2. நிழலிலி

1

வாழ்நாள் எல்லாம் எழுதுகிறேன்

சிலருக்குப் பிடித்தது

சிலருக்குப் பிடிக்கவில்லை

2

பைத்தியம்

பிடிக்காமலிருப்பதற்காகக்

குடித்தேன்

குடிகாரன் என்றார்கள்

தனிமையை விரட்டப் பெண்கள் நாட்டம்

ஒவ்வொரு பெண்ணுக்குப் பின்னாலும்

ஆயிரம் நிழல்கள், ஆயிரம் கவலைகள்

எனக்கே எனக்கென ஒருத்தி

கிடைத்தாளில்லை

கிடைத்தவளும்

அன்பைக் கையிலெடுத்துக்கொண்டு

சுழற்றிச் சுழற்றி அடித்தாள்

படுகாயமுற்றேன்.

3

கேட்டதைக் கொடுக்கும்

என் கர்த்தாவிடம்

’அதிகாலையின் ஆதவனைப் போல

நிலவின் சஞ்சாரத்தைப் போல

நட்சத்திரங்களின் மினுமினுப்பைப் போல

தென்றலின் இனிமையைப் போல

குழந்தையின் முதல் வார்த்தையைப் போல

கிறிஸ்துமஸ் மரங்களில் விழுந்து படியும்

பனித்துளிகளைப் போல

யாருமற்ற மலையடிவாரங்களின்

தனிமையைப் போல

ஹராகிரி செய்யப் போகிறவனின்

கரத்திலிருக்கும்

கூர்வாளின் முனையைப் போல

அகல்விளக்கின் சுடரைப் போல

அந்தியில் மலர்ந்து மயக்கும்

அந்திமல்லியைப் போல்

எனக்கொருத்தி வேண்டும்’

எனக் கேட்டேன்

4

நிழலற்ற பெண்ணாக

வந்ததொரு

அதிசயம்