ஸூகராணாம் ஸூகர ஏவ அதிபதி

மேற்கண்ட சம்ஸ்கிருதப் பழமொழியின் பொருள், பன்றிகளுக்குப் பன்றியே அதிபதி.

அகிலனுக்கு ஞானபீட விருது வழங்கப்பட்ட போது சுந்தர ராமசாமி அகிலனின் எழுத்தை மலக்கிடங்கு என்று வர்ணித்தார்.

பிறகு ஜெயகாந்தனுக்கு ஞானபீடம் கிடைத்தது. ஜெயகாந்தன் இலக்கியத்திலும் இல்லை, வணிக எழுத்திலும் இல்லை. ரெண்டுங்கெட்டான். நா. பார்த்தசாரதி மாதிரி. அகிலனை விடக் கொஞ்சம் தேவலாம்.

இப்போது வைரமுத்து. மேற்கண்ட வரிசையில் இது சரியான தேர்வுதான். இந்தத் தேர்வுகள் தமிழ் புத்திஜீவிகளின் பரிந்துரையின் பேரில்தான் வழங்கப்படுகின்றன. தமிழில் புத்திஜீவிகள் யார்? கமல்ஹாசன், மணி ரத்னம், ஷிவ் நாடார், திண்டுக்கல் லியோனி, நடிகர் விஜய், த்ரிஷா, சாலமன் பாப்பையா, பாஜக அண்ணாமலை, நீயா நானா கோபிநாத், ரெடின் கிங்ஸ்லி, ரஜினி காந்த், வண்ணி ராணி சீரியல் புகழ் ஆல்யா மானஸா, சிவ கார்த்திகேயன், மாபாகா, ப்ரியங்கா, ரோபோ ஷங்கர், கோபி – சுதாகர் (பரிதாபங்கள்) போன்றவர்கள்தானே? இவர்களிடம் பரிந்துரை கேட்டுத்தான் ஞானபீட விருது வழங்கப்படுகிறது. அதாவது, தமிழ்நாடு என்றால் இவர்களைத்தான் கேட்பார்கள். ஏனென்று சொல்ல வேண்டியதில்லை என்று நினைக்கிறேன். பொதுவாக பிரபலமான புத்திஜீவிகளைத்தான் இந்த விருதுக்குப் பரிந்துரை செய்யச் சொல்லி அழைப்பார்கள். மேற்கண்ட தமிழ்நாட்டு புத்திஜீவிகள் யாரைத் தேர்ந்தெடுப்பார்கள்?

சுந்தர ராமசாமி இன்று உயிரோடு இருந்திருந்தால் திரும்பவும் முன்பு சொன்னதையே சொல்ல வைத்து சோர்வூட்டியதற்காக நிச்சயம் வருத்தப்பட்டிருப்பார்.