண்டும்.  வியாபாரம் சரியாக இல்லை.  உதவி செய்ய இயலாத நிலை.  மன்னிக்க வேண்டும்.”

“சேச்சே என்ன சார், பெரிய வார்த்தையெல்லாம் பேசிக்கொண்டு?  பரவாயில்லை சார்.”

வேறு யாராவதாக இருந்தால் ஹார்ட் அட்டாக் வந்து செத்திருப்பார்கள்.  கண்ணாயிரம் பெருமாளின் உலகில்தான் பணம் என்ற பண்டமே இருக்கவில்லையே?  அவனும் அத்தோடு அந்த விஷயத்தை மறந்து போனான்.  ஆச்சரியம் என்னவென்றால், வைதேகியும் இது பற்றி அத்தனை ஒன்றும் கண்டுகொள்ளவில்லை.  

கிரக சஞ்சாரங்களில் ஏதேனும் தன் விஷயத்தில் ட்ராஃபிக் ஜாம் அல்லது சாலை விபத்து நடந்திருக்கலாம் என ஐயுற்றான் கண்ணாயிரம் பெருமாள்.

பார்த்தான், இதோ பதினாறு தேதி ஆகி விட்டது.  ஒரு மயிரும் நடக்கவில்லை.

பண மழை கொட்டுவதற்கு வேறு என்ன வழியிருக்கிறது என்று யோசித்தான்.  ஏனென்றால், பெருமாள் ஒரு தீவிரமான சோதிடப் பைத்தியம்.  இத்தனை பேர் சொன்னால் நடந்தே தீரும்.  .

அவனுக்கு சாந்த்னி என்ற பெண்,  தான் படித்து வேலைக்குப் போய் பண உதவி செய்வதாக வாக்களித்திருந்தாள்.  ஆனால் அது கார்ல் மார்க்ஸ் கனவு கண்ட உட்டோப்பியா மாதிரி தெரிகிறது.  காரணம், இப்போதுதான் அவள் இளங்கலை ஆங்கில இலக்கியம் படித்துக்கொண்டிருக்கிறாள்.  அதைப் படித்து என்ன செய்ய முடியும்?  ஏதோ ரியல் எஸ்டேட் பிஸினஸ் பண்ணினாலாவது பணம் பண்ணலாம்.  இளங்கலை ஆங்கில இலக்கியத்தை வைத்து என்ன செய்வது?  அதற்கு மேல் முதுகலை போக வேண்டும்.  அதற்கு மேல் பிஹெச் டி.  அப்புறம் நெட் தேர்வு.   அதில் தேர்ச்சி பெற்றால் பேராசிரியர் வேலை.  அந்த வேலைக்குக் கிடைக்கும் ஊதியத்தில் அவள் பெருமாளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவி செய்யலாம்.  

ஆயிரம் என்றதும் ஞாபகம் வருகிறது.  சமீபத்தில் புதிய தலைமுறை என்ற ஊடக நிறுவனத்திலிருந்து பெருமாளுக்கு ஃபோன்.  அவர்களின் இணைய இதழில் ஒரு கட்டுரை எழுத முடியுமா?

ஓ, முடியுமே.  எவ்வளவு சன்மானம் தருவீர்கள்?

என்னது, சன்மானமா?

அப்படி ஒரு வார்த்தையை அந்த அன்பர் கேள்வியே பட்டிருக்க மாட்டார் போல.

ஆமாம், சன்மானம்.

நிறுவனத்திடம் கேட்டு சொல்கிறேன் சார்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு தொடர்பு கொண்டார்.

சார், சன்மானம் ஆயிரம் ரூபாய் தருவதற்கு ஒப்புக்கொண்டார்கள்.

ஓ, ஓ.கே.  எனக்கு நேரமில்லை என்று சொல்லி விடுங்கள்.

இவர்களெல்லாம் எந்த கிரகத்தில் வசிக்கிறார்கள் என்று தோன்றியது பெருமாளுக்கு.

இந்தக் கதையை அவன் தன் தளத்தில் ஏற்றினான் என்றால், சன்மானமாக சுமார் முப்பதாயிரம் ரூபாய் வரும்.   நூறு ரூபாயிலிருந்து பத்தாயிரம் வரை பல மாதிரி அனுப்புவார்கள்.  கோடிகளில் புரளும் பத்திரிகைகள் இன்னமும் எழுத்தாளர்களைப் பிச்சைக்காரர்களாகத்தான் நினைத்துக்கொண்டிருக்கின்றன.  

இன்னொரு சம்பவத்தையும் இங்கே குறிப்பிட வேண்டும்.  பாலு மகேந்திராவின் உதவியாளர் ஒருவர் பாலுவின் திரைப்படங்களை ஆய்வு செய்கிறார்.  பிஹெச் டி பட்டம்.  அதற்காக உங்களை ஒரு நேர்காணலுக்காகச் சந்திக்க முடியுமா என்று கேட்டு பெருமாளுக்கு வாட்ஸப் செய்தி அனுப்பினார்.

பெருமாள் திருவண்ணாமலையில் சர்வதேச சினிமா குறித்த ஒரு பட்டறை நடத்தினான்.  காலை பத்து மணியிலிருந்து மாலை ஆறு மணி வரை உரையாற்றினான்.  இடையில் உணவு இடைவேளை ஒரு மணி நேரம்.  அதற்கு பாலுவின் உதவியாளர் வரவில்லை.  அதேபோல் புதுச்சேரியிலும் ஒரு பட்டறை.  காலையிலிருந்து மாலை வரை.  அதற்கும் அந்த நபர் வரவில்லை.  ஆனால் அவருடைய ஆய்வுக்காக பெருமாள் நேரம் ஒதுக்க வேண்டும்.  என்ன மாதிரியெல்லாம் டிஸைன் டிஸைனாக எழுத்தாளன் குண்டியில் ஓக்க நினைக்கிறீர்கள் மக்களே?  

சமூக நிலவரம் இப்படியிருக்க, கண்ணாயிரம் பெருமாள் மார்ச் மாதம் நடக்க இருக்கும் விபரீத ராஜ யோகம் பற்றியே யோசித்துக்கொண்டிருந்தான்.  அந்த நேரம் பார்த்துத்தான் வைரமுத்துவுக்கு ஞானபீட விருது அறிவிக்கப்பட்டது.

கண்ணாயிரம் பெருமாளுக்குத் தற்கொலை செய்து கொள்ளலாம் போல் இருந்தது.  ’நீதி நியாயமெல்லாம் செத்தொழிந்து போயினவா?  அறத்துக்கும் தர்மத்துக்கும் வாழ்வே இல்லையா?’ என்றெல்லாம் குமுறினான். 

ஆனால் நல்வினைப்பயனாக அந்த நேரம் பார்த்துத்தான் அவன் க்ளாடியேட்டர் இரண்டைப் பார்த்துக்கொண்டிருந்தான்.  அதில் வரும் நாயகன் வர்ஜிலின் மேற்கோள் ஒன்றைச் சொல்கிறான்.  அதுதான் கண்ணாயிரம் பெருமாளின் மன உளைச்சலையும் தற்கொலை உணர்வையும் போக்கியது.  

அந்த வரிகள்: 

The gates of hell are open night and day;

Smooth the descent, and easy is the way:

But to return, and view the cheerful skies,

In this the task and mighty labor lies.

இதேபோல் பாரதியும் எழுதியிருக்கிறார் இல்லையா, தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மறுபடியும் வெல்லும் என்று.

எங்கே வெல்கிறது?  பாரதி அகால மரணம்.  புதுமைப்பித்தன் அகால மரணம்.  எங்கேயும் தர்மம் வென்றதாகத் தெரியவில்லையே?

இதோ இப்போது ஞானபீடம்.  வைரமுத்துவுக்கான விருது சீரழிவின் உச்சம்.  நரகத்தின் வாயில்.  நோபல் விருது இந்த அளவுக்கு சீரழிந்து விடவில்லை என்றாலும், அந்த விருதும் ஐரோப்பாவை மட்டும்தானே மையம் கொண்டிருக்கிறது?

ஃப்ரெஞ்ச் மொழியில் பதினாறு விருதுகள், ஜெர்மன் மொழியில் பதினான்கு, ஸ்வீடிஷ் எட்டு, போலிஷ் ஐந்து, ஆங்கிலம் இருபத்தொன்பது.  இதில் பெருமாளை மிகுந்த மன உளைச்சலுக்கு உட்படுத்திய விஷயம், போலீஷ் மொழிக்கு ஐந்து நோபல் விருது.  வெறும் நான்கு கோடி பேரால் பேசப்படும்  மொழி.  அதேபோல் ஒரு கோடி பேரால் பேசப்படும் செர்பிய மொழிக்கு ஒரு நோபல் விருது.  ஆனால் நான்காயிரம் ஆண்டுகள் மூத்த ஒரு மொழிக்கு – ஒன்பது கோடி பேரால் பேசப்படும் ஒரு மொழிக்கு இதுவரை நோபல் விருதே கொடுக்கப்பட்டதில்லை.   

ஆனால் இந்தியா என்று பொதுமைப்படுத்தி ஒரே ஒரு விருது. இப்படி இந்தியா என்று ஒற்றையாகச் சுருக்குவதே முட்டாள்தனம்.  தமிழ், கன்னடம், மலையாளம், வங்காளம், மராத்தி, ஹிந்தி என்றுதான் நோபல் விருது அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.  ஃப்ரெஞ்சுக்கே பதினாறு என்றால், ஃப்ரெஞ்ச்சை விட பல மடங்கு உயர்தரமான இலக்கியப் படைப்புகளைக் கொண்டிருக்கும் தமிழில் இதுவரை இருபது நோபல் விருது அளிக்கப்பட்டிருக்க வேண்டுமே?  தி. ஜானகிராமன், நகுலன், அசோகமித்திரன், தஞ்சை ப்ரகாஷ், எம்.வி. வெங்கட்ராம், க.நா.சு., புதுமைப்பித்தன், தர்மு சிவராமு, ஞானக்கூத்தன், லா.ச. ராமாமிர்தம் என்று பலர் வரிசையில் இருந்தார்கள்.  

அப்படியானால் நோபல் விருதுக்கு இணையாக இப்போது ஜெயமோகன் அறிவித்திருக்கும் வாழும் தமிழ் இலக்கிய விருது ஆசியாவை – அதிலும் கிழக்காசியாவை மையம் கொண்டால் என்ன தவறு?

2

விபரீத ராஜயோகம் என்றதும் பெருமாளுக்கு இன்னொரு பெருமாளின் ஞாபகம் வந்தது. ராஜா ராணி கதைகளில் படித்திருக்கிறான்.  அரசனுக்கு வாரிசு இல்லையென்றால், பட்டத்து யானையின் துதிக்கையில் மாலையைக் கொடுத்து வீதிக்கு அனுப்புவார்கள்.  அப்படி ஒரு பட்டத்து யானை சாலையில் திரிந்து கொண்டிருந்த ஒரு சராசரிப் பெண்ணின் கழுத்தில் மாலையைப் போட அவள் அக்கணமே ராணியாகி விட்டாள்.  

பெருமாள் கோவித்துக் கொள்வார் என்பதால்தான் மேலே உள்ள பத்தியில் சராசரிப் பெண் என்று எழுதினேன்.  நிஜத்தில் அது சராசரிப் பெண் அல்ல.  எது நிஜம் என்று உங்கள் தாத்தா பாட்டியிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.  

ஆனால் பெருமாள் சொல்வார், போய்யா பெருமாள், உனக்கு இதே வேலையாய்ப் போயிற்று?  கொலை மிரட்டல் வருவதற்கு முன்பே நான் உலக அளவில் பிரசித்தமாகி விட்டேன், தெரியுமா உனக்கு? 

அப்படியெல்லாம் பொய் சொல்லாதீர் காம்ரேட், இங்கே தமிழில் சரவணன் சந்திரன், திருச்செந்தாழை, கண்ணாயிரம் பெருமாள் என்றெல்லாம் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள்.  அவர்களையெல்லாம் அமெரிக்காவின் PEN அமைப்புக்கோ, நியூயார்க்கர் பத்திரிகைக்கோ தெரியுமா?  உம்மைத்தானே தெரியும்?  நீரும் இந்தக் கொலை மிரட்டலுக்கு முன்னால் சரவணன் சந்திரன், திருச்செந்தாழை, கண்ணாயிரம் பெருமாள் போல் இருநூறு பேருக்கு எழுதிக்கொண்டு இருந்தவர்தானே?   ஏன் இங்கே கண்ணாயிரம் பெருமாளைச் சேர்த்தேன் என்றால், அவன் மட்டும் என்ன, ஹருகி முராகாமி மாதிரியா புகழ் அடைந்து விட்டான்?  திருச்செந்தாழைக்கு அம்பது வாசகர்.  கண்ணாயிரம் பெருமாளுக்கு அம்பத்தொன்று.  அவ்வளவுதானே வித்தியாசம்?  

சில தினங்களுக்கு முன்பாக ஒரு காலை நேரம்.  கிரக சஞ்சாரங்களின் விளைவாக ரிஷப ராசியின் அதிர்ஷ்டம் எப்படி வேலை செய்யப் போகிறது என்று தீவிரமாக யோசித்துக்கொண்டே நடைப்பயிற்சியில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்தான் கண்ணாயிரம் பெருமாள்.  

அப்போது அவன் எதிரே ஸ்கூட்டரில் வந்த ஒருவர் அவனருகே ஸ்கூட்டரை நிறுத்தி, நீண்ட நாள் பழகியவரைப் போல் அவன் பெயரைச் சொல்லி, தன் பெயரையும் சொல்லிக்கொண்டார்.

இவன் ஞாபகமில்லையே என்று மாமா வேலை பார்ப்பவன் போல் சிரித்தான்.

”அதேதான்.  உங்களுக்குத்தான் ஞாபகம் இருக்காதே?  இன்று எனக்குப் பிறந்த நாள்.  உங்கள் கையால் ஏதேனும் கொடுங்கள்” என்றார்.

ஐநூறு ரூபாய் நோட்டு வந்து விடக் கூடாதே என்று பக்கத்தில் பள்ளிகொண்டிருந்த அனந்த பத்மநாபனிடம் ஒரு வேண்டுதலைப் போட்டு விட்டு பாக்கெட்டில் கை விட்டான் நம் கண்ணாயிரம் பெருமாள். பெருமாளிடம் ஒரு பிரச்சினை. நான் இங்கே குறிப்பிடுவது, நாம் இந்தக் கதையில் பார்த்த மானுடப் பெருமாள்களை அல்ல. வைகுண்டவாசியைத்தான்  சொல்கிறேன்.  அந்தப் பெருமாளிடம் என்ன பிரச்சினையென்றால், இந்த மாதிரி துக்கடா துக்கடா வேண்டுதலையெல்லாம் கவனித்து விடுவார்.  ஒரு நோபல் வேண்டும், புக்கர் வேண்டும் என்றால் கண்டு கொள்ளவே மாட்டார்.  அந்தப்படிக்கு பெருமாளின் அன்றைய துக்கடா வேண்டுதல் நிறைவேற்றப்பட்டது.  பெருமாளின் கையில் வந்தது  ஒரு இருநூறு ரூபாய் நோட்டும் ஒரு இருபது ரூபாய் நோட்டும்.  இரண்டையும் கொடுத்தான்.  நன்றி சொல்லி விட்டுப் போய் விட்டார் ஸ்கூட்டர்காரர்.  

தூங்கிக்கொண்டிருக்கும்போது எவனோ ஒருத்தன் வந்து வாயில் புணர்ந்து விந்து விட்டுவிட்டுப் போனது போல் இருந்தது பெருமாளுக்கு.  வேறு என்னவென்று சொல்வது?  யாருக்கும் எதற்கும் மறுப்பு சொல்லத் தெரியாமல் வாழ்ந்து இதோ எழுபத்து மூன்றைத் தொட்டு விட்டான்.  மறுப்பு சொல்லப் பழகாவிட்டால் இப்படித்தான் ஊர் பேர் தெரியாதவனெல்லாம் வந்து வாயில் ஓத்து விட்டுப் போவான் என்று அறிக.  

எது எப்படிப் போனாலும் தன்னை ஏமாற்றியவர்களைக் கேடு சூழ்கிறது என்பதை மட்டும் தெளிவாகப் பார்த்து விட்டான் கண்ணாயிரம் பெருமாள்.  

இந்த சம்பவத்துக்குப் பிறகு ரிஷப ராசி பற்றி ரொம்பவும் யோசிக்க ஆரம்பித்த பெருமாள், ரிஷப ராசிக்காரன் – காரி யாருக்காவது மார்ச்சில் பண மழை கொட்டியதா என்பதைத் தெரிந்து கொள்ளும் முயற்சியில் இறங்கினான்.  முதல் முதலில் ஞாபகம் வந்தது ரங்கராஜன்.  சக எழுத்தாளன்.  முப்பது ஆண்டுகளுக்கு மேலான நட்பு கண்ணாயிரம் பெருமாளுக்கு ஒரு விருது கிடைத்த போது முடிவுக்கு வந்தது.  ரங்கராஜன் பெருமாளுக்கு வாழ்த்து தெரிவிக்காமல் விட்டு விட்டான்.  அதோடு நட்பை முறித்து விட்டான் பெருமாள்.  இப்போது புத்தக விழாவில் ஒருவருக்கொருவர் நேருக்கு நேர் பார்த்துக்கொண்டாலும் புன்னகை கூட புரிந்து கொள்வதில்லை.  

ரோஷ்னியைக் கேட்டான்.  ம்ஹும், இல்லை.  சஞ்ஜனாவைக் கேட்டான்.  ஏதோ வேறு ராசி.  விநோதினி?  இல்லை.  சாந்த்னி?  அந்தக் கொனஷ்டையோடுதான் பேசுவதே இல்லையே?  கொனஷ்டைப் பேச்சு மட்டும் காரணம் இல்லை.  வைதேகி சொன்ன வசனமும் காரணம்.  பெண்களோடு பேசாதே.  அது பற்றி நினைக்குந் தோறும் பதினாறு வயதினிலே படத்தில் கோமணத்தோடு கமல் பேசும் வசனம் பெருமாளுக்கு ஞாபகம் வரும்.  வீட்டுக்குப் போகணும், ஆத்தா வையும்.  

ரோஷ்னி, சஞ்ஜனா, விநோதினி – மூவரோடு பேசும் போது கூட பெருமாளின் செவிகளில் அந்த வசனம்தான் கேட்டுக் கொண்டிருந்தது.  பெண்களோடு பேசாதே.  ஆத்துக்குப் போகணும், ஆத்தா வையும்.  சீக்கிரம் உன் ராசியைச் சொல்லித் தொலை.  ஆத்துக்குப் போகணும்.  வைதேகி வையும்.  ஆத்துக்குப் போகணும்.  ஆத்தா வையும். 

கடைசியில் நந்தினியிடம் விஷயம் சிக்கியது.  நந்தினி ரிஷபம்.  சோதிடர் சொன்னது ஒரு வகையில் பலித்தது.  நந்தினிக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது.  அவளைப் போன்ற ஒரு வாழ்க்கையைக் கடந்து வந்த ஒருவருக்குக் கடவுள் நம்பிக்கை இல்லாமல் போவதில் ஒன்றும் ஆச்சரியமில்லை என்று நினைத்துக் கொள்வான் பெருமாள்.  அப்படி என்ன வாழ்க்கை?  ம்ஹும்.  பெருமாள் அது பற்றி அவளிடம் அதிகம் கேட்டுக்கொண்டதில்லை.  எல்லாம் யூகம்தான்.  இருந்தாலும் விபரீத ராஜயோகம் பற்றிச் சொன்னான்.

அதற்கு அவள் ஒரு கதை சொன்னாள்.  அதற்கு முன்னதாக ஒரு விஷயம்.  நந்தினி பற்றிய எந்த அறிமுகமும் உங்களுக்குத் தேவையில்லை.  அறிமுகம் செய்தால் அது கூறியது கூறல் ஆகி விடும்.   நூறு பூனை, நூறு நாய் வளர்ப்பவள்.  இதைக் கேட்டால் உங்களுக்கு யார் இந்தப் பைத்தியக்காரி என்று தோன்றும்.  பெருமாளுக்கு என்னவோ நீங்கள்தான் பைத்தியம் என்று தோன்றுகிறது.  பூனைகளும் நாய்களும் உங்களெதிரே பசித்திருக்க  உங்களால் நிம்மதியாகச் சாப்பிட முடிகிறது என்றால் நீங்கள்தான் பைத்தியம்.  நந்தினி அல்ல.

நந்தினிக்கு திருப்பதியில் ஒரு மாமா இருந்தார்.  நந்தினியின் குடும்பச் சூழலைக் கற்பனை செய்து கொள்ளுங்கள்.  நூறு பூனை, நூறு நாய் வளர்ப்பவளை குடும்பத்தினர் எப்படி நடத்துவார்கள்?  அப்படியே நந்தினியையும் நடத்தினார்கள்.  ஆனால் திருப்பதி மாமா மட்டும் விதிவிலக்கு.  அவர் வீட்டில் இருபது பூனைகள் வளர்க்கிறார்.  விவாகரத்து ஆனவர்.  முன்னாள் பேராசிரியர்.  ஐம்பத்தைந்து வயதில் அகால மரணம்.  

இப்போது அவர் வளர்த்த இருபது பூனைகளின் கதி?  நந்தினிதான் சென்னையிலிருந்து திருப்பதி வரை பதினைந்து தடவை போய் வந்து அந்த இருபது பூனைகளையும் சென்னை கொண்டு வந்து தன்னுடைய இல்லத்தில் வைத்துப் பராமரிக்கிறாள்.  ஆனால் அது அத்தனை சுலபம் இல்லை.  பூனைகளுக்கு Peritonitis என்ற தொற்றுநோய் வந்திருந்தது. வயிற்றின் உட்புறத்தில் உள்ள பெரிட்டோனியம் என்ற மெல்லிய சவ்வில் ஏற்படும் தொற்று. இதைக் குறிப்பிட்ட காலத்தில் குணப்படுத்தவில்லையென்றால் உயிர் ஆபத்து ஏற்படும்.  குணப்படுத்துவதற்கு ஆன செலவு கிட்டத்தட்ட பதினைந்து லட்சம்.  ஒரு பூனைக்கு எண்பதாயிரம் ரூபாய்.  அப்புறம் திருப்பதிக்குப் பதினைந்து தடவை போய் வந்த செலவு.  நந்தினியிடம் ஒரு கார் இருக்கிறது.  ஆட்டோவை விட சற்றே கௌரவமான கார்.  அவளே சாரதி என்பதால் வேறு கார், வேறு காரோட்டி என்பது போன்ற பிரச்சினை இல்லை.  

மாமா தன் சேமிப்புத் தொகையான இருபது லட்சத்தை நந்தினியின் பெயரில் எழுதி வைத்திருந்தார்.  அந்த இருபது லட்சமும் பூனைகளுக்கு செலவாயிற்று.  

கதை இதோடு முடிந்திருந்தால் இதை இந்தக் கதையில் சேர்த்திருக்க மாட்டேன்.  ஏனென்றால், என்னுடைய கதைகளில் பூனைகளின் கதைதான் பிரதானமாக இருக்கிறது என்று சமூகமே கொந்தளித்துக்கொண்டு இருக்கிறது.  

இதற்குக் கண்ணாயிரம் பெருமாளோ அல்லது அவனுடைய கதையை எழுதும் துர்ப்பாக்கியசாலியான நானோ  துளிக்கூட பொறுப்பேற்க முடியாது, பார்த்துக் கொள்ளுங்கள்.  அவனைச் சுற்றியுள்ள பெண்கள் அத்தனை பேரும் பிராணி ஆர்வலர்களாக இருக்கிறார்கள்.  அவனுடைய காவல் தெய்வமாக விளங்கும் வைதேகி உட்பட.  அவன் என்ன செய்வான்?  அவனுக்கு நடப்பதைத்தானே அவன் எழுத முடியும்?  அவனைப் பொருத்தவரை அவனுடைய உலகில் பூனையோ நாயோ இல்லை.  எப்படி பணம் என்பது அவன் உலகில் இல்லையோ அதைப் போல.  ஆனால் பணத்தின் தேவை என்பது இருக்கிறதுதானே?  அப்படித்தான் பூனை நாய் விஷயமும்.  இன்னொரு முக்கிய சமாச்சாரமும் உண்டு.  அவன் ஜீவகாருண்யன்.  வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடுபவன்.  வாட்டத்தைப் போக்க என்ன வேண்டுமானாலும் செய்யக் கூடியவன்.  பயிருக்கே அப்படி என்றால், பூனை நாய் விஷயத்தில் என்ன ஆவான்?  பசியில் வாடிய பூனையையோ நாயையோ கண்டால் அதன் பசியைப் போக்குவதுதான் அவன் முதல் வேலை.  அந்த ஜீவன் வீட்டில் வளர்ந்து அனாதையாக்கப்பட்டிருந்தால் அதற்கு உடனடியாக ஒரு ஷெல்ட்டரைக் கண்டு பிடிப்பது அடுத்த வேலை.  

ஆகவே, அவனுடைய மாமா திருப்பதியில் அகால மரணம் அடைந்து அவருடைய இருபது பூனைகள் அனாதையாக்கப்பட்டிருந்தால் கூட அவனும் நந்தினி செய்ததைத்தான் செய்திருப்பான்.  

கதை அதோடு முடிந்திருந்தால் கதையை இங்கே சேர்த்திருக்க மாட்டேன் என்று சொன்னேன் இல்லையா?  மீதிக் கதையைக் கேளுங்கள்.  நந்தினியின் நெருங்கிய உறவு – மாமாவின் காரியங்களை கவனித்துக்கொண்டிருந்த ஒரு பெண்மணி நந்தினியிடம் ஒரு அவசரத் தேவை என்று சொல்லி, அந்த இருபது லட்சத்தில் பத்தை சென்ற ஆண்டு வாங்கியிருக்கிறாள்.  மிக விரைவில் திருப்பி விடுகிறேன் என்ற வாக்குறுதியுடன்.  

நந்தினி இதைப் படித்தால் கோபித்துக் கொள்ளக் கூடாது.  கண்ணாயிரம் பெருமாள் ஸ்கூட்டரில் வந்தவனிடம் பணம் கொடுத்தான் இல்லையா?  அதை விட பெவகூஃப் பெண் நந்தினி.  ஏற்கனவே மாமா கொடுத்த இருபது லட்சமும் காலி.  ஆனாலும் தன்னுடைய சேமிப்பிலிருந்து பத்தை எடுத்துக் கொடுத்திருக்கிறாள்.  தேவைப்பட்டால்தான் உடனே திருப்பித் தந்து விடப் போகிறார்களே?  

ஆனால் உலகம் அப்படியா இயங்கிக்கொண்டிருக்கிறது?

ஆறு மாதம் கழித்துத் திருப்பிக் கேட்டால், வீடு கட்டிக்கொண்டிருக்கிறேன், இப்போது பணம் இல்லை என்று பதில்.

ஆனால் கண்ணாயிரம் பெருமாள் ஒரு விஷயத்தில் கில்லாடி.  இப்படி ஒரு சூழ்நிலை வந்தால், “உனக்குப் பணம் வேண்டுமானால் பிராத்தல் தொழில் செய்து சம்பாதி.  என்னிடம் திருடாதே” என்று சொல்லியிருப்பான்.

உங்களுக்குத்தான் தெரியுமே, அவனுடைய இருபத்தேழு வயதில் அவன் நைனா அவனிடம் அவனுடைய தங்கையின் பெண்ணுக்குக் காது குத்த வேண்டும், அதற்குத் தோடு வாங்கப் பணம் அனுப்பு என்று எழுதிய கடிதத்துக்குப் பெருமாள் எழுதிய உலகப் பிரசித்தி பெற்ற பதில்? 

“இருபத்தேழு வயதில் உங்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்து விட்டன நைனா.  நானோ இங்கே தில்லியில் கையடித்துக்கொண்டிருக்கிறேன்.  எவனோ எவளையோ ஓத்துப் பிறந்த குழந்தையின் காதுகுத்துக்கு நான் ஏன் பணம் அனுப்ப வேண்டும்” என்று போஸ்ட்கார்டில் பதில் எழுதியவன்.  அவன் கோபத்துக்குக் காரணம், தங்கையும் தங்கை கணவனும் அரசு ஊழியர்கள்.  தங்கையின் கல்யாணக் கடனை அடைப்பதற்காக பெருமாள் தன் 560 ரூபாய் சம்பளத்தில் 250 ரூபாயை நைனாவுக்கு அனுப்பி விட்டு மதிய உணவுக்கு ரொட்டியும் பருப்பும் வாங்கித் தின்பதற்குக் கூட காசு இல்லாமல் வெறும் கச்சோடியும் தேநீரும் சாப்பிட்டு சில ஆண்டுகளைக் கடத்தியிருக்கிறான்.  அதனால்தான் அப்படி ஒரு பதிலை எழுதினான்.  

ஆனால் நந்தினி அப்புராணி.  அப்படியெல்லாம் அந்தப் பெண்மணிக்குப் பதில் சொல்லவில்லை.  எப்படியோ கல்லிலிருந்து நார் உரிப்பது போல் நைச்சியமாகப் பேசிப் பேசி பத்து லட்சத்தையும் வாங்கியிருக்கிறாள்.

அந்தப் பத்து லட்சம் சோதிடர் ரிஷப ராசிக்குச் சொன்னது போல் மார்ச் ஒன்றாம் தேதி கிடைத்தது.  

ஆனால் வந்தது பத்து லட்சம் அல்ல.  பத்து லட்சத்து ஒரு ரூபாய்.

இந்த ஒரு ரூபாய் நந்தினிக்கும் கண்ணாயிரம் பெருமாளுக்கும் எத்தனை மன உளைச்சல் கொடுத்தது என்பதை வார்த்தைகளால் விளக்க முடியாது.   பத்து லட்சத்தை ஒரு வருடம் வைத்திருந்து விட்டு, பதினோரு லட்சமாக அனுப்ப முடியாதா?  சரி, பத்து லட்சமாகவே அனுப்பித் தொலைய வேண்டியதுதானே?  அது என்னங்கடா ஒரு ரூபாய் துக்கடா? 

கண்ணாயிரம் பெருமாளுக்கு ஒரு நண்பர் மாதாமாதம் பத்தாயிரத்து ஒரு ரூபாய் அனுப்புகிறார்.  அது அவர் அவனுக்கு அனுப்பும் குரு தட்சணை.  அதில் பிரச்சினை இல்லை.  அது பெருமாளின் பணம் அல்ல.  பெருமாளின் உஞ்சவிருத்திப் பையில் விழும் பணம்.  ஆனால் கடன் வாங்கி விட்டுத் திருப்பி அனுப்பும் போது அது என்ன மயிருக்கு ஒரு ரூபாய்?  பூனைக்கு சிரைத்து விடவா?

சரி, விடுங்கள்.  ஒருநாள் கண்ணாயிரம் பெருமாளும் வைதேகியும் ரிஷப ராசி பலன்களை யூட்யூபில் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.  அப்போது ஒரு சோதிடர் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்.  முதலிலேயே சொல்லி விடுகிறேன்.  வைதேகிக்கு சோதிடத்திலெல்லாம் நம்பிக்கை கிடையாது.  அல்லது, அதன் திசையில் திரும்ப மாட்டாள்.  இரண்டில் ஒன்று.  ஆனாலும் தன் கணவன் கண்ணாயிரம் பெருமாளைப் புரிந்து கொள்ளும் தீவிர முயற்சியில் ஈடுபட்டிருப்பதால் அவள் ரிஷப ராசி பலன்களைப் பார்க்க நேர்ந்தது.  அப்போதுதான் அந்த விபரீதம்.  சோதிடர் சொன்னார், ரிஷபராசிக்காரர்களுக்கு ஒரு பெண்ணால் விபரீத ராஜயோகம் அடிக்கப் போகிறது.  அது தாயாக இருக்கலாம், தாரமாக இருக்கலாம், வேறு யாராகவும் இருக்கலாம்.  

வைதேகி அவனை அர்த்தபுஷ்டியுடன் ஒரு பார்வை பார்த்தாள்.  ‘இதற்கு என்னடா சொல்கிறாய்?’ என்பது அந்தப் பார்வையின் பொருள்.  பெருமாளுக்கு உடனே சாந்த்னி ஞாபகம் வந்தது.  அட, சொல்ல மறந்து போயிற்றே, இளங்கலை ஆங்கில இலக்கியம் மட்டும் அல்ல, அவள் படிப்பது முதல் ஆண்டு.  ங்கொய்யால, அவளிடமிருந்து மாதம் ஆயிரம் கிடைக்க இன்னும் பதினைந்து ஆண்டுகள் அல்லவா அவன் காத்திருக்க வேண்டும்? 

வைதேகி ஏற்கனவே பல முறை சொல்லி விட்டாள், பெண்கள் சகவாசம் வைத்துக் கொள்ளாதே என்று.  

சகவாசம் என்றால்?

பேசாதே.

ஓ, பெண்களிடம் பேசக் கூடாது?

ஆமாம்.

நந்தினியோடு பேசாவிட்டால் எப்படி மொழிபெயர்ப்பு சாத்தியம்?  என் எழுத்து எப்படி சர்வதேச அளவில் போக முடியும்?

நந்தினியோடு பேசிக் கொள், பிரச்சினை இல்லை.  

சரி, சாந்த்னி மேட்டருக்கு வருவோம்.  கண்ணாயிரம் பெருமாள் ஒரு நாவல் எழுதிக்கொண்டிருந்தான்.  ஒரு நாளில் பத்து மணி நேரம்.  நாவலை முடித்து விட்டு ஏதாவது ஒரு படம் பார்க்கலாம் என்று நினைத்து ஓர்ஹான் பாமுக்கின் நாவலை வைத்து எடுத்த ம்யூசியம் ஆஃப் இன்னொஸன்ஸ் சீரீஸைப் பார்க்கத் தொடங்கினான்.  ஏற்கனவே நாவல் எழுதிய கணக்கில் அவன் மூளையில் பறந்து கொண்டிருந்த ஆயிரம் பூச்சிகளோடு இந்த சீரியஸான சீரீஸினால் இன்னொரு ஆயிரம் பூச்சிகள் சேர்ந்து கொண்டன.  அவனுக்கு இப்போதைய தேவை ஒரு ஜாலியான மசாலா படம்.  அன்பே வா படத்தில் கன்னடத்துப் பைங்கிளி எம்ஜியாரிடம் கொஞ்சிக் கொஞ்சிப் பேசும் காட்சிகளைப் பார்த்தான்.  பிறகு எங்க வீட்டுப் பிள்ளை படத்தில் தைரிய  எம்ஜியார் நம்பியாரைப் போட்டு சவுக்கால் அடித்து விளாசும் காட்சியைப் பார்த்தான்.  பிறகு அனில் கபூர் நடித்த சுபேதார் என்ற ஹிந்திப் படத்தை முழுசாகப் பார்த்தான்.

மறுநாள் சாந்த்னியிடம் இதைச் சொன்னான்.  “என்னால் ம்யூசியம் ஆஃப் இன்னொஸன்ஸ் போன்ற சீரியஸ் படங்களைப் பார்க்க முடியவில்லை…”

“ஏன் பார்க்கிறீர்கள்?  யார் உங்களைப் பார்க்கச் சொன்னார்கள்?” என்றாள் சாந்த்னி.

வைதேகி சொன்னது ஞாபகம் வந்தது, பெண்களிடம் பேசாதே!  ஆஹா, என்ன ஒரு தீர்க்கதரிசனம்!  அவளே ஒரு பெண்ணாக இருந்தும் பெண்களைப் பற்றி எத்தனை துல்லியமாகக் கணித்திருக்கிறாள்!  வைதேகி சொன்னது சரிதான், இருபத்தோரு வயதிலேயே இப்படி ஒரு கொனஷ்டை என்றால்,  இன்னும் போகப் போக இந்தக் கொனஷ்டையை உலகம் தாங்குமா?  ஏற்கனவே இருக்கும் மண்டைக் குடைச்சல் போதும் என்று இந்தப் புதிய குடைச்சலை ஃபோனில் ப்ளாக் பண்ணி வைத்தான் பெருமாள்.  பேசி இப்போது ஒன்றரை மாதம் ஆகிறது.

அப்படியானால் சோதிடர் சொன்ன பெண் யார்?  தாரம் என்றாரே?  வைதேகியிடம் அப்படி ஒன்றும் பணம் இல்லையே?  

அவனால் எந்த ஒரு விஷயத்தையும் ஒரு சில நொடிகளுக்கு மேல் யோசிக்க முடியாது.  குழப்பம் என்றால் அங்கிருந்து ஓடி விடுவான்.  அதனால்தான் அவன் இந்த விபரீத ராஜயோகத்திலிருந்து அகத்திக்கீரை தண்ணிச்சாறுக்கு மாறினான். 

இருபத்தைந்து வயது வரை அவன் அகத்திக்கீரை தண்ணிச்சாறு வாரம் ஒருமுறை என்று சாப்பிட்டுக்கொண்டிருந்தான்.  இப்போது ஐம்பது ஆண்டுகளாக அந்த அய்ட்டம் கண்ணில் படுவதில்லை.  வீட்டுக்கு அகத்திக்கீரை வரும்.  சமைக்கப்படும்.  ஆனால் பொறியலாக.  தண்ணிச்சாறாக அல்ல.  

பொறுங்கள்.  கதை சொல்பவன் கண்ணாயிரம் பெருமாள்.  இதே கதையை வைதேகி சொல்லியிருந்தால், இதுவரை ஐநூறு முறை தண்ணிச்சாறு செய்து கொடுத்திருப்பதாகச் சொல்வாள்.  ரஷோமான் மாதிரிதான்.  உண்மைக்குப் பல பக்கம் உண்டு.

எது எப்படிப் போனாலும், கடந்த ஐந்து ஆண்டுகளாக அவன் அகத்திக்கீரை தண்ணிச்சாறு சாப்பிட்டதில்லை.

இதற்காக அவன் ஊராட்சிக்கோட்டையில் வசிக்கும் நிர்குணைப் பிடிக்கலாம் என்று எண்ணினான்.  

ஜெயமோகனின் வாழும் தமிழ் இலக்கிய விருது போல், நிர்குண் ஒரு வாழும் ரஸ்புடின்.  ஒரு நாளில் ஒன்றரை போத்தல் பிராந்தி.  அறுபது எழுபது சிகரெட்.  அறுபது தேநீர்.  முப்பது கவிதை.  எல்லாம் சொதப்பல் கவிதை அல்ல.  வைரத்தைப் போல் செதுக்கியது.  எந்தக் கவிஞனாவது தினமும் முப்பது கவிதை எழுதுவானா?  உண்மையில் ஞானபீடம் இந்த நிர்குணுக்குத்தான் வந்திருக்க வேண்டும்.  

இந்த ரீதியில் வைதேகியிடம் நிர்குண் பற்றி ஒருநாள் சொல்லிக்கொண்டிருந்த போது அவள் “நிர்குண் உன்னை வசியம் செய்து விட்டார், அவருடைய மாந்த்ரீக சக்தியைக் கொண்டு உன்னை அவர்தான் இப்போது இயக்கிக்கொண்டிருக்கிறார், அவர் உனக்கு  அணிவித்த மோதிரத்தை உடனடியாகக் கழற்றி வை” என்றாள். 

சில மாதங்களுக்கு முன் பவானி பக்கத்தில் உள்ள ஊராட்சிக்கோட்டையில் வைத்து நிர்குணை முதல் முதலாகப் பார்க்கச் சென்ற போது அவன் தூங்கிக்கொண்டிருந்தான்.  அவன் இவன் என்று கதைக்காகச் சொல்கிறேன்.  வயது ஐம்பது இருக்கும்.  என்னைப் பார்ப்பதற்காக அப்போது கோயம்பத்தூரிலிருந்து ஸ்ரீதரும் வந்திருந்தார்.  என் நீண்ட கால நண்பர்.  எழுபத்திரண்டு மணி நேரம் கழித்து எழுந்து வந்தான் நிர்குண்.  கதைக்காக புருடா விடுகிறேன் என்பீர்கள்.  நிர்குண் பற்றிய எல்லா விஷயங்களுமே நம்ப முடியாதவைதான்.  தொல்காப்பியர் ஆறறிவு உள்ளவர்களாக  மனிதர், அசுரர், தேவர் என்று மூவகையாகப் பிரிக்கிறார். இந்தப் பிரிவில் நிர்குண் நிச்சயம் மனிதன் அல்ல என்று எனக்குத் தெரியும்.  அசுரனோ தேவனோ இரண்டில் ஒன்றாகத்தான் இருக்க வேண்டும்.  இரண்டில் எது என்பது பற்றி எனக்குக் கவலை இல்லை.  

எழுந்து வந்த நிர்குண் ஸ்ரீதரை ஒருமையில் விளித்து ஏதோ கேட்க ஆரம்பித்தான்.  என்னையும் ஒருமையிலேயே விளிப்பது நிர்குணின் வழக்கம்.  இல்லை.  எல்லோரையுமே ஒருமையில்தான் அழைப்பான் நிர்குண்,.  பிறகு ஏதோ கடவுள் பற்றி நிர்குணுக்கும் ஸ்ரீதருக்கும் வாக்குவாதம் ஏற்பட, படு ஆவேசமான ஸ்ரீதர் “இனி நான் சாகும் வரை உங்கள் முகத்தில் முழிக்க மாட்டேன்” என்று கத்தி விட்டு நள்ளிரவில் காரை எடுத்துக்கொண்டு கோயம்பத்தூர் கிளம்பினார். 

அந்த முதல் சந்திப்பில்தான் நிர்குண் தான் அணிந்திருந்த மோதிரத்தைக் கழற்றி கண்ணாயிரம் பெருமாளின் விரலில் மாட்டினான்.  இரண்டு பவுன்.  இன்றைய மதிப்பில் மூன்று லட்சம் இருக்கும்.  அதில் நிர்குணின் குலக்குறியான மான்கொம்பு போட்டிருந்தது.  நிர்குணின் முதல் எழுத்தான N-உம் இருந்தது.

அந்த மோதிரத்தைத்தான் கழற்றி வை என்றாள் வைதேகி.  

இந்த ஜிம்காவையெல்லாம் கண்ணாயிரம் பெருமாள் ரொம்ப காலமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறான்.  பத்து ஆண்டுகளாக ”கொக்கரக்கோதான் உன்னை இயக்கிக்கொண்டிருக்கிறான், நீ உருப்படவே மாட்டாய்” என்று சொன்னது உலகம்.  போங்கடா சுன்னிங்களா என்று சொல்லி விட்டான் பெருமாள்.  அதற்கு முன்னால் வேறு யாரோ அவனை இயக்கிக்கொண்டிருந்தான் அல்லது இயக்கிக்கொண்டிருந்தாள்.  இப்போது நிர்குண். 

ஆக, மொத்தத்தில் கண்ணாயிரம் பெருமாளுக்கு சொந்த மூளையே இல்லை என்று முடிவு செய்து விட்டது சமூகம்.  அவனும் அது பற்றிக் கவலைப்படுவதில்லை.  ஏனென்றால், அவனுடைய உலகத்தில் அவனைத் தவிர வேறு உயிரினமே இல்லை.  அவன் மட்டுமே வாழும் உலகு அவனுடையது.  இன்னொன்று, அவன் யார் பேச்சையும் கேட்பதில்லை.  அதைக் கண்ணிமைக்கும் நேரத்தில் அடுத்த வாக்கியத்தைத் தொடர்வதற்குள் நிரூபித்து விடலாம்.  அவன்தான் நேரத்துக்கு நேரம் தன் கருத்தை மாற்றிக்கொண்டே இருப்பவன் ஆயிற்றே?  அவன் எப்படி இன்னொருத்தன் அல்லது இன்னொருத்தி பேச்சைக் கேட்க முடியும்?  ஒரு பைத்தியக்காரனைப் பார்த்து “நீ இன்னார் பேச்சைக் கேட்டுத்தான் ஆடிக்கொண்டிருக்கிறாய்” என்று நீங்கள் சொன்னால், நீங்கள் பைத்தியமா, அவன் பைத்தியமா?  அப்படித்தான் பெருமாளின் கதையும்.  அவன்தான் கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று வாழ்பவன் ஆயிற்றே?  அவன் ஏன் நிர்குண் பேச்சைக் கேட்க வேண்டும்?  இன்னும் சொல்லப் போனால் அவனும் நிர்குணும் பேசிக்கொண்டதே இல்லையே? 

”அப்படியா, அப்படியானால் பெருமாளும் நிர்குணும் சேர்ந்து அமர்ந்து எட்டு மணி நேரம் ஒன்பது மணி நேரம் என்று குடிக்கிறார்களே?  அதெல்லாம் எந்தக் கணக்கு?” என்று கேட்கிறார் ஸ்ரீதர்.

கண்ணாயிரம் பெருமாளை அது பற்றிக் கேட்டால், ஒன்றும் பேசிக்கொள்ள மாட்டோம் என்று சத்தியம் செய்கிறான்.  

மோதிரத்தைக் கழற்றி வை என்று சொன்ன வைதேகியிடன் பெருமாள் பொறுமையாகச் சொன்னான்:

நான் கடவுள் பாதி, சாத்தான் பாதி.  நிர்குண் சாத்தான் என்றால் என் கடவுள் என்னைக் காப்பாற்றுவான்.  நிர்குண் கடவுள் என்றால், நிர்குணின் கடவுள் என்னிடமிருந்து நிர்குணைக் காப்பாற்றுவான்.

அந்த நிர்குணிடம்தான் போய் இந்த அகத்திக்கீரை தண்ணிச்சாறு விஷயத்தைச் சொல்லி நியாயம் கேட்க வேண்டும்.  நியாயம் என்ன நியாயம்?  ஒருவேளை அகத்திக்கீரை தண்ணிச்சாறு ஊற்றி சுடுசோறு சாப்பிட வேண்டும்.  மற்றபடி நோபல் பரிசெல்லாம் சுன்னி மயிருக்குச் சமானம்.  ‘சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்’ கதையா? என்றுதானே கேட்கிறீர்கள்?  அதிலென்ன சந்தேகம்?  அதேதான்.    

பின்குறிப்பு:  இவ்வளவையும் எழுதி விட்டு விநோதினி சொன்னதை எழுதாமல் விட்டால் அது இந்தக் கதைக்கு நியாயம் இல்லை.  விநோதினியிடம் ரிஷபமா என்று கேட்டான் கண்ணாயிரம் பெருமாள். அவளோ ராசியைச் சொல்லாமல் வழக்கம் போல் ஏதோ பூனை கதையை ஆரம்பித்தாள். அவள் வளர்க்கும் பூனையை அழைத்துக்கொண்டு மொட்டைமாடியில் வாக்கிங் போனால் அவள் தங்கியிருக்கும் மகளிர் விடுதியில் உள்ள பெண்கள் மொட்டைமாடியில் தங்கள் பாய் ஃப்ரெண்டோடு காலையில் கடலைப் போட்டுக்கொண்டிருப்பவர்கள், இவள் பூனையைப் பார்த்துக் கரித்துக் கொட்டுகிறார்கள். காலையில் எழுந்ததும் பூனை முகத்தில்தான் விழிக்க வேண்டுமா என்று கத்துகிறார்கள். அதைக் கேட்டதும் ஃபோனை உடனடியாகத் துண்டிக்கப் போனான் பெருமாள்.

”ஒரு நிமிடம் கூடவா பேச முடியாது?” என்றாள் விநோதினி.

”ஆத்துக்குப் போகணும், ஆத்தா வையும்.”

”என்ன, பதினாறு வயதினிலே பார்த்தீங்களா? சரி, இந்த ஒரு விஷயத்தை மட்டும் சொல்லிவிட்டுப் போய் விடுகிறேன். உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர் ரியூ முராகாமி எழுதின நாவல் ஒன்றைப் படித்தேன்.  அது அப்படி அப்படியே உங்களுடைய அனாடமி ஆஃப் டிஸொனன்ஸ் மாதிரியே இருக்கிறது.” 

”சரி, சீக்கிரம் முடி.  ஆத்தா வையும், ஆத்துக்குப் போகணும்.”

”பியர்ஸிங் என்ற நாவல்.  அதில் வரும் ஒரு கேரக்டர் தான் வளர்க்கும் ஒரு முயலை மிதித்தே கொல்கிறான்.”

”நீ ஒரு சேடிஸ்ட் விநோதினி.  இப்போது பார், நந்தினியும் நானும் பல நாட்களுக்குத் தூக்கம் வராமல் செத்தோம்.”

”இன்னொரு நாள் அந்தக் கேரக்டரைப் பற்றி விரிவாகச் சொல்கிறேன்.” 

”சரி சரி பை.  ஆத்துக்குப் போகணும்.  ஆத்தா வையும்.”

அதோடு கிளம்பாமல் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தாள் விநோதினி.

“என்ன விஷயம், சீக்கிரம் சொல்… ஆத்துக்குப்…”

பெருமாள் பேசி முடிப்பதற்குள் இடை மறித்து, “நீங்கள் இதைச் சொல்லும்போது கமலின் காஸ்ட்யூமில் உங்களை வைத்துப் பார்த்து விட்டேன்” என்று சொல்லி புரையேறும் அளவுக்குச் சிரித்தாள்.

பெருமாள் ஃபோனைத் துண்டித்தான்.

***

நன்கொடை அனுப்ப விரும்புபவர்களுக்கு விவரம் கீழே,

ஜி.பே. செய்வதற்கான தொலைபேசி எண்: 92457 35566

பெயர்: ராஜா (ராஜாதான் என் அட்மின். எனவே குழப்பம் வேண்டாம்.)

வங்கி மூலமாக அனுப்புவதாக இருந்தால் அதற்கான விவரம்:

UPI ID: charunivedita@axisbank

K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.

ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH Chennai