கோடைமழை பொய்த்து விட்டது
வந்தால் வரும்
இல்லாவிட்டால் இல்லை
கோடைமழை அப்படித்தான்
கோடையோடு நுங்கும்
பதநீரும் விதவிதமாய்
மாம்பழமும் வந்தாயிற்று
இளநீர் விற்கும் தள்ளுவண்டி முன்
கூட்டம் அதிகம்
மரஞ்செடிகொடிகள் கொஞ்சம்
வாடித்தான் போயிருக்கின்றன
தெருப்பிராணிகளும்
பட்சிகளும் குடித்து
தாகம் தீர்க்கவென்று
அபிமானிகள் சிலர்
தம் வீட்டு வாசலில்
மண்சட்டியில் நீர் வைத்
திருக்கிறார்கள்
கையில் மொபைல்ஃபோன்
காதுகளில் ஏர்பாட்
சகிதமாக வழக்கம்போல்
மோகினிக்குட்டியுடன் பேசியபடி
நடக்கிறேன்
’கையிலுள்ள மொபைல்ஃபோன்
கவனம்,
இப்போதுதான் ஒரு திருடன்
ஒரு நடைப்பயிற்சியாளரின்
மொபைல்ஃபோனைப்
பறித்துக்கொண்டு பைக்கில் பறந்தான்’
என்றார் சாலையைப் பெருக்கிக்
கொண்டிருந்த துப்புரவுப் பணியாளர்
மொபைல்ஃபோனை
பாக்கெட்டில் வைத்தேன்
கழுத்திலிருந்த சங்கிலியை
சட்டைக்குள் போட்டேன்
இந்த காந்தி நகரில்
மரங்கள் அதிகம்
வெய்யில் தெரியவில்லை
எதிரே வந்த ஒருவர்
என்னைக் கண்டு
ஹலோ என்றார்
நானும் ஹலோ சொல்லித்
திரும்பினால் ஆளைக்
காணோம்
ஒரு சுற்று சுற்றினால்
என் பின்னே நிற்கிறார்
அகவை அறுபது இருக்கலாம்
தலையில் தொப்பி
சிவப்புச் சட்டை
கறுப்பு நிக்கர்
ஆள்
ஹீரோபோலிருந்தார்
இதே ஷூ என்னிடமும்
இருக்கிறது
என்றார்
என் புன்சிரிப்பைப்
பெற்றுக்கொண்டு
கிளம்பிவிட்டார்
நானும் மோகினிக்
குட்டியுடன் பேச்சைத்
தொடர்ந்தேன்
அப்புறம்தான் ஞாபகம்
வந்தது
அந்த ஷூ தோக்யோவில்
மட்டுமே கிடைக்கும்
அதை அவரிடம் சொல்லியிருந்தால்
ஒரு நீண்ட கால நட்பு
வாய்த்திருக்கும்
அதற்குப் பிறகும்
தினமும் ஒரே நேரத்தில்தான்
நடக்கிறேன்
அந்தத் தொப்பிக்காரரைக்
காண முடியவில்லை