பொறாமை

நான் முற்றும் போட்டாலும் சில முண்டக் கலப்பைகள் என்னைத் தொடர்ந்து இந்தக் கச்சடா விஷயம் பற்றி எழுத வைக்கின்றன. ஒரு முண்டக் கலப்பை எழுதுகிறது, சாவு வீட்டில்கூட நாம்தான் பிரதானமாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் ஆளாம் நான். அட முண்டமே, சாவு வீடுகளுக்கே நான் போவதில்லை. ஏனென்றால், செத்தவர்கள் மீதான பிரியத்தினால் நானும் மயக்கம் போட்டு விழுந்தோ, அல்லது, ஹார்ட் அட்டாக் வந்து பிணமாகவோ ஆகி விடுவதற்கான சாத்தியங்கள் உண்டு என்பதை சில சாவு வீடுகளுக்குப் போய் அனுபவித்திருக்கிறேன். ஐயோ, ரெண்டு பொணம் வேணாம் என்றே ஓடி வந்திருக்கிறேன். அதன் காரணமாகவே ஞானக்கூத்தனின் மறைவுக்கு நான் போகவில்லை.

எம்.டி. முத்துக்குமாரசாமி மீது எனக்குப் பொறாமையாம். நான் நூறு புத்தகங்கள் எழுதியிருக்கிறேன். இன்னும் இருபது நூல்கள் அச்சில் உள்ளன. எம்.டி.எம். இன்னும் ஒரு புத்தகம் கூட சொந்தமாக எழுதவில்லை. அவர் மீது நான் எப்படி பொறாமை கொள்ள முடியும்? நான் மிகுந்த கோபத்தில் இருக்கிறேன். பொறாமையில் இல்லை. நான் விழித்திருக்கும்போதே ஒருத்தன் என் வாயில் தன் குறியியலைச் சொருகி விட்டானே என்ற வெறியில் இருக்கிறேன்.

ஏனென்றால், நான் தமிழில் வெளிவரும் மொழிபெயர்ப்பு நூல்கள் எதையுமே படிப்பதில்லை. ஜி. குப்புசாமி என்றால் மட்டுமே காசு போட்டு வாங்குவேன். இத்தனைக்கும் ஜி. குப்புசாமி என்னை சமயம் கிடைக்கும் போதெல்லாம் திட்டிக் கொண்டிருப்பவர். அது எஜமான விசுவாசம். அது பற்றி எனக்கு ஆட்சேபணை இல்லை. ஒருவர் எப்படி இருக்கிறார், அவர் என் எழுத்தை எப்படிப் பார்க்கிறார் என்பது எனக்கு முக்கியமே இல்லை. என் தமிழுக்கு அவர் எப்படி இருக்கிறார் என்பதே எனக்குத் தேவை. இத்தனைக்கும் ஜி. குப்புசாமி என் எழுத்து எதையுமே படித்ததில்லை. ஆனாலும் அவர் மொழிபெயர்ப்பை சிரத்தையாகச் செய்கிறார். அது எனக்குப் போதும்.

ஆனால் குறியியல் கிரிமினல் செய்திருப்பது மோசடி வேலை. இலக்கியத்தில்தான் ஒருவன் நேர்மையாக இருக்க வேண்டும். ஏனென்றால், இது ஒரு தவம். இங்கே நீங்கள் உங்களின் ஆன்மாவை உருக்கி எழுத்தாக்குகிறீர்கள். இதற்காக நீங்கள் உங்கள் குடும்பத்தை இழக்கிறீர்கள். பொருளை இழக்கிறீர்கள். எத்தனையோ சௌகரியங்களை இழக்கிறீர்கள். இழப்பில் மட்டுமே வாழ்கிறீர்கள். அப்படித்தான் உருவாகிறது இலக்கியம். புதுமைப்பித்தனின் வாழ்வு ஒரு உதாரணம். இங்கே வந்து ஒருத்தன் – அதுவும் புதுமைப்பித்தன் பிறந்த அதே சமூகத்தில் பிறந்த ஒருத்தன் – வந்து ஃப்ராடு வேலை செய்கிறான் என்றால் அவனை கிரிமினல் என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்வது?

குறியியல் பேராசிரியர் செய்ததை ஏன் மோசடி வேலை என்கிறேன் என்றால், ஏஐயில் பல வகை இருக்கின்றன. எல்லாவற்றிலும் நேம் ஆஃப் தெ ரோஸின் சில பத்திகளைப் போட்டுப் பார்த்தேன். அவற்றில் ஒன்றே ஒன்றைத் தவிர மற்ற ஏஐக்களில் குறியியல் பேராசிரியர் செய்திருப்பதை விட நன்றாக வந்தன. ஒரே ஒரு ஏஐயில் மட்டுமே – டீப் சீக் – குறியியல் பேராசிரியர் பண்ணினது போலவே வருகிறது. எனக்கு டீப் சீக் பற்றித் தெரியாது. காலையில் அராத்துவிடம், குறியியல் பண்ணினதை விட ஏஐ மொழிபெயர்ப்பு நன்றாக இருக்கிறதே என்று நான் குறிப்பிட்ட போது அவர் டீப் சீக் பற்றிச் சொன்னார். அதில் போட்டுப் பார்த்தால் அப்படியே குறியியல் பேராசிரியர் பண்ணின மொழிபெயர்ப்பு அதில் இருந்தது. ஆனால் பேராசிரியர் சில சொந்த வேலையும் செய்திருக்கிறார். டீப் சீக் கொடுத்த மெட்டீரியலை மேலும் கெடுத்து வைத்திருக்கிறார்.

இந்த நாவலை வாங்கியவர்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. என் மீதும்தான். நானும் வாங்கியிருக்கிறேன். பதிப்பாளரை நினைத்தால் வேதனை இன்னும் கூடுகிறது. பெரும் பணம் கொடுத்துத்தான் மொழிபெயர்ப்பு உரிமையை வாங்கியிருக்க வேண்டும். அதில் போய் மோசடி வேலை செய்திருக்கிறார் பேராசிரியர். போயும் போயும் இலக்கியத்தில் மோசடி செய்ய உங்கள் மனசாட்சி உறுத்தவில்லையா?

இந்த மோசடி பேர்வழியை நான் ஒருமுறை விமான நிலையத்திலும் – விரிவுரை ஆற்றுவதற்காக அடிஸ் அபாபா சென்று கொண்டிருந்தார் – அப்புறம் பல முறை இலக்கிய நிகழ்வுகளிலும் பார்த்திருக்க்றேன். கை குலுக்கி சிரித்துப் பேசிக் கொள்வோம். இனிமேல் அப்படிச் செய்ய இயலாது. இலக்கியத்தில் கிரிமினல் வேலை செய்பவரோடு என்னால் முகம் கொடுத்துக் கூடப் பேச முடியாது. நான் தமிழில் வரும் மொழிபெயர்ப்பு நூல்களையே வாங்குவதில்லை. இந்தக் குறியியல் பேராசிரியரின் தமிழ் அறிவை நம்பியே வாங்கினேன். இவரோ ஊம்பர்ட்டோ எக்கோ பெயரைப் போட்டு என் வாயில் குறியியலைத் திணித்து விட்டார்.

இந்தக் கிரிமினல் வேலைக்கு சமமாக ஒன்றைச் சொல்லலாம். பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கிரிமினல் குழந்தைகளின் உணவுப் பொருளில் கலப்படம் செய்தான். அதன் காரணமாக பல குழந்தைகள் உயிரிழந்தன. அவனை சிறையில் தள்ளினார்கள். இந்தக் குறியியல் பேராசிரியர் செய்திருப்பதும் இதே காரியம்தான். உயிரிழப்பு நேரவில்லை. ஆனாலும் குளத்தில் விஷம் கலந்தது போல் ஆகியிருக்கிறது.

சில மாதங்கள் முன்பு தமிழில் எனக்குப் பிடித்த கவிஞர் ஒருவர் தன் கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வுக்கு அழைத்தார். அந்தத் தேதியில் நான் வெளியூர் செல்ல இருந்ததால் வர இயலாது என்றேன். கடைசியில் பார்த்தால் அழைப்பிதழில் இந்தக் குறியியல் பேராசிரியர் பெயர் இருந்தது. நல்லவேளை, தப்பினேன். பிறகு கவிஞரை அழைத்து இனிமேல் அந்தக் குறியியலை அழைத்தால் என்னை அழைக்காதீர்கள் என்று சொன்னேன்.

மீண்டும் சொல்கிறேன், முட்டாள் தவறு செய்தால் மன்னிப்பு உண்டு. அறிவாளி செய்யும் ஏமாற்று வேலைக்கு மன்னிப்பு கிடையாது. சாருவுக்குப் பொறாமை என்று எழுதியிருக்கும் முண்டக் கலப்பைக்கு மன்னிப்பு உண்டு. அது முட்டாள்தனமாக உளறுகிறது. சர்வதேச அளவில் இன்று எழுதும் எந்தப் பிரபலமான எழுத்தாளர் மீதும் எனக்குப் பொறாமை கிடையாது. காரணம், நான் அனைவரையும் தாண்டி விட்டதாக நம்புகிறேன். ராஸ லீலா உலகின் தலைசிறந்த பத்து நாவல்களில் ஒன்று என நான் மதிப்பிடுகிறேன். ஆனால் லௌகீக ரீதியாக அருந்ததி ராய், ஹருகி முராகாமி போன்றோர் மீது பொறாமை உண்டு. காரணம், ஹருகி முராகாமி ஆயிரம் கரணம் போட்டாலும் என் நிழலைக் கூடத் தொட முடியாது. சர்வதேச இலக்கியத்தில் சூப்பர் ஸ்டாராக விளங்கும் ஊம்பர்ட்டோ எக்கோவின் மீது கூட எனக்குப் பொறாமை இல்லை. அவரையெல்லாம் நான் இடக்கரத்தால் ஒதுக்கி விட்டு முன்னே போய் விட்டேன்.

மேலும், முண்டக் கலப்பைக்கு ஒரு விஷயம். என்னுடைய ஸீரோ டிகிரி, பெட்டியோ ஆகிய நாவல்களில் நான் வழங்கியிருக்கும் தமிழை குறியியல் பேராசிரியர் கனவில் கூட நெருங்க முடியாது. தமிழ் உரைநடையின் பேரரசன் நான். அப்படிப்பட்ட நான் போய் தமிழில் ஒரு வாக்கியத்தைக் கூட ஒழுங்காக எழுதத் தெரியாத இந்தப் பேராசிரியர் மீது பொறாமைப்படுவதா? என்ன சேட்டு இது? அதீத போதையில் எழுதி விட்டீரோ?