ரோஜாவின் பெயர்: என்ன நடந்திருக்கிறது?

சல்மான் ருஷ்டியின் எழுத்தின் மீது எனக்கு ஒருபோதும் மரியாதை இருந்ததில்லை. இருந்தாலும் நண்பர் பாலா லிங்க் அனுப்பி வைத்திருந்ததாலும், சனி ஞாயிறுகளில் என் தோழர் ஃபோனில் பேச அகப்பட மாட்டார் என்பதால் ஏற்பட்ட மன உளைச்சலில் இருந்ததாலும் ருஷ்டியின் ஒரு நாவலைப் பற்றி ஜெயமோகன் என்ன எழுதியிருக்கிறார் என ஆர்வம் கொண்டு அதைப் படிக்கலானேன். ஜெயமோகனும் நானும் ரசனையிலும், தத்துவ நோக்கிலும், மற்றும் பல விஷயங்களிலும் துருவ வித்தியாசங்கள் கொண்டவர்கள் என்றாலும், இது போன்ற விஷயங்களில் ஒத்த கருத்துடன் ஓடும் படகு. தியாகராஜா நாவலுக்காக விஜயநகரப் பேரரசு பற்றி ருஷ்டி எழுதியிருக்கும் இந்த விஜய நகரம் நாவலைப் படிக்கலாம் என ஒரு க்ஷணம் தோன்றினாலும், ஐயோ என விலகி விட்டேன். ஜெ.வுக்கு இருக்கும் பொறுமை எனக்குக் கிடையாது. அதோடு, தமிழிலும் சரி, ஆங்கிலத்திலும் சரி, வாசிப்புக்கு எனக்கு அதிக நேரம் எடுக்கும்.

விஜய நகரம் நாவல் பற்றி ஜெயமோகன் எழுதியிருக்கும் கட்டுரையில் இப்போது ரோஜாவின் பெயர் குறித்த அக்கப்போருக்கு ஒரு சரியான பதில் இருக்கிறது. முதலில் ஜெ.

”ருஷ்தியின் ஆங்கில விளையாட்டுத் தன்மை இந்த நூலின் நடையை சுவாரசியமாக வாசிக்கச் செய்கிறது. வீட்டில் எவருமில்லாததனால் இரண்டு நாட்களில் படித்து முடித்த நாவல் இது. இந்த ‘படிக்கவைக்கும் தன்மை’ என்பது தான் இந்நாவலின் ஒரே தனிச்சிறப்பு என்று நினைக்கிறேன். மிக விரைவான வாசிப்பு அனுபவத்தைத் தருவது ருஷ்தியின் இயல்பான ஒழுக்கு கொண்ட மொழிவிளையாட்டு.

The first circle of hell was right there in the council chamber, where Bukka Raya I was plunged in to the inferno of impossible choices – to support his wife and outlaw his children, or to protect the little princes and alienate Pampa Kampana ,may be permanently- while all around him were the members of the council, looking his direction trying to decide which way they would jumb after he had made his unhappy leap. 

(இந்த வகையான் சொற்சுழற்சி ஆங்கிலத்தை அழகாக ஆக்குவது. இங்கே எவரேனும் இதை தமிழாக்கம் செய்கிறேன் என்று ஆரம்பித்து, இந்த மூலச் சொற்றொடர் அமைப்பை தமிழுக்கு அப்படியே மாற்ற தொடங்கினால் இது புதிர்ப்பாதை விளையாட்டாக மாறிவிடும். ஏனென்றால் தமிழின் எழுவாய் பயனிலை அமைப்பும் கூட்டுச்சொற்றொடர் அமைப்பும் ஆங்கிலத்தில் இருந்து முற்றாக வேறுபட்டவை. இந்தப் புரிதலற்றவர்கள் ஆங்கிலத்தில் எளிமையாக உள்ள கூட்டுச்சொற்றொடர்களே அப்படியே ‘தமிழ்ப்பெயர்த்து’ வைக்கிறார்கள். ஆங்கிலத்தில் படிக்கும் பழக்கம் இல்லாத உள்ளூர் எளிய வாசகர்கள் அந்த சொற்றொடர்ச் சிக்கல்தான் உயர் இலக்கியம் போலிருக்கிறது என்று பரவசம் அடைந்து, அதேபோல தமிழில் சொற்குதறல்களாகவே எழுதும் அபத்தம் இங்கே ஓர் இலக்கிய வகைமையாகவே ஆகியுள்ளது.

அவர்கள் இவ்வாறு இதை ‘தமிழில்’ வாசிக்கலாம். ‘நரகத்தின் முதல் வட்டம் கவுன்சில் அறையில் இருந்தது, அங்கு புக்க ராயன் I சாத்தியமற்ற தேர்வுகளின் நரகத்தில் மூழ்கடிக்கப்பட்டார் – அவரது மனைவியை ஆதரிப்பது மற்றும் அவரது குழந்தைகளை சட்டவிரோதமாக்குவது, அல்லது சிறிய இளவரசர்களைப் பாதுகாப்பது மற்றும் பம்பா கம்பனாவை நிரந்தரமாக அந்நியப்படுத்துவது – அவரைச் சுற்றிலும் கவுன்சில் உறுப்பினர்கள் அவரது திசையைப் பார்த்துக் கொண்டிருந்தனர், அவர் தனது மகிழ்ச்சியற்ற பாய்ச்சலைச் செய்த பிறகு அவர்கள் எந்த வழியில் குதிக்க வேண்டும் என்று முடிவு செய்ய முயன்றனர்.’ (கூகிள்).உண்மையில் தமிழில் வெளிவந்துள்ள பல மொழியாக்கங்களை விட இந்த கூகிளாக்கம் பல மடங்கு மேல்.”

ஜெ. குறிப்பிடும் மொழிக் குதறல்தான் ரோஜாவின் பெயரில் நடந்திருப்பது. அதைத்தான் உள்ளூரின் எளிய வாசகர்கள் படித்து ஆர்கஸம் அடைகிறார்கள். இது நாற்பது ஆண்டுகளாக நடந்து வரும் கூத்து. இந்தக் கூத்துக்கு சொந்தக்காரர்கள் தமிழவன், நாகார்ச்சுனன். இதில் எம்.டி.எம். சேராதவர் என நினைத்திருந்தேன். அவரும் உண்டு என்பதை இப்போது தாமதமாக அறிகிறேன். இந்த மூவரைத்தான் முந்தைய கட்டுரையில் குறிப்பிட்டேன். இந்த மூவரும்தான் வேறு மூவரால் காணாமல் போனவர்கள். நான் என்ன சொல்ல நினைத்தேனோ அதைத் தெளிவாகச் சொல்லி விட்டார் ஜெ. அவருக்கு என் நன்றி.