இண்டர்டெக்ஸ்சுவாலிட்டி என்பார்கள். இதை ஆண்டாளிடமும் மற்ற பக்தி இலக்கியக் கவிகளிடமும் காணலாம். திருப்பாவையில் கிருஷ்ணனின் லீலைகள், கோவர்த்தன கிரி, கம்ஸ வதம் போன்ற புராணக் கதைகள் எல்லாம் பாகவதம், விஷ்ணு புராணம் போன்றவற்றிலிருந்து எடுத்துக் கொண்டவை.
அதை விட முக்கியமாக ஆழ்வார்களின் பாசுரங்களில் காணப்படும் பக்தி மரபையும் ஆண்டாள் பின்பற்றுகிறாள். திருமால் மீதான தனது பக்தியை வெளிப்படுத்தும் விதமாக, மற்ற ஆழ்வார்களைப் போலவே, தமிழ் பக்தி இலக்கியத்தின் பொதுவான உருவகங்களையும், வார்த்தைகளையும் பயன்படுத்துகிறாள்.
அதேபோல் ஆண்டாளின் பாசுரங்களில் சங்க இலக்கியத்தின் அகத்திணைப் பாடல்களின் தாக்கத்தையும் காணலாம். காதலனைப் போல இறைவனை அணுகும் பாவனை (நாயக-நாயகி பாவம்), பெண்ணின் உணர்வுகளை வெளிப்படுத்தும் விதம் ஆகியவை சங்க இலக்கியத்தில் இருந்து பெறப்பட்டவை.
டி.எஸ். எலியட்டின் The Waste Land தான் ஆங்கில இலக்கியத்தில் Cut-up பாணியைப் படுத்தி எழுதப்பட்டது என்கிறார் வில்லியம் பர்ரோஸ். பர்ரோஸ்தான் முதல் முதலாக இந்த பாணிக்கு Cut-up என்று பெயரிட்டவர். பர்ரோஸ் இதை எக்கச்சக்கமாக செய்திருக்கிறார். இதில் அவர் தன்னுடைய முன்னோடி என டி.எஸ். எலியட்டையே குறிப்பிடுகிறார்.
கட்-அப் என்பது யுக்தி. ஆனால் இண்டர்டெக்ஸ்சுவாலிட்டி என்பது ஒரு பாணி. டி.எஸ். எலியட்டின் The Waste Land (1922) நவீன இலக்கியத்தில் இன்டர்டெக்ஸ்ட்சுவாலிட்டியின் மிக முக்கியமான உதாரணம். எலியட், முந்தைய இலக்கியங்களிலிருந்து வார்த்தைகள், வாக்கியங்கள், மற்றும் கருத்துகளை வெளிப்படையாகவே எடுத்து, தனது கவிதையில் பயன்படுத்தியிருக்கிறார். உபநிஷதங்கள், விவிலியம், கிரேக்க-ரோமன் இலக்கியங்கள், ஷேக்ஸ்பியர், மற்றும் பல மேற்கத்திய மற்றும் கிழக்கத்திய இலக்கியங்களிலிருந்து குறிப்புகளை எடுத்து இணைத்திருக்கிறார்.
The Waste Land கவிதையின் முடிவில், “What the Thunder Said” என்ற பகுதியில், எலியட் பிரஹதாரண்யக உபநிஷதத்தில் வரும் “தைத்திரீய உபநிஷத்” பகுதியை நேரடியாகக் குறிப்பிடுகிறார். “தத்த”, “தயதம்”, “தாம்யத” (Datta, Dayadhvam, Damyata) என்ற மூன்று வார்த்தைகள் உபநிஷதத்தில் இடி (மின்னல்) பேசுவதாக வரும் புராணக் கதையிலிருந்து எடுக்கப்பட்டவை. இவை முறையே “கொடு”, “இரக்கம் காட்டு”, “கட்டுப்படுத்து” என்று பொருள்படும். எலியட் இந்த வார்த்தைகளை மனித வாழ்வின் ஆன்மிக மற்றும் அறவுணர்வு சார்ந்த பிரச்சனைகளை விவாதிக்கப் பயன்படுத்துகிறார்.
The Waste Land இல் ஷேக்ஸ்பியரின் The Tempest, Antony and Cleopatra போன்றவற்றிலிருந்து வாக்கியங்கள், கிரேக்க புராணங்களிலிருந்து குறிப்புகள் (எ.கா., டயரிசியஸ்), மற்றும் விவிலிய குறிப்புகள் (எ.கா., Ezekiel, Ecclesiastes) ஆகியவற்றைக் காணலாம்.
இந்திய இலக்கியத்தில், உபநிஷதங்களைத் தவிர, புத்த மதத்தின் Fire Sermon (அக்னி உபதேசம்) பகுதியும் வேஸ்ட் லேண்ட் கவிதையில் ஒரு முக்கிய குறிப்பாக வருகிறது.
எலியட், தனது கவிதையின் குறிப்புகளில் (Notes on The Waste Land), இந்த இலக்கிய மூலங்களைத் தெளிவாகக் குறிப்பிடுகிறார்,
இவ்வளவையும் எதற்குச் சொல்கிறேன் என்றால், என்னுடைய கவிதைகள் மற்றும் காதல் கவிதைகளில் வரும் உருவகங்கள், படிமங்கள், வார்த்தைகள், வாக்கியங்கள் பலவும் ஆண்டாளிடமிருந்தும், பெரியாழ்வாரிடமிருந்தும், மஹாதேவி அக்காளிடமிருந்தும், தாயுமானவரிடமிருந்தும், பட்டினத்தாரிடமிருந்தும், தேவாரத்திலிருந்தும், திருவாசகத்திலிருந்தும் பெறப்பட்டவை. இதை ஸ்ரீராம் மட்டுமே கண்டு பிடித்து எடுத்துத் தொகுக்கிறார். ஒரு இடத்தில் என்ன சாரு, வைணவ இலக்கியத்திலிருந்துதானே எடுப்பீர்கள், இதில் தேவாரம் வருகிறதே என்றார். இப்போது கூகிள் இருப்பதால் தேடுவது சுலபம். ஆனால் இது சாருவின் வார்த்தை அல்ல என்று தெரிய வேண்டும். இதேபோல் என் கவிதைகளில் அலெஹாந்த்ரா பிஸார்நிக், ஒக்தாவியோ பாஸ், சார்ல்ஸ் ப்யூகோவ்ஸ்கி, ரில்க்கே, ஆர்த்தர் ரேம்போ, நிக்கானோர் பார்ரா போன்றவர்களின் நேரடி பாதிப்பு உண்டு. இண்டர்டெக்ஸ்சுவாலிட்டியை இவர்களிடம் பயன்படுத்துவதில்லை. தமிழ் இலக்கியத்திடமிருந்து மட்டுமே பெறுகிறேன்.
இதன் மூலம் நான் தமிழை மேலும் செழுமைப்படுத்துகிறேன். இதனால்தான் பிரதிவாதி பயங்கரம் அன்னங்கராச்சாரியார், பெரியவாச்சான் பிள்ளை போன்றவர்கள் பழைய இலக்கியத்துக்கு வியாக்கியானம் எழுதினார்கள். எனக்கு ஸ்ரீராம் எழுதலாம். இது போன்ற செயல்பாடுகளினால்தான் ஒரு மொழியும் அதன் இலக்கியமும் வளரும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். என்னை விமர்சிப்பவர்களிடம் பணிவு இல்லாமல் “என்ன இது, நம் சாரு இப்படி வீணாகப் போய் விட்டார்?” என்ற குண்டாந்தடியோடு வருவதால்தான் நான் அடேய் மட்டிகளா என விளித்து அவர்களுக்கு விளக்க வேண்டியிருக்கிறது. அவர்கள் பணிவோடு வந்தால் நானும் பணிவோடுதான் பேசுவேன்.
மேலும், ஒரு எழுத்தாளர் வெவ்வேறு பாணிகளில் வெவ்வேறு விதமாக எழுத வேண்டும். என்னுடைய எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் ஒரு மாதிரி. ஸீரோ டிகிரி வேறு மாதிரி. அதற்குப் பிறகு வந்த ராஸ லீலா, காமரூப கதைகள், தேகம், எக்ஸைல் எல்லாமே ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரி. ஸீரோ டிகிரி எழுதியவரா ஔரங்ஸேப் எழுத முடியும்? ஔரங்ஸேப் எழுதியவரா பெட்டியோவை எழுத முடியும்? பெட்டியோவை எழுதியவரா அன்பு நாவலை எழுத முடியும்? இப்போது வரப் போகும் Anatomy of Dissonance நாவலைப் பாருங்கள். ரொம்பப் புதுவிதமாக இருக்கும். ஏனென்றால், இதை என்னோடு சேர்ந்து ஸ்ரீயும் எழுதுகிறாள். இருவருமாகத்தான் எழுதுகிறோம். அதில் ஸ்ரீ எழுதிய ஒரு பகுதி வருகிறது. Her Manifesto of Sensual Discovery என்ற அத்தியாயத்தைத் தமிழில் மொழிபெயர்க்க முயன்றேன். இந்த அத்தியாயம் ஸ்ரீ எழுதியது. ஆனால் மொழிபெயர்க்க முடியவில்லை. ஆங்கிலத்தில் வந்த பிறகுதான் ஸ்ரீயையே மொழிபெயர்க்கச் சொல்ல வேண்டும். அந்த அத்தியாயத்தை மொழிபெயர்க்க முடியாது. அப்படியே கருத்தை உள்வாங்கிக்கொண்டு புதிதாகத்தான் எழுத முடியும்.
அனாடமி ஆஃப் டிஸொனன்ஸ் முழுவதும் காதல் மற்றும் செக்ஸ் என்றால் தியாகராஜா முழுக்க முழுக்க பக்தி. இப்படித்தான் ஒரு எழுத்தாளன் எழுத முடியும். அப்படியென்றால் நான் ஏன் காதல் கவிதைகள் எழுதக் கூடாது? அப்படி ஏதாவது பின்நவீனத்துவத்தில் சட்டதிட்டம் இருக்கிறதா? ஆண்குறி பெண்குறி பற்றி எழுதலாம். பசி பற்றி எழுதலாம். தனிமை பற்றி எழுதலாம். ஆண் பெண் உறவு பற்றி எழுதலாம். மது பற்றி எழுதலாம். பயணம் பற்றி எழுதலாம். சரித்திரத்தை எழுதலாம். ஔரங்ஸேப் எழுதியபோது “ஐயோ, சாரு ஏன் இப்படி கல்கி மாதிரி சரித்திரக் கதை எழுதுகிறார்?” என்று யாரும் கேட்கவில்லை. ஆனால் காதல் பற்றி எழுதினால் மட்டும் நொட்டிக்கொண்டு வருகிறார்கள். அப்படியானால் இவர்களுக்கும் தாலிபான்களுக்கும் என்ன வித்தியாசம்? உண்மை என்னவென்றால், என் வாசகர் வட்ட நண்பர்களில் பலரும் பழமைவாதிகள். அதனால்தான் காதல் கவிதையைப் பார்த்ததும் தேள் கொட்டியது போல் குதிக்கிறார்கள்.
என்னை விமர்சிக்கும் மட்டிகளுக்கு சாருவுக்கும் தபூ சங்கருக்கும் வித்தியாசம் தெரியவில்லை. அது ஒன்றுதான் பிரச்சினை.