ஃப்ரெஞ்ச் எழுத்தாளர் Pierre Guyotat பற்றி பலமுறை எழுதியிருக்கிறேன். அவர் தனது நாவல்களில் ஒரு விநோதமான மொழிநடையைக் கையாள்கிறார். எந்த வாக்கியமும் முழுசாக இருக்காது. என்னுடைய கர்னாடக முரசு, ஜோக்கர் போன்ற கதைகளைப் படித்திருக்கிறீர்களா? அப்படித்தான் ஒவ்வொரு வார்த்தையும் துண்டு துண்டாக இருக்கும். நாவல் முழுதுமே அப்படித்தான். நான் பியர் க்யூத்தாவை ஆங்கில மொழிபெயர்ப்பில்தான் படித்தேன். புரிந்தது. அதை நான் தமிழில் மொழிபெயர்த்தால் அப்படியேதான் மொழிபெயர்ப்பேன்.
ஆனால் ஊம்பர்ட்டோ எக்கோ, பியர் க்யூத்தாவின் மொழியில் துண்டு துண்டாக எழுதவில்லை. சிக்கலான மொழிநடையாக இருந்தாலும், தெளிவாகப் புரிகிறதே? அதை ஏன் எம்.டி.எம். துண்டு துண்டாக குடிகாரன் வாந்தி எடுத்தது போல் வார்த்தை வார்த்தையாகத் துப்பியிருக்கிறார் என்பதுதான் என் கேள்வி. சிக்கலான மொழி நடை வேறு. வாக்கியத்தைத் தவறாக எழுதுவது வேறு. அதை நான் என்னுடைய பழைய கட்டுரையில் சுட்டிக்காட்டியிருக்கிறேன்.
மற்றபடி, ஐரோப்பிய கிராமம் ஒன்றில் இருட்டுக் கடை அல்வா கிடைக்கவில்லையே என்று புலம்பும் ஆள் அல்ல நான்.
இன்னொரு முக்கிய விஷயம். தமிழ் இலக்கிய வாசகர்களின் அந்நிய மோகம். இப்போது ரோஜாவின் பெயர் என்ற மொழிபெயர்ப்பு நூலுக்கு – அதுவும் ஒரு கொடுமையான மொழிபெயர்ப்பு – கிடைக்கும் மரியாதையும், விமர்சனமும், திட்டும், ஆதரவும் வேறு தமிழ் நாவலுக்கு வந்திருக்கிறதா? பாராட்டக் கூட வேண்டாம், திட்டவாவது செய்திருக்கிறார்களா? தமிழ் நாவல்களுக்குக் கிடைப்பது முழுமையான புறக்கணிப்பு. இந்த அந்நிய மோகத்தைத்தான் நான் சாடுகிறேன்.