இலக்கிய விருதுகளில் பெரும் மதிப்புக்குரியதாகக் கருதப்படுவது நோபல் விருது. ஆனால் நோபல் விருது இலக்கியத்துக்கு மட்டும் அளிக்கப்படுவதல்ல என்பதை நாம் அறிவோம். விருதுத் தொகை சுமார் ஒன்பது கோடி ரூபாய்.
இதற்கு அடுத்து பெருமைக்குரியதாகக் கருதப்படும் இலக்கிய விருது டப்ளிக் இம்ப்பாக் விருது. இது சுமார் தொண்ணூறு லட்சம் ரூபாய் மதிப்பு கொண்டது. இப்போது இம்ப்பாக் நிறுவனம் இதில் இல்லை என்பதால் டப்ளின் இலக்கிய விருது என்றே இது அழைக்கப்படுகிறது. அயர்லாந்தில் உள்ள டப்ளின் நகரசபைதான் இந்த விருதுக்கான பணத்தைப் அளிக்கிறது. இந்த விருதை வழங்குவது டப்ளின் நகர நூலகம். இதுவே தமிழ்நாட்டில் நடந்தால் இந்த விருதை திண்டுக்கல் லியோனிக்கோ, சாலமன் பாப்பையாவுக்கோ அல்லது பட்டுக்கோட்டை பிரபாகருக்கோ கொடுப்பார்கள். காரணத்தை நேற்று எழுதியிருந்தேன். தமிழில் திட்டினால் கேஸ் போட்டு விடுவார்கள் என்பதால்தான் சம்ஸ்கிருதத்தில் திட்ட வேண்டியிருந்தது என்பதைப் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
டப்ளின் விருதைப் பெற்றவர்கள் பலர் நோபல் விருது பெற்றிருக்கிறார்கள். ஓர்ஹான் பாமுக் ஒரு உதாரணம். டப்ளின் விருதின் சிறப்பம்சம் ஒரு எழுத்தாளரின் ஒரு நாவலுக்கு இந்த விருது அளிக்கப்படுகிறது.
இப்போது விஷ்ணுபுரம் அமைப்பின் ஒரு கோடி ரூபாய் விருது கிட்டத்தட்ட நோபல் விருதுக்கு சமமான விருதாகக் கருதப்பட வேண்டும்.
வெகு அரிதாக நோபல் விருதில் குளறுபடிகள் நடக்கும். 2016இல் அந்த விபத்து நடந்தது. பாப் டிலன் ஒரு பாடலாசிரியர். அவருக்குத் தூக்கி நோபல் இலக்கிய விருதை அளித்தார்கள். இது உலகம் முழுவதும் கடும் கண்டனத்தை எழுப்பியது. பாப் டிலன் பதில் சொல்லாமல் மௌனம் காத்து விட்டு பிறகு விருதை வாங்கிக்கொண்டார், வெட்கமே இல்லாமல்.
இம்மாதிரி குளறுபடிகள் நோபல் கமிட்டியில் வெகு அரிதாகவே நடக்கும். இதற்கும் காரணம், அந்தக் கமிட்டியில் பதினெட்டு பேர் வாழ்நாள் உறுப்பினர். இவர்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில்தான் விருது வழங்கப்படுகிறது. ஆனால் இந்தப் பதினெட்டு பேருக்கு எப்படி உலகம் முழுவதிலும் இருந்து உருவாக்கப்படும் ஆகச் சிறந்த இலக்கியப் படைப்புகள் பற்றித் தெரியும்? உதாரணமாக, யாருக்குமே தெரியாத ஆஸ்த்ரிய எழுத்தாளர் எல்ஃப்ரீட் ஜெலினெக் என்பவருக்கு எப்படி நோபல் விருது வழங்கப்பட்டது? ஜெர்மன் மொழியில் எழுதிய ஜெலினெக்கை ஜெர்மனியிலேயே அதிகம் பேர் அறிய மாட்டார்கள். அவரை ஒரு போர்னோ எழுத்தாளர் என்று கூட பலரும் விமர்சிக்கிறார்கள். அவருக்கு எப்படி நோபல் விருது வழங்கப்பட்ட அதிசயம் நடந்தது?
பதினெட்டு பேர் கொண்ட நோபல் கமிட்டிக்கு உலகம் முழுவதிலும் இருந்து சுமார் எழுநூறு பேர் பரிந்துரைக் கடிதம் அனுப்புகிறார்கள். இந்த எழுநூறு பேரும் யார் என்பது ரகசியம். இவர்களைப் பரிந்துரை செய்யச் சொல்லி நோபல் கமிட்டி இவர்களுக்கு எழுதும். இவர்கள் யார்? ஒவ்வொரு தேசத்தில் புத்திஜீவிகள், எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், மொழியியல் பேராசிரியர்கள், முன்பு நோபல் விருது வாங்கியவர்கள். (இதைத்தான் நேற்று எழுதியிருந்தேன். ஞான பீடம் கமிட்டி தமிழ்நாட்டில் புத்திஜீவிகள் என்று யார் யாரை நினைக்கிறது என்று ஒரு பட்டியல் கொடுத்திருந்தேன். அதில் ஒரு முக்கியமான பெயர் விடுபட்டு விட்டது. அதற்காக அவரிடம் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். அவர், சரவணா ஸ்டோர்ஸின் லெஜண்ட் சரவணன். நான் சொல்வதெல்லாம் கட்டுக்கதை அல்ல, ஞானபீடம் கமிட்டி தமிழ்நாட்டு புத்திஜீவிகளை அப்படித்தான் தேர்ந்தெடுக்கிறது. ஒருமுறை, ஒரு பெரிய டிபார்ட்மெண்ட்டல் ஸ்டோரின் அதிபரிடம் ஞானபீடம் கமிட்டி ஞானபீடம் விருதுக்கு யாரை உங்கள் மொழியிலிருந்து தேர்ந்தெடுக்கிறீர்கள் என்று கேட்டு கடிதம் அனுப்பியது. அந்த நண்பர் என்னிடம் கேட்டார். நான் அசோகமித்திரனின் வாழ்க்கை வரலாற்றை ஒரு இருபது பக்கம் தட்டச்சு செய்து அனுப்பினேன். அவர் என்னிடம் “எனக்கு எழுபது வயதுதானே ஆகிறது? கண் பார்வை இழந்து, காது கேளாமல் போன பிறகுதானே கொடுப்பார்கள்?” என்று ஜோக் அடித்தார்.
சரி, நோபலுக்கு வருவோம். ஃபெப்ருவரி முதல் தேதிக்குள் பரிந்துரைகள் நோபல் கமிட்டிக்குச் சேர்ந்து விடும். கமிட்டி பதினைந்திலிருந்து இருபது பேரை குறும்பட்டியலில் தேர்ந்தெடுக்கும்.
நோபல் விருதின் சிறப்பு என்னவென்றால், அவர்கள் எழுத்தாளர்களின் பிரபலத்தைப் பார்ப்பதில்லை. தகுதியான புத்திஜீவிகளின் பரிந்துரைகளையே கவனத்தில் எடுத்துக்கொள்கிறார்கள். அவர்களும் கவனமாகப் படித்துப் பார்க்கிறார்கள். ஜெலினக் தேர்ந்தெடுக்கப்பட்ட போது கமிட்டி உறுப்பினர் Knut Ahnlund “எங்களில் வெகுசிலரே ஜெலினக்கின் புத்தகங்களைப் படித்திருப்போம்” என்று சொல்லி ராஜினாமா செய்தார். ஆனாலும் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஜெலினக்குக்கு ஆதரவு கொடுத்தார்கள். எனவே உலக அளவில் அறியப்படாத எழுத்தாளர்களும் நோபல் விருது பெற்று வருகிறார்கள்.
ஆனாலும் நோபல் விருதின் மிகப் பெரிய குறைபாடு என்னவென்றால், அந்த விருது பெரும்பாலும் மேற்கத்திய நாடுகளுக்கே போய்ச் சேர்கிறது. மிகச் சிறிய நாடான ஃப்ரான்ஸுக்கும் ஜெர்மனிக்கும், மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கும் பலமுறை விருது அளிக்கப்படுகிறது. ஆனால் ஆசிய நாடுகள் விருதுப் பட்டியலில் இடம் பெறுவதில்லை. இந்தியாவில் தாகூருக்குப் பிறகு நோபலே இல்லை. இத்தனைக்கும் ஜார் காலத்து ருஷ்யா மாதிரி இந்தியாவில் நோபல் பரிசுக்குரிய பல நூறு எழுத்தாளர்கள் உண்டு. தமிழில் அதிக பட்சம், கன்னடம், மலையாளம், வங்காளம் என்று அது ஒரு பெரும் பட்டியல்.
ஜெயமோகனுக்கு இது அத்தனையும் தெரியும். இருந்தாலும் அவருக்கு இதையெல்லாம் இந்த நல்ல தருணத்தில் நினைவூட்டுகிறேன். ஜெயமோகனின் இந்தச் செயல்பாட்டுக்கு தமிழ்நாட்டின் தனவந்தர்கள் ஆதரவளிக்க வேண்டும்.