நிர்குண் நிர்ஹோஸ்தியஸ்

பவானிக்குச் சென்றிருந்தது பற்றி ஒரு நீண்ட தொடரே எழுதலாம். நேரம் இல்லை. நவம்பர் எட்டு நிகழ்ச்சிக்காகத் திரைப்படங்கள் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

நிர்குண் பற்றி கட்டுரையில் எழுத வேண்டாம் என்று முடிவெடுத்தேன். அவரை என் நாவலில்தான் ஒரு கதாபாத்திரமாகச் சேர்க்க வேண்டும். இப்போதைக்கு சுருக்கமாகச் சொன்னால், அவர் ஒரு மான்ஸ்டர். ராக்ஷசன். அசாதரணன். உதாரணமாக, பல ஆண்டுகளாக அவர் தினமும் இரண்டு மணி நேரம்தான் உறங்கி வந்திருக்கிறார். ஆனால் என்னைக் கண்டதும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிராந்தி அருந்தியதால் சுமார் எழுபது மணி நேரம் தொடர்ந்து தூங்கினார். ஒரு நாளில் சுமார் அறுபது எழுபது கவிதைகள் எழுதுகிறார். அத்தனையும் அவருடைய மொபைல் ஃபோனில்தான் தட்டுகிறார். ஆர்ட் வொர்க்கும் அதிலேயேதான் செய்கிறார். இத்தனைக்கும் நம் பக்கத்தில் அமர்ந்து நம்மோடு பேசிக்கொண்டுதான் இருக்கிறார். அப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போதே கவிதையை ஃபேஸ்புக்கில் போட்டு விடுகிறார். அதிசயமான, விசித்திரமான, அமானுஷ்யமான மனிதர். அக்னியாய் தகிக்கும் தேகம் போலிருக்கிறது. பத்து நிமிடம் ஏசி இல்லாமல் இருந்தால் உடம்பு வியர்வையில் தொப்பலாக நனைந்து விடுகிறது. என்னை வழியனுப்புவதற்காக ஈரோடு ரயில் நிலையம் வந்த போது அதைப் பார்த்தேன். நிர்குணுக்குப் பிடித்த இரண்டு எழுத்தாளர்கள்: சுந்தர ராமசாமி, தேவதச்சன். சாரு நிவேதிதா தனி.

என் கனவுகளில் ஒன்று, ஒரு பேரரசனைப் போல் வாழ்வது. பல மேற்கத்திய எழுத்தாளர்கள் அப்படித்தான் வாழ்கிறார்கள். நிர்குண் நிர்ஹோஸ்தியஸ் அப்படித்தான் வாழ்கிறார். பேரரசனைப் போல் வாழும் மனிதனை இதுவரை நெருக்கத்தில் கண்டதில்லை. இப்போது கண்டேன்.

நிர்குண்