வைரமுத்து ஞானபீட விருதை சிபாரிசுகளைப் பிடித்துதான் வாங்கியிருப்பார் என்பதில் சந்தேகமில்லை. சில ஆண்டுகளுக்கு முன்னர் அவர் சாகித்ய அகாதமி விருது வாங்குவதற்காக விருது வழங்கும் குழுவில் நான் இருக்கிறேன் என்ற தவறான தகவலில் என்னைப் பார்க்க, ஏராளமான பழங்களுடன், காவ்யா சண்முகசுந்தரத்தையும் அழைத்துக்கொண்டு என் வீட்டுக்கு வந்தார்.
நான் குழுவில் இல்லை என்றதும் பழத்தட்டைத் தூக்கிக்கொண்டு போய் விட்டார். அந்த ஆண்டு விருதுக்குழுவில் வல்லிக்கண்ணன் தான் இருந்தார். வண்ணநிலவனை வல்லிக்கண்ணன் என்று நினைத்துக்கொண்டு பழத்தட்டுடன் என்னைப் பார்க்க வந்தவர்தான் இந்த வைரமுத்து.
இது வண்ணநிலவன் ஃபேஸ்புக்கில் எழுதியிருப்பது.
வைரமுத்துவின் சிறுகதைத் தொகுதி ஒன்று வந்த போது அது பற்றி ஒரு மதிப்புரை எழுத வேண்டும் என்று அசோகமித்திரனைப் பெரும் டார்ச்சர் பண்ணியவர் இந்த வைரமுத்து. இப்போது அசோகமித்திரன் இல்லை. அதனால் சாட்சி சொல்ல முடியாது. உயிரோடு இருந்தாலும் அந்த பயந்த பிராமணன் சாட்சி சொல்வார் என்று சொல்வதற்கில்லை. ஆனால் வைரமுத்து அசோகமித்திரனிடம் மதிப்புரை கேட்டு மிகுந்த நெருக்கடி கொடுத்தார் என்பதை நான் நேரடியாக அறிவேன். அதற்காக வைரமுத்து தனக்குக் கொடுத்த பட்டு வேஷ்டியைக் காண்பித்து மிகுந்த கைப்புணர்வுடன் பேசினார். அசோகமித்திரனின் இயல்புக்கும் அவர் இருந்த இடத்துக்கும் வைரமுத்து போன்ற ஒருவரைப் பகைத்துக் கொள்ள முடியுமா? அதனால்தான் இதோ அதோ என்று தள்ளிப்போட்டு கடைசியில் வைரமுத்துவின் நெருக்கடி தாங்க முடியாமல் எழுதிக்கொடுத்தார். இது குறித்து அசோகமித்திரன் எவ்வளவோ வருத்தப்பட்டு என்னிடம் பேசியிருக்கிறார். இப்போது வண்ணநிலவன். தேர்வுக் குழுவில் வண்ணநிலவன் இல்லை என்று தெரிந்ததும் பழத்தட்டைத் தூக்கிக்கொண்டு போனதுதான் சிறுகதை போல் உள்ளது.
காரியம் நடக்க வேண்டுமென்றால், “என்ன வேண்டுமானாலும்” செய்வார்கள் போலிருக்கிறது!
இலக்கியம் இம்மாதிரி கழிசடை விஷயங்களுக்கு நேர் எதிரானது!