டியர் சாரு,
தளம் வாசித்தேன்.
எம்.டி.எம். மொழியாக்க சர்ச்சையில் மிக முக்கியான ஒன்று எது என்றால், நான்கு ஐந்து எழுத்தாளர்கள் அந்த நூலை வாசித்ததாகவும் தன்னால் “இயல்பாக” வாசிக்க முடிந்ததாகவும், சிரமமான சில இடங்களை இரண்டு முறை வாசித்தால் புரிந்து விடுகிறது என்றும் போட்டிருக்கும் பதிவுகள்.
மொழி சார்ந்த நுண்ணுணர்வு என்ற ஒன்றே கிஞ்சித்தும் இல்லாத ஒருவரால் மட்டுமே இப்படி ஒரு மொழிபெயர்ப்பை செய்ய முடியும்.
மொழிசார்ந்த நுண்ணுணர்வு கிஞ்சித்தும் இல்லாத ஒருவரே ”என்னால் சரளமாக வாசிக்க முடிந்தது, ஒரு பிரச்னையும் இல்லை” என்று சொல்லவும் முடியும்.
துர் அதிர்ஷ்ட வசமாக இப்படிச் சொல்லி இருப்பவர்கள் எழுத்தாளர்கள். மொழியோடு அதன் மேன்மை நோக்கிய செயல்பாடுகளோடு நேரடியாகத் தொடர்பு கொண்டவர்கள்.
பக்கத்துக்கு ஐந்து அர்த்தமற்ற சொற்றொடர் கொண்டு செய்யப்பட்ட முற்றிலும் அர்த்தமற்ற வெற்று மொழியாக்கம் அது.
உதாரணத்துக்கு நாவலின் முகப்புரை என்ற ஆறே ஆறு பக்க அத்தியாயத்தில் குவிந்து கிடக்கும் அர்த்தமற்ற சொற்றொடர்களில் சிலவற்றை கீழே தருகிறேன்…
”அது போப்பிற்கு அதிகமும் பிடிக்கவில்லை. அவர் ஒருவேளை அதில் ஒரு கொள்கையை கண்டறிந்தார். அது அவர், திருச்சபையின் தலைவராக, பேரரசின் ஆயர்களை தேர்ந்தெடுக்கும் உரிமையை மறுத்து, போப்பாண்டவர் சிம்மாசனத்திற்குப் பேரரசரை நியமிக்கும் உரிமை இருப்பதாக வலியுறுத்திய கோரிக்கைகளையே ஆபத்துக்குள்ளாக்குவதாகும்.”
“மெல்க் மடாலயத்தில் ஒரு இளம் பெனடிக்டைன் புதிய துறவியான நான் (என் தந்தையால், லூயிசின் தொடர் வண்டியில் போரிட்டு, அவரது பிரபுக்களிடையே கடைசியாக இல்லாதவர்) மடத்தின் அமைதியிலிருந்து அகற்றப்பட்ட போது இதுதான் நிலைமை.”
“இப்போதும் கூட நான் வயதாகி, அப்போது இருந்ததை விட புத்திசாலியாக இருக்கும் போது, ஆக்காமின் தனது நண்பர் மீது அவருக்கு இவ்வளவு நம்பிக்கை எப்படி இருக்க முடியும் என்பதையும், அதே நேரத்தில் அவர் வழக்கமாக செய்வதைப் போல, பேக்கனின் வார்த்தைகளில் சத்தியம் செய்ய முடியும் என்பதையும் நான் முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை.”
“அதை பேராசை கொண்ட ஆவியின் பேரார்வம் என்று நினைத்தேன். மாறாக பகுத்தறிவுள்ள ஆவி அத்தகைய பேரார்வத்தில் ஈடுபடக்கூடாது. ஆனால் உண்மையிலிருந்து மட்டுமே உணவளிக்கவேண்டும் என்று நம்பினேன்.”
”பின்னர் அவர் அதை ஒரு ஈர்க்கப்பட்ட தோற்றத்துடன் மெல்லுவார்.”
“ஆனால் அவருடைய கைகள் மிகவும் உடையக்கூடிய பொருட்களை தொட்டபோது கூட, புதிதாக ஒளியூட்டப்பட்ட சில குறியீடுகள் அல்லது காலத்தால் தேய்ந்துபோன புளிக்காத ரொட்டிபொல நொறுங்கக்கூடியதாக எனக்குத் தோன்றியது.”
இதையெல்லாம் சரளமாக வாசிக்க முடிகிறது. எனக்குப் புரிகிறது என்று எழுத்தாளர்கள் சொல்வதுதான் இன்றைய தமிழ் தீவிர இலக்கியத்தின் மிகச் சிறந்த நகைச்சுவை.
கடலூர் சீனு
***
நண்பர்களே,
ரோஜாவின் பெயர் என்ற நாவல் மொழிபெயர்ப்பு பற்றி ஏன் இத்தனை ஆவேசமாகத் தொடர்ந்து எழுதி வருகிறேன் என்றால், தமிழ் இலக்கியத்தை உலகத் தரத்துக்கு உயர்த்துவதற்காக எத்தனையோ எழுத்தாளர்கள் தங்கள் சொத்தையும், குடும்பத்தையும், மற்ற உடைமைகளையும் இழந்திருக்கிறார்கள். க.நா.சு. நினைத்திருந்தால் ஒரு ஆடிட்டர் ஜெனரல் மாதிரியான இந்தியாவின் மிகப் பெரிய ஒரு பதவிக்கு வந்திருக்க முடியும். வரவில்லை. கடைசி காலத்தில் பத்திரிகைகளுக்குப் பத்தி எழுதி எழுதி ஜீவனோபாயம் பண்ணினார். மணியார்டர் வந்து விட்டதா என்ற கேள்வியை அவர் ஒரு நாளில் எத்தனை முறை கேட்பார் என்று அவர் மனைவி எழுதியிருக்கிறார். சி.சு. செல்லப்பா தன் சொத்தையெல்லாம் விற்று பத்திரிகை நடத்தினார். நூற்றுக்கணக்கான உதாரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.
இவர்களெல்லாம் ஏன் இத்தனை தியாகங்களைச் செய்ய வேண்டும்? அப்படிச் செய்ததனால்தான் இன்று தமிழ் இலக்கியம் சர்வதேச இலக்கியத்துக்குப் போட்டி போடும் நிலையில் இருக்கிறது. தமிழ்நாடு என்றால் ரஜினி, கமல் என்று இருந்த நிலையை மாற்றி, “அங்கே இலக்கியத்தில் என்னதான்யா நடந்து கொண்டிருக்கிறது?” என்று மிரட்சியுடன் கேட்கிறார்கள் வட இந்தியர்கள்.
உரம் போட்டது பூராவும் எம் முன்னோர்.
ஆனால் நாம் என்ன செய்கிறோம் என்பதுதான் கேள்வி. இருபத்தைந்து ஆண்டுகளாக சர்வதேசப் பல்கலைக்கழகங்களில் குறியியல் பற்றிப் பாடம் நடத்தியும், ஃபோர்ட் ஃபவுண்டேஷனில் உயர் பதவியில் இருந்தும் லட்சக்கணக்கில் டாலரில் சம்பாதித்து விட்டு இங்கே தமிழ் இலக்கியம் என்ற தியாகிகள் கூட்டத்தில் எட்டிப் பார்த்து, இங்கேயும் பெயர் எடுக்க வேண்டும் என்ற பேராசை கொண்டு, இலக்கியத் தில்லுமுல்லு செய்தால் என்னைப் போன்ற ஒருத்தன் கோபப்படுவானா, இல்லையா? லௌகீகத்தில் நீங்கள் வாழ்வாங்கு வாழ்வது பற்றி யாருக்கு என்ன பிரச்சினை? க்ஷேமமாக இருங்கள். ஆனால் ஏன் இந்தப் பிச்சைக்காரக் கூட்டத்தில் வந்து தில்லுமுல்லு செய்கிறீர்கள் என்பதே என் கேள்வி.
என்னுடைய வன்மம் பற்றிப் பேசுகிறார் எம்.டி.எம். எனக்கு அவர் மீது ஏன் வன்மம் வர வேண்டும்? அதற்கு ஏதாவது முகாந்திரம் உண்டா? அவர் என்னைப் பற்றி நல்லதாகவோ கெட்டதாகவோ எதுவும் எழுதியதில்லை. அவர் நான் எழுதிய நூல்களைப் படித்ததும் இல்லை. சமீபத்தில்கூட ஒரு சந்திப்பில் என் கவிதைகள் பற்றி நான் குறிப்பிட்ட போது “அட, கவிதை கூட எழுதுவீர்களா?” என்று ஆச்சரியப்பட்டார். அப்படிப்பட்ட ஒருத்தர் மீது நான் ஏன் வன்மம் கொள்ள வேண்டும்? ஷிவ் நாடார் என்று ஒரு செல்வந்தர் இருக்கிறார். அவருக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? அவர் மீது நான் வன்மம் கொண்டிருக்கிறேன் என்றால் அதை நம்ப முடியுமா? அப்படித்தான் எம்.டி.எம்.மும். என்ன, நேரில் பார்க்கும் போது “என்ன சாரு, இப்படி கிழடு தட்டிப் போயிருக்கிறீர்கள்?” என்று உடல் கேலி செய்வார். உடனே நான் இருபத்திரண்டு வயதுத் தோழி ஒருத்தி எனக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை எடுத்துக் காண்பித்து அவர் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்வேன். இதெல்லாம் சிறுபிள்ளை விளையாட்டு. இதற்கெல்லாமா ஒருத்தன் வன்மம் பாராட்ட முடியும்?
அப்படிப் பார்த்தால் தேவி பாரதிதான் என் வாழ்நாளிலேயே மிகக் கொடூரமான, மன்னிக்கவே முடியாத அவதூறைச் செய்து எழுதியவர். அது இன்னமும் இணையத்தில் கிடைக்கிறது. அவர் வீட்டுக்குப் போனேனாம். குடித்தேனாம். நாள் கணக்கில் தங்கிக்கொண்டு கிளம்பவே இல்லையாம். அவரே என்னைக் கஷ்டப்பட்டு விரட்டி விட்டாராம். அவர் அம்மா அவரிடம் “சின்ன பெண்கள் இருக்கும் வீட்டில் இவனைப் போன்ற ஆட்களை இனிமேல் அழைத்து வராதே” என்றார்களாம்.
அந்த க்ஷணமே நான் தேவி பாரதியை மன்னித்தேன். ஏனென்றால், தமிழின் ஆகச் சிறந்த குறுநாவல்களையும் சிறுகதைகளையும் எழுதியவன். (காந்தி ஒரு உதாரணம்) நொய்யல் அப்போது வெளிவந்திருக்கவில்லை. அவர் என்னைப் பற்றி அவதூறு எழுதிய சில மாதங்களில் நொய்யல் வந்தது. உலகின் மகத்தான நாவல்களில் ஒன்று என நீண்ட மதிப்புரை எழுதினேன். அப்படி ஒரு நாவலை ஒரு எழுத்தாளன் எழுத வேண்டுமானால் அதற்கு அவன் வாழ்நாள் முழுதும் தேவைப்படும். தேவி பாரதி அதை எழுத இருபத்தைந்து ஆண்டுகள் எடுத்துக் கொண்டதாகத் தெரிகிறது.
ஏதோ ஒரு வன்மத்தில் அவர் என்னைப் பற்றி அவதூறு எழுதி விட்டார். அவர் நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் பிரார்த்தித்துக் கொண்டேன். ஆனாலும் பந்தை சுவற்றில் எரிந்தாயிற்றே? மிகக் கொடூரமான, மிகவும் வருந்தத்தக்க ஒரு துர்சம்பவத்தை எதிர்கொண்டார்.
என் வாழ்நாளில் நான் என் பெற்றோர் வீட்டில் கூட இரவு தங்கினதில்லை. போனால் சாப்பிட்டு விட்டு உடனே வந்து விடுவேன். மகன் வீட்டுக்குப் போனால் அங்கே பக்கத்தில் ஒரு ஓட்டலில்தான் அறை எடுத்துத் தங்குவேன். ஒரே ஒரு காரணம்தான். சொன்னால் என்னைத் திட்டக் கூடாது. அந்நியர் வீட்டில் தங்கினால் மறுநாள் காலையில் எனக்கு மலம் கழிக்க வராது. என்ன முக்கினாலும் நடக்காது. உடல் விரைத்துக்கொண்டு விடும். இப்போது என் மகன் துபயில் இருக்கிறான். போனால் எங்கேயாவது ஓட்டலில்தான் தங்குவேன். இப்படிப்பட்ட நான் தேவி பாரதி வீட்டில் போய் தங்கிக் கொண்டு கிளம்ப மறுத்தேனாம்.
(இதுவரை நான் இருவர் வீட்டில்தான் தங்கியிருக்கிறேன். ஒன்று, கேகே. அது வீடு அல்ல. ஆஸ்பெஸ்டாஸ் கொட்டகை. பத்து பேர் தரையில் கிடப்போம். இன்னொன்று, அனாடமி நாவலில்.)
இதையெல்லாம் சொல்வதற்குக் காரணம், எனக்கு எம்.டி.எம். மீது எந்த வன்மமும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்தத்தான். இப்போதும் எம்.டி.எம். நொய்யல் போல் ஒரு நாவலை எழுதினால் முதல் ஆளாகப் பாராட்டுபவன் நானாகத்தான் இருப்பேன். இப்போது இந்த ரோஜாவின் பெயரை வாங்கினது கூட எம்.டி.எம். ஸில்வியா என்ற பெயரில் எழுதின பிரம்மனைத் தேடி என்ற சிறுகதைத் தொகுப்பைப் படித்துக் கிறங்கியிருந்ததால்தான். ஆனால் அந்த எம்.டி.எம். இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே திருநெல்வேலி சிந்துபூந்துறையில் காணாமல் போய், இப்போது அந்த உடலில் தங்கியிருப்பது ஏதோ ஒரு துர் ஆவி என்று ரோஜாவின் பெயர் படிக்கும்போதுதான் தெரிகிறது.
இன்னோர் விஷயம். முப்பது ஆண்டுகளுக்கு முன் நான் அவந்திகாவைத் திருமணம் செய்து கொண்ட போது எனக்கு நண்பர்கள் யாரும் இல்லை. இலக்கியத்தில் கோபி கிருஷ்ணனும் எம்.டி.எம்.மும்தான். அப்போது எனக்கு சாட்சிக் கையெழுத்துப் போட்டவர் எம்.டி.எம். அந்த நன்றிக்காக நான் இப்போது ரோஜாவின் பெயர் என்ற திருட்டுத்தனத்தை மன்னிக்க முடியாது. அப்படிச் செய்தால் தேவி பாரதி மீது கோபப்பட வேண்டும். எனவே இலக்கியத்தில் எனக்கு நன்றியுணர்வோ, கோபமோ எதுவும் கிடையாது.
***
மேலே கடலூர் சீனு குறிப்பிட்டுள்ள மேற்கோள்களைப் பாருங்கள். ஏதாவது புரிகிறதா? இது புரிதல் பற்றிய பிரச்சினையே இல்லை. தமிழே தெரியாமல் வாந்தி எடுத்து வைத்திருக்கிறார் எம்.டி.எம். ஏஐ கூட இத்தனை மோசமாக மொழிபெயர்க்கவில்லை என்று சொல்கிறேன்.
இப்போது நாம் கடலூர் சீனு மேற்கோள் காட்டியிருக்கும் பகுதிகளின் ஆங்கில மொழிபெயர்ப்பையும் அதற்கான உத்தேசமான புரிதலையும் காண்போம்.
it highly displeased the Pope, who perhaps discerned in it a principle that would jeopardize the very claims that he, as head of the church, had made, denying the empire the right to elect bishops, and asserting on the contrary that the papal throne had the right to invest the emperor. Moved by these or other reasons, John condemned the Franciscan propositions in 1323 with the decretal Cum inter nonnullos.
இதற்கு எம்டிஎம் மொழிபெயர்ப்பு:
”அது போப்பிற்கு அதிகமும் பிடிக்கவில்லை. அவர் ஒருவேளை அதில் ஒரு கொள்கையை கண்டறிந்தார். அது அவர், திருச்சபையின் தலைவராக, பேரரசின் ஆயர்களை தேர்ந்தெடுக்கும் உரிமையை மறுத்து, போப்பாண்டவர் சிம்மாசனத்திற்குப் பேரரசரை நியமிக்கும் உரிமை இருப்பதாக வலியுறுத்திய கோரிக்கைகளையே ஆபத்துக்குள்ளாக்குவதாகும்.
என்னுடைய மொழிபெயர்ப்பு:
”போப் இதனால் மிகவும் அதிருப்தி அடைந்தார். ஒருவேளை இதில் திருச்சபையின் தலைவராக அவர் முன்வைத்த உரிமைகளுக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய ஒரு கொள்கையை அவர் உணர்ந்திருக்கலாம். இது பேரரசுக்கு ஆயர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை மறுத்து, அதற்கு மாறாக, போப்பாண்டவரின் அரியணைக்குப் பேரரசரை நியமிக்கும் உரிமை உள்ளது என வலியுறுத்தியது. இதனால் அல்லது வேறு காரணங்களால் தூண்டப்பட்டு, ஜான் 1323-இல் Cum inter nonnullos என்ற தண்டனைச் சட்டத் தீர்ப்பின் மூலம், பிரான்சிஸ்கன் முன்வைத்த கருத்துகளைக் கண்டித்தார்.”
இப்போது உங்களுக்கு எம்டிஎம்மின் தகிடுதத்தம் விளங்கியிருக்கும் என்று நினைக்கிறேன்.
It highly displeased the Pope என்பதை “போப் இதனால் மிகவும் அதிருப்தி அடைந்தார்” என்று சொல்லலாம். அதை விட, ”அது போப்பிற்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை” என்றால் இன்னும் உத்தமம். ஆனால் எம்.டி.எம். ”அது போப்பிற்கு அதிகமும் பிடிக்கவில்லை” என்று வாந்தி எடுத்திருக்கிறார். highly என்றால் நேரடி வறட்டு மொழிபெயர்ப்பில் ”அதிகமும்” என்று வரும். ஆனால் தமிழ் தெரிந்தவர்கள் “கொஞ்சமும்” என்றே எழுதுவார்கள். இந்த நுணுக்கத்தை கவனிக்க வேண்டும். அதிகம் என்பதன் அர்த்தத்தை கொஞ்சம் என்ற வார்த்தையால் வாசகருக்குக் கடத்த வேண்டும். அதாவது, இங்கே கொஞ்சம்தான் அதிகம் என்று அர்த்தமாகும். ஆனால் ஆங்கிலப் பேராசிரியர் கொஞ்சம் என்றால் ஸ்மால் என்று எடுத்துக்கொண்டு அதை “அதிகமும்” என்று மாற்றுகிறார். அது பன்றி சூத்தாக வந்து தொலைகிறது. உதாரணமாக, எம்டிஎம்முக்கு சாருவைப் பிடிக்கவில்லை. அதை அவர் எப்படிச் சொல்வார்? ”சாருவை எனக்கு அதிகமும் பிடிக்கவில்லை” என்றா? சாருவை எனக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை. இதுதானே சரி? இங்கே கொஞ்சம் என்பதற்குக் கொஞ்சம் என்றா அர்த்தம்?
அடுத்து Cum inter nonnullos என்பது ஒரு ஆணை. அதையும் அனாவசியமாக மொழிபெயர்த்துள்ளார் எம்டிஎம். “சில மத்தியில் உள்ளபோது”. என்ன எழவு இது?
லத்தீன் வார்த்தைகளான Cum inter nonnullos என்பதன் பொருள் தமிழில் “சிலரிடையே” அல்லது “சிலருக்கு மத்தியில்”. இது 1323-ல் போப் ஜான் XXII ஆல் வெளியிடப்பட்ட ஒரு ஆணையின் (decretal) தலைப்பு. இந்த ஆணையில், ஃபிரான்சிஸ்கன் துறவிகளின் சில கொள்கைகளை, குறிப்பாக அவர்களின் ஏழ்மை பற்றிய கருத்துக்களை, அவர் கண்டித்தார். ”சிலருக்கு மத்தியில்” என்ற ஆணை எம்டிஎம்மிடம் ”சில மத்தியில் உள்ளபோது” என வாந்தியாக மாறியதன் காரணம், வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்ப்பு.
ஏன் இத்தனைக் கோபமாக இத்தனை கட்டுரைகள் எழுதிக்கொண்டிருக்கிறேன் என்றால், பாரதி வரிதான் நினைவுக்கு வருகிறது. ”தண்ணீர் விட்டா வளர்த்தோம்? சர்வேசா!” அதேதான். என் முன்னோர் இந்தத் தமிழ் இலக்கியத்தைத் தண்ணீர் விட்டா வளர்த்தார்கள்? தங்கள் குருதியை அல்லவா விட்டு வளர்த்தார்கள்? அப்படிப்பட்ட என் தாயை எங்கிருந்தோ வந்த டை கட்டிய கனவான் ஒருவன் வன்கலவி செய்தான் என்றால் நான் என்ன ஆவேனோ அப்படித்தான் ஆகியிருக்கிறேன். அதனால்தான் கெட்ட வார்த்தையில் திட்டுகிறேன்.
உடனே எம்டிஎம் சமத்காரமாக சாரு நிவேதிதாவின் ஆபாசக் கட்டுரைகள் என்கிறார். ஆஹா! டேய், ஒருத்தன் குடிநீர்க் கிணற்றில் விஷத்தைக் கலக்கிறான். தெரிந்தே செய்கிறான். தெரியாமல் செய்யும் மூடன் அல்ல அவன். தெரிந்தே செய்யும் அறிவாளி. அதைப் பார்த்த ஒருத்தன் ங்கோத்தா ங்கொம்மா என்று கத்தினால் விஷம் வைத்த கனவான், “பாருங்கள், அவன் ஆபாசமாகப் பேசுகிறான்” என்று சொல்வானா? அப்படித்தான் இருக்கிறது எம்டிஎம் வாதமும்.
கடலூர் சீனு கொடுத்திருக்கும் அடுத்த வாக்கியம்:
This was the situation when I—a young Benedictine novice in the monastery of Melk—was removed from the peace of the cloister by my father, fighting in Louis’s train, not least among his barons.
எம்டிஎம்: “மெல்க் மடாலயத்தில் ஒரு இளம் பெனடிக்டைன் புதிய துறவியான நான் (என் தந்தையால், லூயிசின் தொடர் வண்டியில் போரிட்டு, அவரது பிரபுக்களிடையே கடைசியாக இல்லாதவர்) மடத்தின் அமைதியிலிருந்து அகற்றப்பட்ட போது இதுதான் நிலைமை.”
சாரு: இதுவே அப்போதைய நிலைமை: மெல்க் துறவியரின் மடத்தில் இளம் பெனடிக்டைன் துறவியாக இருந்த நான், லூயிஸின் படையில், அவரது பிரபுக்களில் முக்கியமானவராகப் போராடிய என் தந்தையால், மடத்தின் அமைதியான வாழ்க்கையிலிருந்து அகற்றப்பட்டேன்.
”மடத்தின் அமைதியிலிருந்து அகற்றப்பட்டபோது” என்ற எம்டிஎம்மின் வார்த்தைகளை கவனியுங்கள். மொழியில் எந்த அளவுக்கு சுரணையற்றிருந்தால் இப்படி உளற முடியும்?
எம்டிஎம்முக்கு முட்டுக் கொடுக்கும் எழுத்தாளர்களை இங்கே இதற்குப் பதில் கூறுமாறு அழைக்கிறேன். எத்தனை எளிமையான வாக்கியத்தை எம்டிஎம் எப்படிக் கூறு போட்டிருக்கிறார், பாருங்கள்.
கடலூர் சீனு சுட்டிக் காட்டும் அடுத்த பத்தி:
எம்டிஎம்:
“இப்போதும் கூட நான் வயதாகி, அப்போது இருந்ததை விட புத்திசாலியாக இருக்கும் போது, ஆக்காமின் தனது நண்பர் மீது அவருக்கு இவ்வளவு நம்பிக்கை எப்படி இருக்க முடியும் என்பதையும், அதே நேரத்தில் அவர் வழக்கமாக செய்வதைப் போல, பேக்கனின் வார்த்தைகளில் சத்தியம் செய்ய முடியும் என்பதையும் நான் முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை.”
ஆங்கில மொழிபெயர்ப்பு: but even now, when I am old and wiser than I was then, I have not completely understood how he could have such faith in his friend from Occam and at the same time swear by the words of Bacon, as he was accustomed to doing. It is also true that in those dark times a wise man had to believe things that were in contradiction among themselves.
சாருவின் மொழிபெயர்ப்பு: ”ஆனால் இப்போதும், நான் அப்போது இருந்ததை விட முதிர்ந்தவனாகவும், ஞானமுள்ளவனாகவும் இருக்கும்போது, அவர் எப்படி ஒக்காமைச் சேர்ந்த தனது நண்பரின் மீது அத்தகைய நம்பிக்கை வைத்திருக்க முடிந்தது? அதே சமயம், வழக்கம் போல பேக்கனின் வார்த்தைகளை சத்தியமாகக் கொண்டிருந்தார் என்பதையும் முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை. அந்த இருண்ட காலத்தில் புத்திசாலிகள் ஒருவருக்கொருவர் முரண்பாடாக இருக்கும் விஷயங்களை நம்பியிருக்க வேண்டியிருந்தது என்பதும் உண்மை.”
கடலூர் சீனுவின் அடுத்த மேற்கோள்:
எம்டிஎம்: “அதை பேராசை கொண்ட ஆவியின் பேரார்வம் என்று நினைத்தேன். மாறாக பகுத்தறிவுள்ள ஆவி அத்தகைய பேரார்வத்தில் ஈடுபடக்கூடாது. ஆனால் உண்மையிலிருந்து மட்டுமே உணவளிக்கவேண்டும் என்று நம்பினேன்.”
ஆங்கில மொழிபெயர்ப்பு:
எம்டிஎம்:
“ஆனால் அவருடைய கைகள் மிகவும் உடையக்கூடிய பொருட்களை தொட்டபோது கூட, புதிதாக ஒளியூட்டப்பட்ட சில குறியீடுகள் அல்லது காலத்தால் தேய்ந்துபோன புளிக்காத ரொட்டிபொல நொறுங்கக்கூடியதாக எனக்குத் தோன்றியது.”
ஆங்கில மொழிபெயர்ப்பு: but even when his hands touched the most fragile things, such as certain freshly illuminated codices, or pages worn by time and friable as unleavened bread, he possessed, it seemed to me, an extraordinarily delicate touch, the same that he used in handling his machines.
சாரு: ஆனால், அவரது கைகள் நொறுங்கக் கூடிய பொருட்களைத் தொட்டபோதும், உதாரணமாக, புதிதாக அலங்கரிக்கப்பட்ட சில கையெழுத்துப் புத்தகங்கள் அல்லது காலத்தால் தேய்ந்து, புளிப்பு இல்லாத ரொட்டியைப் போல உடையக்கூடிய பக்கங்கள் போன்றவற்றைத் தொடும்போதும், அவருக்கு ஒரு அசாதாரணமான மென்மையான தொடுதல் இருப்பதாக எனக்குத் தோன்றியது;
இப்போது நான் எம்டிஎம் மீது ஒரு புதிய குற்றச்சாட்டை வைக்கிறேன். அவர் இந்த நாவலை தன் சமையல்காரரிடமோ கார் ஓட்டுநரிடமோ அல்லது ஆங்கிலம் தெரியாத நண்பரிடமோ கொடுத்துத்தான் மொழிபெயர்த்திருக்க வேண்டும். freshly illuminated codices என்ற வார்த்தைகளைப் பாருங்கள். புதிதாக ஒளியூட்டப்பட்ட குறியீடுகள் என்கிறார் எம்டிஎம். Codices என்பதை குறியீடுகள் என்று மொழிபெயர்த்திருக்கிறார்.
Codices என்பது “codex” என்ற லத்தீன் வார்த்தையின் பன்மை வடிவமாகும், இது பண்டைய கையெழுத்துப் புத்தகங்களைக் குறிக்கிறது, குறிப்பாக தோல் அல்லது காகிதத்தில் எழுதப்பட்டு, புத்தக வடிவில் பிணைக்கப்பட்டவை. இவை பொதுவாக மதம், இலக்கியம், அல்லது அறிவியல் உள்ளடக்கங்களைக் கொண்டிருக்கும். மத்திய காலத்தில் துறவியரால் பயன்படுத்தப்பட்டவை. ரோஜாவின் பெயர் நாவலில் “codices” என்பது மெல்க் மடத்தில் உள்ள பழங்காலக் கையெழுத்துப் புத்தகங்களைக் குறிக்கிறது. அவை புதிதாக அலங்கரிக்கப்பட்டவையாகவோ அல்லது காலத்தால் தேய்ந்தவையாகவோ இருக்கலாம்.
அப்படியிருக்கும்போது இங்கே ஏன் குறியீடுகள் என்று வந்துள்ளது? ஏனென்றால், codes என்றால் குறியீடுகள் என்று பொருள்.
நண்பர் போகன் சங்கர் இதற்கு பதில் சொல்ல வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். ஏனென்றால், சில தினங்களாக அவர்தான் எம்டிஎம்முக்கு ஆதரவாக எழுதிக்கொண்டிருக்கிறார்.
எம்டிஎம்மின் இந்த மோசடி வேலையினால்தான் நான் பதிப்பகத்தார் ரோஜாவின் பெயர் நாவல் வாங்கியவர்களுக்கு 1,00,899 ரூ. நட்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று சொல்கிறேன். யாராவது நுகர்வோர் நீதிமன்றத்தில் கேஸ் போடுங்கள் என்று கேட்கிறேன். இந்த மொழிபெயர்ப்பு ஏமாற்று வேலை இதோடு நிற்க வேண்டும். எப்படி நீங்கள் Codices என்ற வார்த்தையை குறியீடுகள் என்று மொழிபெயர்த்தீர்கள்? உங்களுக்கெல்லாம் வெட்கமாக இல்லையா? codes என்பதற்கும் codices என்பதற்குமா வித்தியாசம் தெரியவில்லை? நீங்கள் நாவலைப் படித்தீர்களா? அல்லது, கூகிள் ட்ரான்ஸ்லேட்டரில் கொடுத்து அச்சடித்து வைத்திருக்கிறீர்களா? இதைக் கேட்டால் ஆபாசக் கட்டுரை என்று எழுதுகிறீர்கள்? கிரிமினல் வேலை செய்து விட்டு என்னைப் பார்த்து வசையா?
கடலூர் சீனு குறிப்பிடும் அடுத்த வாசகம்:
எம்டிஎம்:
அதைப் பேராசை கொண்ட ஆவியின் பேரார்வம் என்று நினைத்தேன். மாறாக பகுத்தறிவுள்ள ஆவி அத்தகைய பேரார்வத்தில் ஈடுபடக்கூடாது. ஆனால் உண்மையிலிருந்து மட்டுமே உணவளிக்க வேண்டும் என்று நம்பினேன்.
ஆங்கில மொழிபெயர்ப்பு: but at the beginning I knew little of this virtue, which I thought, rather, a passion of the covetous spirit. I believed instead that the rational spirit should not indulge such passion, but feed only on the Truth, which (I thought) one knows from the outset.
சாரு: ஆனால் ஆரம்பத்தில், இந்த நற்பண்பு பற்றி எனக்குக் குறைவாகவாகவே தெரியும். மாறாக, இதை நான் பேராசையுள்ள ஆன்மாவின் வேட்கை என்றே நினைத்தேன். ஆனால், பகுத்தறிவுள்ள ஆவி அத்தகைய வேட்கையில் திளையக்கூடாது; அது ”உண்மை” என்பதாலேயே ஊட்டமளிக்கப்பட வேண்டும், அந்த ”உண்மை”யை (நான் நினைத்தபடி) முதலில் இருந்தே அறிந்திருக்கலாம்.”
நான் நாவலை முழுசாகப் படிக்காததால் இங்கே ஆன்மா என்று வருமா, ஆவி என்று வருமா என்று தெரியவில்லை. feeding என்றால் கண்ணை மூடிக்கொண்டு எல்லா இடங்களிலும் உணவு என்று எழுதக் கூடாது.
அடுத்தது:
எம்டிஎம்:
பின்னர் அவர் அதை ஒரு ஈர்க்கப்பட்ட தோற்றத்துடன் மெல்லுவார்.
ஆங்கிலம்: and he would then chew it with an absorbed look.
சாரு: அவர் பின்னர் அதை ஆழ்ந்த கவனத்துடன் மென்றார்
அல்லது, அவர் பின்னர் அதை முழுமையான ஈடுபாட்டுடன் மென்றார்.
இதற்கா எல்லா எழுத்தாளர்களும் வக்காலத்து வாங்குகிறீர்கள்? உங்களுக்கெல்லாம் வெட்கமாக இல்லையா? absorbed look என்றால் ஈர்க்கப்பட்ட தோற்றமா?
Shame on you, publisher! Shame on you, MDM!