சன்னி லியோனின் “பெரும் காட்சி” – அராத்து

ரோஜாவின் பெயர் நாவலில் துணைத் தலைப்பான “Naturally, a manuscript” என்பதை “இயற்கையாகவே, ஒரு கைப்பிரதி” என மொழிபெயர்த்திருப்பதை சாரு நிவேதிதா சுட்டிக் காட்டி, “இயல்பாகவே, இது ஒரு கைப்பிரதி” என வந்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். அதற்கு எம் டி எம் தற்போது ஒரு வியாக்யானம் கொடுத்து இருக்கிறார். அதைப்படித்தால் அது ரோஜாவின் பெயர் நாவல் மொழிபெயர்ப்பை விட கொடூரமாக இருக்கும் போலத் தெரிகிறது. இயற்கையாகவே ஒரு கைப்பிரதி என்பதற்கு எம் டி எம் கொடுக்கும் முட்டு :-

“அட்சோ சொன்ன கதைப் பிரதியில் ஏதோ ஒரு வரலாறு மறைக்கப்பட்டு வேறு எதோ ஒன்று அதன் மேல் ‘இயற்கையாகவே’ சேர்க்கப்பட்டிருக்கிறது என்பது மட்டும் நமக்குத் தெளிவாகத் தெரிகிறது. “

ஒரு வரலாறு மறைக்கப்பட்டு, ஏதோ ஒன்று அதன் மேல் சேர்க்கப்பட்டிருந்தால் – அது எப்படி ஐயா இயற்கையாக சேர்க்கப்பட்டது எனக் கொள்ள முடியும்? எம் டி எம் எப்படி தந்திரமாக இந்த வாக்கியத்தில் “இயற்கையாக” என்ற வார்த்தையை நுழைத்திருக்கிறார் பாருங்கள்

இயற்கையாக சேர்க்கப்பட்டிருக்கிறது எனில் எந்த மனிதத் தலையீடும் அல்லாமல் புயல் அல்லது காற்று ஏதோ ஒரு வரலாற்றை இந்தப்பிரதியில் மறைத்து, எங்கிருந்தோ உருவி எடுத்து வந்த எழுத்துக்களை சேர்த்து விட்டுப்போய்விட்டதா? இயற்கைக்கு வேறு வேலை மயிரே கிடையாதா? ஒரு சின்ன தவறு செய்து விட்டால், ஆமாம், கவனக் குறைவால் நடந்து போச்சி எனச் சொல்லி விட்டுப் போனால் மேட்டர் ஓவர். ஒரு தப்பை சமாளிக்க ஆரம்பித்தால் ஓராயிரம் தப்பு செய்ய வேண்டியதுதான்.

சரி , “இயல்பாகவே, இது ஒரு கைப்பிரதி” என எப்போது தோன்றும்? நாமாக யோசித்து மொழிபெயர்க்கையில் தோன்றும் சாத்தியம் உள்ளது. ஏ ஐ உபயோகித்து மொழி பெயர்த்தால், அது இப்படி கோக்கு மாக்காகக் கொடுக்கும். நான் இதை ஏ ஐ இடம் கேட்டபோது க்ரொக் – இயல்பாகவே ஒரு கைப்பிரதி

சாட்ஜிபிடி – இயற்கையாக ஒரு கைப்பிரதி

டீப்ஸீக் – நிச்சயமாக ஒரு கையெழுத்துப் பிரதி

இப்படிக் கொடுத்தன. இதிலிருந்து சரியாகத் தேர்ந்தெடுக்கும் சென்ஸிபிளிட்டியாவது வேண்டும். இன்னொன்று நாம் இவற்றை எப்படி டியூன் செய்துவிட்டு, என்ன ப்ராம்ப்ட் கொடுத்துக் கேட்கிறோம் என்பதும் முக்கியம். எப்படிப் பார்த்தாலும் சுமாரான சென்ஸிபிலிட்டி கொண்ட மனித மூளை கூட இயற்கையாக ஒரு கைப்பிரதி என மொழிபெயர்க்காது. வறட்டு மூறையும், திருகல் மூளையும், ஏ ஐ யும் இப்படிச் செய்ய சாத்தியக்கூறு உள்ளது.

அடுத்து, சாரு பிளாகில் எழுதியிருந்த ஒரு வரியை மட்டும் எடுத்துக்கொண்டு, இம்மூன்றிலும் கொடுத்தேன்.

“A rich abbey,” he said. “The Abbot likes a great display on public occasions.”

சாட் ஜிபிடி :- “செல்வச் செழிப்பான ஆசிரமம்,” என்றார் அவர். “அப்போட்டர் பொதுவிழாக்களில் பெரும் ஆடம்பரத்தைக் காட்ட விரும்புகிறார்.”

க்ரோக் :- “செல்வச் செழிப்பான ஆசிரமம்,” என்றார் அவர். “அப்போட்டர் பொதுவிழாக்களில் பெரும் ஆடம்பரத்தைக் காட்ட விரும்புகிறார்.”

அதிசயமாக இரண்டும் அச்சு அசலாக ஒரே மாதிரி மொழிபெயர்த்தது.

டீப்ஸீக் :- “ஒரு செல்வந்த துறவி மடம்,” என்று அவர் சொன்னார். “பொது நிகழ்வுகளில் தலைமைத் துறவிக்கு ஒரு பெரிய காட்சி பிடிக்கும்.”

மீண்டும் மனித மூளைக்கும் ஏ ஐ க்கும் வருகிறேன். கிரேட் டிஸ்ப்ளே என்பதை ஏ ஐ தான் பெரிய காட்சி , பெரும் காட்சி என மொழிபெயர்க்கும். அடிப்படை அறிவுள்ள எந்த மூளையும் இப்படி மொழிபெயர்க்காது.

சாரு :- ”ஒரு பணக்கார மடாலயம்,” என்றார். “பொது நிகழ்வுகளில் மடாதிபதி பெரும் ஆடம்பரத்தை விரும்புகிறார்.”

நான் சாருவை அழைத்து, இதை இன்னும் இப்படிச் சொல்லலாமா என கேட்டேன் :-

பொது நிகழ்வுகள் பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என மடாதிபதி விரும்புகிறார்.

சில மொழிபெயர்ப்பாளர்கள் வரிக்கு வரி , வார்த்தைக்கு வார்த்தை செய்வதுதான் சரி என்பார்கள். அப்படிப்பார்த்தாலும், பொது நிகழ்வுகள் பெரிதாக இருக்க வேண்டும் என மடாதிபதி விரும்புகிறார் என்றாவது மொழிபெயர்த்து இருக்கலாம்.

கிரேட் டிஸ்பிளே – பெரும் காட்சியாம், பெரும் காட்சியை விரும்புகிறாராம்.

ஏ ஐ ஒரு டூல். அதைப் பயன்படுத்துவது தப்பே இல்லை. ஆனால் இலக்கியத்தில் பயன்படுத்தும் போது, அதிக கவனம் தேவை. அது கொடுப்பதை அப்படியே எடுத்துக்கொள்வதோ, அது கொடுக்கும் அவுட்புட் மூலம் இன்ஃப்ளூயன்ஸ் ஆவதோ கூடாது. உதாரணமாக – sunny leone gave a great display in her latest steamy scene. என்பதை எப்படி மொழிபெயர்ப்பார்கள் என எண்ணி இன்புறுகிறேன்.

நண்பர்கள் எம் டி எம் பாணியில் அல்லது டீப்ஸீக் பாணியில் முயன்று பார்க்கலாம். சன்னி லியோன் ,அவரின் சமீபத்திய நீராவிக் காட்சியில் பெரும் காட்சியைக் கொடுத்தார்.