வாக்கில் சனி

என் அன்புள்ள போகன் சங்கர்,

ஃபேஸ்புக்கில் நீங்கள் எழுதியிருக்கும் பதிவு இது:

“வாழ்க்கை ரொம்ப சிக்கலாகி விட்டது. நான் என்னால் சமாளிக்க முடியாத கடும் துயரங்களின் பாதுகாவலன் ஆகிவிட்டேன். நான் எம்டிஎம்மை பாதுகாப்பதாக சாரு வேறு திட்டுகிறார். முன்பு அவர் என்னை பாசிஸ்ட் என்று திட்டிக் கொண்டிருந்தார்.அதனுடைய தொடர்ச்சிதான் இது என்பது போல் தெரிகிறது. கடலூர் சீனுக்களின் கடிதங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய நெருக்கடிகள்.ஆன்லைன் தள்ளுபடிகளில் நானும் ஒரு டால்பி அட்மாஸ் சவுண்ட் பார் குறைந்த விலைக்கு கிடைக்கிறதா என்று பார்க்கிறேன் கிடைக்க மாட்டேங்கிறது. இன்னொரு புறம் அமெரிக்கா சென்று ஒரு ஏகாதிபத்திய கைக்கூலியாக வேலை பார்க்கும் என்னுடைய நீண்ட நாள் கனவு முடிந்து விட்டது. இனிமேல் நான் சீனாவுக்குச் சென்று ஒரு இன்ஜினியர் ஆக முடியுமா? இந்த அதிசார சனி எப்பொழுது முடியும் ஜோசியரே?”

என் தோழி புவனேஸ்வரி (அன்பு நாவலின் இரண்டாவது நாயகி) சொல்வது சரிதான் என்று இன்று உணர்ந்து கொண்டேன். தமிழ் எழுத்தாளர்களில் என்னைப் பற்றி மிக உயர்வாக எழுதிய ஒருசிலரில் நீங்களும் ஒருவர். அதிலும் உங்களைப் போல் என்னை உயர்த்தி எழுதியவர் யாருமே இல்லை. என் மனைவி அவந்திகாதான் நீ பாரதி, நீ பாரதி என்று கூவிக்கொண்டிருக்கிறாள். அந்த அளவுக்கு என்னைப் பாராட்டி எழுதியவர் நீங்கள்.

அப்படி நீங்கள் என்னைப் பற்றி எழுதுவதற்கு முன்பிருந்தே நான் உங்கள் வாசகன். ரசிகன் என்றும் சொல்லிக் கொள்ளலாம். உங்களுடைய ஃபேஸ்புக் எழுத்துகள், கவிதைகள், சிறுகதைகள் எல்லாவற்றையும் தொடர்ந்து விரும்பிப் படித்து வருகிறேன். உங்களுடைய புத்தகங்கள் எங்கே கிடைக்கும் என்று தேடித் தேடி வாங்கிப் படிக்கிறேன். நீங்கள் என்னைப் பாராட்டி விட்டீர்கள் என்பதற்காக அல்ல. எனக்கு உங்கள் எழுத்து பிடிக்கும். அதைத் தவிர உங்களை நான் பாராட்ட வேறு காரணமே இல்லை.

ஆனால் சில மாதங்களுக்கு முன்பு நீங்கள் எழுதிய ஒரு கதை ஃபாஸிஸ்ட் பார்வையைக் கொண்டிருந்ததால் அதை ஒரு மேடையில் வைத்து விமர்சித்தேன். அதோடு அதை நான் மறந்தும் விட்டேன். அது உங்களை மிகவும் புண்படுத்தி விட்டது என்பதை இப்போது உணர்கிறேன். புவனேஸ்வரி சொல்வது சரிதான். மனதில் இருப்பதையெல்லாம் வெளியே சொல்லி எல்லோரையும் – ஏன், என்னைப் பாராட்டுபவர்களையும், என் நண்பர்களையும் கூட – பகைத்துக் கொள்கிறேன்.

நீங்கள் எழுதியிருப்பதில் ஒரே ஒரு பிழை இருக்கிறது.
”முன்பு அவர் என்னை பாசிஸ்ட் என்று திட்டிக் கொண்டிருந்தார்.” நான் ஒரே ஒரு மேடையில் ஒரே ஒரு முறை உங்களுடைய ஒரே ஒரு சிறுகதை பற்றி விமர்சித்தது மேலே எப்படி மாறியிருக்கிறது பாருங்கள். ஏன் போகன், உங்களுடைய கவிதைகளை, கதைகளை நான் பல ஆண்டுகளாகப் பாராட்டியும் ரசித்தும் வந்ததெல்லாம் ஒரே நாளில் காலியாகி விட்டதா? என்னது, உங்களை ஃபாஸிஸ்ட் என்று திட்டிக்கொண்டிருந்தேனா? உங்களுடைய ஒரே ஒரு சிறுகதை ஃபாஸிஸ்ட் அணுகுமுறை இருந்ததாக எனக்குத் தோன்றியதால் விமர்சித்தேன். ஜெயமோகனின் நூறு சிம்மாசனங்கள் சிறுகதையை உலகமே பாராட்டிக்கொண்டிருந்த போது அதில் ஃபாஸிஸ்ட் பார்வை இருக்கிறது என்று ஒரு மேடையில் அரை மணி நேரம் விளக்கினேன். உடனே ஜெயமோகன் என்னைத் தன் எதிரிகளின் கூடாரத்தில் தள்ளி விட்டாரா, என்ன?

இன்னும் கொஞ்சம் அன்பாக இருங்கள் போகன். என் மீது அல்ல. உங்கள் மீது. ஒரு கதையை விமர்சித்து விட்டதால் என்னை உங்கள் நட்பு வட்டத்திலிருந்து விலக்கி விடாதீர்கள். நீங்கள் ஃபேஸ்புக்கில் ஒரு சூப்பர் ஸ்டார். ஒரு பதிவு போட்டால் 300 விருப்பக்குறிகள் உங்களுக்கு. எனக்கு மூணு. நீங்கள் என்னை உங்களுடைய நட்பு வட்டத்திலிருந்து விலக்கலாம். உங்களுக்கு அந்த வசதி உண்டு. எனக்கு என் வாசகர் வட்டத்துக்கு வெளியே உள்ள இரண்டே நண்பர்களில் நீங்களும் ஒருவர். இன்னொருவர், ஜெயமோகன். உங்கள் இருவரையும் நான் ஃபாஸிஸ்ட் என்று சொன்னால் என் கதி என்ன ஆகும் என்று யோசித்துப் பாருங்கள். என் மீது கொஞ்சம் கருணை காட்டி, நான் உங்களுடைய ஒரே ஒரு கதையை விமர்சித்ததை உங்கள் மனதிலிருந்து நீக்கி விட்டு, உங்களுடைய அத்தனை சிறுகதைகளையும், கவிதைகளையும் நான் விழுந்து புரண்டு ரசிப்பதை மனதில் கொண்டு என்னை மீண்டும் உங்கள் நண்பனாக ஏற்கும்படி மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்.

தங்களின் அன்பு ரசிகன்,

சாரு நிவேதிதா