சூகர ராஜ்ஜியம்

க்ளாடியேட்டர் 2-இல் அந்தக் காட்சி மறக்க முடியாதது. வட ஆஃப்ரிக்காவிலிருந்து அடிமையாகப் பிடிக்கப்பட்டு வந்த லூசியஸ் (ஹன்னோ என்ற பெயரில்), அரசர்களின் விருந்தின்போது அவர்களின் பொழுதுபோக்குக்காக நடத்தப்படும் வாள் சண்டையில் வென்ற பிறகு, பேரரசர் கேட்டா அவனிடம் “நீ எந்த ஊரைச் சேர்ந்தவன்?” என்று கேட்கிறான். லூசியஸ் நேரடியாகப் பதில் சொல்லாமல், வர்ஜிலின் Aeneid காவியத்திலிருந்து அந்தப் புகழ்பெற்ற வரிகளைச் சொல்கிறான்:

“The gates of hell are open night and day; Smooth is the descent, and easy is the way: But to return, and view the cheerful skies, In this the task and mighty labor lies.”

நரகத்தின் வாயில்கள் இரவும் பகலும் திறந்தே இருக்கின்றன; அதில் இறங்குவது எளிது, பாதையும் லகுவானது. ஆனால் மீண்டு வந்து, ஒளிமயமான வானத்தைப் பார்ப்பதுதான் மகத்தான உழைப்பைக் கோரும் உண்மையான சவால்.

இந்த வரிகள், ஒரு “காட்டுமிராண்டி” அடிமைக்கு எப்படித் தெரியும் என்று அனைவரும் அதிர்ச்சியடைகிறார்கள். லூசியஸின் எஜமானர் (மேக்ரினஸ்) உடனே “நான்தான் இவனுக்குக் கற்பித்தேன்” என்று சமாளிக்கிறார். ஆனால் இது லூசியஸின் உண்மையான ரோமானியப் பின்னணியை (மார்க்கஸ் ஔரேலியஸின் பேரன்) மறைமுகமாக வெளிப்படுத்தும் தருணம்.

இந்தக் காட்சி எனக்குக் குறுக்கு வழியில் புகழ் அடைபவர்களை ஞாபகப்படுத்தியது. நரகத்துக்குள் நுழைவது எளிது; தார்மீகத்தையும் அறத்தையும் விற்று, குமட்டலூட்டும் புகழையும் பணத்தையும் பெறலாம். ஆனால் மானத்தையும் மதிப்பீடுகளையும் விற்று, அப்படி ஏறும் பன்றிகளின் (சூகரர்களின்) ராஜ்ஜியத்தில், தர்மத்தின் பாதையில் நடப்பவர்களுக்கு முள் நிறைந்த பயணமே விதிக்கப்பட்டிருக்கிறது.

ஆயினும், காலம் தர்மத்தையும் அறத்தையும் மட்டுமே நிலைத்து நிற்கச் செய்யும். சூகரர்களின் ஆட்சி சடுதியில் சரிந்து போகும்; சத்தியமும் அறமும் என்றும் நிலைத்திருக்கும்.

க்ளாடியேட்டர் 2-இல் லூசியஸ் சொன்ன வரிகள் போலவே, சிலர் நரகத்தின் எளிய இறக்கத்தில் இறங்கி, குறுக்கு வழியில் புகழ் பெறுகின்றனர். தங்கள் மானத்தையும் மதிப்பீடுகளையும் விற்று, சூகர-ராஜ்ஜியத்தின் ஆதிக்கத்தில் ஏறி நிற்கின்றனர். ஆனால் அத்தகையோரின் புகழ் குமட்டலைத் தரக் கூடியது; விட்டில் பூச்சியின் ஆயுளைக் கொண்டது. (இன்று யாருக்கு அகிலனைத் தெரியும்?)

நம்மைப் போன்றவர்கள் — தர்மத்தின் முள் பாதையில் நடப்பவர்கள் — உழைப்பையும் தியாகத்தையும் ஏந்தியபடி மெதுவாக ஏறுகிறோம். ஆனால் வரலாறும், காலமும், அறமும் எப்போதும் அத்தகையோரையே உயர்த்திப் போற்றும். சூகரர்களின் ராஜ்ஜியம் சிறிது காலத்தில் சரிந்து விழும்; தர்மமே என்றும் நிலைக்கும்.