பக்கத்து வீட்டு பால்கனிக்கும்
என் வீட்டு பால்கனிக்கும் இடையே
பதினைந்தடி இருக்கும்
இங்கே தும்மினால் அங்கேயும்
அங்கே தும்மினால் இங்கேயும்
கேட்கும்
அந்தரங்கமேயில்லை,
ஒரு படுதா போடலாமென்ற
என் யோசனை மனையாளால்
நிராகரிக்கப்பட்டது.
சூரிய ஒளியைப் படுதா
மறைத்து விடுமாம்.
தலைவனுக்கு வயது 55
தலைவிக்கு 50
மகள் வயது 20
எல்லாம் குத்துமதிப்புதான்
இது தவிர தலைவனின் தாய் தந்தை
அவர்களின் வயது
நமக்குத் தேவையில்லை
காலை ஐந்து மணிக்கு
பால்கனி சாளரங்கள் திறக்கப்படும்
தலைவி யோகா செய்வாள்
ஏதோ என் வீட்டுக்குள்ளேயே இருந்து
செய்வதுபோல் இருக்கும்
(படுதா கூடாது, சூரிய ஒளியை
மறைக்கும்)
இப்படியே
என் வீட்டுக் காரியங்கள்
அங்கேயும்
அந்த வீட்டுக் காரியங்கள்
இங்கேயும்
நடப்பதுபோல் தோற்றம்
கொள்ளும்
மாதமொருமுறை வேதமந்த்ரங்கள்
ஒலிக்கும்போது அன்று
அமாவாசையெனத் தெரிந்து கொள்ளலாம்
தெரிந்துகொண்டு என்ன செய்ய?
தலைவன் வாரவிடுமுறைக்
கணவன் போல
ஒவ்வொரு சனிக்கிழமை
இரவு எட்டு மணிக்குத் தொடங்கும்
சண்டை நள்ளிரவுதான் ஓயும்
சண்டையின் அம்சங்கள்:
கைகலப்பு இராது
இருவர் குரலும் ஏழு தெருவுக்குக்
கேட்கும்
கூச்சல் கேட்டு
தெருநாய்கள் குரைக்கத் தொடங்கும்
ஒரு கட்டத்தில்
மனிதக் குரல்களுக்கும்
நாய்களின் குரல்களுக்கும்
வித்தியாசம் தெரியாதபடி
கூச்சல் ஒன்றாகி
அசுரரூபமெடுத்துக்
கிடுகிடாய்த்துப் போகும்
தெரு
மேற்கத்திய நாடென்றால்
போலீஸை அழைக்கலாம்
இங்கே அழைத்தால் நம்மைப்
பைத்தியமென்னும் சமூகம்
என்னதான் அறைக்கதவை
அடைத்தாலும் சண்டைச் சத்தம்
சவ்வைக் கிழிக்கும்
சமயங்களில் தலைவி
அறைக்குள் போய் தாளிட்டுக்
கொள்வாள் அப்போதுதான்
மகளின் பிரவேசம் நடக்கும்
கத்தி அலறியபடி அறைக்கதவை
உடைப்பாள் மகள்
இந்த சனி ஞாயிறு சண்டை
அடுத்த சனி ஞாயிறு வரை
என் மனதை ரணமாக்கும்
அதோடு பல கேள்விகளும்
தோன்றும்…
ஏன் அவர்கள் அலுப்பே இல்லாமல்
சண்டையிலேயே வாழ்கிறார்கள்?
சண்டையில் எப்படி இத்தனை ஒழுங்கு?
அவர்களுக்குள் செக்ஸ் முடிந்து எத்தனை
காலமிருக்கும்?
மற்ற நேரங்களில் தமிழில் பேசுபவர்கள்
சண்டையில் மட்டும் ஆங்கிலத்துக்குத் தாவுவதேன்?
சண்டையில் ஏன் ஒரு கெட்ட வார்த்தைகூடப் புழங்குவதில்லை? (இதை என்னால் நம்பவே முடியவில்லை)
நான்சென்ஸ், இடியட் போன்ற
சாதா வார்த்தைகளும் தென்படுவதில்லையே?
மற்றபடி
அந்த இல்லத்திலிருந்து ஒழுகிவரும்
இருண்மை என்
எழுத்தில் படிந்து விடாமலிருக்க
கொஞ்சம் அதிகமாகக்
குடிக்க வேண்டியிருக்கிறது