கோவாவில் நடந்த புருஷன் நாவல் வெளியீட்டு விழா உரையில் ஃபாத்திமா பாபு சொல்கிறார்கள் நீங்கள் அராத்துவின் குரு என்று. Grand Narrative பற்றிய ஒரு விடியோ பதிவில் உங்களை குரு, குருநாதர் என்றெல்லாம் சொல்லவேண்டியதில்லை என்று சொல்கிறீர்கள். நான் என்ன சொல்லி உங்களை அழைப்பது? எனக்குப் பெரிய குழப்பமாக இருக்கிறது.
பெயர் வெளியிட விரும்பாத ஒரு தோழி.
அன்பே,
நீ என்னை எப்போதும் இறைவரே என்றுதான் அழைக்கிறாய். அதில் ஒரு பிரச்சினையும் இல்லை. நான் அசோகமித்திரனை என் தந்தையே என்றுதான் அழைத்து வந்தேன். வார்த்தைகளில் என்ன இருக்கிறது அன்பே? இறைவரே என்றாலும் ஒன்றுதான், சாரு என்றாலும் ஒன்றுதான். க.நா.சு.வையும், செல்லப்பாவையும் நான் பெயர் சொல்லித்தான் அழைத்து வந்தேன். அப்போதெல்லாம் அதுதான் பழக்கமாக இருந்தது. ஆனால் அடுத்த தலைமுறை எழுத்தாளர்களெல்லாம் வந்து, சினிமாவில் எழுதுவது ஒரு மோஸ்தராக ஆகி விட்ட பிறகு எல்லோரையும் எல்லோரும் சார் போட ஆரம்பித்தார்கள். அதனால் நான் தில்லியில் இருந்த போது அசோகமித்திரன் என்று அழைத்துக்கொண்டிருந்த அசோகமித்திரனை சென்னை வந்த பிறகு சார் என்று அழைக்க வேண்டியதாயிற்று. இப்போது குஞ்சு குளுவானெல்லாம் என்னை சாரு என்று அழைக்கும்போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. துபயில் இருக்கும் இரண்டு வயதான என் பேரன் கூட என்னை சாரு என்றே அழைக்கிறான் என்பது கூடுதல் தகவல்.
அன்பே, என்னை நீ இறைவரே என்று அழைக்கும் காரணத்தை யோசித்துப் பார்த்தேன். பள்ளிப் பருவத்திலேயே தீவிர இலக்கிய வாசகியாகிவிட்ட நீ மற்ற சராசரிப் பெண்களோடு இசைந்து பழக முடியாமல் தனிமைப்பட்டுப் போனாய். பள்ளி விடுதியில் அந்தப் பெண்கள் தங்கள் அலமாரிகளில் அஜித், விஜய் என்று நடிகர்களின் புகைப்படங்களை வைத்து அழகு பார்த்த போது நீ உன் அலமாரியில் சாரு நிவேதிதா என்ற ஒரு எழுத்தாளனின் புகைப்படத்தை (விகடனிலிருந்து வெட்டி எடுத்தது) வைத்துக்கொண்டாய். புகைப்படத்தை விடு, பதினைந்து வயதிலிருந்து கடந்த இருபது ஆண்டுகளாக சமூகத்தினாலும், சக எழுத்தாளர்களாலும், பெண்ணியவாதிகளாலும் புறக்கணிக்கப்பட்டு, சமயங்களில் வெறுக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்ட உனக்கு சாருவின் எழுத்தே வழித்துணையாக இருந்திருக்கிறது.
ஆகவே, குருவா, தோழனா என்ற கேள்விகளையெல்லாம் விட்டு விடு. நான் உன்னுடைய சஹ்ருதயன். உன் பயணத்தில் உன்னோடு துணை நிற்பவன். அது போதும், அவ்வளவுதான்.
நான் அடிக்கடி சொல்லி வருவதுதான். எனக்கு எத்தனையோ ஆசிரியர்கள். க.நா.சு., சி.சு. செல்லப்பா, கு. அழகிரிசாமி, தி.ஜ. ரங்கநாதன், சார்வாகன், கு.ப.ராஜகோபாலன், தி. ஜானகிராமன், மௌனி, புதுமைப்பித்தன், எம்.வி. வெங்கட்ராம், கரிச்சான் குஞ்சு, ஆதவன், அசோகமித்திரன், நகுலன் என்று ஒரு நூறு பேர் இருக்கிறார்கள். இது தவிர, ஃப்ரெஞ்ச் சிந்தனையாளர்களும் (குறிப்பாக ரொலாந் பார்த், மிஷல் ஃபூக்கோ), ஜெர்மன் சினிமாவும் (குறிப்பாக பெண் இயக்குனர்கள்) என்னை உருவாக்கியதில் பெரும் பங்கு வகிக்கின்றனர்.
இத்தகைய பின்னணியில் ஏன் என்னை நீங்கள் யாரும் குரு என்று அழைக்க வேண்டாம் என்று சொன்னேன்?
அது பெரிய கதை. பொறுமையாகக் கேள்.
காண்பதற்கும், அணுகுவதற்கும், பழகுவதற்கும் நான் எளியவனாக இருக்கிறேன் என்பதால் வருவோர் போவோர் எல்லாம் என் குருநாதராக மாறி எனக்கு ஆலோசனைகளையும் புத்திமதிகளையும் வழங்க ஆரம்பித்து விடுகிறார்கள். அவர்களாகவே குரு பீடத்தை எடுத்துக்கொண்டு விடுகிறார்கள். இந்த குருபீடம்தான் எனக்கு வேண்டாம் என்கிறேன். இப்போதும் ஒரு பத்து பேர் எனக்கு புத்திமதி சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். அதில் ஒருவரை என் வாழ்விலிருந்து ரத்து செய்து, அவருக்காகவே அன்பு என்ற நாவலையும் எழுதினேன். குடி பற்றி அவர் எனக்கு புத்திமதி சொன்னார். அதனால் அந்தக் காரியம் நடந்தது.
எனக்கு புத்திமதி சொல்லும் பத்து பேரை வைத்து ஒரு பெரிய சமூகவியல் உண்மையைக் கண்டு கொண்டேன். இந்தப் பத்து பேரும் பிராமணர்கள். அதில் மூவர் பெண்கள். ஒருவரை வாழ்விலிருந்து விலக்கி விட்டேன் என்பதால் மீதி ஒன்பது பேர். இவர்கள் யாரையும் ஒதுக்க முடியாது. ஒதுக்கினால் அல்லது ஒதுங்கினால் என் எழுத்தும் லௌகீகமும் பாதிப்புக்குள்ளாகும். அதனால் அவர்களின் புத்திமதிகளை சகித்துக்கொண்டே வாழப் பழகிக்கொண்டேன். வேறு வழியில்லை. அதிக பட்சம், அவர்கள் தரும் புத்திமதிகள் பற்றி இந்த ப்ளாகில் விமர்சித்து எழுதி விட்டுக் கடந்து விடுவேன். சென்ற வாரம், என் நண்பர் சித்த மருத்துவர் பாஸ்கரன் என் வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது அவந்திகா அவரிடம் “எப்போது பார்த்தாலும் சாரு ஃப்ரிட்ஜிலிருந்து சாக்லேட்டை எடுத்து எடுத்துத் தின்கிறார், அவரைக் கண்டியுங்கள்” என்றாள். பாஸ்கரன் சிரித்துக்கொண்டார். புதுமைப்பித்தனின் செல்லம்மா கதையில் வரும் நாயகியைப் போல், வருஷம் 365 நாளும் உடம்போடு போராடிக்கொண்டிருக்கும் ஒரு பெண்மணி எனக்கு புத்திமதி சொல்கிறாள். இதைப் பொறுத்துக் கொள்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. மனைவி. தலையெழுத்து. அதற்காக நண்பர்களையும் இப்படிப் பொறுத்துக் கொள்ள முடியுமா?
என்னுடைய பிராமண நண்பர்கள் நான் சொல்வதைத் தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது. விளக்கமாகச் சொல்கிறேன். பொதுவாக பெற்றோர் என்போர் தம் குழந்தைகளுக்கு புத்திமதி சொல்லிக்கொண்டே இருப்பார்கள். என் வாழ்நாளில் என் பெற்றோர் எனக்கு ஒரு புத்திமதி கூட சொன்னதில்லை. ஒரு பதினெட்டு வயதுவாக்கில் ஊரில் உள்ள சில நலம்விரும்பிகள் என் அம்மாவிடம் போய் “ரவி பொம்பளப் புள்ளைங்களோட சுத்திக்கிட்டுத் திரியிறான்” என்று புகாராகச் சொன்ன போதுகூட “அவன் ஆம்பளதானே? பொம்பளைங்ககூடதான் திரிவான், அதுல ஒனக்கு என்னா பிரச்சினை?” என்று கேட்டவர்கள் என் அம்மா.
ஆனால் என்னுடைய நாற்பத்தைந்தாவது வயதிலிருந்து (அதாவது, எனக்குத் திருமணம் ஆனதிலிருந்து) இன்று வரை புத்திமதிகளைக் கேட்டுக்கொண்டே வாழ்கிறேன். புத்திமதி சொல்பவர்கள் அத்தனை பேரும் பிராமணர்கள். இதுவரை என் வாழ்வில் ஒரு அபிராமணர் கூட எனக்கு புத்திமதி சொல்ல முனைந்ததில்லை. இதற்காக அத்தனை பிராமணரும் இப்படி என்று சொல்லவில்லை. சீனியும் செல்வாவும் பிராமணர்கள்தான். அவர்கள் என்னிடம் ஒருபோதும் புத்திமதி சொன்னதில்லை. சொல்லப்போனால் அவர்கள் அப்படி யாருக்குமே புத்திமதி சொல்ல மாட்டார்கள்.
நான் சொல்வதை சரியாகப் புரிந்து கொள்ளுங்கள்.
இதுவரை அபிராமணர் யாரும் எனக்கு புத்திமதி சொன்னதில்லை.
இதுவரை எனக்கு புத்திமதி சொல்லிக்கொண்டிருக்கும் அத்தனை பேரும் பிராமணர்கள். சுமார் பத்து பேர். அதில் மூவர் பெண்கள்.
இது பற்றியும்கூட எனக்கு எந்தப் புகாரும் இல்லை. மூவாயிரம் ஆண்டுகளாக அரசர்களுக்கு ஆலோசனைகள் நல்கி நல்கி அதுவே மரபணுவில் ஊறிப் போயிருக்கும் அவர்கள் மாறுவதற்கு சில காலம் ஆகலாம். அதுவரை இது அவர்களின் பிரச்சினையே ஒழிய என் பிரச்சினை அல்ல. என் தொழில் எழுத்து என்பதால் இப்படி நான் கடந்து போகும் சம்பவங்களையும் எழுதி வைப்பேன். அது அந்த நண்பர்களுக்கு தர்மசங்கடத்தைக் கொடுத்தால் அதற்கு நான் பொறுப்பு அல்ல.
புத்திமதி சொல்வதற்கு முன் கொஞ்சமாவது காமன்சென்ஸைப் பயன்படுத்தி யோசிக்க வேண்டாமா? எழுபத்து மூன்று வயதான ஒரு எழுத்தாளனுக்கு நாற்பதே வயதான ஒரு சராசரி மனிதனாகிய நாம் புத்திமதி சொல்லலாமா? இந்த ஒரு எண்ணம் இருந்தால் அடுத்தவனுக்கு புத்திமதி சொல்லும் ஆணவம் வராது.
சமீபத்தில் புத்தக விழாவில் என்னைப் பார்த்த நண்பர் ஒருவர் ”என்னா சார், டல்லா இருக்கீங்க?” என்று கேட்டது பற்றி படு காட்டமாக எழுதியிருந்தேன். அதை வாசித்ததிலிருந்து அந்த நண்பர் என்னோடு பேசுவதை நிறுத்தி விட்டார். அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது. ஏனென்றால், நான் ஒரு விஷயத்தை விமர்சித்து எழுதுகிறேன் என்றால், அதற்கு முன்னால் பத்து முறை அந்த மாதிரியான அத்துமீறல்களையும் அவமானங்களையும் பொறுத்துக்கொண்டும், சகித்துக்கொண்டும் கடந்து சென்று கொண்டிருந்திருக்கிறேன் என்று பொருள். பதினோராவது முறைதான் விமர்சித்து எழுதுவேன். அதேபோல் அந்த நண்பரை நான் பல முறை சகித்துக்கொண்டுதான் கடந்து போனேன். ஒரு சமயம் என்னிடம் அதே நண்பர் “நீங்கள் அவந்திகாவை அடிப்பீர்களா?” என்று கேட்டார். இந்தக் கேள்விக்கு சமமான கேள்வி என்ன தெரியுமா? “உங்கள் மகளை நீங்கள் புணர்வதுண்டா?”
ஏனென்றால், அவந்திகா என் குழந்தை. குழந்தையை விட மேல். என் தாய். என் மகள். அந்த அளவுக்கு அவளை நான் சீராட்டிக்கொண்டிருக்கிறேன். அதனால்தான் அவளுடைய இந்த அறுபத்திரண்டு வயதிலும் நான் வெளியூருக்குப் போனால் ஃபோன் செய்து அழுகிறாள், நீ எப்போது திரும்புவாய் என்ற கேள்வியைத் தவிர அவள் வேறு எதையுமே கேட்க மாட்டள், பேச மாட்டாள். ஒரே கேள்விதான். எப்போது திரும்புவாய்? அந்த அளவுக்கு அவளை நான் சீராட்டிக்கொண்டிருக்கிறேன். அவந்திகாவை மட்டும் அல்ல. என்னைச் சுற்றியுள்ள எல்லா மனிதர்கள் மேலும் எல்லா ஜீவராசிகளின் மேலும் தாவரங்களின் மேலும் நான் இதே அளவு அன்பைத்தான் வழங்கிக்கொண்டிருக்கிறேன்.
இந்த நிலையில்தான் ஒரு கட்டத்தில் என் நண்பரின் புத்திமதியும் அத்துமீறலும் என் சகிப்புத்தன்மையின் எல்லையைத் தாண்டிய போது விமர்சித்து எழுதினேன்.
என் தோழி எக்ஸ் என்னிடம் சொன்னாள், “அவர் உங்களுக்கு எத்தனையோ உதவிகள் செய்திருக்கிறார், அதற்காகவாவது நீங்கள் அந்தப் பதிவை எழுதாமல் இருந்திருக்கலாம்.” இல்லை, அது சாத்தியம் இல்லை. ஒருவர் நமக்கு உதவி செய்திருக்கிறார் என்பதற்காக அவர் நம்மை assfuck செய்வதை அனுமதிக்க முடியுமா?
(தோழியின் பெயர் குறிப்பிடாமல் எக்ஸ் என்று எழுதியிருப்பதன் பின்னணி: மாபெரும் கிளர்ச்சிப்பெண்ணியவாதியான Cristina Peri Rossi தன் நூல்களை தானேதான் வெளியிட்டுக்கொண்டார். அப்பதிப்பகத்தின் பெயர் Ecks. மட்டுமல்லாமல் மற்றொரு மாபெரும் கிளர்ச்சிக்காரனான மால்கம் தன் பெயரையே மால்கம் எக்ஸ் என்று வைத்துக்கொண்டான். மேலும், தோழி எக்ஸ் தன்னுடைய பெயரை என்னுடைய எந்தக் கட்டுரையிலும் கதையிலும் போட்டு விட வேண்டாம் என்று சொல்லி, என்னிடம் சத்தியம் வாங்கிக்கொண்டிருக்கிறபடியாலும், பெண்களிடம் கொடுத்த சத்தியத்தை மீறுவது என் பழக்கம் இல்லை என்பதாலும்தான் அவள் பெயரை எக்ஸ் என்று குறிப்பிடுகிறேன். ஆனால் எப்போதடா எனக்கும் என் தோழிகளுக்கும் வம்பு மூட்டிப் பார்க்கலாம் என்று ஆர்வத்துடன் காத்திருக்கும் அராத்து இந்த எக்ஸை வைத்து விளையாடி விட்டார். அது தோழி எக்ஸ் அல்ல, எக்ஸ் தோழி என்று. எவ்வளவு கெட்டெண்ணம் பாருங்கள். அந்தத் தோழி இப்போதும் தோழிதான். எக்ஸ் தோழி அல்ல என்று பொதுமக்களிடம் சொல்லிக்கொள்கிறேன்.)
ஒருநாள் அந்த நண்பர் புத்தக விழாவின் போது ஒரு புத்தக அரங்கின் வாசலில் வைத்து என்னிடம் ஒரு பதினைந்து நிமிடம் தியாகராஜா நாவலை நான் எப்படி எழுத வேண்டும் என்று எனக்கு வகுப்பு எடுத்தார். இதை பிராமணத் திமிர் என்பதா? பைத்தியக்காரத்தனம் என்பதா? வெகுளி என்பதா? என்ன சொல்வது, எப்படிப் புரிந்து கொள்வது என்றே எனக்குத் தெரியவில்லை. வகுப்பு எடுத்த போது அவர் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார், நானும் சீனியும் நின்று கொண்டிருக்கிறோம். தியாகராஜா நாவலில் எதையெதையெல்லாம் நான் எழுதலாம், எதையெதையெல்லாம் நான் எழுதக் கூடாது என்று பாடம். அவர் வயது நாற்பது. இப்போதுதான் இலக்கியத்தின் பக்கம் எட்டிப் பார்க்கிறார். நூற்றைம்பது நூல்களை எழுதியிருக்கும் எனக்கு இலக்கிய உலகை இப்போதுதான் எட்டிப் பார்த்திருக்கும் அவர் புத்திமதி.
தோழி எக்ஸ் அவர்களே, இது பற்றி நான் எழுதலாமா கூடாதா? என் வாழ்க்கையில் நடப்பதை மட்டும்தானே நான் எழுதிக்கொண்டிருக்கிறேன்? நாற்பது வயதான ஒரு சராசரி மனிதன் – என்னிடம் கை கட்டி இலக்கியம் கற்க வேண்டிய ஒரு மாணவன் – எனக்கு முன்னால் அமர்ந்து கொண்டு, நான் நின்றபடியிருக்க – ஒரு பதினைந்து நிமிடம் தியாகராஜா நாவலை நான் எப்படி எழுத வேண்டும் என்று எனக்குப் பாடம் எடுக்கிறான் என்றால் அது பற்றி நான் எழுதலாமா கூடாதா அம்மா? இவர்களுக்கெல்லாம் இந்தத் திமிர் எங்கிருந்து வருகிறது? ஒரு இருபது ஆண்டுகளாக எல்லோரையும் அடக்கி அடக்கி, எல்லோருக்கும் புத்திமதி சொல்லிச் சொல்லி, பணபலம் இருப்பதால் ஒரு பயலும் எதிர்த்துப் பேசாமல் இப்படி ஒரு தடித்தனம் மிகுந்து போகிறது இல்லையா? நம் கமல்ஹாசனும் இப்படித்தானே? பேசினால் மணிக்கணக்கில் பேசுவது. எதிரே இருப்பவன் முட்டாப்புண்டை. யாருமே கமல்ஹாசனை எதிர்த்துப் பேசியிருக்க மாட்டார்கள், இல்லையா? அதே மாதிரிதான் எனக்கு இலக்கியப் பாடம் எடுத்த நண்பரும் என்று நான் முடிவுக்கு வர வேண்டியிருக்கிறது.
தியாகராஜாவை நான் எப்படி எழுத வேண்டும் என்று அந்த நண்பர் எனக்குப் பாடம் எடுத்தபோது எனக்கு எப்படி இருந்தது தெரியுமா? என்னுடைய ஆணுறுப்பில் மின்கம்பியைச் செலுத்தியது போல் உணர்ந்தேன். ”யாரடா நீங்களெல்லாம் எனக்கு இலக்கியம் சொல்லிக் கொடுப்பதற்கு?” என்று பெருங்குரலெடுத்துக் கத்தலாம் போல் தோன்றியது. அங்கே கத்த முடியாமல் இங்கே எழுதிக்கொண்டிருக்கிறேன்.
நண்பரின் வெகுளித்தனம் என்று மேற்கண்ட சம்பவத்தைக்கூட மன்னித்துக் கடந்து விட்டேன். மக்யாநாள் வேறொரு சம்பவத்தைக் கொண்டு வந்தார் அதே நண்பர். நான்தான் வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்காமல் அந்த நண்பரிடம் ”நானும் ஸ்ரீயும் டென்டௌனிங் போகிறோம்” என்று உளறினேன். அதற்கு ஒருத்தர் என்ன பண்ணலாம்? ”சரி, செய்ங்க.” அதற்கு மேல் சொல்ல அதில் என்ன இருக்கிறது?
ஆனால் நண்பர் மடாதிபதி ஆயிற்றே? அடுத்தவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதுதான் நண்பரின் வாழ்க்கை லட்சியம் இல்லையா? அவந்திகா மாதிரி. இம்மாதிரி மனிதர்கள் அடுத்தவர் பற்றியேதான் சிந்திப்பார்கள். இதற்கு உதாரணமாக, தஸ்தயேவ்ஸ்கி எழுதிய An untoward incident (or A Dirty Incident) என்ற நீண்ட சிறுகதையைப் பற்றி அடிக்கடி சொல்லியிருக்கிறேன். இணையத்திலேயே அந்தக் கதை வாசிக்கக் கிடைக்கிறது. அடுத்தவர்களுக்கு புத்திமதி சொல்பவர்கள், அடுத்தவரின் நல்வாழ்வுக்கு வழி வகுக்க நினைக்கும் பேர்வழிகள் எப்படி அந்த அடுத்தவரின் ஜனன உறுப்பில் மின்கம்பியைச் சொருகுபவர்களாக விளங்குகிறார்கள் என்பதை விளக்கும் கதை அது.
அந்தக் கதையில் வரும் பாத்திரத்தையே வடித்தெடுத்தது போன்ற என் நண்பர் உடனடியாக ஆரம்பித்தார் தன் உபந்நியாசத்தை.
“சாரு, உங்களுக்கு வயதாகி விட்டது என்பதுதான் எதார்த்தம். அதை யாராலும் மறுக்க முடியாது. நீங்கள் முன்பு போல் இல்லை. என்னதான் சொன்னாலும் வயதுக்கு என்று ஒரு “இது” இருக்கிறது. இப்போது அவந்திகாவும் வீட்டில் இல்லை. நீங்கள் குடித்து போதையாகி ஏதாவது ஒன்று கிடக்க ஒன்று ஆனால் உங்களை கவனிக்கவும் வீட்டில் ஆள் இல்லை. (அவந்திகாவுடன் திருமணம் ஆகி இதுவரை அப்படி ஒருமுறைகூட ஆனதில்லை என்பது வேறு விஷயம்.) கூட வேறு ஒரு பெண். நீங்கள் குடிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. குடியுங்கள். ஆனால் ஒரே ஒரு பெக்கோடு நிறுத்திக்கொள்ளுங்கள். ரொம்பக் குடித்து விடாதீர்கள். ரொம்பக் குடித்தால் நீங்கள் என்ன ஆவீர்கள், என்னென்ன செய்வீர்கள் என்று எனக்கு நன்றாகவே தெரியும். அதை நான் என் கண்கொண்டு பார்த்திருக்கிறேன். அனுபவப்பட்டிருக்கிறேன். யாரும் அறிவுரை சொல்வது உங்களுக்கு அறவே பிடிக்காது என்பதும் எனக்குத் தெரியும். இருந்தாலும் சொல்வது என் கடமை. பழைய மாதிரி இல்லை உங்கள் உடம்பு. வயதுக்கு என்று ஒரு “இது” இருக்கிறது. நீங்கள் என்னதான் சொன்னாலும் வயது தன் வேலையைக் காண்பிக்கும். அவந்திகா வேறு ஊருக்குப் போயிருக்கிறார்கள். அவந்திகா வீட்டில் இருந்தால் நான் இதைச் சொல்லியே இருக்க மாட்டேன். குடிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. குடியுங்கள். ஆனால் அளவாக இருக்கட்டும். ஒரு பெக் போதும். நான் இப்படியெல்லாம் பேசுவதை நீங்கள் ரசிக்கவில்லை என்று எனக்கு நன்றாகவே தெரிகிறது. இருந்தாலும் சொல்ல வேண்டியது என் கடமை. பக்கத்தில் ஒரு பெண் வேறு இருக்கிறாள். ஏதாவது ஏடாகூடம் ஆனால் உங்களை…”
இப்படியே பதினைந்து நிமிடம் தொடர்ந்தது உபந்நியாசம்.
இந்த உபந்நியாசத்தைக் கேட்டபோது ஸ்ரீக்கு எங்காவது போய் தற்கொலை செய்து கொள்ளலாம் போல் இருந்ததாகப் பிற்பாடு சொன்னாள்.
ஸ்ரீ அடிக்கடி ஒரு விஷயம் சொல்வாள். சிலருடைய எழுத்தைப் படிக்கும்போது தற்கொலை செய்து கொள்ள வேண்டும் போல் தோன்றுமாம்.
”நீ கீழ்மையானவள்.
நீ பாவம் செய்தவள்.
நீ இந்த உலகில் வாழவே தகுதியில்லாதவள்.
நீ ஒரு நோயாளி.
உன் மனம் நோய்மை கொண்டிருக்கிறது.
நீ சுயசிந்தனை இல்லாதவள்.
நீ இலக்கியம் தெரியாதவள்.
நீ சுரணையற்றவள்.
நீ செய்வது எல்லாமே மானுட விரோதமானவை.
உன்னிடம் இருப்பவை எல்லாமே எதிர்மறை எண்ணங்கள்.
அதனால் நீ
செத்துப் போ.
செத்துப் போ.
செத்துப் போ.”
இப்படியெல்லாம் அந்த எழுத்து அவளிடம் சொல்லிக்கொண்டே இருக்குமாம். ’மிக மோசமான எதிர்மறை எண்ணங்களைத் தோற்றுவிக்கும் எழுத்து அது’ என்று அம்மாதிரி எழுத்தாளர்களை வாசிப்பதை அவள் நிறுத்தி விட்டாள். ஆச்சரியம் என்னவென்றால், அவள் சொல்வது மாதிரியேதான் அம்மாதிரி எழுத்தாளர்களைப் படித்தால் எனக்குமே தோன்றுகிறது.
எனக்கு புத்திமதி மற்றும் அறிவுறை சொல்பவர்களின் பேச்சும் எனக்கு அப்படியேதான் இருக்கிறது. இவர்கள் என்னைக் கீழானவனாக வரையறுக்கிறார்கள். இவர்கள் என்னைக் குடிகாரன் என்கிறார்கள். இவர்கள் என்னை விட மேலானவர்கள். நான் ஒரு குடிகாரன். ஒரு இருபத்தாறு வயதுப் பெண்ணோடுகூடக் குடிக்கத் தெரியாமல் தெருவில் புரண்டு கிடக்கும் லும்பன் நான். எனக்கு இவ்வுலகில் வாழத் தகுதியில்லை. நான் பொறுக்கி. எனக்கு புத்திமதி சொல்லும் இந்த நண்பர்கள் நாகரீகமானவர்கள். நான் விலங்கு. நான் பன்றி.
இதுதான் அந்த நண்பர் எனக்குக் கடத்திய செய்தி.
ஆனால் நானோ என்னை அறிந்த மற்ற வாசகர் வட்ட நண்பர்களோ என்னைப் பற்றி அப்படிக் கருதவில்லை.
நான் யார் என்று ஆயிரம் முறை எழுதியிருக்கிறேன். அதை அந்த நண்பரும் அறிவார். இருந்தாலும் அவர் எனக்குக் குடி குறித்து அறிவுரை பகன்றதால் இதை நாம் ஆயிரத்தோராவது தடவையாக எழுத வேண்டியாகிறது.
இருபத்தாறாவது வயதிலிருந்து குடிக்கிறேன். குடியை எனக்கு அறிமுகப்படுத்தியது தில்லியில் வெங்கட் சாமிநாதன். வாரம் ஒருமுறை ரவீந்திரன் வீட்டில் சந்தித்துக் குடிப்போம். மிகச் சீக்கிரத்திலேயே ஒவ்வொரு குடி சமயத்திலும் சாமிநாதனுக்கும் எனக்கும் அடிபிடி சண்டை மூளத் தொடங்கியது. சாமிநாதன் மிகவும் வறுமைப்பட்ட கும்மோணத்து தீட்சிதர் குடும்பம். அப்படிப்பட்டவர்களின் சீற்றத்தையும் வன்மத்தையும் விஷ வார்த்தைகளையும் நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள். போதையில் சண்டை போடும்போது அவர் வாயிலிருந்து விஷம் கக்கும். என்னால் பதில் சொல்ல இயலாது. ஒருமுறை தான் குடித்துக்கொண்டிருந்த கிளாஸை எடுத்து சுவரில் அடித்துத் தன் கோபத்தைத் தீர்த்துக்கொள்ள முயன்றார் சாமிநாதன். அதிலிருந்து அந்தக் குடி சந்திப்புக்கு நான் செல்வதில்லை. சாமிநாதனையும் அதற்குப் பிறகு சந்திக்கவில்லை. என் தோதுக்கு ஏற்ற நண்பர்களான பெண்ணேஸ்வரன், மோகன் போன்ற நண்பர்களோடு குடித்துக்கொண்டிருந்தேன்.
1978இல் தில்லி சென்றவன் 1988இல் சென்னை திரும்பினேன். அதற்குப் பிறகு சிறுபத்திரிகை எழுத்தாளர்களோடு குடி. ஒவ்வொரு குடியும் அடிதடியில் முடியும். அந்த அளவுக்கு அவமானப்படுத்துவார்கள். ஓரிரு சம்பவங்களைச் சொல்கிறேன்.
திருநெல்வேலிப் பல்கலைக்கழகத்தில் ஒரு சிறுகதை ஆய்வரங்கம். மதியம் இரண்டு மணிக்கு நான் கலாமோகன் பற்றிப் பேசினேன். பேசி முடித்ததும் ஒரு கவிஞர் எழுந்து “நீ பாரிஸுக்குப் போக வேண்டும் என்பதற்காக கலாமோகனுக்கு ஜிஞ்ஜா அடிக்கிறாய்” என்றார். (கலாமோகன் பாரிஸில் வசிக்கிறார்.) தமிழில் சொல்லப்படும் படு தூஷணை வார்த்தைகளைச் சொல்லிக் கத்தியபடி அந்தக் கவிஞரை நான் அடிக்கப் பாய்ந்தேன். அதற்குப் பிறகு அங்கே நடந்தது போலீஸ் கண்ணீர்ப் புகைகுண்டு போடும் அளவுக்குத் தோதான ஒரு கலவரம்.
ஒவ்வொரு சாதாரண சந்திப்பும், ஒவ்வொரு இலக்கிய நிகழ்வும், ஒவ்வொரு மதுபானச் சந்திப்பும் இதே போன்ற அடிதடிகளில்தான் முடிந்துகொண்டிருந்தது. அதிலும் கவிஞர் விக்ரமாதித்யன் இருந்தால் மிக நிச்சயமாக அடிதடிதான். இப்படியேதான் 2007 வரை நடந்து கொண்டிருந்தது. நான் தில்லியிலிருந்து வந்து இருபது ஆண்டுகள் இந்த அக்கப்போரில்தான் வாழ்ந்தேன். ஒரு சமயம் நடந்த அடிதடியில் என் பல் உடைந்து கண் அருகில் சதை கிழிந்து விட்டது. பூசணி போல் வீங்கின முகம் சரியாக ஒரு மாதம் ஆகியது. சண்டைக்குத் தூண்டியவர் விக்ரமாதித்யன்.
2008இல் சாரு நிவேதிதா வாசகர் வட்டம் தொடங்கப்பட்டது. குரு ஆரம்பித்து வைத்தார். சீனியின் புண்ணியத்தில் அது வளர்ந்தது. மற்ற பல நண்பர்கள் கை கொடுத்தார்கள். பல சிகர சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. பிச்சாவரம் சந்திப்பு ஒரு உச்சம். கோவாவில் பல முறை சந்தித்தோம். 2008இலிருந்து மாதம் ஒரு முறை சந்தித்துக்கொண்டிருக்கிறோம். ஒரு மாதத்தில் நாலு தினங்கள். 17 x 12 x 4 = 816. இதில் வெளிநாட்டுப் பயணங்களையும் சேர்த்தால் இதுவரை சுமார் ஆயிரம் சந்திப்புகள் நடந்துள்ளன. மாலை ஆறு மணிக்கு ஆரம்பித்தால் காலை ஆறு மணி வரை போகும் உரையாடல்கள். பத்து பேர் இருந்தால் அதில் செல்வா, வினித் போன்ற ஐந்து பேர் குடிப்பழக்கம் இல்லாதவர்கள். மீதி ஐந்து பேரில் அதிகுடி என்றால் அது நான் மட்டும்தான். சீனி மிதமாகக் குடிப்பவர்.
இப்படியான ஒரு ஆயிரம் சந்திப்புகளில் ஒரு முறை கூட அசம்பாவிதமோ ரசாபாசமோ ஏற்பட்டதில்லை. ஆனால் நண்பர் எனக்கு அறிவுரை சொல்கிறார், அளவாகக் குடியுங்கள், வயதாகி விட்டது, என்னை கவனிக்க வீட்டில் ஆள் இல்லை என்று.
நான் ஸ்ரீயுடன் எத்தனையோ முறை டென்டௌனிங் சென்றிருக்கிறேன். அவள் குடிப்பாள். நான் குடிக்க மாட்டேன். சில சமயங்களில் ஒரே ஒரு கிளாஸ் வைன் மட்டும் அருந்தியிருக்கிறேன். வேறொரு முறை வேறொரு தோழியோடு சென்றேன். அவள் கன்னாபின்னா என்று குடித்தாள். விஸ்கி. நான் வெறும் கோக். பிறகு ஒன்பது மணியிலிருந்து பன்னிரண்டு மணி வரை அவளும் நானும் நடனம் ஆடினோம்.
குடியில் நான் ஒரு அசாதாரணன். ஆயிரத்தில் ஒருவருக்குக் கூட இப்படி ஒரு வலு இருக்காது. நாலு பெக்குக்கு மேல் குடித்தால் மரணம் என்று போத்தலிலேயே அச்சடித்து விற்கும் Abysinthe மதுவையே பன்னிரண்டு பெக்குகள் குடித்து நிதானமாகப் பேசிக்கொண்டிருக்கும் ஆசாமி நான். (அபிஸிந்த்தில் ஆல்கஹால் 75 சதவிகிதம் – ஆனானப்பட்ட ஸ்காட்ச் விஸ்கியிலேயே 40 சதவிகிதம்தான்!)
இரண்டு சம்பவங்களைச் சொல்கிறேன். ஒருமுறை கார்ல் மார்க்ஸுடன். காலை ஐந்து மணி வரை குடித்தோம். நான் ஒரு ஒன்றரை போத்தல் ரெமி மார்ட்டினை சாய்த்து விட்டேன். பதினாறு பெக்குகள். ஐந்து மணிக்குப் படுத்தோம். பிறகு நான் ஒன்பது மணிக்கு எழுந்து குளித்து விட்டு, தரையில் வேஷ்டியோடு சம்மணமிட்டு அமர்ந்து மீதியிருந்த ரெமி மார்ட்டினை சாய்த்துக்கொண்டிருந்தேன். பத்து மணிக்கு எழுந்து வந்த கார்லும் மற்ற நண்பர்களும் அதிசயத்தோடு பார்த்தார்கள்.
இன்னொரு முறை. குற்றாலம். இருபது பேர் சூழ்ந்திருந்தார்கள். மொட்டை மாடி. மூன்று மணி வரை நான் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். ஒரே ஒருவரைத் தவிர மற்றவர் அனைவரும் அமர்ந்த நிலையிலேயே உறக்கம். மூன்றுக்கு மேல் விழித்திருந்த ஒரே நபர் மதுரை அருணாசலம். அவருமே கொஞ்சம் தலை சாய்ப்பார். நான் சத்தமாக அருணா என்பேன். தலை நிமிர்ந்து விடும். பேச்சைத் தொடருவேன். இப்படியே நானும் அருணாவுமாக ஐந்து மணி வரை உரையாடினோம். ஐந்து மணிக்குப் படுக்கப் போயாயிற்று. பிறகு எட்டு மணிக்கே எழுந்து நான் மட்டும் குடியைத் தொடர்ந்தேன்.
பொதுவாக சீனி குடித்து விட்டு மட்டையாகி நான் பார்த்ததே இல்லை. சொல்லப் போனால் அவர் போதையாகியே நான் பார்த்ததில்லை. மிதமாகவே குடிப்பார் என்பதும் ஒரு காரணம். அதிகமாகக் குடித்தாலும் மட்டையாக மாட்டார். ஒரே ஒரு முறை அபிஸிந்த் ரெண்டு பெக் குடித்தார். உட்கார்ந்திருந்தவர் மல்லாந்து விழுந்து விட்டார். அடி இல்லை. அப்போது உறங்கப் போனவர் இருபத்து நான்கு மணி நேரம் உறங்கினார். நானே தனியாக அன்றிரவு முழு போத்தல் அபிஸிந்த்தையும் குடித்து முடித்தேன்.
இப்படிப்பட்ட எனக்குத்தான் எப்படிக் குடிக்க வேண்டும் என்று பாடம் எடுக்கிறார் நண்பர். ஏனய்யா, ஒரு இருபத்தாறு வயதுப் பெண்ணோடு குடிக்கப் போகும் நானா கன்னாபின்னாவென்று குடித்து மல்லாந்து போவேன்? சரி, எனக்குக் குடி பற்றி பாடம் எடுத்த நண்பரோடு நான் சுமாராக ஐம்பது முறை குடித்திருப்பேன். அதில் ஒருமுறை பெரும் ரசாபாசம் ஆகி விட்டது. நண்பர் காரணம் அல்ல. நண்பர் மஹாத்மா. சூழ்நிலையும் மற்ற நண்பர்களுமே காரணம். சிறுபத்திரிகைக்காரன் வேலையைச் செய்தால் நான் எப்போது வேண்டுமானாலும் அடிதடியில் இறங்கி விடுவேன். உதாரணம், மனுஷ்ய புத்திரன் ஏற்பாடு செய்த ஒரு சந்திப்பு. சென்னை புத்தக விழா அரங்கம். எடுத்த எடுப்பில் ஒருத்தர் என்னைப் பார்த்து “நீ ஒரு செக்ஸ் எழுத்தாளன்தானே? நீ யாரடா பெருமாள் முருகன் பற்றிப் பேசுவதற்கு?” என்றார். நான் எத்தனையோ முறை முருகன் பற்றிப் பேச வேண்டாம் என்று சொல்லியும் முருகன் பற்றிக் கேள்வி கேட்டவரே அவர்தான். செருப்பால அடிப்பேண்டா என்றேன். கலவரம் ஆகி விட்டது. நானா பொறுப்பு?
வாசகர் வட்டத்தின் ஆயிரம் முறை சந்திப்புகளிலும் ஓரிரு முறை அப்படி ரசாபாசம் ஆகியிருக்கிறது. நான் காரணம் அல்ல. சிறுபத்திரிகைக்காரன் பாத்திரத்தை வினித் எடுப்பார். (இத்தனைக்கும் வினித் குடிப்பழக்கம் இல்லாதவர்!) அப்போது ரசாபாசம் ஆகும்.
பிரச்சினை என்னவென்றால், நீங்கள் இப்படி எனக்கு புத்திமதி சொல்வதன் மூலம் என்னை ஒரு மலப்புழு போல் உணரச் செய்கிறீர்கள். என் சுய அபிமானத்தின் மேல், என் குடித்தகுதியின் மேல், என் ஈகோவின் மேல், என் சுய கௌரவத்தின் மேல், என்னுடைய தற்பெருமையின் மேல், என்னுடைய அசாதாரணத்தன்மையின் மேல் எனக்கு நல்லது செய்வதாக நினைத்துக்கொண்டு நீங்கள் காறித் துப்புகிறீர்கள். அதனால்தான் இதை நான் எழுதிக்கொண்டிருக்கிறேன்.
செல்வா, சீனி, வினீத், ராஜா நால்வரும் மற்றும் சில நண்பர்களும் சமீபத்தில் தி.நகரில் உள்ள சங்கம் ஓட்டல் மொட்டை மாடி மதுவிடுதியில் சந்தித்தார்கள். செல்வாவும் வினீத்தும் குடிக்க மாட்டார்கள். அப்போது சாரு எப்படிக் குடிப்பார் என்று செல்வா ஒரு மணி நேரம் விவரித்திருக்கிறார். அப்போது பேசியதைக் கொஞ்சம் எழுதிக்கொடுங்கள் என்று செல்வாவிடம் கேட்டேன். சென்னையில் பெரும்பாலானவர்களுக்கு வந்திருக்கும் ஜுரம் அவருக்கும் வந்திருக்கிறது போல, இரண்டு தினங்களாக அவரிடமிருந்து தகவலே இல்லை. அதனால் கொஞ்சம் சிரமப்பட்டு நானே எழுதுகிறேன்.
கோவாவில் ஒரு மழைக்காலம். கோவாவின் மழைக்காலம் மிக விசேஷமானது. வாரக்கணக்கில் ஒரு நிமிடம்கூட விடாமல் வானமே பொத்துக்கொண்டது போல கொட்டிக்கொண்டே இருக்கும். அடித்து விளாசாது. ஒரே சீராகக் கொட்டும். அதிகமும் போகாது. குறையவும் குறையாது. தொடர்ந்து, இடைவெளியே இல்லாமல் கொட்டிக்கொண்டே இருக்கும். அப்படி ஒரு மழைக்காலத்தைப் பார்க்க வேண்டும் என்று நாங்கள் ஏழெட்டு பேர் கோவா சென்றிருந்தோம்.
நல்ல அருமையான பங்களா. நான் நல்ல நாளிலேயே வெளியே போக மாட்டேன். மழையில் போவேனா? பங்களாவில் இருந்தபடியே மழையை ரசித்துக்கொண்டிருந்தேன். வைன் தீர்ந்து விட்டது. வீட்டில் ஒரு குவாட்டர் டக்கீலா இருந்தது. குடித்தேன். ஏதோ எறும்பு கடித்த மாதிரி இருந்தது. இன்னொரு குவாட்டர் டக்கீலா இருந்தால் நலம். மாலை ஏழு மணி. கும்மிருட்டு. ஆள் நடமாட்டமே இல்லை. செல்வாவும் வினீத்தும் ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு எனக்காக குவாட்டர் டக்கீலா வாங்கி வரக் கிளம்பினார்கள். மழை ஏதோ தியானத்தில் இருப்பது போல் சீராகக் கொட்டிக்கொண்டிருந்தது. அந்த மழையிலும் கடை இருந்திருக்கிறது. கடையில் டக்கீலாவும் இருந்திருக்கிறது. வாங்கி வந்த குவாட்டரையும் கொஞ்சம் கொஞ்சமாகக் குடித்துத் தீர்த்தேன். இன்னும் கொஞ்சம் இருந்தால் நன்றாக இருக்குமே? செல்வாவிடம் இருந்தது. கொடுத்தார். மறுநாள்தான் தெரிந்தது, சாரு கேட்பார் என்று நாலு குவாட்டர் டக்கீலா வாங்கி வந்திருக்கிறார்கள். எல்லாவற்றையும் காலி செய்து விட்டிருக்கிறேன். காலை ஐந்து மணி. வினீத்தும் செல்வாவும் நைஸாக நழுவி விட்டார்கள். பிறகு ஏழு மணி வரை நானும் ராஜேஷும் பாட்டு கேட்டோம். ஏழு மணிக்கு நான் உறங்கப் போனேன். ராஜேஷ் அப்போதும் பாட்டு கேட்டுக்கொண்டிருந்தார். நான் பதினோரு மணிக்கு எழுந்து வந்தேன். அப்போது புதிதாக வந்த நண்பர் ஒரு வைன் போத்தல் வாங்கி வந்திருந்தார். அதைத் திறந்து சாய்க்க ஆரம்பித்தேன். ஒரு மணிக்கு செல்வா எழுந்து வந்த போது அந்த போத்தலின் கடைசி ரவுண்டை ஊற்றிக்கொண்டிருந்தேன்.
என்ன செல்வா, நேற்று இரவு ரொம்ப அறுத்து விட்டேனா?
அடப் போங்க சாரு, ஏதோ ஸோர்போன் பல்கலைக்கழகத்தில் பாடம் கேட்ட மாதிரி இருந்தது.
இப்படிப்பட்ட எனக்குத்தான் நண்பர் குடிப்பது எப்படி என்று பாடம் எடுத்தார்.
அன்பே, ”உங்களை எப்படி அழைப்பது?” என்ற உன்னுடைய கேள்விக்கு பதிலாக இவ்வளவையும் ஏன் சொன்னேன் தெரியுமா? மேலே நாம் பார்த்த மஹாத்மா நண்பர் ஒரு பீடாதிபதியைப் போல நினைத்து எனக்குப் பாடம் எடுக்கவும் புத்திமதி சொல்லவும் ஆலோசனை சொல்லவும் முனைகிறார். என்னை குரு என்று சொல்லாதீர்கள் என்று சொல்வதன் மூலம் நான் அந்த பீடத்தைத்தான் எதிர்க்கிறேன். மற்றபடி உனக்கு இலக்கியம் கற்பித்த என்னை நீ ஒரு ஆசிரியனாகவே கருதலாம். அதை விட உன் சக பயணியாகக் கருதினால் இன்னும் உத்தம்ம். ஆனால் எதார்த்தத்தில் என்ன நடக்கிறது தெரியுமா? நான் இப்படி ஜனநாயகம் பேசுகிறேனா, உடனே எல்லோரும் “அதுதான் நீங்கள் குருவெல்லாம் இல்லை” என்று சொல்லி விட்டீர்களே என்று சொல்லி என் தலையில் ஏறி அமர்ந்து கொண்டு எனக்கே புத்திமதி சொல்ல ஆரம்பித்து விடுகிறார்கள். அதுதான் பிரச்சினை. மற்றபடி என்றும் நான் உனது ஆசிரியன்தான், சகபயணிதான்.
சாரு
