மன்னிப்பு

இந்த உலகிலேயே அதிக முறை மன்னிப்பு கேட்ட மனிதன் நானாகத்தான் இருக்க முடியும். அநேகமாக தினமுமே ஒருவரிடம் மன்னிப்புக் கேட்கிறேன். பெரும்பாலும் பெண்களிடம். இப்போது ஒன் ஆன் ஒன் என்ற கொடூரமான நிலைமைக்கு வந்து விட்டதால் ஒருத்தரிடம் மட்டுமே மன்னிப்புப் படலம் ஓடுகிறது. என் கவிதைகள் அனைத்துமே மன்னிப்புக் கவிதைகள் என்று சொல்லி விடலாம். மனைவியிடம் கேட்ட மன்னிப்புக்கு நட்சத்திரங்களை எண்ணி விடலாம்.

முந்தா நேற்று கூடப் பாருங்கள், எங்கோ ஒரு மேடையில் போகன் சங்கரின் கதை ஒன்றை ஃபாஸிஸ்ட் கதை என்று சொல்லித் தொலைத்து விட்டேன். எந்தக் கதை, ஏன் சொன்னேன் எல்லாம் மறந்து விட்டது. ஆனால் கேட்டவருக்கு மறக்குமா? சமயம் கிடைத்ததும் சொருகினார். கத்தி என்னுடையதுதானே? வேறென்ன செய்வது? மன்னிப்புக் கேட்டேன். அதற்கு ஒரு கவிதை எழுதினேன்.

இத்தனை மன்னிப்பு கேட்பதால் நான் ஒன்றும் மன்னிப்பை சல்லிசாக நினைக்கும் பேர்வழி அல்ல. ஒவ்வொரு முறை மன்னிப்பு கேட்கும் போதும் இதயம் நடுங்கும். எல்லோரும் மன்னிப்பு கேட்டு விடுவதில்லை. நைஸாக அப்படி ஒரு தவறே நடக்காதது போல் ஒதுங்கி விடுவார்கள். ஆனால் நானோ ஒருமுறை மன்னிப்பு கேட்டால் எந்தத் தவறுக்காக மன்னிப்பு கேட்டேனோ அந்தத் தவறை மீண்டும் செய்யவே மாட்டேன். ஆனாலும் தினந்தோறும் மன்னிப்பு கேட்கிறேன் என்றால் என்ன அர்த்தம்? புதிது புதிதாக தவறுகளைக் கண்டு பிடித்துக் கொண்டே இருக்கிறேன். அதன் பொருட்டு முடிவேயில்லாமல் மன்னிப்பு கேட்டுக்கொண்டே இருக்கிறேன்.

ஒருமுறை சஞ்ஜனா என்னிடம் “எனக்குக் கேள்வி கேட்டால் பிடிக்காது” என்றாள். அப்போதிருந்து அவளிடம் கேள்வி கேட்பதையே நிறுத்தி விட்டேன். ஆனால் அவள் ஆயிரத்தெட்டு கேள்வி கேட்பாள். எல்லாவற்றுக்கும் பொறுமையாக, “பதில் தெரியவில்லையே?” என்பேன். உண்மையிலேயே பதில் தெரியாது. இந்த பதில் எனக்குப் பிடிக்காது என்பாள். நீ விருப்பப்படும் பதில் என்னிடம் இல்லையே? பெண்களை நாம் மனித இனத்தில் வைத்தாலும் அவர்கள் செவ்வாய் கிரகத்து ஜீவிகள் என்று நான் நினைப்பதற்கு சஞ்ஜனாவும் ஒரு சமீபத்திய உதாரணம். எதற்குச் சொல்கிறேன் என்றால், எதற்காக மன்னிப்பு கேட்கிறேனோ அந்தத் தவறை மீண்டும் செய்வதில்லை.

இன்றைய மன்னிப்பு ஜி. குப்புசாமியிடம். மன்னித்து விடுங்கள் குப்புசாமி. உங்களைப் புண்படுத்தி விட்டேன். எப்போதோ நீங்கள் எழுதியது என் மனதில் ஒரு காயமாகப் பதிந்து விட்டது. அது என்ன விஷயம் என்று கூட எனக்கு மறந்து விட்டது. ஆனால் அப்போது உங்கள் மீது மிகுந்த வருத்தமும் கோபமும் உண்டானது. அதை இனி மறந்து விடுகிறேன்.

குப்புசாமியிடமிருந்து இன்று வந்த வாட்ஸப் செய்தி இது:

வணக்கம் சாரு. உங்கள் பதிவைப் படித்தேன் (சில நல்ல மொழிபெயர்ப்பாளர்கள்). என் மொழிபெயர்ப்பை தொடர்ந்து பாராட்டி வருபவர் நீங்கள். அதற்காக எப்போதும் உங்களுக்கு நன்றி சொல்வேன். ஆனால் உங்களை நான் திட்டி வருவதாக எழுதியிருக்கிறீர்கள்? எங்கே எழுதியிருக்கிறேன் என்று சொல்ல முடியுமா? ரேமண்ட் கார்வரின் சிறுகதை விஷயத்தில் உங்களுக்கு சில விளக்கங்கள் கொடுத்தேன். அதை நீங்கள்தான் சரியாக எடுத்துக் கொள்ளாமல் கோபித்துக் கொண்டீர்கள். அதன் பிறகு உங்கள் பெயரை எந்த மேடையிலும் குறிப்பிட்டு பேசியதில்லை எழுதியதில்லை.
மேலும் எஜமான விசுவாசம் பற்றி சொல்லியிருக்கிறீர்கள். யாரும் என்னுடைய எஜமானர் கிடையாது, நானும் யாருடைய ஊழியனும் அல்ல. காலச்சுவடு பதிப்பகம் பற்றித்தான் சொல்கிறீர்கள் என்று தெரிகிறது. நான் மொழிபெயர்ப்பாளன். நான் விரும்பும் நூல்களுக்கு முறையான உரிமை பெற்று மொழிபெயர்க்க காலச்சுவடு தருகிறது. எனக்கு உரிய மரியாதை அளிக்கும் நிறுவனம் காலச்சுவடு. எங்களிடையே இருப்பது professional relationship. மேலும் சமீபத்தில் நான் சாகித்திய அகாதமி & பொள்ளாச்சி அருட்செல்வர் மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் ஆகிய இரண்டு பதிப்பகங்கள் மூலம் எனது மொழிபெயர்ப்பு நூல்கள் வெளிவருகின்றன. இவை தவிர வேறு பல பதிப்பகங்களிலும் எனது மொழிபெயர்ப்புகள் வந்துள்ளன. வம்சி பதிப்பகம் வெளியிட்ட முரகாமி சிறுகதைகளை நீங்கள்தான் சென்னை புத்தகத் திருவிழாவில் வெளியிட்டீர்கள். நினைவிருக்கும் என்று நினைக்கிறேன்.

ஜி. குப்புசாமி

***

நாளை யாரையும் புண்படுத்தி விடாதபடி என் வாயையும் கையையும் மூடிக்கொண்டிருக்க வேண்டுமென பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

மன்னிப்பு பற்றி யோசிக்கும்போது ஒரு முக்கியமான விஷயம் ஞாபகம் வருகிறது. என் வயது எழுபத்து மூன்று. இருபத்தைந்து வயது வரை என் பெற்றோரின் உபசரிப்பில் ஒரு பேரரசனைப் போல் வாழ்ந்தேன். அதுவரை நான் யாரிடமும் மன்னிப்பு கேட்டதில்லை. ஆனால் பெற்றோரைப் பிரிந்து சமூகத்திடமும் பெண்களிடமும் வந்து விழுந்ததிலிருந்து தினமுமே மன்னிப்புதான்.

இன்னொரு அதி முக்கிய விஷயம் என்னவென்றால், இதுவரை பெண்ணோ ஆணோ யாருமே என்னிடம் மன்னிப்பு கேட்டதில்லை. உண்மைதான் சொல்கிறேன். என்னை ங்கோத்தா என்று திட்டிய என் மகன் கூட மன்னிப்பு கேட்டதில்லை. ஸாரி கூட சொல்லவில்லை. ஆனால் வேறு சிலர் – குறிப்பாக பெண்கள் – எப்போதாவது அத்திப் பூத்தாற்போல் போனால் போகிறதென்று ஒரு ஸாரியை விட்டெறிவார்கள். அது கூட ஏதோ பிச்சை போடுவது போல்தான் இருக்கும். உனக்கெல்லாம் ஸாரி சொல்லும் நிலைமை வந்து விட்டது பார் என்ற தொனியும் தொக்கி நிற்கும். ஆனால் ஒருபோதும் மன்னிப்பு என்ற வார்த்தையை யாருமே என்னிடம் சொன்னதில்லை.

இதிலிருந்து தெரியும் உண்மை யாது?

நான் பழகும் அத்தனை பேருமே மகாத்மாக்கள். தவறே செய்யாதவர்கள். மகாத்மாக்கள் எப்படித் தவறு செய்ய முடியும்? அதனாலேதான் இதுவரை என்னிடம் யாரும் மன்னிப்புக் கேட்டதில்லை. இனிமேலும் அப்படி நடக்கப் போவதில்லை. ஏனென்றால், நான் தொடர்ந்து மகாத்மாக்களோடுதான் பழகி வருகிறேன். ஒரு உதாரணம் தருகிறேன். என் மாணவி ஒருவரின் புதிய நூல் வந்துள்ளது. அதை நான் ஃபேஸ்புக் மூலம்தான் தெரிந்து கொண்டேன். ஆச்சரியமடைந்தேன். எழுதினேன். இப்போது அவர் என்னோடு பேசினால் அவர் என்னிடம் தெரிவிக்காததுதான் சரியான செயல் என்று அவரை விட உறுதியாகச் சொல்ல அரம்பிப்பேன் நான். பிறகு நான் பொதுவெளியில் இது குறித்து எழுதி ஆச்சரியப்பட்டதற்காக அவரிடம் மன்னிப்பும் கேட்டுக் கொண்டு அந்தப் பதிவுகளையும் என் ப்ளாகிலிருந்து நீக்கி விடுவேன். பாருங்கள், இந்த மன்னிப்பு என்ற விஷயம் சுழன்று சுழன்று என்னிடமே வந்து சேர்கிறது. ஆனால் அவர் என்னைத் தொடர்பு கொள்ளாததால் எனக்கு ஒரு மன்னிப்பு மிச்சம்; அதோடு மன்னிப்பு கேட்பதால் உண்டாகும் கண்ணீர்த் துளிகளுக்கும் வேலையில்லை.

***

ஒரு நண்பர் ஃபோனில் அழைத்தார். நான் நேற்று எழுதியதில் இருந்த பயங்கரமான ஒரு முரணைக் காண்பித்தார். படு மோசமான, மோசடியான மொழிபெயர்ப்பை ஆரம்பித்து வைத்தவரே சுகுமாரன். அவருடைய மொழிபெயர்ப்புகளை வெளியிட்ட பதிப்பகம்தான் மொழிபெயர்ப்பில் தவறே செய்யாமல் செவ்வனே இயங்குகிறது என்று எழுதியிருக்கிறேன். அந்தப் பதிப்பகம்தான் இந்தக் கோளாறுகள் அத்தனைக்கும் அடிக்கல் நாட்டியது.

நான் என்ன எழுதியிருக்க வேண்டும் என்றால், க்ரியா பதிப்பகம்தான் மொழிபெயர்ப்பில் முன்னுதாரணமாகவும் சிறப்பாகவும் விளங்கியது. வெ. ஸ்ரீராம் மொழிபெயர்த்த நாவல்களே சான்று. குறிப்பாக அந்நியன். மொழிபெயர்க்கப்பட்ட நூலை வைத்துக்கொண்டு ராமகிருஷ்ணன் இரண்டு ஆண்டுகள் அதைச் சீர்திருத்தும் பணியில் ஈடுபடுவார். அந்த நேர்மையும் உழைப்பும் இப்போது எங்கோ காணாமல் போய் விட்டது. இப்போதைய காலம் இலக்கிய லும்பன்களின் காலம்.

***

இப்போதெல்லாம் நன்கொடை/சந்தா எதுவும் வருவதில்லை. அனுப்பும் ஒரு சிலர் பெயர் போன்ற எந்த விவரமும் தருவதில்லை என்பதால் அவர்களை நவம்பர் 8 ஐரோப்பியத் திரைப்பட நிகழ்ச்சியில் சேர்க்க இயலவில்லை. அனுப்பினால் சேர்க்க முடியும். நேரில் வர இயலவில்லை என்றாலும், நிகழ்ச்சித் தொகுப்பை அனுப்பி வைக்க முடியும்.

ஜி.பே. செய்வதற்கான தொலைபேசி எண்: 92457 35566

பெயர்: ராஜா (ராஜா தான் என் அட்மின். எனவே குழப்பம் வேண்டாம்.)

வங்கி மூலமாக அனுப்புவதாக இருந்தால் அதற்கான விவரம்:

UPI ID: charunivedita@axisbank

K. ARIVAZHAGAN
Axis Bank Account No. 911010057338057
Dr Radhakrishnan Road, Mylapore
IFSC No. UTIB0000006

பெயரில் உள்ள K என்பதன் விரிவு Krishnasamy.

ஆக்ஸிஸில் அனுப்ப முடியாவிட்டால் என் ஐசிஐசிஐ கணக்கு விபரம் கீழே:

K. ARIVAZHAGAN
ICICI a/c no. 602601 505045
MICR Code: 600229065
IFS Code ICIC0006604
T. NAGAR BRANCH Chennai