நான் சமூகத்தைக் குற்றம் சொல்ல மாட்டேன். ஒட்டு மொத்தமாகவே தமிழர்களின் அறிவுத் தரம் அதல பாதாளத்துக்குப் போய் விட்டது. ஸாஃப்ட்வேர் துறையில் றெக்கை கட்டிப் பறக்கிறார்கள். மாதம் அஞ்சு லட்சம் சம்பாதிக்கிறார்கள். அமெரிக்க ஆங்கிலம் பேசுகிறார்கள். ஆனால் அறிவு? பூஜ்யம். வால்டேர் என்று தமிழில் எழுதினால் Valdare என்று உச்சரிக்கிறார்கள். Voltaire என்று ஒரு ஃப்ரெஞ்ச் சிந்தனையாளர் இருந்தார், காலத்தால் கார்ல் மார்க்ஸுக்கும் முந்தியவர். மனித வரலாற்றில் தனி மனிதரின் கருத்துச் சுதந்திரத்துக்கு முதல் குரல் கொடுத்தவர் வால்டேர். ஆனால் அந்தப் பெயரை Valdare என்று உச்சரிக்கிறது தமிழ்ச் சமூகம்.
சென்ற தலைமுறையில் கும்பகோணத்தில் கு.ப. ராஜகோபாலன் இளைஞனாக இருந்த காலத்தில் ஷேக்ஸ்பியர் கிளப் என்ற ஒன்றை உருவாக்கி, வாராவாரம் சந்தித்து ஷேக்ஸ்பியரின் படைப்புகள் பற்றி விவாதிப்பார்களாம். இன்று வால்டேர் என்ற பெயரே அந்நியமாக இருக்கிறது.
அதனால் தலைப்பில் வால்டேரின் பெயரில் ட் சேர்க்கச் சொல்லி விட்டேன். இது போல் பத்து புத்தகங்கள் சென்னை புத்தக விழா முடிவதற்குள் உங்களுக்குக் கிடைக்கும். அதில் மூன்று சிறுகதைத் தொகுப்புகள்.
