இந்தக் கட்டுரையை நேற்றைய கட்டுரையோடு சேர்த்து வாசிக்கலாம். பல ஜனரஞ்சக எழுத்தாளர்கள் ஏதோ ஆர்வக் கோளாறின் காரணமாக அல்லது விதியின் கோர விளையாட்டுகளில் ஒன்றாக திடீரென்று இலக்கியக் கதை எழுதலாம் என்று முடிவெடுப்பது உண்டு. இருநூறு ஜனரஞ்சக நாவல்கள் எழுதியிருப்பார்கள். அல்லது, ராஜேஷ்குமாருக்குப் போட்டியாக ஒரு எண்ணூறு நாவல் எழுதியிருப்பார்கள். ராஜேஷ்குமார் ஆயிரம் என்று நினைக்கிறேன். இளையராஜா அடிக்கடி சொல்லிக் கொள்வது போல ராஜேஷ்குமார் போல ஆயிரம் நாவல்கள் எழுதியோர் உலகில் யாரும் இலர். இளையராஜா பத்தாயிரம் பாடல்கள். ராஜேஷ்குமார் ஆயிரம் நாவல்கள். இரண்டுமே உலக சாதனைகள்தான். நாம் இப்போது அது பற்றிப் பேசவில்லை. ஜனரஞ்சக எழுத்தாளர் திடீரென்று இலக்கியம் பக்கம் நகர்வது. பலரும் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். நாம்தான் இருநூறு முந்நூறு நாவல் எழுதி விட்டோம். நாம் ஏன் இமையம் மாதிரி, அம்பை மாதிரி, லக்ஷ்மி சரவணகுமார் மாதிரி கொஞ்சம் இலக்கிய நாவல்கள் எழுதக் கூடாது?
அவர்கள் கொஞ்சம் கெட்ட வார்த்தைகள் கலக்கிறார்கள். நாம் அப்படிக் கலப்பதில்லை. இலக்கியம் என்றால் கொஞ்சம் வெளிப்படையாகக் கெட்ட வார்த்தையைப் போட்டு விட வேண்டியதுதான்.
இதுதான் ஜனரஞ்சக எழுத்தாளர்களின் எண்ணம். மற்றபடி இலக்கியம் என்றால், உங்கள் உடல் பொருள் ஆவி மூன்றையும் நெருப்பில் போட்டு எரிக்க வேண்டும் என்பதெல்லாம் அந்த அசடுகளுக்குத் தெரியாது.
இப்படித்தான் இளையராஜாவின் விஷயமும். என்னிடம் பலரும் உங்களுக்கு ஏன் இளையராஜாவைப் பிடிக்காது என்று கேட்கிறார்கள். சமீபத்தில்கூட கை. அறிவழகன் ஒரு கட்டுரையில் இளையராஜாவை ஏன் சாரு விமர்சித்துக்கொண்டே இருக்கிறார் என்று கேட்டிருந்தார். அவர் என்னுடைய நேற்றைய குறிப்பை வாசிக்க வேண்டும்.
சாருவுக்கு இளையராஜாவைப் பிடிக்காது என்று ஒரு நண்பர் குறிப்பிடுவார். உடனே எதிரே நிற்கும் என் அத்யந்த நண்பர், “அப்படியெல்லாம் இல்லை, சாருவுக்கு பல இளையராஜா பாடல்கள் பிடிக்கும். உதாரணமாக, தென்றல் வந்து தீண்டும்போது பாடலை ஆயிரக்கணக்கான முறை திரும்பத் திரும்பக் கேட்பார்” என்று எனக்காக வாதிடுவார்.
எனக்கோ தர்மசங்கடமாக இருக்கும்.
நான் ஏன் இளையராஜாவை விமர்சிக்கிறேன் என்று இருபது கட்டுரைகள் எழுதி விட்டேன். ஆனாலும் அவற்றைப் புரிந்து கொள்ளாமல் தாங்கள் கேட்டதையே திரும்பத் திரும்ப கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
இளையராஜாவைப் பாராட்டும் ஒரு சினிமா விழாவில் ஒரு சினிமா பாடலாசிரியர் “இளையராஜாவின் பெயரில் ஒரு பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும்” என்று மைக்கில் பேசுகிறார். உடனே மேடையில் அமர்ந்திருக்கும் இளையராஜா அந்தப் பாடலாசிரியரின் பேச்சை நிறுத்தி அவரைத் தன் அருகே அழைக்கிறார். பாடலாசிரியர் மைக்கை இளையராஜாவின் கையில் கொடுக்கிறார். அப்போது ராஜா சொல்கிறார்: ”நான் மக்களின் மனங்களிலே வசிக்கிறேன், என் பெயரில் பல்கலைக்கழகம் தேவையில்லை.”
உடனே கரகோஷம்.
அடக்கொடுமையே! கொஞ்ச காலத்துக்கு முன்னால் எம்.கே. தியாகராஜ பாகவதர் தமிழ் சினிமா ரசிகர்களின் கடவுளாக விளங்கினார். இசைக் கடவுள். இன்று அவர் பெயர் யாருக்காவது தெரியுமா? அப்படித்தான் இளையராஜாவின் பெயரும். இன்று உயிரோடு இருக்கும் மனிதர்களின் மனங்களில் ராஜா பெயர் இருக்கும். நாளை? வேறு ஒரு இசையமைப்பாளரின் பெயர் அங்கே வந்து குந்திக் கொள்ளும். கேளிக்கையாளர்கள் மக்களின் மனங்களில் குந்தியிருக்கும் காலம் விட்டில் பூச்சியைப் போன்றது.
இந்த இடத்தில் மார்வின் காயே (1939 – 1984) என்ற பாடகரை அறிமுகப்படுத்த விரும்புகிறேன். ஆல்பெர் கம்யூவின் மரணத்தைப் போல் அபத்தமாக நிகழ்ந்தது மார்வின் காயேவின் மரணம். 1984ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் நாள் மார்வின் காயேவின் தந்தைக்கும் தாய்க்கும் குடும்பத்தில் பெருத்த சண்டை. சண்டையை விலக்கப் போன மார்வினை சண்டையின் கலவரத்தில் சுட்டு விட்டார் மார்வினின் தந்தை. மறுநாள் – அதாவது, ஏப்ரல் இரண்டாம் தேதி – மார்வினின் 45ஆவது பிறந்த நாள்!
R&B (Rythm and Blues) என்று அழைக்கப்படும் இசை வடிவம் மார்வினுக்கு முன்பு வெறும் காதல் பாடல்களாகவும், நடனத்துக்கான இசையாகவும்தான் இருந்தது. மார்வின்தான் ப்ளூஸை அரசியல் மற்றும் சமூகப் போராட்டத்துக்கான இசையாக மாற்றினார். உதாரணமாக, 1971இல் வெளிவந்த அவருடைய மிகப் புகழ் பெற்ற பாடலான What’s Going On வியத்நாம் போருக்கு எதிரானது. அந்தப் பாடலில் உலகளாவிய இனவாதம், வறுமை, சுற்றுச்சூழல் நாசம் போன்ற பிரச்சினைகளையும் மார்வின் முன்னிலைப்படுத்துகிறார். மேட்டர் பண்ணுவதற்காக வாழைத் தோப்புக்குள் மச்சானைத் தேடும் பாடல்களுக்கு இசை அமைப்பவர்களுக்கும் இசையை சமூகப் போராட்டத்துக்காகப் பயன்படுத்துவர்களுக்குமான வித்தியாசத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.
நான் இளையராஜாவை ஏன் விமர்சிக்கிறேன்?
அவர் மக்கள் யுத்தக் குழுவின் பிரதான பாடகராக இருந்த கத்தாரையும், உலகின் ஒடுக்கப்பட்ட மக்கள் கூட்டத்தினருக்காகவே பாடிய பாப் மார்லியையும் குப்பை என்று சொன்னார். இளையராஜாவை கடவுள் என்ற அளவுக்குப் பாராட்டித் தள்ளி புத்தகம் எழுதிய பேராசிரியர் கே.ஏ. குணசேகரன் அந்தப் புத்தகத்தில் இளையராஜாவை தலித் என்று குறிப்பிட்டு விட்டதற்காக அவர் மீது வழக்குத் தொடுத்தார்.
இப்போது வாட்ஸ் கோயிங் ஆன் பாடலைப் பாருங்கள்:
Mother, mother
There’s too many of you crying
Brother, brother, brother
There’s far too many of you dying
You know we’ve got to find a way
To bring some lovin’ here today, yeah
Father, father
We don’t need to escalate
You see, war is not the answer
For only love can conquer hate
You know we’ve got to find a way
To bring some lovin’ here today
Picket lines and picket signs
Don’t punish me with brutality
Talk to me
So you can see
Oh, what’s going on (What’s going on)
What’s going on (What’s going on)
What’s going on (What’s going on)
What’s going on (What’s going on)Right on, baby
Right on, baby
Right on
Mother, mother
Everybody thinks we’re wrong
Oh, but who are they to judge us
Simply ’cause our hair is long
Oh, you know we’ve got to find a way
To bring some understanding here today
Picket lines and picket signs
Don’t punish me with brutality
Come on talk to me
So you can see
What’s going on (What’s going on)
Yeah, what’s going on (What’s going on)
Tell me what’s going on (What’s going on)
I’ll tell you, what’s going on (What’s going on)
Right on, baby, right on
Right on, baby
Right on, baby, right on
இந்தப் பாடலின் லிங்க்:
https://www.youtube.com/watch?v=H-kA3UtBj4M
மார்வின் காயே ப்ளூஸ் இசையின் போக்கை முழுமையாக மாற்றியதோடு அல்லாமல் ஸ்டீவ் வொண்டர், ப்ரின்ஸ், மைக்கேல் ஜாக்ஸன் போன்றவர்களின் இசைப் பயணத்துக்கு மிகப் பெரும் வழிகாட்டியாக விளங்கினார். மார்வின் காயே இல்லாவிட்டால் ப்ரின்ஸ் இல்லை. மைக்கேல் ஜாக்ஸன் இல்லை.
பின்வரும் லிங்கில் நீங்கள் சில அற்புதமான மார்வின் காயே பாடல்களைக் கேட்கலாம்.
Marvin Gaye – Trouble Man (Extended version)
இப்போது ஸிம்ஃபனி பற்றிப் பார்ப்போம். ஸிம்ஃபனி இசையை உருவாக்க வேண்டுமானால் ஒருவருக்கு மிக ஆழமான தத்துவப் பார்வை இருக்க வேண்டும். வாழ்க்கை பற்றியும், பிரபஞ்சம் பற்றியும் தத்துவார்த்தமான புரிதல் வேண்டும். இசையில் விற்பன்னராக இருந்து விடுவதால் மட்டுமே ஒருவர் ஸிம்ஃபனியை உருவாக்கி விட முடியாது. உதாரணம் சொல்ல வேண்டுமானால், Angst என்ற வார்த்தை தெரியாமல் இருக்கலாம். ஆனால் அந்த வார்த்தையின் ஆழத்தைப் புரிந்து கொண்டிருக்க வேண்டும்.
இது ஒரு கருத்து.
இந்தக் கருத்தை வலியுறுத்துவதற்காக பீத்தோவனின் ஒன்பதாவது ஸிம்ஃபனியைக் குறிப்பிடலாம். 1818–1824 காலகட்டத்தில் பீத்தோவன் தனது ஒன்பதாவது ஸிம்ஃபனியை எழுதிக்கொண்டிருந்த போது அவர் செவிகள் முழுமையாகவே வேலை செய்யவில்லை. அவரால் எந்த சப்தத்தையும் கேட்க இயலவில்லை. அவர் அப்போது மிகவும் பிரபலமாக இருந்தார். விருந்துகளுக்குச் செல்லும்போது மற்றவர்கள் பேசுவதை, அவர்களின் உதடுகள் அசைவதை வைத்து ஏதோ ஆமாம் போட்டு சமாளித்ததாக பீத்தோவன் எழுதியிருக்கிறார். ஆரம்பத்தில் இந்த செவிட்டு விஷயத்தை அவர் யாரிடமும் தெரிவிக்கவில்லை.
இந்த உலகில் சிருஷ்டிக்கப்பட்ட மகத்தான கலைப்படைப்பான ஒன்பதாவது ஸிம்ஃபனியை பீத்தோவன் தனது கேட்கும் திறனை முழுமையாக இழந்திருந்த போது எப்படி உருவாக்கினார்?
மிக மிகச் சிக்கலான இசை அமைப்புகளைக்கூட தனது மனதிலேயே கேட்கும் திறனைக் கொண்டிருந்தார் பீத்தோவன். அதற்காக அவருக்கு செவிகள் தேவைப்படவில்லை.
தனது பற்களின் இடையே ஒரு மரக்குச்சியை வைத்துக்கொண்டு அதன் மூலம் பியானோவை இசைத்து அந்த இசை அதிர்வுகளை அறிந்து கொண்டார்.
தனது இசைக் குறிப்புகளுக்கு அவர் மிக மிக விரிவான நடைமுறை விளக்கங்களைக் கொடுத்தார். யாருக்கும் எந்தச் சந்தேகமும் ஏற்படாதவாறு இருந்தன அவரது இசைக் குறிப்புகள்.
பீத்தோவனின் ஒன்பதாவது ஸிம்ஃபனியின் Ode to Joy கீழே. இது இப்போதைய ஈரோப்பியன் யூனியனின் தேசிய கீதமாக வைக்கப்பட்டுள்ளது.
https://www.youtube.com/watch?v=hdWyYn0E4Ys
1824 மே ஏழாம் தேதி பீத்தோவனின் ஒன்பதாவது ஸிம்ஃபனி இசை ரசிகர்களுக்கு முன் முதல்முதலாக இசைக்கப்பட்டது. பீத்தோவன் தான் இசைக்குழுவை முன்நடத்தினார். ஸிம்ஃபனி முடிந்ததும் பார்வையாளர்களின் கரகோஷம் பீத்தோவனின் செவிகளில் விழவில்லை. உடனே இசைக்குழுவில் இருந்த ஒருவர் பீத்தோவனைத் தொட்டு பார்வையாளர்களைப் பார்க்கச் செய்தார். அப்போதுதான் பீத்தோவன் பார்வையாளர்களின் கரகோஷத்தைப் ”பார்த்தார்.”
ஆனால் மொட்ஸார்ட் பீத்தோவனைப் போன்ற தத்துவ தரிசனம் கொண்டவர் அல்ல. அவருக்கு இசை மட்டுமே தெரியும். ஆனாலும் அவர் உருவாக்கிய ஸிம்ஃபனிகள் மகத்தானவை. எனவே மேலே நான் குறிப்பிட்ட கருத்து அடிபட்டுப் போகிறது. ஒரு இசைக் கலைஞனுக்குத் தத்துவம் தேவையில்லை. இசை மட்டுமே போதும்.
அதே சமயம் அந்தக் கலைஞன் மொட்ஸார்ட் அளவுக்குக் கலைஞனாக விளங்க வேண்டும். ஏனென்றால், குந்துன் மற்றும் The Hours படங்களுக்கு ஃபிலிப் க்ளாஸ் அமைத்திருக்கும் இசையைக் கேட்டால் ஒருவரது ஆளுமையே மாறிவிடக் கூடும்.
ஆனால் தமிழ்நாட்டில் ஆயிரம் கதை எழுதிய அபூர்வ சிகாமணி ஒருவர் பின்நவீனத்துவ நாவல் ஒன்று எழுதியிருப்பதாகச் சொல்கிறார். வாழ்க வளமுடன் என்று வாழ்த்துவதைத் தவிர வேறு என்ன வழி?
எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும்.