புத்தக விழா – 9 (இலவச சேவை)


தினந்தோறும் புத்தக விழாவில் ஏதாவது சுவாரசியமான சம்பவங்கள்  என்னிடம் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

நேற்று அப்படி ஒன்று.

ஒரு மத்திய வயதுக்காரர்.  லக்ஷ்மி சரவணகுமாரின் ஏழெட்டு புத்தகங்களை என்னிடம் கொடுத்து என் கையெழுத்தைக் கேட்டார். கேட்கும்போதே, “உங்களுடைய புத்தகங்கள் என்னிடம் ஏற்கனவே இருக்கின்றன” என்றார்.

அது பொய் என்பது அவர் சொன்னவுடனேயே புரிந்து விட்டது.  அது எப்படி என்னுடைய புத்தகங்கள் அனைத்தும் அவரிடம் இருக்க முடியும்?  எண்பது புத்தகங்கள் இருக்கின்றன.  அதிலும், சுக்கு இஞ்சி கடுக்காய் என்ற நூல் வெளிவந்தே ஒரு வாரம்தான் இருக்கும்.  ஒரு எழுத்தாளனிடம் ஏழெட்டு புத்தகங்களில் கையெழுத்து வாங்கும்போது அவனுடைய ஒரே  ஒரு புத்தகத்தைக் கூடவா வாங்கி விடக் கூடாது?  புத்தகம் என்ன லட்சம் ரூபாயா விற்கிறது?

என்னிடம் டயரியை நீட்டி கையெழுத்துக் கேட்கிறார்கள்.  மகளிர் ஸ்பெஷல் போன்ற பத்திரிகைகளை நீட்டி கையெழுத்துக் கேட்கிறார்கள்.  சிலர் வெள்ளைக் காகிதத்தில் கூட கேட்கிறார்கள்.  நானும் அப்படிக் கேட்பவர்களுக்கெல்லாம் பொறுமையாகக் கையெழுத்துப் போட்டுக் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன்.  இதிலெல்லாம் எனக்கு எந்த ஈகோவும் இருப்பதில்லை.  அதேபோல் என் பெயர் தெரியாதவர்கள்கூட என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்பினால் உடனடியாக சம்மதிக்கிறேன். 

லக்ஷ்மி சரவணகுமாரின் புத்தகங்களில் கையெழுத்துப் போட எத்தனித்த சமயத்தில் அந்த அன்பர் தான் சென்ற ஆண்டு வரை அமெரிக்காவில் ஒரு முக்கியமான அமைப்பின் தலைவராக இருந்ததாகச் சொன்னார்.  கையெழுத்திடுவதற்காகப் பேனாவைத் திறந்த நான் பேனாவை மூடினேன்.  காரணம், கடந்த ஏழெட்டு ஆண்டுகளில் நான்கு முறை அமெரிக்க வீசா மறுக்கப்பட்டிருக்கிறேன்.  ஒவ்வொரு முறையும் ஒரே காரணம்தான்.  ”முறையான அழைப்பு இல்லை.”  அதாவது, அமெரிக்க அரசுக்குப் பரிச்சயமான ஒரு அமைப்பிலிருந்து எனக்கு ஒரு முறையான அழைப்பு தேவை.  அதாவது, ஒரு கடிதம்.  கையெழுத்துக் கேட்ட அன்பர் தலைவராக இருந்த அமைப்பை ஒரே ஒரு அழைப்புக் கடிதத்துக்காக பல முறை கேட்டிருக்கிறேன். ஒரே ஒரு கடிதம் கொடுங்கள்.  போதும்.  என் செலவில் வருகிறேன், என் செலவில் தங்கிக் கொள்கிறேன்.  உங்கள் அலுவலக்தின் பக்கம் கூட வர மாட்டேன்.   ஒரே ஒரு கடிதம்தான் தேவை.   

கொடுக்கவில்லை.  கடிதம் கொடுக்க மறுத்து விட்டார்கள்.  ஆனால் சினிமாவில் மிமிக்ரி செய்பவர்களும், பட்டிமன்றப் பேச்சாளர்களும் அதே அமைப்பின் அழைப்பின் பேரில் அம்பது நூறு முறை  அமெரிக்கா சென்று வருகிறார்கள். 

கையெழுத்துப் போட முடியாது என்றேன்.  ஏன், லக்ஷ்மி சரவணகுமாரை உங்களுக்குப் பிடிக்காதா என்றார் அமெரிக்க அன்பர்.

இல்லை, அவர் எனக்கு நண்பர்.  உங்களைத்தான் எனக்குப் பிடிக்காது என்றேன்.

ஏன் என்றவரிடம் மேலே கண்ட விஷயங்களை விளக்கினேன். 

ஐயோ, நான் அந்த அமைப்பில் தலைவராக இருந்த போது நான் அழைக்காத தமிழ்நாட்டு எழுத்தாளரே இல்லை, முதல் கூட்டத்துக்கே எஸ். ராமகிருஷ்ணனை அழைத்திருக்கிறோம்  என்றார்,  எஸ்.ரா.வை அழைப்பதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?  அவர் செல்லாத நாடு இல்லை.  அவர் அழைக்கப்படாத விழாக்கள் இல்லை.  வேறு யாரை அழைத்தீர்கள்? 

திரும்பத் திரும்ப அவர் சொன்னதையே சொல்லிக்கொண்டிருந்தார்.  மேலும் ஒரு விஷயம் சொன்னார்.  வரவழைக்கும் எழுத்தாளருக்கு சன்மானமாக ஐநூறு டாலர் கொடுத்தோம்.

அடப் பிச்சைக்கார கூட்டமே!  நியூயார்க்கில் ஒரு குடும்பம் (கணவன், மனைவி, இரண்டு குழந்தைகள்) போய் டின்னர் சாப்பிட்டால் 250 டாலர் ஆகும்.  இவர்கள் ஒரு எழுத்தாளனை அழைத்து 500 டாலர் சன்மானம் கொடுக்கிறார்கள்.  அதை வேறு பெருமையாகச் சொல்லிக் கொள்கிறார்.  ஏனய்யா, எழுத்தாளன் என்ன கோவில் வாசலில் அமர்ந்திருக்கும் பிச்சைக்காரன் என்றா நினைத்தீர்கள்?  கமல்ஹாசன் அமெரிக்கா சென்றிருந்த போது அவரோடு டின்னர் சாப்பிட ஒவ்வொருவரும் ஐநூறு டாலர் கொடுக்க வேண்டும்.  என் தோழி கேட்டாள் அப்போது.  அவர் மடியில் உட்கார்ந்து சாப்பிடவா?

அமெரிக்க நகரங்களில் தமிழ்த் திரைப்படங்கள் வெளியாகின்றன.  ப்ரீமியர் ஷோ டிக்கட் விலை 40 டாலர்.  நான்கு பேர் போனால் 160 டாலர்.  மற்ற செலவுகளைச் சேர்த்தால் நானூறு டாலர் ஆகி விடும்.

ஆனால் இந்த அமெரிக்க அன்பர் சொல்கிறார், தமிழ் எழுத்தாளர்களை வரவழைத்து ஐநூறு டாலர் கொடுக்கிறோம் என்று!

கிளம்பும் சமயத்தில் “உங்களோடு ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ளலாமா?” என்று கேட்டார்.  ஐநூறு டாலர் கட்டணம் என்றேன்.  பேசாமல் கிளம்பி விட்டார்.

ஆன்மீக சாமியார் வந்தால் அள்ளி அள்ளிக் கொடுக்கிறீர்கள், ஆனால் எழுத்தாளன் வந்தால் பீத்துணியா?  ஒரு யோகா குருவின் மூன்று நாள் பயிற்சிக்கு 2450 டாலர்.  இது குறைந்த பட்ச கட்டணம்.  இதில் ஒரு ஐநூறு பேர் கலந்து கொண்டால் எவ்வளவு பணம் என்று கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.  எழுத்தாளனுக்கு மட்டும் ஐநூறு டாலர்?

ஒரு எழுத்தாளர் நண்பர் சொன்னார், அவர் அமெரிக்கத் தமிழர்களுக்காக ஸூமில் ஒரு உரையாற்றினார்.  கலந்துரையாடலும் இருந்தது.  நூறு டாலர் கொடுத்தார்களாம்.  இவர்தான் சண்டை போட்டு ஐநூறு டாலர் வாங்கியிருக்கிறார். 

நான் கையெழுத்திட மறுத்ததும், புகைப்படத்துக்கு மறுத்ததும் சரிதானே?

வெளிநாட்டில் வசிப்பதால் நாங்கள் உங்கள் ஷூவை நக்க வேண்டுமா?  அப்படி ஒரு தமிழ்த்தாய் ஒரு வெளிநாட்டுப் பெண்ணை நக்கும் ரீல்ஸையும் பார்த்தேன்.  வெள்ளைத் தோலுக்கு இப்படி ஒரு மவுஸா? 

மற்றபடி நீங்கள் என் மீது மரியாதையுடன் ஒரு வெள்ளைக் காகிதத்தை நீட்டினால் கூட அதில் நான் கையெழுத்துப் போடுவேன்.  அதில் எந்த மாற்றமும் இல்லை.