சில நல்ல மொழிபெயர்ப்பாளர்கள்

இலக்கியமும் அதிகாரமும் என்ற கட்டுரையைப் படித்து விட்டு இந்தக் கட்டுரையைப் படியுங்கள்.

இதற்கு முன்பு ஒருமுறை “மொழிபெயர்ப்புகளை முற்றாகப் புறக்கணியுங்கள்” என்று நான் எழுதியிருந்ததை அதன் சரியான அர்த்தத்தில் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.  ஊம்பர்ட்டோ எக்கோவின் ரோஜாவின் பெயர் நூலை நீங்கள் ஆங்கிலத்திலேயே படிக்கலாம். 

நீங்கள் நீண்ட காலமாகப் படிக்க வேண்டும் என்று நினைத்துப் படிக்காமல் இருந்த ஒரு புத்தகம் தமிழில் வந்தால் அதை உடனடியாகப் படிக்க வேண்டும் என்று தோன்றுவது இயல்புதான். ஆனால் அந்த நூலில் பத்து பக்கமாவது படித்துப் பாருங்கள். பிறகே முடிவு செய்யுங்கள். ஏனென்றால், இந்த மொழிபெயர்ப்புத் துறையில் ஏகப்பட்ட போலிகள் உலவுவதால் இப்படி கவனமாக இருக்க வேண்டியிருக்கிறது. இதில் முதல் பலி, பதிப்பகத்தார்தான்.

இதையெல்லாம் தாண்டி, சில நல்ல மொழிபெயர்ப்பாளர்கள் நம்மிடையே உண்டு.  ஜி. குப்புசாமி அவர்களில் ஒருவர்.

அடுத்து, கார்த்திகைப் பாண்டியன். அவர் ஒரு நல்ல மொழிபெயர்ப்பாளர்.

ரிஷான் ஷெரீஃப்.  இவர்தான் இன்றைய தமிழின் ஆகச் சிறந்த மொழிபெயர்ப்பாளர்.  இவரிடம் தமிழ் விளையாடுகிறது.  இத்தனை சிறந்த தமிழை இன்றைய இளைஞர்களிடம் நான் கண்டதே இல்லை.  இவர் மொழிக்கு நான் அடிமை.

ரியாஸ் முஹம்மது: இவரைப் போல் மொழிபெயர்ப்புக்கு சிரத்தை எடுத்துக் கொள்ளும் ஒரு மனிதன் இந்த உலகிலேயே இருக்க முடியாது என்று நினைக்கிறேன்.  அப்படி ஒரு மொழிபெயர்ப்பாளர். 

என் நண்பர் ரமேஷ் கல்யாண் ஃபேஸ்புக்கில் எழுதியிருப்பதைப் பார்த்து யசோதரா என்ற புதினத்தை வாங்கினேன். தெலுங்கு மூலம் வோல்கா. தமிழில் நாகலட்சுமி சண்முகம். பிரமாதமான மொழிபெயர்ப்பு.

பெருந்தேவியின் மொழிபெயர்ப்பும் அற்புதமாக இருக்கும். அக்காமகாதேவியின் பாடல்களை பெருந்தேவி மொழிபெயர்த்திருக்கிறார். திரும்பத் திரும்ப அதை வாசித்துக்கொண்டிருக்கிறேன்.

இது தவிர கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து இந்த மூன்று மொழிகளுக்கும் இடையே பல அருமையான மொழிபெயர்ப்புப் பணிகள் நடந்து வருகின்றன. பலவற்றைப் படித்திருக்கிறேன். நிறைவாக இருந்தது. ஒரு குறையில்லை.

இப்போது காயத்ரி ஆர்.  ஒரு துருக்கிய நாவலைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.  என் மாணவி என்பதில் எனக்குப் பெருமை.  ஆனால் என் மாணவர்களுக்கு நான் முதலில் போதிப்பது எனக்கு நன்றிக் கடன் படாதீர்கள் என்பதுதான்.  (ஸ்ரீயிடம் இதை நூறு முறையாவது சொல்லியிருப்பேன்)  ஏறி வந்த ஏணியை எட்டி உதையுங்கள்.  கவலையே வேண்டாம்.  நீங்கள் ஏறி வந்த ஏணியிடம் குருபக்தி பாராட்ட வேண்டிய அவசியமே இல்லை. 

இருந்தாலும் ஆச்சரியமாக இருந்தது.  என் மகனின் திருமணச் செய்தியை நான் ஃபேஸ்புக்கில் பார்த்துத் தெரிந்து கொண்டால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது.  ஆறு மாதங்களாக காயத்ரியோடு என் புத்தகங்களைப் பதிப்பது குறித்துத் தொடர்பில் இருக்கிறேன்.  அந்தத் துருக்கி நாவலை மொழிபெயர்க்க எப்படியும் ஆறு மாதங்கள் ஆகியிருக்கும்.  ஆனாலும் எனக்கு அந்தச் செய்தியை காயத்ரி சொல்லவே இல்லை என்பது ஆச்சரியம் தருகிறது.  அப்படி என்ன அது ராணுவ ரகசியமா?  சொல்லாததற்கு அவருக்கு நியாயமான காரணங்கள் இருக்கும்.  அப்படித்தான் எப்போதுமே நடந்திருக்கிறது. 

காயத்ரி என் மாணவி என்பதால் சொல்லவில்லை.  காயத்ரியின் மொழிபெயர்ப்பும் அருமையானது.  நம்பி வாங்கலாம்.  ஏற்கனவே அவரது மொழிபெயர்ப்பு பற்றி சிலாகித்து எழுதியிருக்கிறேன். இது அவரது மூன்றாவது மொழிபெயர்ப்பு நூல் என்று நினைக்கிறேன்.  அல்லது, நான்காவதோ?

ஏதோ நான்தான் ஸீரோ டிகிரி பதிப்பகத்தின் பிரதான எழுத்தாளன் மாதிரி ஊரில் பேசிக்கொள்கிறார்கள் என்று அறிந்தேன். ஸீரோ டிகிரி பதிப்பகத்திலிருந்து வெளிவந்த என்னுடைய  சொர்க்கம் கவிதைத் தொகுதி நூறு பிரதி விற்றிருக்கிறது.  இதுதான் எதார்த்தம்.

என் மாணவியான காயத்ரி மொழிபெயர்த்த துருக்கிய நாவல் வெளிவந்திருக்கும் செய்தியை நான் ஃபேஸ்புக்கில் பார்த்துத்தான் தெரிந்து கொள்கிறேன்.  சொல்லப் போனால் ஹார்ப்பர் காலின்ஸோடு எனக்கு இன்னும் அதிகத் தொடர்பு இருப்பது போல் தெரிகிறது.  ஜெய்ப்பூர் இலக்கிய விழாவின் அமைப்பாளர்கள் இருவர்.  அதில் ஒருவர் சஞ்ஜய் ராய்.  என் நண்பர்.  தன்னுடைய நூல் ஒன்று வருவதாக நேற்று இரவு எட்டு மணிக்கு மெஸேஜ் அனுப்பினார்.  There’s a ghost in my room.  நினைவுக் குறிப்புகள். இரண்டு பிரதிகளுக்கு முன்பதிவு செய்து விட்டு அதை சஞ்சய்க்குத் தெரிவித்தேன்.  நன்றி கூறி அவர் பதில் அனுப்பினார் நள்ளிரவு இரண்டே முக்கால் மணிக்கு.  அதேபோல் ஹார்ப்பர் காலின்ஸ் பதிப்பகமும் நேற்று மாலை சஞ்சய் ராய் நூல் பற்றி எனக்குத் தகவல் அனுப்பியது.  அப்படிப்பட்ட தகவல் பரிமாற்றம் கூட எனக்கும் ஸீரோ டிகிரிக்கும், எனக்கும் என் மாணவி காயத்ரிக்கும் இல்லை என்பதைத் தெரிவிக்கவே இத்தனை விவரமாக எழுதுகிறேன். 

ஆனாலும் இதில் எனக்கு வருத்தமில்லை.  ஆச்சரியம் மட்டுமே. 

இந்த நிறைவு உணர்வுக்குக் காரணம், எனக்கு இந்த வாழ்வில் கிடைத்தது ஏழு ஜென்மாவுக்கும் போதும் என்பதை அறிந்து கொண்டதுதான்.  உதாரணமாக, இலங்கையின் சிங்கள எழுத்தாளன் கேகே இங்கே வாழ்ந்த தர்மு சிவராமு போன்றவர்.  யாரையுமே பாராட்ட மாட்டார்.  அவர் என்னை இந்தியாவின் ஜேம்ஸ் ஜாய்ஸ் என்று பல பத்திரிகைகளில் பேட்டி கொடுத்தார்.  ஜமைக்காவிலிருந்து ஒரு பெண்கவி அதே வார்த்தைகளைச் சொல்கிறார். இத்தனைக்கும் பெருமாள் முருகன், ஜெயமோகன் போன்றவர்களோடு ஒப்பிட்டால் நான்தான் ஆங்கிலத்தில் கம்மியாகச் சென்றவன். 

இப்படி இது விஷயமாக இன்னும் பெரிய பட்டியலே போடலாம். 

இறுதியாக எனக்குக் கிடைத்த மிகப் பெரிய பரிசு, ஸ்ரீ.  ஸ்ரீயின் ஆங்கிலம்.  அவளும் நானும் சேர்ந்து எழுதிய அனாடமி ஆஃப் டிஸனன்ஸின் இருபத்தைந்து பக்கங்களைப் படித்த ஆங்கில எழுத்தாளர்கள் சிலர் “இப்படி ஒரு உரைநடையை இந்தியாவில் மிக சொற்பமாகவே படித்திருக்கிறோம்” என்றார்கள்.  அந்த வகையில் ஸ்ரீயின் ஆங்கிலம் தருண் தேஜ்பால், சஷி தரூர் போன்றவர்களின் ஆங்கிலத்துக்கு இணையானதாக இருக்கிறது. உலக இலக்கியத்தில் நன்கு பரிச்சயம் கொண்ட ஒரு நண்பர் இந்த ஆங்கிலம் சாமுவெல் பெக்கட்டின் ஆங்கிலம் போல் இருப்பதாகக் கூறினார்.  எங்கிருந்து கற்றாள் என்று புரியவில்லை.  கேட்டால், நீங்கள் எப்படி எழுத்தைக் கற்றீர்கள் என்கிறாள். தமிழ் மீடியம்.  படித்தது பன்னிரண்டாம் வகுப்பு.  கல்லூரிக்குக் கூட போகவில்லை.  விரைவில் அனாடமி ஆஃப் டிஸனன்ஸோடு வந்து இந்திய ஆங்கில எழுத்து உலகைக் கலக்குவோம்.