ஓலைச்சுவடியும் எழுத்தாணியும் (குறுங்கதை)

அந்தக் காலத்தில் ஓலைச்சுவடியில் எழுத்தாணி கொண்டு கிறுக்குவார்களே அப்படிக் கிறுக்குகிறது என்னிடம் உள்ள பேனா.  புத்தகங்களில் கையெழுத்திடும்போது நரம்பெல்லாம் வலிக்கிறது.  என் சிநேகிதி ஒருவர் பத்து இருபது பேனா வைத்திருப்பார்.  வழவழவென்று வழுக்கிக்கொண்டு போகும்.  எனக்கு பேனா தேவைப்படும்போதெல்லாம் அவரிடமிருந்து ஒன்றை வாங்கிக் கொள்வேன்.  ஆனால் ஒரு கட்டத்தில் அவர் “என் வாழ்வில் அதிக துயரத்தைக் கொடுத்தவர் நீங்கள்தான்” என்று சொன்னதால் அவரிடமிருந்து ஒதுங்கிக் கொண்டேன்.  ஆனால் என்னோடு சிநேகமாக இருந்த எல்லா பெண்களுமே அந்த வார்த்தைகளைச் சொல்லியிருந்ததால் அதைக் கேட்டு ஆச்சரியம் ஏற்படவில்லை. 

ஸீரோ டிகிரி அரங்கில் வைத்து நேற்று என் புத்தகங்களில் கையெழுத்திட்டுக் கொண்டிருந்த போது என் எழுத்தாணி பேனாவினால் மிகவும் சிரமப்பட்டேன்.  பிறகு ஒரு யோசனை வர, மற்றவர்களிடமிருந்து பேனாவை வாங்கிக் கையெழுத்திட்டால் அவர்களின் பேனா என் எழுத்தாணியை விடக் கொடுமையாகக் கீறின.  என் எக்ஸ் சிநேகிதியும் அந்தப் புத்தக அரங்கில் வந்து புத்தகங்களைப் பார்த்துக் கொண்டிருக்கக் கண்டேன்.  அவர் கரங்களில் அதே வழவழ பேனா.  அவர் கைப்பையில் வழக்கம்போல் பத்து இருபது பேனா இருக்கும், நிச்சயம்.   பழைய வழக்கப்படி ஒன்று கேட்கலாமா என ஒருக்கணம் யோசித்தேன்.  பிறகு அந்தத் துயர வசனம் ஞாபகம் வந்தது.  ஏற்கனவே இருக்கும் துயரக்கணக்கில் இந்தப் பேனா துயரமும் சேர்ந்து விடக் கூடாது என்று மனதை அடக்கிக் கொண்டு எழுத்தாணி பேனாக்களின் மூலமாகவே கையெழுத்திட்டேன்.

பிறகு உயிர்மை அரங்கு சென்றேன்.  அங்கேயும் சில வாசகர்கள் கையெழுத்துக்குப் புத்தகங்களைக் கொடுத்தார்கள்.  மனுஷிடம் பேனா கேட்டேன்.  என்ன ஆச்சரியம், அவரும் அந்த வழவழ பேனாவையே கொடுத்தார். 

திரும்பி ஸீரோ டிகிரி அரங்கமே வந்தேன்.  செல்வா இருந்தார்.  அவரிடம் அந்த வழவழா பேனா பற்றிக் குறிப்பிட்டேன்.  அதன் பிராண்ட் பெயர் மறந்து விட்டது.  வழவழா என்று வழுக்கிக்கொண்டு எழுதும் என்றேன்.  அப்போது அங்கே அமர்ந்திருந்த செல்வேந்திரன் தன் பாக்கெட்டிலிருந்த பேனாவை எடுத்து அதன் பெயர் யூனிபால் என்றார்.  ஆ, இதேதான். 

இன்று வாங்கி வருவதாகச் சொன்னார் செல்வா. 

அதெல்லாம் இருக்கட்டும், நீயே போய் வாங்கிக் கொள்ளேன் என்றுதானே கேட்கிறீர்கள்?  அதுதான் சாத்தியமே இல்லை.  ஏனென்றால், நான் கடைக்கே போனதில்லை.  அதிலும் பேனாக் கடையெல்லாம் கனவில் கூட காண முடியாதது. 

இன்று செல்வா அந்த யூனிபால் பேனாவை மறக்காமல் வாங்கி வருவாரா, வராவிட்டால் என்ன செய்யலாம் என்ற சம்சயத்தில் இருக்கிறேன்.   கடவுள் இருக்கிறாரா, பார்ப்போம்.