1) ந. முருகேச பாண்டியன் தமிழின் தற்கால படைப்புகள் பெரும்பாலானவற்றை படித்திருக்கிறார். அதைப் பற்றி அறிமுகங்களையும் தவறாது பதிவு செய்துவிடுகிறார். படிப்பதில் சோம்பேறியாக இருக்கும் பலருக்கு அவரை ரோல்மாடலாக கொண்டு வாசித்தால் நல்லது. பெரும் வாசிப்புப் பழக்கம் இருந்தும், அது அவரை கடினத்தன்மை இன்றி ஜோவியலாக, எப்போதும் புன்சிரிப்பு உடைய மனிதராக வைத்திருப்பது ஆராய்ச்சிக்கு உரியது 🙂
கார்ல் மார்க்ஸின் அரசியல் பதிவுகளை விட்டுவிட்டு நாவலைப் பற்றி மட்டும் பேசுகிறேன் என்று தொடங்கினார். நாவல் குறித்தும், அதிலிருக்கும் துணிச்சல் குறைபாடு குறித்தும் குறிப்பிட்டார்.
டிஜிட்டல் யுகத்தில், தொலைக்காட்சித் துறையில் நிகழும் கதை என்று விளக்கினார். தன் அரசுத்துறை பென்ஷனையும், இன்றைய கார்ப்ரேட் பணி பாதுகாப்பற்ற சூழல், பணி அழுத்தம் போன்றவற்றை ஒப்பிட்டு வெளிப்படையாக பேசினார்.
வேலையில் இருக்கும் மகிழ்ச்சி இன்மை, மாறிவிட்ட ஒழுக்க சூழல்கள், பாலியல் உறவில் இருக்கும் சுதந்திரம், நாவல் உருவாக்கும் பதட்டம் அல்லது மன அமைதியை குலைத்தல் இவற்றைப் பற்றி சொன்னார்.
2) சாரு நிவேதிதா உரை தீவிரமான இலக்கியப் பாடத்தை ஒத்திருந்தது. கல்லூரி மேற்படிப்பில் இலக்கியம் படிக்காமல் விட்டுவிட்டோமே என்ற ஏக்கத்திற்கு மருந்திடுவது போல.
சாருவின் உரையில், நவீனத்துவ இலக்கியத்தின் சாதனையாளர்கள், அவர்களை வென்றாக வேண்டும், வேறு வழியில்லை. நாமும் நவீனத்துவம் எழுதுகிறோம் என்று அவர்கள் வரிசையில் கடைசியில் போய் நிற்பது எதற்கு எனக் கேட்டார். அப்படி மிஞ்சி எழுதமுடியாத போது வேறு வாய்ப்புகள் என்ன, பின்நவீனத்துவ எழுத்தின் உள்ளடுக்குகள், ஏன் பின்நவீனத்துவம் எழுத்தாளர்களுக்கு மாற்று வாய்ப்பாக அமைகிறது. என்றெல்லாம் விளக்கினார்.
எதார்த்தவாதம் ஒரு கண்ணாடியைப் போல உலகை உண்மையாக கண்முன் காட்டுகிறது. அதனால், அது போதாமையுடன் உள்ளது. அந்த வடிவம் குறைபாடானது என்று சொன்னார்.
அது சமூக எதார்த்தத்தை எக்ஸ்போஸ் செய்கிறது. உண்மையை சொல்வதுடன் நின்றுவிடுகிறது. ஆனால், இலக்கியத்தில் இப்படி எக்ஸ்போஸ் செய்வதுடன் நிற்ககூடாது. அது எல்லைகளை, சமூக பதிப்பீடுகளை, மொழியின் அழகியலை தாண்டி போகவேண்டும் என்றார்.
பீச் என்ற இடம் கதையில் எப்படி உருமாறுகிறது என்று விளக்குகிறார். அந்த மாற்றம் கதாபாத்திரங்களிடம் வெளிப்படவில்லை என்பதையும் எடுத்துச் சொன்னார்
பொதுவாக டிரான்ஸ்கிரசிவ் மற்றும் பின்நவீனத்துவ எழுத்து, எளிய ஆனால் நம்மை நிர்வாணப்படுத்தும் இலக்கிய வகைமை. நீங்கள் எழுதியவற்றை வைத்து உங்களை சிறையில் தள்ள முடியும். அது ஒன்றைக் கட்டியெழுப்பும் வகையானது அல்ல. ஏற்கனவே கட்டப்பட்டவற்றை நொறுக்கும் வகைமை. நீங்கள் சொல்ல விழையும் கதைதான் நீங்கள் நவீனத்துவத்தை அல்லது பின்நவீனத்துவத்தைக் கடைப்பிடிக்க வேண்டுமா எனத் தீர்மானிக்கும். அப்படி பார்த்தால் பீச் நாவல் பின்நவீனத்துவ கதையம்சத்தைச் சொல்ல வாய்ப்பிருந்தும், நவீனத்துவ பாணியில் சொல்லிவிட்ட விபத்தில் மாட்டிவிட்டது என்று விளக்கினார்.
சமூகம் உன்னை சுயநலமாக இரு என்கிறது. கருணையற்று இரு என்கிறது. தெருநாய் போன்ற உனக்குத் தேவையில்லாதவற்றை, பிறவற்றை அழி என்கிறது. இந்த மெடாபிஸிக்கல் வன்முறையை சமூகம் அங்கீகரித்து, ஆதாரிக்கிறது. கருணையை சமூகம் அப்புறபடுத்திவிட்டது. (பிராணிகள், தலித்துகள், விளிம்பு நிலை மக்கள் போன்றவற்றை விலக்கிவிடுவது)
ரோகிணி என்ற கதாபாத்திரத்தின் வாழ்க்கை நொறுங்கும் தன்மை, நாவலின் வளமான, சீரான மொழியிலேயே சொல்லப்படுகிறது. அவளின் சிதைவை சொல்லும்போது மொழியும் சிதைய வேண்டும். ஆனால், அவளோ சமூகம் கட்டமைத்த ஒழுங்கு, நீதி, ரேஷனல், சோஷியல் அத்தாரிட்டி போன்றவற்றை ஏற்று சமூகத்துக்கு இணையாகத்தான் வாழ்கிறாள். அங்கே நாவலின் மொழியும் நவீனத்துவத்தின் குறைபாட்டுடன் இருக்கிறது.
இவற்றை உதாரணங்களுடன் மிக விரிவாக விளக்கிப் பேசினார்.
நாம் இன்றைய காலகட்ட காதலை ஏன் சங்கப்பாடல்கள் வடிவில் பாடுவதில்லை என்ற காரணம்தான், நாம் ஏன் பின்நவீனத்துவ முறையில் சொல்லப்பட வேண்டிய கதையை நவீனத்துவபாணியில் சொல்லக் கூடாது என்பதற்கான காரணமும்.
3) மனுஷ் இலக்கிய வட்டத்தில் ஒளிவட்டத்துடன் வலம் வருகிறார். இலக்கியம் அதிகாரத்தை அணிந்து கொள்வது நன்றாகத்தான் இருக்கிறது. தமிழ் இலக்கியம் தன்னை நாடுபவர்களை, சவலைப் பிள்ளையாக, பஞ்சத்தில் வைத்திருக்கும் என்ற பழிச்சொல்லில் இருந்து இதன் வழி தப்பித்துக் கொள்ளட்டும்
ஆனால்,
மனுஷ் இலக்கியத்திடம் இன்னும் கொஞ்சம் கருணையுடன், பொறுப்புடன் அல்லது இங்கிதத்துடனும் நடந்து கொண்டால் அது இன்னும் நம்பிக்கை அளிக்ககூடியதாக இருக்கும்.
உதாரணமாக, கார்ல் மார்க்ஸின் பீச் வெளியீட்டு விழாவில் மேடையில் மற்றவர்கள் பேசும்போது அவர் குறுக்கிட்டு குறுக்கிட்டு ஜோக் செய்தபடி இருந்தார். பணிச்சுமை, நிர்வாக அழுத்தம், அலைச்சல் என அவருக்கு ரிலாக்ஸாக இருக்கவேண்டும் என தோன்றியிருக்கும். ஆனால், ஒரு புத்தக அறிமுக கூட்ட மேடை என்பது கேளிக்கையான இடம் அல்ல.
அங்கு பேச்சில் தாரளமாக நகைச்சுவை செய்யலாம். ஆனால் மேடையில் பேசுகிறவரை குறுக்கிட்டு அல்ல.
அடுத்தவர் புகழை, வெளிச்சத்தை, அவர் உலகுக்கு எதையோ சொல்லும் செய்தியை பிடுங்கிக் கொள்வதை ரசிக்க முடியவில்லை.
அல்லது சாரு நம்பியதைப் போல அந்த மேடை தீவிர இலக்கியத்திற்கானது என்று நானும் நம்பினது தவறாக இருக்கலாம். எல்லாமே கேளிக்கைக்கானது என ஒருவர் நினைக்கமுடியுமா என்ன?
மனுஷ் தன் கவிதைகள் படிக்கப்படும், விவாதிக்கப்படும் இடத்தில் எவரும் குறுக்கிட்டு ஜோக் செய்வதை அனுமதிப்பாரா எனவும் தெரியவில்லை.
அடுத்து, சாரு சொல்கிற விதம்தான் ஒருவர் கதை எழுதவேண்டும் என்று என்ன அவசியம் எனக் கேட்டார்.
அவசியம் அல்ல. ஆனால், இப்படியெல்லாம் ஒரு வகைமை உள்ளது எனவும், நீங்கள் கைகொண்டுள்ள வகைமையில் பல போதாமைகளும், போட்டியும், சாதனைகளும், ஆயிரம் ஆயிரமாக படைப்புகளும் இருக்கும்போது நீங்களும் அதையே செய்வதின் தேவை என்ன என்ற கருத்தை ஏன் சாரு சொல்லக்கூடாது? சாரு சொல்கிற ஐடியாக்கள் எழுதிமுடிக்கப்பட்ட நாவலுக்கு எப்படி உதவும் என்று கேட்டார் மனுஷ். இது ஆசிரியனை பொருத்தவரை முடிந்து விட்டது. ஆனால், வாசகன் வாசிப்பதின் மூலம்+ வாசிப்பு அனுபவம் + கதையை யோசிப்பதின் மூலம் மீண்டும் மீண்டும் அந்த நாவலை உயிர்ப்பிக்கிறான். அது எத்தனை காலம் உயிருடன் உள்ளது என்பது ஆசிரியனுக்கு இணையாக, வாசிப்பவனுக்கும் பங்குண்டு. அது ஒரு அஃறினை அல்லது செத்த உயிரினம் அல்ல. இன்றும் திருக்குறளுக்கு ஏன் மீண்டும் மீண்டும் உரைகள் எழுதப்படுகின்றன?
ஒரு நாவல் முடிக்கப்படும் முன்பே எப்படி ‘ஐடியா’ கொடுப்பது? அது எப்படி நாவல் ஆசிரியனுக்கு கெளரவமாக இருக்கும்? மனுஷ் இதையெல்லாம் உணராதவர் அல்ல. அவர் அந்த மேடையை சீரியஸாகக் கொள்ளவில்லை அல்லது, அவருக்கு அந்தப் புத்தக நிகழ்வு அல்லது சாருவின் பேச்சு அத்தனை அந்நியமாக இருக்கிறது.
4) கார்ல் ஏற்புரை அல்லது சாருவிற்கான எதிர்வினை.
சாரு தாக்குகிறார் என்று தவறாக நினைத்து, அவராக தடுமாறிப் போய் தடுக்கி விழுந்தாரோ எனத் தோன்றுகிறது. நீங்கள் கேட்பதை எல்லாம் நான்தான் எழுதவில்லையே என்றார். அந்த நாவலில் பின்நவீன கூறுகள் எதுவும் இல்லாத போது அதை ஏன் தேடுகிறீர்கள் என்று சரணடைந்துவிட்டார். சாரு பேச்சில் கார்ல் ஏன் கோபமோ, ஏமாற்றமோ அடைந்தார் என்று விளங்கவில்லை.
படைப்பாளிகள் எவருமே, விமர்சனத்தின் குற்றசாட்டுகளை ஏற்க வேண்டியதில்லை. அது ஒரு கோணம்தான்.
உதாரணமாக, இந்த நாவலில் பெண் உடல் என்ற ஒன்றே இல்லை. பெண்ணின் உடலில் செக்ஸ் உறுப்புகளே இல்லாமல் ஆணின் பார்வையில் மட்டுமே நாவல் உள்ளது என்பது ஒரு விமர்சனம் என்றால், அதை வேகமாக அப்படிதான், அதெல்லாம் இல்லை, அதற்கென்ன என்று பதில் சொல்ல அவசியம் இல்லை.
தனிப்பட்ட நட்பு மற்றும் இலக்கிய மதீப்பிடுகள் இரண்டும் சாருவிடம் ஒன்றிணைவது இல்லை. கார்ல் மார்க்ஸும் அதை விரும்பமாட்டார் என்றுதான் நம்புகிறேன்.
சாருவின் கருத்தை ஏற்க வேண்டும் என நான் வற்புறுத்தவில்லை. ஆனால், இன்னும் செம்மையாக தன் நிலைப்பாட்டை பேசியிருக்கலாம். நவீனத்துவத்தில் ஏற்கனவே சாதித்தவர்களை வெல்வேன் என்றும் சொல்லியிருக்கலாம். ஆனால், ஒரு நல்ல விவாதத்தை கைவிட்டுவிட்டார்.
முக்கியமாக, இந்த கூட்டத்தில் ஏன் சாரு பாடம் எடுப்பதை போல இத்தனை பேசினார், இதெல்லாம் தனியறையில், விடிய விடிய பேச வேண்டியது அல்லவா என்ற விமர்சனம் துணுக்குற செய்தது. அந்த கூட்டத்தில் இருந்தவர்களுக்கு சாருவின் உரையில் என்ன பிரச்சனை? அது என்ன கேளிக்கை விடுதியா? தீவிர இலக்கிய பேச்சுக்கு ஏன் இங்கு இடமில்லை? இந்த கேள்வி மட்டும் இன்னும் என் மூளையை விட்டு இறங்கவில்லை.
சாரு பேசிய உரைகளிலேயே இது மோசமான உரை என்பது வெறும் வசையாக எதிரொலித்து அடங்கியது. புத்தக வெளியீட்டுக் கூட்டங்களின் ஏற்புரை இத்தனை மோசமாக இதுவரை இருந்திருக்குமா என்றும் அவர் ஆராய வேண்டும்.
5) சுரேன் மற்றும் நாராயணி இருவரின் உரைகள், இலக்கிய மதிப்பீடுகளும் நாவலின் ஊடே பயணித்து நாவலைக் கொண்டாடின. நரேன் இதை கன்னிப்பேச்சு என்று தொடங்கி சரவெடியாக முடித்தார். இத்தனை இளவயதில் அவர் ஒரு இலக்கியப் பதிப்பாளர் என்பது மகிழ்ச்சி. மனுஷ் இவரை தன் புத்தக அறிமுக உரைகளுக்கு பயன்படுத்திக் கொள்ள விழைந்தது இவரின் சுவாரசியமான பேச்சுக்கு கிடைத்த பாராட்டு. நாரயணி தன்னால் பல இடங்களில் நாவலின் தருணங்களை, விவரிப்புகளை உணர்ந்து கொள்ள முடிந்தது என்று குறிப்பிட்டார். நவீனத்துவத்தின் வெற்றிகளில் இதுவும் ஒன்று. நம்மை உணர்வு ரீதியாக ஈர்த்துவிடுகிறது.
6) நிகழ்ச்சி ஏற்பாடு சிறப்பு. அரங்கு நிறைந்த வாசகர்கள். நல்ல உணவு. ஸ்ருதி டிவியின் கவரேஜ். பிரபு காளிதாஸின் புகைப்படங்கள். நட்பான முகங்கள். அதிக இளையோர் கூட்டம் என எல்லாமே சிறப்பு.
மொத்த நிகழ்வும் ஸ்ருதி டிவியில் வெளியிடப்பட்டுள்ளது. கூட்டத்திற்கு வராதவர்கள் அவசியம் காணவும்.