நேற்று ஜெயமோகனின் இணைய தளத்தில் தனக்கு வந்த சில கடிதங்களை வெளியிட்டு அது பற்றித் தனது கருத்துகளை எழுதியிருக்கிறார் ஜெ. அவசியம் வாசிக்க வேண்டிய கட்டுரை அது. அதில் வந்துள்ள கடிதங்களின் ஒருசில பகுதிகளை இங்கே தருகிறேன். இந்தப் பிரச்சினை குறித்து என்னுடைய தீவிரமான செயல்பாடுகள் அனைத்துக்கும் காரணம், எந்தத் தனிப்பட்ட நபரின் மீதான காழ்ப்புணர்ச்சி இல்லை. இது பற்றி நான் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக எழுதி வருகிறேன். ஆனால் பதிப்பாளர்கள் யாருமே இதைக் கண்டுகொள்ளவே இல்லை. இப்போது இது பூதாகாரமாய் வந்து நிற்கிறது. எதிர் பதிப்பகம் வெளியிடும் பெரும்பாலான மொழிபெயர்ப்புகள் குறித்தும் நான் பெயர் குறிப்பிட்டே எழுதியிருக்கிறேன். ஆனால் பதிப்பாளர் அது பற்றிக் கவலையே படவில்லை. இப்போது ரோஜாவின் பெயர் என்ற முழு மோசடி. இதில் முக்கியமாக பாதிக்கப்பட்டிருப்பவர் பதிப்பாளர். அடுத்து, அந்த நூலை 899 ரூ. கொடுத்து வாங்கியவர்கள். காலச்சுவடு பதிப்பகத்தில் இது போன்ற விபத்துகள் நேர்வதே இல்லை என்பதை கவனியுங்கள். பதிப்பகம் என்பது அச்சாஃபீஸ் அல்ல என்பதை ஒவ்வொரு பதிப்பகமும் இனியாவது புரிந்து கொள்ள வேண்டும். ஒரு ஆண்டில் நூறு புத்தகங்கள் வெளியிடுவதை விட புத்தகங்களைத் தவறு இல்லாமல் வெளியிடுவதுதான் ஒரு நல்ல பதிப்பகத்துக்கு அழகு. பாக்கெட் நாவல் அசோகனை உங்கள் எல்லோருக்கும் தெரியும். அவர் ஸீரோ டிகிரி நாவலை பத்து ரூபாய்க்கு வெளியிட்டார். 25000 பிரதிகள். அந்த நூலை எடுத்துப் பாருங்கள். ஒரு பிழை கூட இருக்காது. மூல நூலிலிருந்து ஒரு இடத்தில் கூட மாறியிருக்காது. இது எப்படி சாத்தியமாயிற்று?
இனி ஜெயமோகன் தளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் கடிதத்திலிருந்து ஒரு பகுதி:
”எம்.டி.எம். செய்துள்ளது ஏ.ஐ. மொழியாக்கம். டீப்சீக் செயலி 80 விழுக்காடு. 20 சதவீதம் குரோக். அதை கொஞ்சம் தொழில்நுட்பம் தெரிந்த எவரும் பத்து பக்கம் இணையத்தில் போட்டாலே கண்டுபிடித்துவிடலாம். ஆனால் அந்த ஏ.ஐ. செய்த மொழிக்குளறுபடியை படித்துப்பார்த்து புரிந்துகொள்ளக்கூட இந்தப் பேராசிரியருக்கு அடிப்படை ஆங்கிலம் தெரியவில்லை. இன்னொரு முறை படித்துத் திருத்தியிருந்தாலே பெரும்பகுதி பிழைகளை சரிசெய்திருக்கலாம். இவர் மொழியே தெரியாமல் பெரும்பாலும் அகராதியைத்தான் பார்த்திருக்கிறார். ஆங்கில மொழியில் உள்ள சொல்வழக்கு என்ன என்பது தெரியவில்லை. அவரது அடிப்படை ஆங்கில அறிவு மிக மட்டம். ஆங்கிலஞானம் வழக்கமான இணையப் பாவலாதான்.
சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் (எம்.டி.எம்.) இசை பற்றி நிறைய கட்டுரைகளை இணையத்தில் எழுதினார். எல்லா கட்டுரைகளும் பழைய சுருதி இசை இதழில் வேறு நிபுணர்கள் எழுதியவற்றை அப்பட்டமாக நகல்செய்தவை. அதை லலிதா ராம் என்னும் ஆய்வாளர் இணையத்திலேயே பக்கம் பக்கமாக எடுத்துப்போட்டு தொடர் கட்டுரைகள் எழுதினார். முதலில் இவர் அதை பிராமணச் சதி என்றார். பிறகு அது பின்நவீனத்துவ எழுத்துமுறை உனக்கெல்லாம் புரியாது என்றார். அதன்பிறகு அப்படியே காணாமலானார். பிறகு ஒரு வருடம் கழித்துத் திரும்பி வந்தார். லலிதாராம் எழுதிய கட்டுரைகள் அப்படியே இணையத்தில் உள்ளன.”
”இதேபோல ஒரு ஏ.ஐ. மொழியாக்கம் முஜிபுர் ரஹ்மான் என்ற பேராசிரியர் செய்த கர்ஸியா மார்க்யூஸின் காலரா காலத்துக் காதல். அவரும் பிறர் எழுதிய ஏராளமான கட்டுரைகளைத் திருடி தன் பெயரில் போட்டுக்கொண்டார். கேட்டால் அது பின்நவீனத்துவம் என்றார். இவர்கள் இந்த இலக்கியத் திருட்டை இனி ஏ.ஐ. உதவியுடன் மாற்றியமைத்து வெளியிட முடியும். ஏ.ஐ. இதை அடையாளம் தெரியாமல் மாற்றித் தந்துவிடும். நடையே மாறியிருக்கும். அதை ஏ.ஐ. நிபுணர் கண்டுபிடிக்கலாம். ஏ.ஐ. செயலியும் கண்டுபிடிக்கலாம். சாமானியர் கண்டுபிடிக்கமுடியாது.
இவர்களுக்கு வெட்கம் கூச்சம் எதுவுமே கிடையாது. இவர்கள் எழுதும் கட்டுரைகள் திருட்டு. மொழியாக்கத்தில் மோசடி. இந்தியாவில் இதையெல்லாம் செய்தே பெரிய பெரிய இடங்களுக்குப் போக முடியும். உருப்படியாக படிப்பவனும் எழுதுபவனும் எல்லாரும் இங்கே முட்டாள்கள். இதுதான் சூழல். இவர்களுக்குப் பலர் ஆதரவு. இன்னார் எதிர்த்தால் நான் ஆதரிப்பேன் என்பது மட்டும்தான் இங்கே ஃபார்முலா. வெட்கக்கேடு.
ஆர்.ராமகிருஷ்ணன்
ஜெயமோகனின் முழுக்கட்டுரைக்கு:
இயந்திர மொழியாக்கம், இனிவரும் சவால்கள்.. | எழுத்தாளர் ஜெயமோகன்