காலையில் நண்பரிடமிருந்து ஜீபேயில் நூற்றைம்பது ரூபாய் வந்திருந்தது. நான் வாங்கச் சொல்லியிருந்த புத்தகம் கிடைக்கவில்லை என்று சொல்லி, நான் அனுப்பியிருந்த நூற்றைம்பது ரூபாயைத் திருப்பி அனுப்பியிருந்தார். புத்தகத்தின் விலை 150/- ரூ.
எனக்கு கையில் ஆடம்பரமான ப்ரேஸ்லெட் அணிந்து கொள்ள வேண்டும் என்ற தீரா ஆசை உண்டு. பாண்டிச்சேரிக்காரர் அனைவரும் அணிவர். குர்மாத் என்று சொல்வர். வெள்ளியில் பெரிதாக அணிந்தால் ரவ்சாக இருக்கும். ஆனால் வெள்ளி எதுவுமே எனக்கு ஒத்து வருவதில்லை. என் தோலின் இயற்கைக்கு – சீ, இயல்புக்கு – தகரம் போல் கறுத்து விடுகிறது. அதனால் வெள்ளை உலோகத்தில் ஒரு ப்ரேஸ்லெட் வாங்கினேன். ஆனால் முதல் நாளே அதன் கொக்கி அறுந்து விட்டது. கொக்கி வாங்கித் தா என்றேன் தோழியிடம். முப்பது கொக்கி நூற்றைம்பது ரூபாய். நமக்கு வேண்டியது ஒரு கொக்கி. மீதி கொக்கியைத் தூக்கிப் போட்டு விடலாம் என்றேன்.
சரி, அப்படியானால் நூற்றைம்பது ரூபாய் அனுப்பி வையுங்கள் என்றாள் தோழி.
முடியாது, ஆயிரம் ரூபாய்க்கு மேல் என்றால்தான் அனுப்ப முடியும்.
சரி, விடுங்கள். நானே வாங்கித் தருகிறேன்.
வீட்டுக்கு வந்ததும் நூற்றறுபதாக அனுப்பி வைத்தேன். பத்து ரூபாய் அவள் எடுத்துக் கொள்ளும் முயற்சிக்காக.
இன்னும் அக்னாலட்ஜ்மெண்ட் வரவில்லை. வந்தால்தான் நிம்மதியாகும்.
Life’s an absurd, gorgeous mess, and I’m here for the wild ride!