அழகான கல்

கானகத்திலே தனித்துக்
கிடந்ததொரு கல்
அமர்ந்து கொள்வதற்கும்
சாய்ந்து கொள்வதற்கும்
வசதியான
வழுவழுப்பான கல்

தோழிகளை அழைத்து வந்தால்
அந்தக் கல்லில் வைத்துத்தான்
கலவி கொள்வது

தோழிகள் இல்லையெனில்
அந்தக் கல்லில் அமர்ந்துதான்
கரமைதுனமும்

ஒருநாள் ஒரு
அதிசயம்
நடந்தது

அந்தக் கல்
அவனிடம்
பேசியது

வள்ளுவன் அந்தக் குரலைக்
கேட்கவில்லை
கேட்டிருந்தால் மழலைச் சொல்
குறித்து அப்படியொரு குறளைத்
தொடுத்திருக்க மாட்டான்
வசியம் செய்யும் குரல்

ஆனால்
கல் பேசுமா?
எங்கேயும் கேட்டதில்லை
எங்கேயும் கண்டதில்லை

அந்தக் கல் பேசியது

கல் பேசினால்
கடவுள்

மண்ணும் மலையும்
கடலும் உலகேழும்
நின்னிடமே காண்கின்றேன்
நீயே சரணமென
வீழ்ந்த அவன்
அந்தக் கணத்திலிருந்து
வேறாளாய் மாறிப்
போனான்

நீதான் என்னை மாற்றினாய்
நன்றி என்றான்

இல்லை என்றது தெய்வம்
நான் எப்போதுமே
இப்படியேதான்
இருக்கிறேன் என்றது

“இல்லை,
பேசாதபோது கல்
பேசியபின்
தெய்வம்’
என்றா
னவன்.