தில்லியின் அந்தப் பிரதான சாலையின் அப்போதைய பெயர் கர்ஸன் ரோடு. இப்போது கஸ்தூர்பா காந்தி மார்க் என்று அழைக்கப்படுகிறது. 1978இல் நான் தில்லி சிவில் சப்ளைஸ் அலுவலகத்தில் சேர்ந்த போது கர்ஸன் ரோட்டில் இருந்த பிராந்திய அலுவலகத்தில்தான் பணி செய்ய அனுப்பப்பட்டேன். அந்த அலுவலகத்தின் அடுத்தாற்போல் இருந்த அடுக்குமாடிக் குடியிருப்பில்தான் தி. ஜானகிராமன் குடியிருந்தார். அப்போது அவர் அகில இந்திய வானொலியில் அதிகாரியாக இருந்தார். அந்த கர்ஸன் ரோடு அலுவலகத்தில் நான் ஒரு ஆண்டு பணியாற்றினேன். ஒரே ஒரு நாள் வெங்கட் சாமிநாதனுடன் தி.ஜா.வின் வீட்டுக்குச் சென்றிருக்கிறேன். ஆனால் தி.ஜா.வுடன் ஒரு முறை கூட புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியதில்லை. மொபைல் ஃபோன் வரும் வரை புகைப்படம் எடுப்பதென்பது அவ்வளவு சுலபமானதாகவும் இல்லை. ஃபோட்டோ ஸ்டுடியோவுக்குத்தான் செல்ல வேண்டும்.
ஆனால் மொபைல் ஃபோன் வந்த பிறகும் கலைஞர்களின் புகைப்படங்களைப் பாதுகாக்க வேண்டும் என்று தமிழ்நாட்டில் யாருக்கும் தோன்றுவதில்லை. இது ஒரு ஃபிலிஸ்டைன் சமூகம். இது இப்படித்தான் இருக்கும். ஆனால் என் ஆச்சரியமும் வருத்தமும் என்னவென்றால், என் நெருங்கிய நண்பர்களே இந்த ஃபிலிஸ்டைன் சமூகத்தின் இந்தக் குறிப்பிட்ட குணாம்சத்தை வரித்துக்கொண்டவர்களாகவே இருக்கிறார்கள்.
புகைப்பட விஷயம் குறித்து முன்பே எழுதியிருந்தேன். பாரதிக்குக் கூட ஒரே ஒரு புகைப்படம்தான் இருக்கிறது என்று எழுதினால் ஒரு நண்பர், “இல்லை, ஆறு புகைப்படங்கள் இருக்கின்றன” என்று திருத்துகிறார். ஒன்றும் ஆறும் ஒன்றுதானே? புதுமைப்பித்தனுக்கும் இப்படித்தான் ஒன்றிரண்டு புகைப்படங்களே உள்ளன. இல்லை, நான்கு என்று எழுதாதீர்கள்.
ஒருமுறை ஒரு பத்திரிகையில் என் குடும்பப் புகைப்படம் கேட்டார்கள். நான், என் மனைவி, என் மகன், மருமகள் ஆகியதே என் குடும்பம். ஆனால் ஒரு புகைப்படம் கூட இல்லை.
நாங்கள் நண்பர்கள் நால்வர். என் மொழிபெயர்ப்பாளர், மற்றொரு மொழிபெயர்ப்பாளர், அவர் கணவர், நான். இரண்டு பெண்கள், இரண்டு ஆண்கள். அவ்வப்போது டின்னர் சாப்பிடச் செல்வோம். இவர்களுடன் எனக்கு ஒரு புகைப்படம் கூட இல்லை. இத்தனைக்கும் இவர்களில் ஒருவரோடு நான் ஒரு ஆங்கில நாவலை சேர்ந்து எழுதுகிறேன். இது பற்றி இவர்களுக்குக் கவலையும் இல்லை. டின்னர் முடிந்து வெளியே வரும்போது அங்கே இருக்கும் காவலாளியை விட்டுப் புகைப்படம் எடுப்போம். ஒரு தோழி தன் கணவனின் தோளில் சாய்ந்து கொள்வார். என்னதான் சாய்ந்தாலும் பாய்ந்தாலும் நாலு பேரும் நாலு குரங்கு மாதிரி இருக்கும் புகைப்படத்தில். ஒரு பத்து புகைப்படங்கள் இருக்கும். பத்து வெவ்வேறு ஓட்டல்கள். வெவ்வேறு இடங்கள். பத்திலுமே குரங்கு குசலா புகைப்படம்தான். இத்தனைக்கும் நாங்கள் நால்வருமே தேர்ந்தெடுத்த அழகர்கள். இருந்தும் அது எப்பிர்ரா இப்டி குரங்கு குசலா மாதிரியே எடுக்கிறீங்க? செக்யூரிட்டி என்ன பண்ணுவார்? என்னதான் ஐஃபோனைக் கொடுத்து எடுக்கச் சொன்னாலும் குரங்கு குசலாதான்.
இவர்களை விடுங்கள். என் நெருங்கிய நண்பர்கள் யாருடனும் எனக்கு புகைப்படங்கள் இல்லை. ராஜா, சீனி மட்டுமே விதிவிலக்கு.
புகைப்படம் என்றால் புகைப்படக் கலைஞருக்கு முன்னே நின்று ஈ என்று இளித்துக்கொண்டு ‘போஸ்’ கொடுப்பது அல்ல. அய்யப்ப மாதவன் என்னையும் என் நண்பர் ஒருவரையும் புகைப்படம் எடுத்தார். எங்களுக்குத் தெரியாமல். நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போது. அதுதான் எனக்குத் தெரிந்து என் வாழ்வின் அற்புதமான படம். இது தவிர புதுவை இளவேனில் இருபது ஆண்டுகளுக்கு முன்பு தனுஷ்கோடியில் வைத்து என்னை எடுத்த புகைப்படங்கள். புகைப்படக் கலையில் எனக்குத் தெரிந்து ஆகச் சிறந்தவர் பிரபு காளிதாஸ்.
இத்தனை இருந்தும் என் நண்பர்களோடு நான் இருக்கும் புகைப்படங்களே இல்லை. அது பற்றி எனக்குக் கவலையும் இல்லை. நான் மேலே கிளம்பி விட்டால் அவர்களுக்கு அது வருத்தத்தை ஏற்படுத்தலாம். அது கூட நிச்சயம் இல்லை. புகைப்படங்களின் முக்கியத்துவமே தெரியாதவர்களுக்கு எப்போது எப்படி வருத்தம் உண்டாகும்?
இதற்கெல்லாம் காரணம், தமிழர்களுக்கு வரலாற்று உணர்வு இல்லை. திருவள்ளுவருக்கு அவர் வாழ்ந்த காலத்தில் ஒரு சிலை கூட வடிக்கப்படவில்லை. சாலையில் சிலை வைப்பதைச் சொல்லவில்லை. நான் சொல்வது வேறு. ஒருவரின் உருவம் எப்படி இருந்தது என்பது பற்றிய அக்கறை நம்மிடம் இல்லை. என் எழுத்து மட்டுமே போதும் என்று நீங்கள் நினைத்தால் எனக்கு ஏதும் பிரச்சினை இல்லை. ஆனால் வரலாற்று உணர்வு இல்லாத தமிழ் ஃபிலிஸ்டைன் சமூகத்தின் பிரதிநிதியே நீங்களும் என்று உணர்ந்து கொள்ளுங்கள்.
இதை நான் புத்தக விழாவை முன்வைத்து எழுதவில்லை. ஒரு சில மாதங்களுக்கு முன்பே எழுத நினைத்திருந்தேன். நேரமில்லாததால் இப்போது எழுதுகிறேன்.
வேறு: இன்று சனிக்கிழமை மாலை நாலரை மணிக்கு புத்தக விழாவுக்கு வருவேன். ஸீரோ டிகிரி அரங்கு. எஃப் 19