ஜோடிப்புறாவை எங்கே காணோம்?

நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் என் முதல் நாவல் எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் – ஐ எழுதி முடித்து விட்டு, பதிப்பகம் எதுவும் அதைப் பதிப்பிக்க முன்வராததால் நானே அதைப் பதிப்பிக்க முடிவு செய்தேன்.  சக எழுத்தாளர்களுக்கு அது ஒரு குப்பை என்று தோன்றியது.  காரணம், இரண்டாயிரம் ஆண்டு தமிழ் இலக்கிய வரலாற்றில் அப்படி ஒரு புதினம் – கவிதையிலோ உரைநடையிலோ அல்லது வேறு எந்த வடிவத்திலோ எழுதப்பட்டதில்லை.  எனவே சகாக்களுக்கு அது குப்பை எனத் தோன்றியதில் எனக்கு ஆச்சரியமில்லை.  

அந்த நாவலை நான் ஒரு புதிய சைஸில் கொண்டு வர விரும்பினேன்.  ஆனால் பிள்ளையார் பிடிக்க குரங்கு வந்த கதையாக அந்த நூல் பாக்கெட் நாவல் சைஸில் வந்தது.  அதோடு அந்த எண்ணத்தைக் கை விட்டு விட்டேன்.  

இப்போது ராஸ லீலா பதிப்பகத்தில் அடியேன் ஒருவன்தான் இருக்கிறேன்.  வேறு யாரும் போட்டிக்கு பெஸ்ட்செல்லர்ஸ் இல்லை.  ஒன் மேன் ஆர்மி.  அதனால் நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் ஆசைப்பட்டதை இப்போது செய்து பார்க்கலாம் என்று தோன்றியது.  ஏற்கனவே ராஸ லீலா பதிப்பகத்துக்கும் எனக்கும் வியாபார ரீதியாக எந்த சம்பந்தமும் இல்லை என்று எழுதிய வகையில் ராஸ லீலா பதிப்பக உரிமையாளர் வர்ஷா தேவி என் மீது சற்று வருத்தத்தில் இருக்கிறார்.  

இந்த நூதனமான சைஸில் ஜோடிப்புறாவைக் கொண்டு வரலாம் என்று தோன்றியதற்கு இன்னொரு காரணம், சமீபத்தில்தான் Olga Tokarczuk எழுதிய Drive Your Plow Over the Bones of the Dead என்ற நாவலைப் படித்தேன்.  அதன் சைஸ் நான் நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் என் முதல் நாவலைக் கொண்டு வர வேண்டும் என்று விரும்பிய சைஸ்.  செலவு மற்ற நூல்களை விட ஒன்றரை மடங்கு அதிகம் ஆகும்.  லே அவ்ட் செய்வதும் கடினம்.  இதற்காக நான் தனியாக பதினாறு மணி நேரமும் லே அவ்ட் ஆர்ட்டிஸ்டுடன் எட்டு மணி நேரமும் செலவு செய்ய வேண்டி வந்தது.  கிட்டத்தட்ட ஒரு குவாரியில் கல் உடைப்பது போல் இருந்தது.  இந்த நூதனமான சைஸில் வரும் முதல் புத்தகம் என்பதால் இப்படி.  அடுத்தடுத்த நூல்களில் இந்த சிரமம் இருக்காது.  என்னுடைய புனைவு நூல்கள் – நாவல், கவிதை மற்றும் சிறுகதை – மட்டுமே இந்த சைஸில் வெளிவரும். அ-புனைவு நூல்கள் வழக்கமான சைஸில் வரும்.  

ஜோடிப்புறாவுடன் எல்லோரும் இன்புற்றிருக்க குறுநாவலும் சேர்ந்து வருகிறது.  இரண்டும் சேர்த்து சுமார் 450 பக்கங்கள்.  கெட்டி அட்டை.  அட்டைக்கு மேல் கனமான தாள்.  செலவு அதிகம் என்றாலும் விலை 660 ரூ. வைக்கப்பட்டிருக்கிறது.  900 ரூ.தான் வைத்திருக்க வேண்டும்.  ஆனால் ஆரம்பத்தில் விலை கம்மியாக வைத்து விட்டு காலம் போகப் போக விலையை அதிகரிக்கக் கூடாது என்ற கருத்தில் இருக்கிறார் வர்ஷா தேவி.  எப்போதுமே ஒரு மத்திமமான விலையில் இருக்க வேண்டுமாம்.  லாபம் வேண்டாம்.  சாருவின் எழுத்துக்கள் பரவலாகப் போய்ச் சேர வேண்டும் என்பதே ராஸ லீலா பதிப்பகத்தின் நோக்கம்.  

இன்னும் மூன்று வாரங்களில் ஜோடிப்புறா நாவல் வெளிவரும் என்று எதிர்பார்க்கிறேன்.  

அட்டை வடிவமைப்பு : ரஸ்புடின் நிர்குண் (இதே அட்டையை வேறு விதமாக அனுப்பியிருந்தார். ஆனால் அதன் அளவு அதிகமாக இருப்பதால் இங்கே ஏற்ற முடியவில்லை. நாளை ஏற்றுகிறேன்.)