யார் மீதும் வன்மம் இல்லை!

இன்றுதான் முதல் முறையாக குறியியல் பேராசிரியர் என் பெயரை சாரு நிவேதிதா என்று அவர் வாழ்நாளில் உச்சரித்திருக்கிறார். இதுவரை அவர் என் எழுத்து பற்றி ஒரு வார்த்தை சொன்னதில்லை. அது பற்றி எனக்கு அக்கறையும் இல்லை. விஷயம் என்னவென்றால், முழுமையான புறக்கணிப்பு. அது ஒரு தந்திரமான உபாயம். வெளிநாட்டு எழுத்தாளர்கள் பற்றிப் பேசுவேன். உள்ளூர் எழுத்தாளன் மயிருக்கு சமானம். ஆனால் நான் அப்படி அல்ல. பாராட்டாக இருந்தாலும் விமர்சனமாக இருந்தாலும் இரண்டையும் பேசுவேன். உண்மையில் நான் பேராசிரியர் போன்ற தந்திரம் தெரிந்தவனாக இருந்தால் ரோஜாவின் பெயரை அப்படியே புறக்கணித்திருக்க வேண்டும். நான் அப்படிச் செய்யவில்லை. செய்ய மாட்டேன்.

எனக்கு வன்மமோ முன்முடிவுகளோ எதுவும் இல்லை என்பதற்கு இங்கே ஒரு சான்று தருகிறேன். நான் தமிழில் வரும் மொழிபெயர்ப்பு நூல்களைப் படிப்பதில்லை. ஆனாலும் ரோஜாவின் பெயரை 899 ரூ. கொடுத்து வாங்கியதற்கு ஒரே காரணம் ஊம்பர்ட்டோ எக்கோ அல்ல. அவரது புனைவுகளின் மீது எனக்கு எந்த மரியாதையும் இல்லை. அவர் எழுதுவது ஒரு இண்டலெக்சுவல் கேம். அவ்வளவுதான். ஆனாலும் எம்.டி.எம்.மின் தமிழ் எனக்குப் பிடிக்கும். அவர் ஸில்வியா என்ற பெயரில் எழுதிய கதைகளில் இருந்த மொழி வசீகரமானது என்ற அபிப்பிராயத்தினாலேயே இந்த மொழிபெயர்ப்பு நூலை வாங்கினேன். ஏமாந்தேன். அதை எழுதினேன். ஒரு ஏமாற்று வேலை நடந்திருக்கும்போது அதைக் கொஞ்சும் மொழியிலா எழுதுவார்கள்? ஆபாசத்தை ஆபாச மொழியில்தான் எழுதித் தீர்த்துத் தொலைய வேண்டியிருக்கிறது.

வன்மமோ முன்முடிவுகளோ இல்லாதவன் என்று எப்படிச் சொல்கிறேன்?

தேவி பாரதியின் சிறுகதைகளும், குறுநாவல்களும், நாவல்களும் எனக்குப் பிடித்தமானவை. அதிலும் அவர் எழுதிய நொய்யல் என்ற நாவல் தமிழ் உரைநடையில் ஒரு மகத்தான சாதனை என்பது என் கருத்து. அது பற்றி மிக விரிவாக எழுதினேன். அது மட்டும் ஒரு ஐரோப்பிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டால் உலகின் தலைசிறந்த நாவல்களில் ஒன்றாகக் கருதப்படும் என்று எழுதினேன். ஆனால் தேவி பாரதி என்னைப் பற்றி என்ன எழுதியிருக்கிறார்? என்னைப் பற்றி எழுதப்பட்ட அவதூறுகளிலேயே மகா மட்டமான அவதூறு தேவி பாரதி எழுதியதுதான். தேவி பாரதி எழுதிய வார்த்தைகளை அப்படியே இங்கே எழுத என்னிடம் மேற்கோள் இல்லை. ஆனால் கருத்தை மட்டும் எழுதுகிறேன். வெங்கரயாம்பாளையம் என்ற அவரது கிராமத்துக்கு நான் போனேன். அவர் வீட்டில் தங்கினேன். குடித்தேன். குடித்து விட்டு வாந்தி எடுத்தேன். வீட்டில் பெண் பிள்ளைகளெல்லாம் இருந்தும் அந்த வீட்டை விட்டு நான் கிளம்பவே இல்லை. தேவி பாரதிதான் என்னை வீட்டை விட்டு விரட்டாத குறையாகக் கிளப்பி அனுப்பினார். பஸ்ஸுக்கும் காசு கொடுத்தார்.

இதுதான் அவர் எழுதிய அவதூறு. நான் அந்தக் காலகட்டத்தில் மாதம் ஒருமுறை சேலம் செல்வேன். அங்கே மணிக்கு ஒரு பங்களா இருந்தது. அங்கே போய் தங்குவேன். தேவி பாரதி என்னை வருந்தி அவர் இல்லத்துக்கு அழைத்தார். போனேன். ஒரு இரவு மட்டும் தங்கினேன். அதிலும் வீட்டுக்குள் இல்லை. வெளியே நிலவொளியில். குடித்தோம். குடித்து முடித்த பிறகு கிளம்பி விட்டேன். அவருக்குத்தான் நான் பணம் கொடுத்திருப்பேனே ஒழிய அவரிடம் நான் கையேந்தும் நிலையில் நான் அப்போது இல்லை. ஆனால் ஒரு விஷயம் எனக்கு இப்போதும் ஞாபகம் இருக்கிறது. “தேவி பாரதி, உங்கள் வீட்டில் பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள். நண்பர்களோடு வீட்டில் வைத்து மது அருந்தாதீர்கள். என்னோடு மது அருந்த வேண்டுமானால் சேலம் வாருங்கள். பெரிய பங்களா இருக்கிறது. எத்தனை நாள் வேண்டுமானாலும் தங்கி மது அருந்தலாம்.”

இது அவரிடம் எப்படியெல்லாம் மாற்றமடைந்திருக்கிறது பாருங்கள். உண்மையில் நான் மிகுந்த வருத்தமடைந்தேன். இனிமேல் எவன் அழைத்தாலும் அவன் வீட்டுக்குப் போகக் கூடாது என்று முடிவெடுத்தேன். இதுவரை என் வாழ்நாளில் குடித்து விட்டு நான் வாந்தி எடுத்ததும் இல்லை.

இப்படி ஒரு அவதூறை எம்.டி.எம். ஒருபோதும் செய்ததில்லை. அவர் என் பெயரையே உச்சரித்தது இல்லை. ஆனால் தேவி பாரதியின் நொய்யல் மட்டும் அல்லாது கடந்த இருபது ஆண்டுகளாக அவரது எழுத்து அவ்வளவையும் நான் வானளாவப் புகழ்ந்தே வந்திருக்கிறேன். எப்படி? இன்று தமிழிலிருந்து ஆங்கிலத்துக்குப் போவதற்குத் தகுதியான எழுத்தாளர் பெருமாள் முருகன் அல்ல, தேவி பாரதிதான். அவர் மட்டும் ஆங்கிலத்துக்குச் சென்றிருந்தால் தமிழின் சமகால இலக்கியம் பற்றி உலகம் பெருமிதம் கொண்டிருக்கும் என்றெல்லாம் எழுதினேன். பதிலுக்கு அவர் என்ன எழுதினார்? புவனேஸ்வரி கவனி. நான் கெட்ட பெயர் எடுக்கிறேன் என்று சொல்கிறாய் அல்லவா? நான் தேவி பாரதியை நவீன தமிழ் எழுத்தின் மகத்தான பிரதிநிதி என்று எழுதினால் அவர் என்னை வீட்டுக்கு வந்து குடித்து விட்டு வாந்தி எடுத்தார், பெண்களிடம் வம்பு பண்ணினார், நான் தான் அவரை விரட்டி அடித்தேன் என்று எழுதுகிறார். பார்த்தாயா நான் எப்படி கெட்ட பெயர் வாங்குகிறேன் என்று? இது என் தலையில் ஓத்த விதி. நான் ஒன்றும் பண்ண முடியாது. ஒருத்தரை தமிழின் தலை சிறந்த எழுத்தாளர், நொய்யல் தமிழ் எழுத்தின் சாதனை என்று எழுதுகிறேன். அவர் என்னைக் கேவலமாக அவதூறு செய்கிறார்.

அது போகட்டும். என் மீது இப்போது வன்மம், முன்முடிவு என்றெல்லாம் ஆபாசத்தைக் கொட்டுகிறீரே எம்.டி.எம்., நான் தேவி பாரதி விஷயத்தில் வன்மத்தோடா நடந்து கொண்டேன்? முன்முடிவுகளோடா நடந்து கொண்டேன்? என் மீது படு ஆபாசமான அவதூறை எழுதியவரைக் கூட நான் எப்படி எதிர்கொண்டேன்? காரணம், நீங்கள் என்னைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்பது உங்கள் எழுத்தை நான் மதிப்பீடு செய்வதற்கு அளவுகோலாக இருக்காது என்பதுதான். நீர் என் கண்களைக் கூட கொய்து கொண்டிருக்கலாம். ஆனால் நீர் ஒரு நல்ல நாவல் எழுதினால் நான் தான் அதைப் பாராட்டக் கூடிய முதல் ஆளாக இருப்பேன். இருந்து வருகிறேன். ரான் படத்தில் வரும் கண் பார்வையற்ற சிற்றரசன் லியர் மன்னனிடம் என்ன சொல்கிறான்? மன்னா, என் கண்களைப் பிடுங்கினீர்கள். ஆனால் அதை நான் மறந்து விட்டேன். என் இருப்பிடத்துக்கு வந்திருக்கும் உங்களுக்கு என் புல்லாங்குழல் இசையைப் பரிசளிக்கிறேன் என்கிறான். அவன் தான் நான்.

ஆம் எம்.டி.எம். உங்கள் மொழிபெயர்ப்பை நான் ஒரு முன்முடிவோடுதான் எடுத்தேன். ஆஹா, நம் பழைய நண்பனின் அழகு தமிழைப் பார்க்கப் போகிறோம் என்ற முன்முடிவு. ஆனால் அங்கே இருந்தது பாதாள சாக்கடை. நான் என்ன செய்யட்டும், நண்பரே? பாதாள சாக்கடை மூஞ்சியில் வீசப்பட்டால் அன்பு மொழியிலா பதில் சொல்வேன்? கெட்ட வார்த்தையில்தான் கத்துவேன். ஆனால் வன்மத்தோடு இதுவரை எந்த ஒரு இலக்கியப் பிரதியையும் நான் தொட்டதில்லை. அது என் உயிரை விட மேலான இலக்கியத்துக்கு நான் செய்யும் அநீதி. நான் எழுத்துக்காகவே வாழ்கிறேன். எழுத்தே என் மூச்சு. அங்கே போய் நான் வன்மம் பாராட்ட மாட்டேன்.

இதற்கு மேல் இது பற்றி எதுவும் எழுத மாட்டேன்.