நான் துயரக் கதை சொன்னால்
சிரிக்கிறது கூட்டம்
கண்ணீரில் கட்டப்பட்ட
சார்லியின் மௌனக் காமெடி போல
ஆனால்
பிராணிகளின் கதை கேட்டு
ரணமாகிறது மனம்
மோகினிக்குட்டி என் உயிரின் துடிப்பு
அவள் கூறினாலும்
அந்தக் கதைகளைக்
கேட்க முடியவில்லை
தாங்க முடியவில்லை
இனிய கதைகளும் வேதனையே…
பூனைகளுக்கு மனித மொழி புரிகிறதாம்
நாயின் அறிவோடு கேட்கிறதாம்
காணொலி அனுப்பியிருந்தாள் மோகினி,
பார்க்காமலே நீக்கி விட்டேன்
பிராணிக் கதை கேட்டாலே
இதயம் உறைந்து போகிறது
குறிப்பாக பெண்பூனைக்
கதைகள்
வாழ்நாள் பூராவும்
கர்ப்பம் சுமந்தே திரிகின்றன
குட்டிகளை ஈன்றதும் அதைப்
பாதுகாக்க வேண்டும்
மழையிலிருந்தும்
மனிதனிடமிருந்தும்
பிற மிருகங்களிலிருந்தும்
கொசுக்களிடமிருந்துகூட
குட்டிகள் உறங்கும் நேரமெல்லாம்
விழித்தபடி
அமர்ந்திருக்கும் தாய்ப்பூனை
குட்டிகள், தத்தித் தவழ்ந்து,
தத்தக்கா பித்தக்கா நடையில்
ஊர் திரியும்.
குடியிருப்பின் கார்களுக்குள் ஒளிந்து,
எந்திரத்தின் சக்கரத்தில் உயிரிழக்கும்.
குட்டிகளைப் பறிகொடுத்த
தாய்ப்பூனையின் கதறல்
கேட்டிருக்கிறீர்களா?
இதயத்தை ரம்பத்தால் அறுக்கும் ஒலி
காற்றில் கரைந்து
இருளைப் பிளக்கும்.
ஆனால் இப்போது
எந்தக் கதறலும் என்னை அசைப்பதில்லை,
என் உயிர் மெளனத்தில் மூழ்கிவிட்டது
பிராணிகளின் துயரம்
என் மனதில் மறையாத கறையாக
என்றென்றும் எரியும் தீயாக
உயிர் துடித்த காலம் ஒன்றுண்டு
இன்றோ
எல்லாம் உறைந்து கிடக்கிறது